Sunday, January 12, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 12

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.
படையப்பா - 1999


ரஜினிகாந்த் திரை உலகில் நுழைந்த 25வது ஆண்டில் வெளியான படம். ரஜினிக்கு கதை சொன்னாலே அது சூப்பர்ஸ்டாரைச் சுற்றி மட்டுமேதான் வைத்து சொல்வார்கள். அப்படிப்பட்ட காலகட்டத்தில் தன்னுடைய கதாபாத்திரத்துக்கு இணையாக நீலாம்பரி கதாபாத்திரத்தை உருவாக்க சொல்லி திரைக்கதை அமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்த படம் படையப்பா.

படிக்காதவன் (1985), விடுதலை (1986) ஆகிய படங்களுக்கு அடுத்ததாக நடிகர்திலகம் சிவாஜி கணேசனும் ரஜினியும் சேர்ந்து நடித்த படம் இதுதான் என்று தகவல்கள் கிடைக்கின்றன. வசூலிலும் அவரது ரசிகர்கள் மனதிலும் உச்சம் தொட்டிருந்தாலும் படத்தின் டைட்டிலில் சிவாஜி கணேசன் பெயருக்கு அடுத்து தனது பெயரை இடம்பெறச்செய்திருப்பார்.

எனக்கு தெரிந்து திருவாரூரில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் இதுதான். சோழா தியேட்டரில் அன்றைய தேதியில் பணியாற்றிய சிலர் தெரிந்தவர்கள். அதனால் பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும் மூன்றாம் வகுப்பு டிக்கட்டை பத்து ரூபாய்க்கு பெற்று அதில் படம் பார்த்தேன்.

இப்போதெல்லாம் ஒன்றரை மணி நேர படத்திற்கு தொய்வில்லாமல் எடுப்பதற்குள்ளாகவே திணறி விடுகிறார்கள். படையப்பா கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் ஓடக்கூடிய படம். 
courtesy:
rajinifans.com
சௌந்தர்யா குளிக்கப் போகும் போது செந்தில் மற்றும் நண்பர்களுடன் ஆற்றங்கரையில் ரஜினி பேசிக்கொண்டிருப்பது, ரம்யா கிருஷ்ணன் பாலில் விஷம் கொடுத்ததை பாம்பு தட்டி விடுவது, ரஜினி சௌந்தர்யா திருமணம் ஆகும் காட்சி ஆகியவற்றை தியேட்டர் ஆப்ரேட்டரே கட் செய்து படத்தின் நீளத்தை குறைக்க முயற்சித்தார்.
courtesy:
rajinifans.com
அந்த காட்சிகளை எல்லாம் சன்டிவி, கே டிவியில் போடும் போது ஒரு சில முறை பார்த்திருக்கிறேன். விளம்பரங்களை அதிகமாக போட வேண்டும் என்பதற்காக தியேட்டர் ஆப்ரேட்டர்களைத் தாண்டி படக் காட்சிகளை தொலைக்காட்சி எடிட்டர்கள் அதிகமாகவே தூக்கி விடுகிறார்கள்.
courtesy: Superstar Rajinikanth
&
Arunachala Cine Creations
அரசியல்வாதி நாசர் துண்டு, வேட்டி மாற்றுவதை கட்சி மாறுவதற்கு குறியீடாக வைத்தது, பாம்பு புத்துக்குள்ள கை விட்டா கடிச்சிறாதுங்களா என்று அனுமோகனை பேச வைத்தது, உன் மனசுக்கு புடிச்ச மாப்பிள்ளையை என்னால முடியாதும்மா என்று தங்கையிடம் கண் கலங்குவது (சமீபத்திய வெங்காய விலை உயர்வின்போது இந்த காட்சி நெட்டிசன்களால் மீம்ஸ்களில் பயன்படுத்தப்பட்டது) என்று பல காட்சிகள் இப்போது பார்த்தாலும், எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத விதமாக உருவாக்கப்பட்ட படம்தான் படையப்பா.
courtesy : Tiruvarur Chola theatre.
நாட்டாமை படத்தில் குட்டிப்பையனாக நடித்த மகேந்திரனை இந்த படத்தில் கிக்கு ஏறுதே பாடலில் நடனம் ஆட வைத்திருப்பார்.


வழக்கமாக கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் படங்களின் ஒரு காட்சியிலாவது தோன்றி நடிப்பது வழக்கம். இது ரஜினிக்கும் தெரியும் என்பதால், கிக்கு ஏறுதே பாடல் காட்சியின் படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருந்ததால், பாடலில் சில வினாடிகள், ரஜினி தனக்கு உரிய அதே டிசைனில் கே.எஸ்.ரவிகுமாருக்கும் உடைகளை ஏற்பாடு செய்யச் சொல்லி ஆடச் சொன்னதாக ஒரு நேர்காணலில் கே.எஸ்.ரவிகுமாரே குறிப்பிட்டுள்ளார்.
***
படையப்பா
***
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.

No comments:

Post a Comment