Wednesday, January 8, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 8

ரஜினிகாந்த், சினிமா, கட்டுரை, நினைவுகள், தொடர்பதிவு
வீரா - 1994
இந்தப்படம் திருவாரூர் தைலம்மையில் திரையிடப்பட்டது.

தனியார் தொலைக்காட்சிகளில் சன்டிவி தினமும் மாலை நேரம் மட்டும் ஆறிலிருந்து ஒன்பது மணி வரை ஔிபரப்பு செய்துவந்த நேரம்.
courtesy:
Veera Movie & Unit
Thailammai Theatre, Tiruvarur.
புதிய படங்கள் பற்றிய அறிவிப்பை நாளிதழ்களிலும் இலங்கை வானொலி, திருச்சிராப்பள்ளி வானொலி, விவித்பாரதி ஒலிபரப்பு ஆகியவற்றின் மூலமாக தெரிந்து கொண்டால்தான் உண்டு.

வள்ளி படத்தில் ரஜினிகாந்த் வயதான தோற்றத்தில் சில காட்சிகள் மட்டும் நடித்தபோது இதுதான் அவரது கடைசி படம் என்று பொதுமக்களிடையே ஒரு பேச்சு பரவியது.

அப்போது சைக்கிள் ரிக்சாக்கள் அங்ககொன்றும் இங்கொன்றுமாக ஓடிக்கொண்டிருந்த நேரம். ஒரு சைக்கிள் ரிக்சாவின் பின்புற லெதரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வீரா என்று எழுதியிருந்ததைப் பார்த்துதான் அடுத்ததும் படம் வரப்போகிறது என்று தெரிந்து கொண்டேன்.

ஆனால் பாட்ஷா முதல் தற்போது தர்பார் வரை புதிய புதிய உச்சத்தை அவரது படம் எட்டிக்கொண்டிருக்கிறது. அது தனி சரித்திரம்.

வீரா படம் 1994 தமிழ் புத்தாண்டுக்கு வெளியானது. அதற்கு முன்பு மார்ச் மாதத்தில் திருவாரூர் தைலம்மையில் சிந்துநதிப்பூ படம் பார்க்கச் சென்றபோது அந்த படத்தின் இடைவேளையின்போது கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட பாடல் ஆடியோ ஓடியது.

இன்றைய காலகட்டம் போல் அடிக்கடி பாடல்களை கேட்கும் வசதிகள் கிடையாது. அது என்ன படத்தில் வரும் பாட்டு என்பதையே சில நாட்கள் கழித்துதான் அறிந்து கொண்டேன். பாலசுப்பிரமணியம் குரலில் ஏதோ அமைதியான ஒரு கல்லூரி மாணவர் மேடையில் பாடுவது போன்ற உணர்வை இந்த பாடல் தந்தது.
courtesy:
Superstar Rajinikanth &
Panchu Arunachalam &
Sureshkrishnaa
படத்தில் முதல் பாடலாக இடம்பெற்ற கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட பாடல் படம் பார்க்கும் ரசிகர்களை எழுந்து ஆட்டம் போடச்செய்ய வைக்காத மெலோடி பாடலாக இருக்கும்.

ஆனால் பாடலின் இறுதியில் லிவிங்க்ஸ்டன் ரஜினி பாடி அசத்தியதைப் பார்த்து அப்படியே பின்னால் நழுவி விடுவார். அந்த காட்சிக்கு கைதட்டல். பாடல் முடிந்ததும் படத்தில் அந்த அரங்கத்தில் பார்வையாளர்கள் மெய்மறந்துஅமர்ந்திருந்தது போலவேதான் தியேட்டரிலும் இருந்தார்கள்.
courtesy:
pramid glitz music
சிறுமி எழுந்து முதல் இரண்டு வரிகளைப் பாடியதும் படத்தில் ஆடியன்ஸ் எழுந்து தட்டுவார்களே அப்படித்தான் தியேட்டரிலும் தாமதமாக விசில் பறந்தது.

தெலுங்கு ரீமேக் படமாக இருந்தபோதிலும், இளையராஜா இசையுடன், செம ஜாலியான பொழுதுபோக்குபடமாக அமைந்திருந்தது.

படம் வெளிவந்த ஒரு வாரத்திலேயே முதல்முறை பார்த்திருந்தாலும், ஒரு மாதம் கழித்து ஊரிலிருந்து வந்த என் மாமாவுடன் இரவுக்காட்சிக்கு சென்றேன். என் மாமாவுடன் நான் சேர்ந்து பார்த்த கடைசி படம் அதுதான்.

பாடல் பயிற்சி முடித்த பிறகு மலைக்கோயிலில் மீனாவை சந்திக்கும் ரஜினி, மறுநாள் இரவு வருவதாகவும், விருப்பம் இருந்தால் விளக்கு ஏற்றி வைக்குமாறு சொல்லிவிட்டுச் செல்வார். அந்த காட்சியைக் காணோம்.
courtesy:
rajinifans.com
நேரடியாக ரஜினியின் கண்கள் கோயிலின் படிக்கட்டுகளில் விளக்கைத் தேடும்.
அப்போது ‘‘படத்தை கட் பண்ணிட்டான்... முழுசா படத்தைப் போடு...’’என்று தியேட்டரில் இருந்து ஏகப்பட்ட குரல்கள் ஒலித்தன.

ஆக, அந்த இரவுக்காட்சியில் உட்கார்ந்திருந்த பெரும்பாலோனோர் படத்தை இரண்டாவது தடவையோ அல்லது அதற்கு அதிகமான முறையோ பார்ப்பவர்கள்தான் என்பது உறுதியானது.

இப்போது உள்ளங்கையிலேயே போனை வைத்து நாம் நினைக்கும் காட்சிகளை மட்டும் திரும்பத் திரும்ப பார்க்க முடிகிறது. அப்போதெல்லாம் தியேட்டரில் ஏதாவது பாடல் காட்சி ஒன்ஸ்மோர் போடப்பட்டாலே அது தனி திருவிழாவாக இருக்கும்.

இப்போது க்யூப் சிஸ்டத்தில் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்கில் படத்தை பதிவு செய்து வைத்து திரையிடும்போது பிளே, பாஸ், ஸ்டாப் பட்டன் மட்டும் வைத்து ரீவைண்ட் செய்ய வசதியில்லாமல் செய்து விட்டார்கள்.

அதனால் ரசிகர்கள் தயவு செய்து ஒன்ஸ்மோர் கேட்காதீர்கள். எங்களால் அப்படி திரையிட இயலாது என்று சென்னை குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் நிர்வாகத்தினர் யூ டியூப் வீடியோவே பதிவேற்றம் செய்திருக்கிறார்கள்.
***
2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.

No comments:

Post a Comment