Sunday, January 12, 2020

காகிதத்தில் ஒரு கடிதம்

குற்றச் சம்பவம் நடைபெறுவது, அதை போலீசார் துப்பறிவது என்ற வகையிலான கதைகள் முன்பு ஆங்கிலத்தில் மட்டும்தான் அதிகமாக வந்து கொண்டிருந்தன. தற்போது தமிழிலும் இதுபோன்ற படங்கள் அதிகம் காணக்கிடைக்கின்றன.

பரத் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் காளிதாஸ். இதுவும் தொடர் கொலைகள் நடப்பதும், அதை போலீசார் துப்பறிவதுமான கதை.


படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டும் ஔிப்பதிவாளர் வேல்ராஜ் காவல்துறை உயரதிகாரியாக நடித்திருப்பார். ஒரு காட்சியில் அவர் உதவி கமிஷனர் சுரேஷ்மேனனிடம் வழக்கு பற்றி பேசிக்கொண்டிருப்பார்.

அப்போது ‘‘காளிதாஸ் எங்க?’’ என்று வேல்ராஜ் கேட்பார்.

‘‘போன் ரெக்கார்டு எடுக்கப் போயிருக்கார்...’’ – இது சுரேஷ்மேனன்.

‘‘போனும் சிசி டிவி கேமராவும் வந்ததும் பீல்டு ஒர்க்கே குறைஞ்சு போச்சு... எல்லாத்தையும் டேபிள்ல உட்கார்ந்தே முடிக்கப் பார்க்குறாங்க...’’ என்று வேல்ராஜ் அலுத்துக் கொள்வார்.
செல்போன், சிசிடிவி கேமரா ஆகியவைதான் பல வழக்குகளில் துப்பு துலக்க உதவுகின்றன. அதனால் காவல்துறையினர் முதலில் இவற்றை ஆராய்கிறார்கள். ஆனால் பீல்டு ஒர்க் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

1980கள் அல்லது அதற்கு முன்பு உள்ள காலகட்டத்தில் கதை நடைபெறுவதாக இருந்தால் சுப்பிரமணியபுரம் போன்ற படங்களில் செல்போன், சிசிடிவி கேமரா போன்றவற்றை காட்டாமல் எளிதாக கதையை நகர்த்திச் சென்றுவிடலாம்.

தீரன் அதிகாரம் ஒன்று படம் கூட 1990 முதல் 1995ஆம் ஆண்டு தமிழக வட எல்லை மாவட்டங்களில் நடைபெற்ற கொடூர கொலை, கொள்ளை தொடர்பான கதைக்களம் என்பதால் செல்போன் உபயோகம், சிசிடிவி கேமரா ஆகியவற்றை தவிர்த்து திரைக்கதை அமைக்க முடிந்தது.

இப்போதும் ஊர் விட்டு ஊர், மாநிலம் விட்டு மாநிலம் எந்தமுகவரியும் இல்லாமல் குடும்ப அட்டை, ஆதார்கார்டு வங்கிக் கணக்கு எதுவும் இல்லாத மக்கள் ஏதோ ஒரு எண்ணிக்கையில் நம் இந்தியாவில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை கதாபாத்திரங்களாக்கினாலும் செல்போன், சிசிடிவி கேமரா இல்லாமல் ஸ்கிரிப்ட் எழுதி விட முடியும்.

எல்லா இடங்களிலும் சிசிடிவி, செல்போன், ஆதார்கார்டு, வங்கிக் கணக்கு, பான் கார்டு, டெபிட் கார்டு என்று திரும்பிய இடமெல்லாம் டிஜிட்டல் இந்தியாவின் பார்வையில் சிக்கியிருக்கும் நபர்களில் 90 சதவீதம் நடுத்தர வர்க்கத்தினர்தான்.

உணர்ச்சிவசப்பட்டோ, ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி, புத்தி சொல்வதைக் கேட்காமல் அந்த நேரத்தில் மனம் ஆசைப்படுவதை மட்டும் செய்ய நினைத்து குற்றம் புரிபவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருப்பார்கள். இவர்களை காவல்துறையினர் எளிதில் நெருங்கி கைது செய்து விட முடியும்.

