Thursday, January 9, 2020

தளபதி முதல் தர்பார் வரை - 9

சாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.
பாட்ஷா - 1995
திருவாரூர் தைலம்மையில் வெளியான படம்.
courtesy: Baashaa Movie & Unit
(25 Logo image credit :Vectorstock.com)

அது நாள் வரை ஏதாவது திருவிழா என்றால் அதாவது தீபாவளி, பொங்கல் நாட்களில் அன்றைய தினம் படம் ரிலீசாவதுதான் வழக்கம். அந்த முறை 1995 ஜனவரி 12 ஆம் தேதியே படம் வெளியானது. திருவாரூர் தைலம்மையில் படம் பார்க்கச் சென்றோம்.


சந்திரமுகி படத்திற்கு பிறகு (பேட்ட படத்தை இதில் சேர்க்க வேண்டாம்) இளமை துள்ளல் நிறைந்த போலீஸ் கெட்டப்பில் தர்பார் படம் ரிலீசாகும் இந்த 2020 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடு என்பது பாட்ஷா படத்திற்கு வௌ்ளிவிழா ஆண்டு. இதுவும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகவே அமையும் என்பது உறுதி.  

திரைக்கு அருகில் உள்ள மூன்றாம் வகுப்பு டிக்கட்டே 10 ரூபாய், அடுத்து 15, 20 என்ற அளவில் இருந்தது. நானும் அம்மாவும் படம் பார்க்க வேண்டும் என்றால் 20 ரூபாய் வேண்டும். அன்றைய காலகட்டத்தில் அது எங்களுக்கு பெரிய தொகை.
அதனால் பொங்கல் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பி விட்டோம். பொங்கலுக்கு மறுவாரமும் அதே விலையில்தான் டிக்கட் இருந்தது. மூன்று வாரங்கள் கழித்துதான் 3ஆம் வகுப்பு டிக்கட் 5 ரூபாய் என்றார்கள். அப்போதுதான் அந்த படத்தை பார்த்தோம்.

தங்கையை அடித்த பிறகு ஆனந்த்ராஜ் ஆள் ஒருவரை அடித்ததும் மற்ற பின்னணி இசை எதுவும் இன்றி தூரத்தில் ரயில் செல்லும் ஓசை மட்டும் கேட்கும். இதுவரை அந்த காட்சிக்கு இணையாக வேறு எந்த ஆக்சன் பிளாக்கும் என் படங்களில் அது வரை அமைந்ததில்லை. அதன் பிறகும் அமையுமா என்று தெரியவில்லை என்று ரஜினியே சொல்லியிருக்கிறார்.
courtesy: Super star Rajinikanth, Baashaa Movie, Sureshkrishna,
Thailammai Theatre, Tiruvarur.
ஒருவரை அளவுக்கு அதிகமாக நேசித்தால் அவரது குறைகள் தெரியாது என்று சொல்வார்கள். பாட்ஷா மும்பையில் ரகுவரனை போலீசில் மாட்டி விடும்போது ரகுவரனின் மகளுக்கு (நக்மா) மூன்று நான்கு வயது இருப்பதாக காட்டுவார்கள். நான்கு ஆண்டுகள் கழித்து நக்மா இருபது வயது பெண்ணாக தேவன் மகளாக வளர்வதாக கதை செல்லும்.

கதை விவாதத்தில் இவ்வளவு பெரிய லாஜிக்கை எல்லாம் தவற விட்டிருக்க மாட்டார்கள். நக்மா தேவனின் மகள் அல்ல, ரகுவரனின் மகள் என்பது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் திரைக்கதையில் திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
courtesy: Sathya movies
இன்றைய காலகட்டம் என்றால் திருவிளையாடல் படத்தில் நக்கீரர் புலவரைப் பார்த்து நாகேஷ் சொல்லுவாரே, ‘‘குத்தம் கண்டுபிடிச்சே பேர் வாங்குற ஆளுய்யா நீ...’’ என்று வசனம் பேசுவதைப் போல் இந்த லாஜிக் ஓட்டையை பெரிதாக பேசி விவாதப் பொருளாக்கியிருப்பார்கள்.

அன்றைய காலகட்டத்தில் படத்தை ரசிக்க மட்டும்தான் செய்தார்கள் என்பதை உணரலாம். ரஜினிகாந்த் படங்கள் என்றாலே மக்கள் மனம் ஒன்றிப்போய் விடுகிறார்கள் என்பதை உறுதி செய்யும் விதமாகத்தான் இந்த நிகழ்வை பார்க்கிறேன்.

ஆட்டோ ஓட்டுபவராக ரஜினி இந்த படத்தில் நடிக்கவும், அதைப் பார்த்த ஏராளமான ரசிகர்கள் பிரசவத்திற்கு இலவசமாக ஆட்டோ ஓட்டுவதை பெருமையாகவே உணர்ந்தார்கள்.
courtesy: rajinifans.com
ரஜினி படத்தில் முதல் பாடலும் இடைவேளைக்கு பின்னால் மற்றொரு பாடலும் ரசிகர்கள், பொதுமக்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல படங்களில் அமைந்துள்ளது.

பாட்ஷாவிலும் ஆட்டோக்காரன் பாடலும், ராமையா பாடலும் அப்படி அமைந்தன.

courtesy: rajinifans.com
பொதுவாக துள்ளல் நிறைந்த ஆட்டம் பாட்டமான பாடல்களில் வரிகள் புரியாது என்பது வழக்கம். ஆனால் மாணிக்பாட்ஷா ஆடிப்பாடிய ரா... ரா... ராமையா, எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா பாடல் வரிகள் மனித உடலை படம் வரைந்து பாகம் குறித்ததைப் போல் வாழ்க்கையை எட்டு வரிகளில் எளிமையாக மனிதன் என்னென்ன கடமைகளை எந்த வயதில் கடந்திருப்பது சிறப்பு என்று தெளிவான வார்த்தைகள் கொண்ட பாடலாக அமைந்திருந்தது.

No comments:

Post a Comment