Sunday, January 5, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 5

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.
எஜமான் - 1993
திருவாரூர் சோழா தியேட்டரில் வெளிவந்த படம்.

1993 பிப்ரவரியில் வெளியான இந்தப்படமும் சோழா தியேட்டரில்தான் திரையிடப்பட்டது. வாழைமரம், தோரணம், துணி பேனர், கட்அவுட் என்று அமர்க்கம். 
courtesy: Superstar Rajinikanth, AVM Productions &
Thiruvarur Chola Theatre

அப்போதெல்லாம் படம் வெளியாகும் முதல் நாள் மட்டும் அதுவும் ஒன்றிரண்டு ரசிகர் மன்ற காட்சிகளில் மட்டும்தான் பிளாக்கில் டிக்கட் விற்கப்படும். மற்ற நேரங்களில் இரண்டரை ரூபாய், நான்கரை ரூபாய், ஆறு ரூபாய் என்ற அளவில் சாதாரண விலையில்தான் டிக்கட் விற்கப்படும். அதனால் இந்தப் படத்தையும் நாலைந்து நாட்களிலேயே பார்த்து விட்டோம்.

படத்தின் போஸ்டர்கள் ஒவ்வொரு டிசைனிலும் வானவராயன் கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி பேசும் வசனங்கள் ஒவ்வொன்று இடம்பெற்றன. 
courtesy: Ejamaan Unit & Director R.V.Udhayakumar
ரஜினியும் கவுண்டமணியும் ஊர்மக்களின் சாப்பாட்டை சாப்பிட்டபடி பாடும் பாடல், டைட்டில் பாடல், ஆலப்போல் வேலப்போல் போன்ற அனைத்து பாடல்களுமே இனிமையானவை. அதிலும் ஒருநாளும் உனைமறவாத இனிதான வரம் வேண்டும் பாடல் இப்போதும் சில திருமண வீடியோக்களில் பயன்படுத்தப்படுகிறது. 

நெப்போலியனும் ரஜினியும் பெண் கேட்டு வரும் காட்சியில் வசனங்கள் எல்லாம் அசத்தல் ரகம். ஏவிஎம் நிறுவனம் தயாரித்த இந்தப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் என்ற வரிசையில் சொல்ல முடியாது. 
courtesy:
rajinifans.com
படத்தின் தொடக்கத்தில் ரஜினியின் காலடி மண்ணைக்கூட மிதிக்காத மக்கள் பிறகு வந்த காட்சிகளில் அப்படி நடக்க மாட்டார்கள். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக நடந்து கொள்வதாக முதலில் காட்சி அமைக்கப்பட்டு, பிறகு மீனா கருவுற்றிருப்பதாக கணவரையும் மற்றவர்களையும் ஏமாற்றுவதாக திசை மாறிச் சென்றுவிடும். இது எதையும் ரசிகர்கள் கவனிக்கவில்லை. ஏனென்றால் அந்த அளவுக்கு மக்கள் ரஜினி படங்கள் மீது பாசம் கொண்டிருந்தார்கள் என்று படத்தின் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏவிஎம் சரவணன் ஆகியோர் சொன்னதாக பத்திரிகை நேர்காணல்களில் படித்திருக்கிறேன். 

இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் 15 வினாடிகளுக்கு டிக்டாக் வீடியோ போட்டு பிரபலமடைந்து சினிமா வாய்ப்புகள் பெற்றுவிடுகிறார்கள். அப்போது சாதாரணர்களின் புகைப்படம், பெயர் ஏதாவது நாளிதழில் வெளிவரவேண்டும் என்றால் சாதாரண விஷயம் கிடையாது. எஜமான் படம் பார்த்து விட்டு விமர்சனம் எழுதினால் பெயர், புகைப்படத்துடன் பிரசுரமாகும் என்று அறிவித்து அதுவும் மிகப்பெரிய விளம்பரமாக அமைந்தது.


***
எஜமான்
***
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.

No comments:

Post a Comment