Friday, January 24, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 24 (நிறைவுப்பகுதி)

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.

தர்பார் - 2020

இந்த படம் திருவாரூர் நடேஷ் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது.

1995ல் பாட்ஷா படத்திற்கு 24 ஆண்டுகள் கழித்து 2019ல்தான் பொங்கலுக்கு ரஜினி படம் பேட்ட. இப்போது 2020ல் தர்பார் வெளியாகி உள்ளது.

சுவாமி விவேகானந்தர் உட்பட பெரிய மகான்கள் அனைவரும் இளைஞர்சக்தியின் உன்னதத்தை கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர் சக்தி ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடாமல் மது, பாக்கு உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களுக்கு அடிமையாகி வீட்டையும் நாட்டையும் கவனிக்காமல் வீணாகிக் கொண்டிருப்பது கண்கூடான உண்மை.
இப்படி இளைஞர்களுக்கு போதைப் பொருட்களை வினியோகிக்கும் கும்பலை வேட்டையாடும் போலீஸ் என்ற கதாபாத்திரம் ஏற்றுள்ளது நல்ல விஷயம்.

அது மட்டுமின்றி 1992 தீபாவளிக்கு ரிலீசான பாண்டியன் படத்திற்கு பிறகு இப்போதுதான் படத்தில் காக்கிச்சட்டையை அணிந்திருக்கிறார். பாண்டியன் படத்தில் கூட பாதி நேரம் அண்டர்கவர் ஆப்ரேசன் என்னும் செயல்பாட்டில் இருப்பதால் முழு படத்திலும் காக்கி உடையில் வரமாட்டார்.

அந்த படத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது ரஜினி ரசிகர்களுக்கு துறுதுறு போலீசாக ரஜினி அதிரடி நல்ல விருந்துதான்.

ரஜினி மாதிரி பெரிய ஆட்களின் படங்களின் கதைக்களம் நம்ம ஊரில் நடப்பதாக இருந்தால் இன்னும் உற்சாகம் இருக்கும்.
இப்போது டெக்னாலஜி வளர்ச்சியின் காரணமாக தமிழில் ஒரு படம் எடுக்கும்போதே தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று டப்பிங் செய்து அல்லது ஒரே நேரத்தில் பல மொழிப்படமாகவோ எடுக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

அதிலும் ரஜினி படம் என்றால் கேட்கவே வேண்டாம். பத்துப்பதினைந்து ஆண்டுகளாக இந்திய அளவில், உலக அளவில் மார்க்கெட் விரிவடைந்து செல்வதால் பெரிய நகரங்களில் கதை நடப்பது போல் கதை உருவாக்கப்படுகிறது.  

பேட்ட படம் வடகிழக்கு மாநிலத்தில் நடப்பதைப்போல் எடுக்கப்பட்டது என்றால், தர்பார் படம் மும்பை கதைக்களம்.
பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுப்பவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. துணை நடிகர்கள் கூட சாலையில் நடந்து செல்ல முடிவதில்லை. அவர்களுடன் ஆட்டோகிராப் கேட்டு அலைந்து கொண்டிருந்தவர்கள் தற்போது செல்பி எடுப்பது என்று முன்னேற்றமடைந்திருக்கிறார்கள்.

நிலைமை இப்படி இருக்கும்போது பெரிய நடிகர்களை வைத்து நம் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்துவது மிகப்பெரிய கட்சி மாநாடு நடத்துவதை விட சவாலான விஷயம். இதனால் நஷ்டம் ரசிகர்களுக்குதான்.
நம்ம ஊரில் நடப்பதாக கதை நடக்கும்போது இருக்கும் உற்சாகம் பிற மாநிலங்களில் எவ்வளவுதான் நம்ம ஹீரோக்கள் சாகசம் செய்தாலும் ஏதோ ஒன்று குறைவதாகவே நம்மை ஏங்க வைக்கிறது. இதுதான் உண்மை.

இந்த விஷயத்தில் படைப்பாளிகளை குறைசொல்ல முடியாது. ரசிகர்களைத்தான் கை காட்ட வேண்டியிருக்கிறது.

