Wednesday, January 8, 2020

தணிக்கை சான்று பெற்ற பிறகு காட்சிகளை நீக்கலாமா?

திரைக்கதை எழுதுவது எப்படி? என்ற புத்தகம் சுஜாதா எழுதி உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்தது.
ஓரிரு நாட்களுக்கு முன்புதணிக்கை குழு அதிகாரி ஏதோ ஒரு பெரிய படத்தினை தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கிய பிறகு ஒரு சில காட்சிகளை நீக்கியதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், தணிக்கை சான்றிதழ் பெற்ற பிறகு காட்சிகளை சேர்ப்பது எப்படி தவறோ அதேபோல் நீக்கினாலும் தவறுதான்.
அப்படி ஏதேனும் காட்சிகளை நீக்கியிருக்கும்பட்சத்தில் மீண்டும் போட்டுக்காட்டி சான்றிதழ் பெற வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதாக கேள்விப்பட்டேன்.
சுஜாதா திரைக்கதை எழுதுவது எப்படி புத்தகத்தின் 85 ஆம் பக்கத்தில்
//////////////////////
சீனை எங்கே ஆரம்பிக்க வேண்டும் என்கிற கேள்வி அடுத்தது எழும். நவீன சினிமாவின் விதி சீனை எவ்வளவு லேட்டாக முடியுமோ அவ்வளவு லேட்டாக துவக்குங்கள் என்பது.
உதாரணமாக இந்த சீனை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு ரெஸ்டாரெண்டில் இருவர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் ஆர்டர் செய்வது, வந்து சாப்பிட்டு விட்டு பில் யார் கொடுப்பது என்று லேசாக சண்டை போட்டுவிட்டு பில் கொடுத்துவிட்டு புறப்படுகிறார்போல் சீன்.
புறப்படும்போது அவர்களில் ஒருவன் மற்றவனிடம்பை தி வே... ஸ்வேதாவைப் பற்றி ஒண்ணு கேள்விப்பட்டேன்என்கிறான். இந்த சீனை எங்கே ஆரம்பிப்பீர்கள்?
ஆர்டர் செய்யும்போதா, சாப்பிடும்போதா, பில்லுக்கு சண்டை போடும்போதா? இந்த சீனில் உண்மையான ஆரம்பம் சாப்பிட்டு முடித்ததும்பை தி வேஎன்கிறானே அங்குதான்.
அவர்கள் சாப்பிட்டு முடித்துவிட்டார்கள் என்பதை ஒரே விஷூவலில் முடித்து விட்டு ஸ்வேதா மேட்டரை போகிறபோது சொல்வதை மட்டும் எழுத வேண்டும்.
மறுபடி அந்த விதி. ஒரு சீனுக்குள் எவ்வளவு தாமதமாக நுழைய முடியுமோ, அதேபோல் சீனை எங்கு முடிப்பது என்பதும்.
சொல்ல வந்த விஷயத்தைச் சொன்னதுடன் வெட்டி விட வேண்டும். சொன்னபின் இழுக்கக்கூடாது.
உதாரணமாக, ‘சேகர் இந்த காரியததை செய்துட்டான் சரத்இது வசனம்.
இந்த இடத்தில் முடிகிறது. அது தெரியாமல், ‘சேகரா இப்படி செய்துட்டான்?’
ஆமாப்பா.’
நம்ம சேகரா?’
ஆமாம் நம்ம சேகர்.’
இதெல்லாம் அனாவசியமாக சீனை இழுப்பதாகும்.
சீனுக்குள் லேட்டாக வா. சீக்கிரம் வெளியேறு.
இதுதான் சீன் அமைப்பின் தங்கவிதி. 
/////////////////////////////////////
(என்னுடைய வார்த்தைகள்: பூவே உனக்காக படத்தில் நாகேஷ்சங்கீதா பேசிக்கொண்டிருக்கும் காமெடி காட்சி ஒன்று வரும்.
அதில் நாகேஷ்,
என்னைப் பார்த்தா சொன்ன...?’
உன்னைப் பார்த்துதான்...’
என்னைப் பார்த்து...’
உன்னைப் பார்த்துதான்யா...உன்னஎன்று அந்த வசனங்கள் நீளும்.
இந்த காமெடி காட்சிக்கு அது அவசியம். இந்த மாதிரி இடத்தில் இழுத்துக்கொள்ளலாம்.)
அப்படி இல்லை என்றால் ரசிகர்கள் கொட்டாவி விடுவதற்கு முன்பு தியேட்டர் ஆப்ரேட்டர்களே வெட்டி விடுவார்கள் என்று சுஜாதா எழுதியிருந்தார்.
மேலும் இந்த விஷயத்தை பல நேர்காணல்களில் கூட நினைவுபடுத்தியிருந்தார்.
படத்தின் தயாரிப்பாளரிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு எடிட்டர் படத்தை வெட்டி ஒட்டி கோர்த்து கொடுத்தால் வாத்தியார் சொன்னது போல் திரையரங்க உரிமையாளர்களிடம் ஆப்ரேட்டர் வேலைக்கு மட்டும் சம்பளம் வாங்கிக்கொண்டு மீண்டும் எடிட்டிங் வேலை பார்ப்பதை நானும் அனுபவித்திருக்கிறேன்.
