Saturday, January 11, 2020

டாக்ஸி டிரைவர்


நான் படித்த புத்தகங்கள் பற்றிய அறிமுகம்

நூலின் பெயர் : டாக்ஸி டிரைவர்
சிறுகதைகள்
ஆசிரியர் : ஆனந்த் ராகவ்
பக்கம் : 120
விலை : 120
முதல் பதிப்பு : ஜூலை 2017
வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, சென்னை – 600 014
ISBN 978-93-86737-00-7
கிழக்கு – 1007

விகடன், கலைமகள், அமுதசுரபி உள்ளிட்ட பல இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவர் எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்புதான் டாக்ஸி டிரைவர்.

1. அகதி
கல்கியில் வெளிவந்த சிறுகதை. 

பர்மாவில் இருந்து அகதியாக தப்பித்து தாய்லாந்து சென்ற ஒரு பணிப்பெண் உள்நாட்டு சில காரணங்களால் மீண்டும் பர்மாவுக்குள் நுழையும் போது என்ன ஆனாள் என்பதை மனம் கனக்கச்சொல்லும் சிறுகதை. ஆனால் எதையும் கவனிக்காமல் உலகம் அதன் போக்கில் ஓடிக்கொண்டே இருக்கும் என்ற உண்மை மனதை அறைகிறது.

2. நீச்சல்குளம்
கலைமகளில் பிரசுரமான கதை.

எந்த ஒரு பிரச்சனை என்றாலும் எனக்கு ஒண்ணும் பாதிப்பு இல்லை, எனக்கு அவசியம் இல்லை என்று ஒதுங்கிப்போகும் மனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள். அப்படி அவர்கள் பேசும் நேரத்தில் அந்த உரையாடல்கள் வெளியில் இருந்து பார்க்கும் நபர்களுக்கு ஏதோ நகைச்சுவை சம்பவங்களாகவே தெரியும். ஆனால் ரொம்ப சின்ன தீர்வுதான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தேவைப்படும். ஆனால் அதை முடிவு செய்ய சம்மந்தப்பட்டவர்கள் இறங்கி வர வேண்டும். அல்லது இறங்கி யோசிக்க வேண்டும் அவ்வளவுதான்.

3. விலை
அமுதசுரபி சிறுகதைப்போட்டியில் 2–ம் பரிசு பெற்ற கதை

நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கைத்துணை, உடன் பிறந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், முதலாளிகள், அவ்வளவு ஏன் சில சமயங்களில் ஏரியா அரசியல்வாதிகள் செய்யும் நியாயமற்ற செயலைக்கூட ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு காரணம் அவர்களிடமிருந்து நாம் பெற்ற அல்லது பெறப்போகும் ஆதாயத்திற்கு கொடுக்கும் விலை என்பதை சொல்லிச்செல்லும் கதை.

4. டாக்ஸி டிரைவர்
கலைமகளில் பிரசுரமாகி இலக்கியச்சிந்தனை மாதாந்திர பரிசு பெற்ற கதை.

நம்ம ஊரில் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களிடம் சிக்கி அவதிப்பட்ட அனுபவங்கள் கிட்டத்தட்ட எல்லோருக்குமே கிடைத்திருக்கும். இப்படி கசப்பான அனுபவங்கள் பெற்ற ஒருவர் எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்கிருக்கும் டாக்ஸிடிரைவர்களை அவர்கள் சிறப்பாகவே நடந்து கொண்டால் கூட பார்க்கும் பார்வை மாறாது என்பதையும் அவசரப்பட்டு அவர்களை குற்றவாளியாக்குவதையும் தயங்காமல் செய்து விடுவோம் என்ற உண்மையை சொல்கிறது.

5. ஐன்ஸ்டீன் ஐயப்பன்
அமுதசுரபியில் அப்புசாமி சீதாப்பாட்டி டிரஸ்ட் நடத்திய நகைச்சுவை சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை

கிணறு வெட்ட பூதம் கிளம்பியது, பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறியது என்றெல்லாம் பழமொழி சொல்வார்கள். அதி புத்திசாலி மாணவன் தங்கள் பள்ளியில் படிக்க வந்திருப்பதால் அவனை வைத்து பள்ளியை பெரிய அளவில் கொண்டு செல்ல நினைக்கிறார்கள். அது உல்டாவாகி பள்ளியின் கதி என்ன ஆகிறது என்பதை நகைச்சுவையாக எழுதப்பட்ட கதை. ரொம்ப நாளைக்கப்புறம் கதையைப் படிக்கும்போது சிரிப்பு வந்தது.

