Saturday, January 4, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 4

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.
பாண்டியன் - 1992
திருவாரூர் சோழா தியேட்டரில் வெளிவந்த படம்.


இந்தப்படம் வெளியானபோது நான் ஆறாம் வகுப்பு படித்து வருகிறேன். இப்போது திருவாரூர் நகராட்சியின் புதிய அலுவலக கட்டிடம் இருக்கும் இடத்தில் முன்பு ஒரு பழமையான கட்டிடம் இருந்தது. அதன் பெரிய சுவரில் எல்லா திரையரங்கு போஸ்டரும் ஒட்டப்படும். 6 – பீஸ் என்ற அளவில் பெரிய போஸ்டரில் ரஜினி குஷ்பூ உருவங்கள் இருந்தன.

தினமும் பள்ளிக்கு செல்லும்போது அந்த போஸ்டரை பார்க்காமல் செல்வது கிடையாது.
courtesy : Superstar Rajinikanth
Chola Theatre, Tiruvarur
அந்தப்படத்தில் ரஜினி உடைகளில் ரைட் என்று வரையப்பட்டிருக்கும். ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் அன்றைய காலகட்டத்தில் தங்கள் உடைகளில் ரைட் படம் வரைந்த அல்லது எம்ப்ராய்டரி போட்ட சட்டைகளை அணிந்து வலம் வந்தார்கள்.

நான் படித்த பள்ளியில் புதன் கிழமை மட்டும் சீருடை கிடையாது. அன்று எங்கள் வகுப்பு மாணவன் ஒருவன் சட்டையின் வலப்புறம் ரைட் போட்ட சட்டையை அணிந்து வந்தான்.

வேறு சில வகுப்புகளில் இப்படி சட்டை அணிந்து வந்த மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்து அடித்ததை காலை 11 மணி இடைவேளையின் போது கேள்விப்பட்டோம்.

இன்றைய காலகட்டம் என்றால் அந்த ஆசிரியர்களுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டமே வெடித்திருக்கும். அப்போது 99 சதவீத மாணவர்கள் ஆசிரியர்களுக்கு அடங்கிய பிள்ளையாக இருந்த நேரம்.
courtesy : Pandian Movie & Unit
& Director-Producer SP Muthuraman.
எங்கள் வகுப்பு மாணவன் சட்டையில் ரைட் வரையப்பட்டிருந்த இடத்தினை சுருட்டி கைக்கும், இடுப்புக்கும் இடைப்பட்ட பகுதியில் சொருகிக்கொண்டு அமர்ந்திருந்தது இப்போதும் நினைவில் உள்ளது.

பாண்டியன் படத்தைப் பொறுத்தவரை ரஜினியின் அறிமுகப்பாடலான உலகத்துக்காக பிறந்தவன் நானே என்ற பாடலில்தான் தாள வாத்தியத்தின் சத்தம் சற்றுக் குறைவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மற்ற அனைத்து பாடல்களுமே பெரிய ஸ்பீக்கர்களில் வைத்துக் கேட்கும்போது ரசிகர்களை எழுந்து ஆட்டம் போடவைத்தவைதான்.
courtesy: rajinifans.com
படத்தின் வில்லனாக பிரபாகர் என்ற நடிகரின் கதாபாத்திரம் ஹீரோவுக்கு சமமாக படைக்கப்பட்டிருந்தது. அதிலும் வில்லன் அமர்ந்திருக்கும் நாற்காலி டிராலியில் வட்டவடிவில் நகர்ந்து வருவது நன்றாக படமாக்கப்பட்டிருக்கும்.
courtesy: Pandian Movie & Unit
படத்தின் கிளைமேக்ஸ் மட்டும் சட்டென்று வந்து விட்டது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது உண்மை.
***
பாண்டியன்
***
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.

No comments:

Post a Comment