Monday, January 13, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 13

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.
பாபா - 2002

இந்தப்படமும் சோழாவில்தான் வெளியானது. இந்தப்படம் வெளியானபோது நான் பி.காம் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருந்தேன்.


திரைப்படம், தொலைக்காட்சி ஆகியவற்றின் மீதான ஈர்ப்பு குறைந்ததுடன் பல்வேறு காரணங்களால் நான் புத்தகங்கள் வாசிப்பதில் அதிகம் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அதனால் படம் பார்க்கச் செல்வது மிகவும் குறைந்து விட்டது. ஒருவன் இருபத்து ஐந்து வயதில் கம்யூனிசம் பேசலைன்னா தப்பு. அதுவே குடும்பஸ்தனாகி நாற்பது வயசுலயும் பேசிகிட்டே இருந்தாலும் தப்பு என்று பெரியவர்கள் சொல்வார்கள். நானும் அப்படித்தான் கிட்டத்தட்ட 18 வயதில் திரைப்படத்தின் மீதான ஆர்வம் குறைந்து வாழ்க்கைக்காக பொருள் தேடல், புத்தக வாசிப்பு என்று பயணிக்கத் தொடங்கினேன்.

80கள் வரை பிறந்தவர்கள் ஏன் 90 ஆம் ஆண்டுதொடக்கம் கூட சொல்லலாம். அவர்களுக்கெல்லாம் செயற்கைக்கோள் தொலைக்காட்சி இல்லாத காரணத்தால் சினிமாதான் மிகப்பெரிய பொழுதுபோக்கு. நானும் படையப்பா படம் வரை மிகவும் ஆர்வமாக முதல் வாரமே சென்று பார்த்து வந்தேன்.

முக்கியமாக நல்ல வசனங்கள், ஒன்று அல்லது இரண்டு பாடல்களில் வாழ்வியல் கருத்துக்கள் கண்டிப்பாக இருக்கும். அன்றும் இன்றும் ரஜினி படம் என்றால் குடும்பத்துடன் சென்று பார்ப்பவர்கள் அதிகம்.

ரஜினி படம் என்றால் திரையிட்ட தியேட்டர்காரர்கள், சைக்கிள் ஸ்டாண்ட், கேண்டீன் ஏலம் எடுத்தவர்கள் கூட கடன் பிரச்சனைகளை தீர்த்து, சொத்து வாங்குவது, நகை வாங்குவது என்று பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்ட கதைகளை சம்மந்தப்பட்டவர்களே சொல்லக் கேட்டிருக்கிறேன்.

படையப்பா வரை தயாரிப்பாளர், படத்தில் பணியாற்றியவர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் தொடர்பானவர்கள் என்று குறிப்பிட்டவர்கள் மட்டும்தான் லாபம் அடைந்து கொண்டிருந்தார்கள். ரசிகர்களும் பொதுமக்களும் மிகுந்த மன நிறைவுடன் படம் பார்த்துச் சென்றார்கள்.
courtesy: Superstar Rajinikanth & Chola theatre, Tiruvarur.
ஆனால் தொலைக்காட்சி சேனல்கள் வரவால் (தற்போது இணையம்) மற்றவர்களின் படங்களின் வசூல் யாராலும் உறுதியிட்டுக்கூற முடியாதபடி ஏற்ற இறக்கத்தை சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ரஜினி படத்தைப் பொறுத்தவரை இன்றுவரை வசூலுக்கு பங்கமில்லை என்பதால் முன்பு சொன்னபடி தியேட்டர் அதிபர்கள், சேனல்கள் மட்டுமின்றி பல்வேறு வணிக நிறுவனங்கள் ரஜினி என்ற மந்திர வார்த்தையை ஒரு மாபெரும் பிராண்டாக பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டன.
courtesy: Lotus International & Ayngaran Movies
பாபா படத்தில் ரஜினி பேசிய லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன் என்ற டயலாக் ரசிகர் எழுதி தேர்வு செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில் இருந்துதான் பலரும் படங்களைப் பற்றி மிக அதிகமாக எதிர்மறை விமர்சனங்களையும் பேச ஆரம்பித்தார்கள்.

அதாவது ஒரு படைப்பு எப்படி இருக்கிறது என்பதை விட்டு விட்டு, படைப்பாளியை வைத்தும் படைப்புக்களை எடை போட ஆரம்பித்தார்கள். அப்படி ஒரு விமர்சனத்தை எதிர்கொண்ட படம்தான் பாபா.
courtesy : rajinifans.com
நாங்கள் வாங்கிய விலையை ஈடு செய்யும் அளவுக்கு வசூல் இல்லை என்று வினியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் கொடி பிடித்தபோது, இதுநாள் வரை என் படத்தை வைத்து லாபம் சம்பாதித்தபோது என்னிடம் பங்கு கொடுத்தீர்களா என்றெல்லாம் கேள்வி எழுப்பாமல் குறிப்பிட்ட தொகையை திரும்ப கொடுத்தார்.

இப்போதும் இந்தப்படத்தின் பாடல்களை கேட்கும்போது மனதுக்கு இதமாகத்தான் இருக்கிறது. அதிலும் சக்தி கொடு பாடலை எப்போது கேட்டாலும் நமக்கு புது சக்தி பாய்வது போன்ற மன நிலையை உணர முடியும்.

யாருடைய படம் என்றாலும் நூறு சதவீதம் அறிவுரை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால் அது ஆவணப்படமாகி விடும். நம் பார்வையை சரி செய்து கொண்டால் எந்த இடத்திலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஆயிரம் ஆயிரம் விஷயம் நமக்காக காத்துக்கொண்டு இருப்பது புரியும்.

No comments:

Post a Comment