6. அம்மாவின் நகை
அமுதசுரபியில் பிரசுரமான கதை

பொதுவாக தப்பு செய்தவர்களின் முக்கிய குணம், முந்திக்கொண்டு திருடன் ஓடுறான் பார், பிடிங்க என்று கத்துவதுதான். அப்படி ஒரு குணாதிசயம் கொண்டவர் தன்னை யாருக்கும் அடையாளம் தெரியாது என்று நினைத்தாலும் இப்படிப்பட்ட மனிதர்களை கச்சிதமாக கண்டுகொள்ளும் ஜீவன் யார் என்றால் அது தாய் அல்லது மனைவியாகத்தான் இருக்க முடியும். இந்த கதையில் அது மனைவி.

7. பாதை
கல்கியில் வெளியான கதை.

தனித்திறமையால் ஜொலிக்க வேண்டிய எண்ணற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோரின் லட்சியங்கள் ஓவியம் அல்லது எழுத்துடன் நின்றுவிடுவதையும் வாழ்வதற்கு பொருளைத்தேடி ஓட வேண்டிய கட்டாயத்தில் மக்கள் கூட்டத்தில் கரைந்து விடுவதை சொல்லியிருக்கும் கதை.

8. திரை
ஆனந்தவிகடன் தீபாவளி மலரில் வெளியான கதை

நம்மில் பலரும் பழக்கப்பட்டுப்போன வேலை, அல்லது வாழ்க்கை முறையை தாண்டி யோசிப்பதே இல்லை. அதற்கு காரணம் இதுதான் பாதுகாப்பு என்று ஒரு திரையைப் போட்டுக்கொண்டு அதற்கு அப்பால் யோசிக்க பயப்படுகிறோம். இப்படிப்பட்ட மாயத்திரையை விலக்கிப்பார்த்தால் நம்முடைய பலம் என்ன என்பதும், நம்மால் எவ்வளவு பெரிய உயரம் தொட முடியும் என்ற உண்மையை அதாவது நாம் யார் என்பதை நாமே உணர முடியும் என்ற கருத்தை சொல்லியுள்ள கதை.

9. போக்குவரத்து
ஆனந்தவிகடனில் பிரசுரமான கதை.

போக்குவரத்து நெரிசல் அதனால் ஏற்படும் இடையூறுகள் நமக்கு நிகழாதவரை சுற்றி உள்ள உலகத்தை கவனிப்பதுடன், அடுத்தவர்கள் செய்யும் செயல்கள் இது தப்பாச்சே என்று யோசிக்கிறோம். அதுவே நமக்கு ஒரு சம்பவம் நடந்து விட்டால் அடுத்தவர் செய்யும்போது பெரிய அசிங்கமான வார்த்தையாக தெரிந்தது சர்வ சாதாரணமாக நம் வாயிலிருந்து வந்து விழுகின்றன என்பது காலம் காலமாக இருந்து வரும் முரண்பாடுதான்.

10. மருந்து
ஆனந்தவிகடனில் பிரசுரமான கதை

மது அருந்தும் பழக்கம் இருக்கும் ஒருவன் வீ்ட்டில் உள்ள குழந்தையை நல்லவிதமாக வளர்க்கவேண்டுமே என்று தவிக்கும் ஒரு தாயின் மனநிலையை சித்தரித்துள்ள கதை.

11. இரண்டாவது மரணம்
வார்த்தை என்ற இதழில் பிரசுரமான கதை.

ஒருவன் நன்றாக வாழும்போது எவ்வளவுதான் உழைத்திருந்தாலும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்த நொடியே இறந்து போகிறான். பிறகு அவன் மூச்சை நிறுத்திக்கொள்வது இரண்டாவது மரணம்தான் என்பதை சொல்கிறது கதை. ஒருவன் முதல் மரணம் அடைந்ததுமே அவனைச் சுற்றியுள்ள மனிதர்கள் எந்தஅளவுக்கு பாரமாக நினைத்து வெறுப்படைகிறார்கள் என்ற, நாம் பார்க்க விரும்பாத உண்மையை படிக்கும்போது கசப்பாகத்தான் இருக்கிறது.

12. யார் அது அழுவது?
ஆனந்தவிகடனில் வெளியான கதை

நகரத்தில் பெரிய வீட்டில் வசித்தாலும் கணவன் மனைவி கூட அந்நியப்பட்டு தனித்தீவுகளாகிவிடுவதையும், வீட்டிற்குள்ளேயே அழுகுரல் கேட்டாலும் அது நம் வீட்டில் இருக்காது, நாம்தான் எல்லா வசதிகளையும் செய்து விட்டோமோ என்று சமாதானப்படுத்திக்கொள்ளும் மனநிலை நிறைய பேருக்கு வாய்த்திருக்கிறது என்ற சிக்கலான வாழ்க்கையை சொல்லிச்செல்லும் கதை

No comments:

Post a Comment