Thursday, January 2, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 2

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.
மன்னன் - 1992
இந்தப் படம் வெளியானபோது எனது தங்கை பிறந்து சில மாதங்களே ஆன கைக்குழந்தை. அப்போது அருகில் குடியிருந்த டீச்சர் ஒருவரின் குடும்பத்தினர் என்னையும் படத்துக்கு அழைத்துச் செல்கிறேன் என்று என் அம்மாவிடம் அனுமதி பெற்று அழைத்துச் சென்றார்கள்.
courtesy: Superstar Mr. Rajini and all producers & directors
அந்த படத்தில் சண்டைக்காட்சிகள் குறைவாகவும், விஜயசாந்தியுடன் சவால் விடும் ஈகோ யுத்தம் போன்ற கதை அமைப்பு என்னை அந்த வயதில் பெரிதாக கவரவில்லை. ஆனால் பாடல் காட்சிகளும் இசையும், விசு, கவுண்டமணியுடன் ரஜினி அடிக்கும் லூட்டிகள் மிகவும் ரசிக்க வைத்தது.
courtesy: Sivaji Films, Chennai & Mannan Team
& Chola Theatre, Tiruvarur.
படம் ஓடிக்கொண்டிருக்கும்போது நடுவில் ஒருமுறை கரண்ட் கட் ஆனது.
படம் முடிந்து வீட்டுக்கு வந்தபோது, கரண்ட் நின்ற நேரத்தில் எனது தங்கைக்கு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் போய் மருத்துவமனைக்கு சென்று ஊசி போட்டு திரும்பியிருக்கிறார்கள்.

துணைக்கு வீட்டில் இல்லாமல் போய் விட்டாயே என்று கடிந்து கொண்டபோது, என்னை படத்துக்கு அழைத்துச் சென்ற டீச்சர், நீங்க சொன்னதாலதான் அழைச்சுட்டு போனோம். அவனைத் திட்டாதீங்க. அவன் என்ன செய்வான் பாவம் என்று என்னை அம்மாவின் கோபத்திலிருந்து காப்பாற்றினார்.

பிறகு 1995ஆம் ஆண்டு வாக்கில் அதே சோழா தியேட்டரில் மன்னன் நாலைந்து நாட்கள் திரையிடப்பட்டபோது அம்மாவையும் தங்கையையும் அழைத்துச் சென்று பார்த்தேன்.
courtesy : rajinifans.com
குளிர்பான கம்பெனியில் உற்பத்தி நடக்கும் இடங்களில் பல காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும். அன்றைய ரசிகர்களுக்கு இது போன்ற கம்பெனிகளில் உற்பத்தி எப்படி எல்லாம் நடக்கிறது என்பதை எளிமையாக அறிமுகம் செய்த காட்சிகள் இவை.

அது தவிர தெருவில் இருந்த பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்திக்காக, பெரிய திரை கட்டி, 16எம்எம் புரொஜக்டரில் இந்த படம் திரையிடப்பட்டது.
courtesy: rajinifans.com
அப்போது தெருவில் இருந்த ரஜினி ரசிகர் ஒருவர் படத்தைப் பற்றி மைக்கில் அறிவிப்பு செய்தபோது, மூன்று முகம், ஜானி, முரட்டுக்காளை, நல்லவனுக்கு நல்லவன், ராஜாதிராஜா, மனிதன், தளபதி என்ற படத்தலைப்பு வார்த்தைகளை பயன்படுத்தி கவிதை பாடி ஓ... நீயே ஒரு மன்னன்தானே என்று நிறைவு செய்வார்.
***
மன்னன்
***
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.

No comments:

Post a Comment