Wednesday, January 1, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 1

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.
தளபதி - 1991

திருவாரூரில் தைலம்மையில் வெளியிடப்பட்ட படம். அப்போதெல்லாம் வீட்டில் அம்மாவின் துணையுடன்தான் படம் பார்க்க செல்வது வழக்கம். சாதாரணமாகவே ரஜினி படம் வெளியீடு என்றால் திரையரங்கங்களில் திருவிழாதான். இந்த படமோ தீபாவளி வெளியீடு என்பதால் திருவிழாவுக்குள் திருவிழா என்பதால் கொண்டாட்டத்திற்கும் கூட்டத்திற்கும் கேட்கவா வேண்டும். அதனால் கூட்ட நெரிசலை காரணம் காட்டி படத்திற்கு என்னை அழைத்துச் செல்லவில்லை.

courtesy : Thailammai Theatre, Tiruvarur. &
Santhippu Tamil movie special Malar, Sivaji fans, Tiruvarur.
படத்தில் உள்ள முக்கிய காட்சிகளை ஒளிப்படமாக்கி A3 அளவில் பிரிண்ட் செய்து சுமார் 6 முதல் 10 ஸ்டில் வரை படம் ஓடும் தியேட்டர்களில் கண்ணாடி ஷோகேசில் வைத்திருப்பார்கள். சில சமயம் படம் ரிலீசாவதற்கு பதினைந்து நாட்கள் முன்னதாகவே கூட இந்த ஸ்டில் போட்டோக்கள் வைக்கப்படும். அதைப் பார்ப்பதற்காகவே வேறு ஏதாவது மொக்கை படம் ஓடினாலும் தியேட்டருக்கு செல்பவர்கள் உண்டு. ஏனென்றால் நாளிதழ்களில் கலர் விளம்பரம் கூட எப்போதாவதுதான் வெளியிடப்படும்.

இப்போதெல்லாம் ஒவ்வொருவரின் கையில் உள்ள செல்போனில் செல்பி எடுத்து ஏதாவது ஒரு இணையதளத்தில் நுழைந்தோ அல்லது ஆப் டவுன்லோடு செய்தோ காலண்டரை உருவாக்கி நம் வீட்டில் மட்டும் மாட்டிக்கொள்வதற்கு ஒரே ஒரு பிரதிகூட அச்சடித்து ஐந்து நிமிடத்தில் உள்ளூர் அச்சகத்திலேயே வாங்கி விட முடிகிறது.

இன்றைக்கு 29 ஆண்டுகளுக்கு முன்பு தளபதி படத்தின் ஸ்டில்களை வண்ணத்தில் மாதக் காலண்டராக மிகவும் நேர்த்தியாக அச்சடித்து வழங்கியிருந்தார்கள்.

ரசிகர் மன்றத்தில் காசு கொடுத்து வாங்கியதா அல்லது இலவசமாக வந்ததா என்று தெரியவில்லை. எனது தந்தையின் டீக்கடையில் அடுத்த ஒரு ஆண்டு வரை அந்த காலண்டர் மாட்டப்பட்டிருந்தது.
courtesy : thailammaicinemas
இருளின் பின்னணியில் கல் மேடை மீது நின்று ரஜினி குழுவினர் ஆடும் ராக்கம்மா கையத்தட்டு பாடல் காட்சி, காட்டுக்குயிலு பாடல், சுந்தரி கண்ணால் சேதி உள்ளிட்ட பாடல் காட்சிகளும், ஸ்டண்ட் நடிகர் தினேஷ் முகத்தை நகர்த்தும்போது ரஜினி முகம் அறிமுகமாகும் காட்சி, காவல்நிலையத்தில் ரஜினியை கடுமையாக அடித்து விசாரிக்கும் காட்சி என 12 ஸ்டில்கள் இடம்பெற்றிருந்தன.

ஒளிப்பதிவு, இசை என எந்த தொழில்நுட்பத்தையும் பற்றி எதுவும் தெரியாத 10 வயது சிறுவன் நான். மழையில் தினேஷ் முகத்துக்கு பின்னால் ஷோல்டர் ஷாட்டாக ரஜினி முகம் தெரியும் அந்த அட்டகாசமான காட்சி மிக ஆழமாக என் மனதில் நினைவிருக்கிறது.

இப்போது எந்த ஒரு படத்தையும் நினைத்த மாத்திரத்தில் இணையத்தில் இலவசமாகவோ பணம் செலுத்தியோ பார்த்துக் கொள்ளும் வசதி இருக்கிறது.
தூர்தர்ஷன் மட்டும் இருந்த அன்றைய காலகட்டத்தில் சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்துதான் படங்களை தொலைக்காட்சியில் காண முடியும்.

தளபதி போன்று சூப்பர் ஹிட் படங்கள் அடுத்த பல ஆண்டுகள் வரை பெரிய நகரங்களில் இல்லாவிட்டாலும் பேரூராட்சி தியேட்டர்களிலும, கிராமங்கள் போன்ற இடங்களில் அமைந்துள்ள டூரிங் டாக்கீஸ்களிலும் பலமுறை வெளியாகி வினியோகஸ்தர்களுக்கு லாபம் தந்து கொண்டே இருக்கும்.
courtesy : GV Films Ltd.,
திருவாரூரில் அந்த படம் சில ஆண்டுகள் வரை மீண்டும் திரையிடப்படவே இல்லை.
எங்கள் வீட்டில் 2003 ஆம் ஆண்டு வரை தொலைக்காட்சி இல்லை. அதனால் இன்னொருத்தர் வீட்டில் சன் டிவியில் பல்வேறு விளம்பரங்களுக்கிடையில் முக்கால்வாசி பார்த்தேன்.

கடைசியாக 1995ஆம் ஆண்டு தளபதி படம் பேபி தியேட்டரில் வெளியானபோது என் தாயாருடன் சென்று பார்த்தேன். சாதாரண ஹோட்டலில் பளீரென்ற டியூப்லைட் வெளிச்சத்தில் சாப்பிட்டு பழகிய எனக்கு சினிமாக்களில் மங்கலான வெளிச்சத்தில் உணவு விடுதிகளை காட்டும்போது ஏன் இப்படி என்ற கேள்விதான் எழுந்தது.
courtesy : rajinifans.com
2000வது ஆண்டில் முதன் முதலில் நட்சத்திர உணவு விடுதியில் சாப்பிடச் சென்றபோதுதான் இது வேறு சூழ்நிலை. இது ஒருவித அழகு என்று புரிந்தது.
பொதுவாகவே பேபி தியேட்டரின் ஸ்கிரீன் அழுக்கடைந்து இருப்பதால் படங்கள் மங்கலாகத்தான் தெரியும்.

பளீரென்று வெளிச்சத்தில் படங்களைப் பார்த்துப் பழகிய ரசிகர்கள் மணிரத்னம் படங்களும் இருட்டாகத்தான் இருக்கும் என்று பேசிக்கொள்வார்கள்.

நானும் விதிவிலக்கல்ல. ஆனால் தளபதி படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிக் கொண்டேன்.
1995ஆம் ஆண்டு எனது தாயாருடன் சென்று பேபி தியேட்டரில் நான் பார்த்த படம் தளபதி.
***
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.

No comments:

Post a Comment