*****************


இந்தப்படத்தை கடந்த வாரம் பரமக்குடி ரவி தியேட்டரில் பார்த்தோம். இன்றும் பல திரையரங்குகளில் நுழைவுச்சீட்டு என்ற பெயரில் முன்பதிவு சீட்டைத்தான் தருகிறார்கள். அதிலும் தொகை எவ்வளவு என்ற விபரம் இருக்காது. சிறிய பட்ஜெட் படங்கள் என்றால் தியேட்டரில் கட்டண விபரம் அச்சிட்ட டிக்கட் தருவார்கள். அதில் மூன்றாம் வகுப்பு ரூ.9.85 என்று இருக்கும். நம்மிடம் 150 ரூபாய் வாங்குவார்கள்.

ஆனால் பரமக்குடி ரவி தியேட்டரில் கொடுத்த நுழைவுச்சீட்டில் கட்டணம் ரூ.78.00, ஸ்டேட் ஜி.எஸ்டி 4.80, சென்ட்ரல் ஜி.எஸ்.டி 4.80, கேளிக்கை வரி ரூ.6.24, பராமரிப்பு கட்டணம் ரூ.2.00 ரூபாய் ஆக கூடுதல் ரூ.95.84 என்று அச்சிட்ட டிக்கட் தந்தார்கள்.

தியேட்டரில் கழிவறை சுத்தமாக இருந்தது. ஆனால் படம் பார்க்க வந்த 50 ஆண்களில் 20 பேர் அங்கே நின்று புகைப்பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

பெரிய எவர்சில்வர் டிரம்மில் குடிநீர் வைக்கப்பட்டு இருந்தது. DTS என்று சொன்னாலும் சவுண்ட் சுமார்தான். UFO டிஜிட்டல் புரொஜக்சன் செய்யப்பட்ட தியேட்டர். இந்த தியேட்டரில் இதற்கு முன்னால் நான் 1997 ஆம் வருடம் மின்சார கனவு படம் பார்த்தேன். அப்போது பாதி தியேட்டரில் மட்டும்தான் குஷன் இருக்கைகள். மீதி இடத்தில் நீண்ட மர பெஞ்சுதான். இப்போது முன்னால் இரண்டு வரிசை மட்டும் அப்படி வைத்திருக்கிறார்கள். குஷன் இருக்கைகள் ஓரளவு நன்றாகவே இருந்தன.

பரமக்குடியில் சாந்தி, கிருஷ்ணா, எஸ்பிஎம், ஓம் சண்முகா, ரவி என்று ஐந்து தியேட்டர்கள் இயங்கி வந்தன. இவற்றில் முதல் மூன்றும் இடிக்கப்பட்டு குடியிருப்பு அபார்ட்மெண்ட்டுகளாக மாறிவிட, ஓம் சண்முகா அவ்வப்போது மூடப்பட்டு திறந்து வந்தார்கள். இப்போது நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

எஞ்சியிருப்பது ரவி தியேட்டர் மட்டும்தான். இயன்றவரை விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டு வரும் தியேட்டர் என்பதால் நிர்வாகத்தை பாராட்டலாம்.

படம் போட்டபோது 5 பேர்தான் இருந்தோம். காலை 10.15 மணிக்கே படம் ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் 11 மணி வரை ஆட்கள் உள்ளே வந்து கொண்டே இருந்தார்கள். ஆண்களும் பெண்களுமாக 70 பேர் இருந்தார்கள்.


இன்னமும் பெண்கள், குழந்தைகள் மத்தியில் ரஜினி படம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.
********************
தளபதி முதல் தர்பார் வரை தொடர் பதிவு இத்துடன் நிறைவுற்றது. 
எதுகை மோனைக்காக இந்த தலைப்பை வைத்தாலும், தளபதி படத்திற்கு பிறகு சந்தோஷ் சிவன் ஔிப்பதிவு செய்துள்ள ரஜினி படம் தர்பார்.
***
தர்பார்
***
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.

No comments:

Post a Comment