Friday, January 3, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 3

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.
அண்ணாமலை - 1992

திருவாரூர் நடேஷ் தியேட்டரில் வெளிவந்த படம்.
இப்போது நினைத்த உடனேயே தொலைக்காட்சி, இணையம், மொபைல் என்று பாடல்களை கேட்க முடிகிறது. அப்போதெல்லாம் பல வீடுகளில் டேப் ரெக்கார்டர் இருப்பதே பெரிய விஷயம். அதில் போட்டு கேட்க காசு கொடுத்து கேசட் வாங்குவது அதை விட பெரிய காரியம். இலங்கை வானொலி, திருச்சிராப்பள்ளி வானொலி நிலையங்கள் ஆகியவற்றில் எப்போதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏதாவது ஒரு பாடலைத்தான் ஒலிபரப்புவார்கள்.

படத்தின் பாடல்களை ஹிட்டாக்க வேண்டும் என்றால் அப்போது இருந்த மிக முக்கியமான ஒரு இடம் டீக்கடைகள்தான். கேசட் நிறுவனங்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலம் ஒவ்வொரு ஊரிலும் மிக முக்கியமான இடங்களில் உள்ள டீக்கடைகளுக்கு கேசட்டை இலவசமாக கொடுத்து அனுப்புவார்கள்.
Courtesy : Superstar Rajini
அண்ணாமலை படம் வெளியான காலகட்டத்தில் எனது தந்தை நடேஷ் தியேட்டர் காம்ப்ளக்சில் டீக்கடை வைத்திருந்ததால் அங்கேயும் அண்ணாமலை படத்தின் ஆடியோ கேசட்டை கொடுத்திருந்தார்கள். பல நாட்கள் பல முறை திருப்பி திருப்பி அந்த படத்தின் பாடல்களை போட்டுக் கேட்டோம்.

தர்மதுரை, அதிசயபிறவி படங்களுக்கு பிறகு நடேஷ் தியேட்டரில் வெளியான படம் அண்ணாமலை. ரஜினியின் ஆக்சன் படங்களில் புதிய ஒரு உச்சத்துக்கு வசனம் மற்றும் காட்சிகளின் மூலம் கொண்டு சென்ற படங்களில் அண்ணாமலை மிக முக்கியமான படம்.
courtesy : rajinifans.com
அப்போதெல்லம் தினசரி 5 காட்சிகள் சர்வ சாதாரணம். அக்கம்பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன் படம் பார்க்கச் சென்றோம். தியேட்டருக்கு வெளியே சாலையை அடைத்தவாறு ஒரு காட்சிக்குரிய கூட்டம் காத்து நின்றது.

டிக்கட் கிழித்து, தியேட்டரின் உள்ளே பக்கவாட்டில் காத்து நின்றவர்களும் முழு தியேட்டர் கொள்ளவுக்குரிய நபர்கள்.

Courtesy : rajinifans.com
நாங்கள் வெளி கேட்டைத் திறக்க வாய்ப்பு இல்லாததால் ஸ்வீட்லேண்ட் கூல் ஹோம் என்ற கடைக்குள் நுழைந்து உள் கதவு வழியாக தியேட்டருக்குள் நுழைந்தோம். அதற்கு முந்தைய காட்சி முடிந்து அடுத்த பத்து நிமிடங்களுக்குள் அடுத்த காட்சி ஆரம்பிக்க வேண்டும் என்பதால் திரைக்கு முன்னால் உள்ள கலர் ஸ்கிரீன் மேலேயே இருந்தது. அப்போது அந்த தியேட்டரில் ஏசி இயங்கிய காலகட்டம்.

ஹ்ஹேய்... என்ற கோரஸ் குரலுடன், கம்ப்யூட்டர் டிசைனில் சூப்பர் ஸ்டார் ரஜினி என்று டைட்டில் முதன் முதலில் போடப்பட்ட ரஜினி படம்.
Courtesy : Kavithalayaa & Annamalai Movie unit &

Natesh Theatre, Tiruvarur, 

Special Thanks to : Music Director Deva
சிறுவயதில் இருந்தே ரஜினி சரத்பாபு நட்பு, இசை அதிரடியாக இருந்தாலும் அனைத்து பாடல்வரிகளும் புரியும் அளவில் எளிமை, ஜனகராஜின் நாசமா நீ போனியா தெரு என்ற பட்லர் இங்கிலீஷ், எம்எல்ஏ வினுசக்ரவர்த்தி தொடர்பான காட்சிகள், சரத்பாபு  ரஜினி மோதல், பணக்கார ராதாரவியின் தந்தை கதாபாத்திரம், ஒரே பாடலில் முன்னுக்கு வந்தாலும் அதில் 18 ஆண்டுகள் கடுமையான உழைப்பு என்ற லாஜிக்கான காட்சி அமைப்பு, மன்னிக்கிறதுதான் பெரிய தண்டனை என்ற அளவில் அவன் வீட்டை அவனுக்கே கொடுத்துடுங்க என்று சொல்லும் காட்சி என்று நல்லதொரு மன நிறைவை அளித்த திரைக்கதை வசன அமைப்பு.
Courtesy : Kavithalayaa & Annamalai Movie unit &
Natesh Theatre, Tiruvarur
இப்போது வெளிவந்துள்ள ஏதோ ஒரு புத்தகத்தில் அண்ணாமலை படம் அறிவிக்கப்பட்டபோது டைட்டில் மட்டும்தான் முடிவாகி இருந்ததாகவும், முதலில் வசந்த் இயக்குவதாக இருந்து சில காரணங்களால் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா என முடிவு செய்யப்பட்டு அவசரகதியில் கதை, திரைக்கதை உருவாகி படம் தயாரானதாக சொல்லப்பட்டுள்ளது.

அவ்வளவு குளறுபடியில் ஆரம்பித்த படம் இவ்வளவு கச்சிதமாக திரைக்கதை அமைக்கப்பட்டு உருவாகி அசத்தியிருக்கிறது என்றால் அதற்கு ரஜினி என்ற மாஸ் மிக முக்கிய காரணம். சளி பிடித்துக் கொள்ளும் என்ற காரணம் சொல்லி அதுவரை நான் திரையரங்கங்களில் ஐஸ்கிரீம் சாப்பிட்டதே கிடையாது. அருகில் இருந்த குடும்ப நண்பர்கள் எனக்கும் ஐஸ்கிரீம் வாங்கித் தந்தார்கள். அண்ணாமலை இடைவேளையில்தான் நான் முதன் முதலில் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறேன். பிளேவர் வெண்ணிலா.
***
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.

No comments:

Post a Comment