Friday, January 10, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 10

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.
முத்து - 1995
ஏ.ஆர்.ரஹ்மான் முதன் முதலில் இசை என்றதும் பெரிதாக நம்பிக்கை இல்லாமல்தான் ரசிகர்களே பேசிக் கொண்டார்கள். அதேபோல் பாடல் கேசட்டுகள் வெளியான முதல்நாள் ஏனோதானோ என்ற விமர்சனங்கள்தான் வெளியாயின. ஆனால் நாளாக ஆக, இப்போதும் கேட்க கேட்க திட்டாத அளவில் முத்து படத்தின் பாடல்கள் இருக்கின்றன.
courtesy: Superstar Rajinikanth & Muthu Movie Unit
அந்த படத்தில் டைட்டில் காட்சிகளில் கதாபாத்திரங்கள் மற்றும் ஒரு சில காட்சிகளை போர்ட்ரெய்ட் ஓவியங்களாக வரைந்திருப்பார்கள். எண்ட் டைட்டிலில் இந்த போர்ட்ரெய்ட் ஓவியங்கள் வரைந்தவர் பெயர் மகேஷ் என்று இருந்தது.
courtesy: Director K.S.Ravikumar & Kavithalayaa
பிறகு காமெடி மற்றும் குணசித்திர நடிகராக புகழ்பெற்ற ரமேஷ்கண்ணா இந்த படத்திற்கு வசம் எழுதியதுடன் நாடக அரங்கில் ரஜினி  மீனா காரசாரமான விவாதத்திற்கு முன்பு ரஜினியை மேடையேற்றி விடுவார்.
சிறு பாடலாக இரண்டு இடத்தில் ஹரிஹரன் குரலில் விடுகதையா இந்த வாழ்க்கை என்ற பாடல் பின்னணியில் ஹார்மோனியத்தின் ஹம்மிங், மற்றும் ஒன்றிரண்டு வாத்தியங்களின் ஒலி மட்டுமே வரும். மற்றபடி ஹரிஹரன் குரலில் ஒவ்வொரு வரிகளும் எளிதாக மனப்பாடம் ஆகும் அளவுக்கு அர்த்தமுள்ள வரிகள்.

இந்தப் படம் வெளியான 1995ஆம் ஆண்டு திங்கள் கிழமை தீபாவளி. அப்போதெல்லாம் தீபாவளி பொங்கல் உள்ளிட்ட நாட்களில் இருந்து அடுத்த ஞாயிறு வரை 5 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிடும்.
அதனால் திருவாரூர் சோழா தியேட்டரில் திங்கள் முதல் ஞாயிறு வரை 7 நாட்களுக்கு ஐந்து காட்சிகள்.

எனக்கு சிறுவயதில் இருந்து ஒரு பழக்கம். வெண்திரைக்கு முன்னால் உள்ள கலர் கர்ட்டன் துணி வண்ண பல்ப்புகள் எரிய மேலே எழ ஆரம்பிப்பதில் இருந்து பார்த்தால்தான் முழுப்படம் பார்த்த திருப்தி இருக்கும். அதனால் நான் ஐந்தாவது நாள் வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணி காட்சிக்கு எட்டே முக்காலுக்கெல்லாம் தியேட்டருக்கு சென்று விட்டேன்.
சோழா தியேட்டரைப் பொறுத்தவரை 5 காட்சிகள் என்றால் காலையில் 9 மணிக்கே பத்து பேர் இருந்தால் கூட அவர்களை வைத்து படத்தை ஆரம்பித்து விடுவார்கள். அன்றும் அப்படித்தான் குறைவான கூட்டத்துடன் சரியாக ஒன்பது மணிக்கே படம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஆனால் வெகு நேரம் வரை ஆட்கள் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.
courtesy: rajinifans.com
எது வரை என்றால், ஒருவர் எனக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்து,‘‘தம்பி, படம் போட்டு ரொம்ப நேரம் ஆயிடுச்சா...’’ என்று கேட்டபோது, படத்தில் இடைவேளை என்ற எழுத்துக்கள் ஒளிர்ந்தன. அரங்கினுள் லைட்டுகளைப் போட்டு விட்டார்கள்.

தான் இயக்கும் படம் என்பதால் வழக்கம்போல் ஒரு காட்சியில் தோன்றிய இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், மளையாள வாக்கியத்திற்கு ரஜினியிடம் செயல்முறை விளக்கம் அளித்து காமெடி காட்சியில் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்திருப்பார்.
***
முத்து
***
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.

No comments:

Post a Comment