Tuesday, January 14, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 14

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.
சந்திரமுகி - 2005
இந்தப்படம் திருவாரூர் தைலம்மையில் வெளியானது.

படையப்பாவுக்கு பிறகு பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, படத்தின் தலைப்பாக அந்த கதாபாத்திரத்தின் பெயரையே சூட்டிய படம் சந்திரமுகி.
புகைபிடிக்கும் காட்சிகள் வைக்க வேண்டாம் என்று முடிவெடுத்து, சிக்லெட்ஸ் போட்டு மென்றுகொண்டு ஆக்சன் காட்சிகளில் கலக்கிய படம் இது.

உழைப்பாளி படத்திற்கு பி.வாசு இயக்கிய படம். முதன்முதலாக வித்யாசாகர் ரஜினி படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆறு பாடல்களும் ஒவ்வொரு விதமாக அமைந்திருந்தன. பாட்ஷா படத்தில் தத்துவப்பாடலையே ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு அமர்க்களமாக கொடுத்திருப்பார்கள். அது ரா... ரா... ராமையா... எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா பாடல்.

வா... வா... என்று கூப்பிடுவதற்கு தெலுங்கில் ரா... ரா... என்று அர்த்தமாம். இதையே முதல் வரியாக கொண்டு உருவாகி பெரிய ஹிட் அடித்த பாடல்தான் ரா...ரா...

படத்தின் கிளைமாக்ஸ் காட்சி நெருங்கும் நேரத்தில் கிளாசிக்கல் டான்ஸ் வைத்து கலக்கிய அந்த பாடலில் லகலகலக... என்று ஜோதிகா சொன்னதும், பிளாஷ்பேக்கில் வேட்டையன் கேரக்டரில் நடித்த ரஜினி சொன்னதும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

எந்த அளவுக்கு என்றால் ரஜினியும் ஷங்கரும் முதன் முதலில் இணைந்த சிவாஜி படத்தில் லிவிங்க்ஸ்டன் கை விலங்குடன் லகலகலக என்று சொல்லிக் கொண்டு கை விலங்குடன் என்ட்ரி ஆகும் காமெடி காட்சியாக பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு பெரிய ஹிட் அடித்த படம்.

பாபா படத்திற்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களுக்கு பிறகு சுமார் 3 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு உருவான படம். பாபா படத்தில் ரஜினியின் கெட்டப் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தம் என்றாலும் ரசிகர்களுக்கு திருப்தியை அளிக்கவில்லை.

ஆனால் சந்திரமுகியில் இளமை துள்ளல் தோற்றத்துடன் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

படம் வெளியாவதற்கு முன்பு ஏதோ ஒரு விழாவில் கலந்து கொண்டபோது நான் ஜெயிக்கிற குதிரை. சட்டுன்னு எழுந்து ஓடுவேன் பாரு என்றார்.

அதை உறுதி செய்யும் விதமாக படம் மிகப் பெரிய ஹிட்.
courtesy: Director P.Vasu &
Thailammai Theatre, Tiruvarur
தைலம்மையில் வெளியான இந்த படம் ஐம்பது நாட்களை கடந்ததும் அந்நியன் படம் ரிலீசின் காரணமாக நடேஷ் தியேட்டருக்கு மாற்றப்பட்டு மொத்தமாக எண்பது நாளைக்கு மேல் ஓடியது.
courtesy: rajinifans.com
திருமண நிச்சயதார்த்த காட்சிக்கான அண்ணனோட பாட்டு என்ற பாடலிலேயே தன்னம்பிக்கை வரிகளையும் புகுத்தியிருந்தார்.

‘வேர்கள் இல்லாத மரமும் உண்டா...
சொந்தக்காலில் நில்லேம்மா நீ...
அதற்குள் தம்பட்டம் கூடாதம்மா...’
என்ற வரிகள் என்னை மிகவும் சிந்திக்க வைத்தவை.
courtesy: Superstar Rajinikanth & Sivaji Films
2006–2007ல் நான் சென்னையில் இருந்தேன். முன்னூறு நாட்களுக்குப் பிறகு தினமும் பகல் காட்சியாக 700 நாட்களைக் கடந்து சென்னை அண்ணா சாலையில் இருக்கும் சாந்தி தியேட்டரில் திரையிடப்பட்ட படம்.

***
சந்திரமுகி
***
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.

No comments:

Post a Comment