ஆனால் இன்றைய 2020 ஆம் ஆண்டு கால கட்டத்திலும் மிகத் தெளிவாக திட்டமிட்டு செல்போன், ஆதார்கார்டு, பான் கார்டு, டெபிட், கிரடிட் கார்டு, வங்கிக் கணக்கு, சி.சி டிவி கேமரா, இருசக்கர வாகனம், கூரியர், பதிவுத்தபால், சாதாரண தபால் என்று வழக்கமாக நமது வாழ்க்கைத் தடங்களை விட்டுச் செல்லும் எந்த ஆதாரமும் இல்லாமல் மிகவும் திட்டமிட்டு குற்றச்செயல் புரிந்தால் அவர்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள்.

ஏனென்றால் எவ்வளவு புத்திசாலியான குற்றவாளியும் அவனை அறியாமல் ஒரே ஒரு தடயத்தையாவது விட்டுச்சென்றுவிடுவான் என்பதுதான் துப்பறிவாளர்களுக்கு உதவும் மிக முக்கியமான பார்முலா.

இப்படி ஒரு களத்தில் நான் எழுதியுள்ள குறுநாவல்தான் காகிதத்தில் ஒரு கடிதம்.

‘‘எவ்வளவுதான் சுத்தி சுத்தி பார்த்தாலும், ஒட்டடை, மண்ணு, தூசியைத் தவிர வேற எதுவுமே இல்லையே...’’

‘‘குடும்பமா இருந்துட்டு போறவங்க செல்ப்புல விரிச்சிருந்த பேப்பர், உடைஞ்ச குவளை அது இதுன்னு எதையாச்சும் போட்டுட்டு போவாங்க... ஆனா, பேச்சுலரா இருந்த பையன் சுத்தமா துடைச்சு எல்லாத்தையும் அள்ளிட்டு போயிருக்கானேன்னு நினைச்சேன்...
களவாணித்தனம் பண்ற பய தடயம் சிக்கிடக்கூடாதுன்னுதான் க்ளீன் பண்ணிட்டு போயிருக்கான்னு இப்பதான் தெரியுது...’’

‘‘ஐயா... அந்த பையனுக்கு என்ன வயசு இருக்கும்...?’’

‘‘என் காலத்துல ஒருத்தரோட வயசை ஈசியா கண்டுபிடிச்சுடுவோம்... இப்ப கண்டதையும் தின்னு கிடைச்சதை எல்லாம் குடிச்சு ஆளே மாறிப் போயிடுறானுங்க... ஒருபயலோட ஒரிஜினல் வயசையும் சரியா கண்டுபிடிக்க முடியலையே...’’

‘‘உங்க கிட்ட பர்த் சர்ட்டிபிகேட்டா கேட்டேன்... யூகமா சொன்னா போதும்...!’’

‘‘இருபத்தஞ்சு இருபத்தேழு இருக்கலாம்...’’

‘‘சார்... நீங்க பார்த்துட்டு வாங்க... நான் போய் அவன் கொடுத்த ஆதார்கார்டு ஜெராக்சை எடுத்துட்டு வர்றேன்...’’ என்று அந்த பெரியவர் வெளியேறினார்.

அம்மிக்கும் சுவற்றுக்கும் இடையில் இருந்த மூன்று அங்குல இடைவெளியில் எதாவது தெரிகிறதா என்று நல்லதம்பி பார்க்க முயற்சித்தான். ஆங்காங்கே சுண்ணாம்புடன் உதிர்ந்து நின்ற பூச்சு நல்லதம்பியின் தலையிலும் கன்னத்திலும் ஒட்டிக் கொண்டது.

‘‘ஏண்டா இவ்வளவு சிரமப்படுற...? மொபைல் கேமராவை ஆன் பண்ணினா என்ன இருக்குன்னு தெரிஞ்சுடப் போகுது...!’’ என்று அண்ணாமலை சொல்லவும்,
‘‘அடச்சே... இப்படி ஒரு யோசனை எனக்கு வராம போயிடுச்சே...’’ என்று மொபைலை எடுத்தான்.

‘‘என்ன சார்... ஏதாவது சிக்குனுச்சா...?’’ என்ற குரல் கேட்கவும் அண்ணாமலை திரும்பிப் பார்த்தான்.

அவர் கையில் இரண்டாக மடிக்கப்பட்ட ஒரு வெள்ளைத்தாள்.

அண்ணாமலை அதை வாங்கி பிரித்துப் பார்த்தான். ஏதோ ஒரு ஆணின் உருவம்... அவ்வளவுதான் அதில் தெரிந்தது.

‘‘அவன் என்கிட்ட காண்பிச்ச கலர் ஆதார் அட்டையில அவன் முகம்தான் இருந்துச்சு... ஆனா ஜெராக்ஸ் சுத்தமா கருப்படிச்ச மாதிரி இருக்கு... இதை வெச்சு ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாது... கவர்மெண்ட் கம்ப்யூட்டர்ல செக் பண்ணினா ஓரளவு கலர்ல உருவம் தெளிவா தெரியலாம்...’’

‘‘மல... இவரை நம்ம டிபார்ட்மெண்ட்ல பார்ட்டைமா சேர்த்துக்கலாமா...?’’ என்ற நல்லதம்பியை பார்த்து அண்ணாமலை முறைக்கவும், வாயை மூடிக் கொண்டான்.

‘‘இருங்க சார்... அன்னைக்கு அவன் என்கிட்ட காட்டின ஆதார்ல இருந்த போட்டோவும் ஜெராக்ஸ்ல இருந்த போட்டோவும் வேற வேறன்னு நினைக்கிறேன்...’’ என்று பெரியவர் புதிய குழப்பத்தை ஏற்படுத்தினார்.

‘‘ஒரிஜினலுடைய ஜெராக்ஸ்தான் இதுன்னு பார்த்து வாங்க மாட்டீங்கிளா...?’’

‘‘சார்... ஒரிஜினலையும், ஜெராக்சையும் உத்துப் பார்த்து வாங்குறதுக்கு நான் என்ன அட்டஸ்டேஷன் பண்ற அதிகாரியா...? முதல்நாள் கலர் கார்டு காட்டுனப்ப கடைசி நாலு நம்பர் 6848ன்னு இருந்துச்சு. மோகன்குமார்னு அவன் பேர் சொன்னதும், விழுப்புரம்னு ஊர் பேரும் நினைவு இருந்துச்சு...

அடுத்த நாள் அவன் கொண்டு வந்த ஜெராக்ஸ்ல 6848 நம்பரைப் பார்த்ததுமே வேற எதையும் பார்க்க தோணலை... இப்படி பிராடா இருப்பான்னு எதிர்பார்க்கலையே...’’

‘‘ஐயா... உங்ககிட்ட வேற ஜெராக்ஸ் இருக்கா...?’’

‘‘இருக்குங்க... எந்த பேப்பரா இருந்தாலும் எதுக்கும் இருக்கட்டுமேன்னு நான் ஒரு ஜெராக்ஸ் எடுத்து வெச்சுக்குவேன்... இப்படி எல்லாம் ஏதாச்சும் வில்லங்கம் வரும்னு எனக்கு அப்பவே தோணுச்சு...’’

‘‘என்ன சாரு வி.கே.ராமசாமி மாதிரியே பேசுறாரு... சரிங்க சார்... நியூஸ் பேப்பரை கூட ஜெராக்ஸ் எடுத்து வெச்சுக்குவீங்களா...’’என்று நல்லதம்பி கேட்டபோது அண்ணாமலை சிரித்து விட்டான். ஆனால் அந்த பெரியவருக்கு உடனடியாக அர்த்தம் புரியவில்லை போலிருக்கிறது. உங்களுக்கும் புரியவில்லை என்றால் முந்தைய பாராவையும் இந்த பாராவின் முதல் பாதியையும் மீண்டும் படிக்கவும்.

அவருக்கு புரிந்தபோது வாசலில் புல்லட் ஸ்டார்ட் ஆகி செல்லும் சத்தம் கேட்டது.

No comments:

Post a Comment