பொதுவாக ஆப்ரேட்டர் வேலை பார்ப்பவர்கள் இன்று மாலை காட்சியில் பணிபுரிய ஆரம்பித்தால் இரவுக்காட்சி, அடுத்தநாள் காலைக்காட்சி, மதியக்காட்சி முடிந்து வீட்டுக்கு செல்வார்கள்.
அதாவது படத்தின் முதல் நாள் காலைக்காட்சி ஆப்ரேட்டருக்கு அது புதிய படம். அதேபோல் அன்று மாலைக்காட்சி வேலை பார்ப்பவருக்கும் அது புதிய படமாக இருக்கும்.
எங்கள் ஊரில் ஒரு தியேட்டர் இருக்கிறது. அதன் பெயர் வேண்டாம். காலையில் முதல் காட்சி அல்லது மாலைக் காட்சியில் மட்டும் படத்தை முழுவதுமாக ஓட்டுவார்கள். ஏழு அல்லது எட்டு ஸ்பூலில் இருக்கும் படத்தை ஒவ்வொரு ஸ்பூல் ஆரம்பம் மட்டும் முடிவில் ஏதாவது துண்டாக காட்சி இருக்கிறதா என்று பார்த்துக்கொள்வார்கள்.
துண்டாக தெரியும் அந்த காட்சி ஆரம்பிக்கும்போதே அடுத்த பிலிம் ரோல் ஸ்டார்ட் ஆகி ஓடிக்கொண்டிருக்கும்.
படத்தின் கதை ஓட்டத்திற்கு தேவையான காட்சி, தேவையில்லாத காட்சி என்று முடிவெடுக்க அந்த ஆப்ரேட்டர்கள் ஒரு அளவுகோளும் வைத்திருக்க மாட்டார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு ரீலிலும் ஆரம்பம், இறுதியில் ஏதாவது சில நிமிடங்களை அப்படியே தூக்க முடியுமா என்றுதான் பார்ப்பார்கள்.
Image credit : worthpoint
ஏற்கனவே முழுப்படத்தையும் பார்த்தவர்கள் தவிர மற்றவர்கள் கண்டுபிடிப்பது கடினம்.
சில தியேட்டர்களில் 800 பேர் இருக்கும் இடத்தில் 40 அல்லது 50 பேர் படம்பார்க்கும்போதுதான் இப்படி செய்வார்கள். ஆனால் நான் சொல்லும் திரையரங்கில் 770 இருக்கைக்கு 850 பேர் படம் பார்க்கும் ஹவுஸ்புல் காட்சி என்றாலும் இப்படித்தான் செய்வார்கள்.
இதெல்லாம் முதல் தடவை படம் பார்க்கும்போது உனக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறீர்களா?
என்னுடைய 15 வயதில் இருந்து 18 வயது வரை பள்ளி நேரம் போக மீதி நேரத்தில் நானும் இப்படி படங்களை திரையிடும் புரொஜக்டர்களை இயக்கியிருக்கிறேன்.
ஒரு புரொஜக்டரில் பிலிம் முடிந்து அடுத்த மிஷின் ஸ்டார்ட் ஆவது, சேஞ்ச் ஓவர் பட்டனை அழுத்தினால்ட்டப்என்ற சத்தத்துடன் இந்த புரொஜக்டர் ஷட்டர் ஓப்பன் ஆகும் அதே நேரத்தில் அடுத்த புரொக்டரின் ஆடியோ எக்சைட்டர் லேம்ப் அணைந்து விடுவதுடன் அந்த ஷட்டர் மூடிக்கொள்ளும்.
அந்த சத்தத்தை வைத்தே ரீல் முடிந்து எண்ட் மார்க் வந்ததும் அடுத்த புரொஜக்டர் ஓடுகிறதா அல்லது பட்டென்று மீதம் இருக்கும்போதே கட் அடிக்கிறார்களா என்பதை வெகு எளிதாக தெரிந்து கொள்ள முடிந்தது.
நிறைய பேரை மகிழ்வித்த புரொஜக்டரை நானும் இயக்கிய அனுபவம் என்னைப் பொறுத்தவரை வரம் என்றால் இப்படி புரொஜக்டரில் அனுபவத்தின் காரணமாக பார்வையாளனாக படம்பார்க்கும் போது காட்சிகளில் ஒன்ற முடியாமல் போனது சாபம் எனலாம்.
This is Westrex film Projector
Image credit: preview theatre (fb)
சுஜாதா இது எல்லாவற்றையும் கேட்டு எழுதினாரா அனுபவித்து எழுதினாரா என்று தெரியவில்லை. ஆப்ரேட்டர்கள் குறித்து எழுதியது உண்மைதான்.
இப்போது பிலிம் புரொஜக்டர் போய் க்யூப், பி.எக்ஸ்.டி, யு.எஃப். என்று டிஜிட்டல் முறையில் படம் திரையிடப்படுவதால் இப்படி எல்லாம் செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
ஆனால் ஆப்ரேட்டர்கள் செய்த வேலையை இப்போது செயற்கைக்கோள் தொலைக்காட்சி எடிட்டர்கள் செய்கிறார்கள்.
சமீபத்தில் மூன்று உதாரணங்களைப் பார்த்தேன்.
1. இருபத்தைந்து ஆண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி படத்தில் கதை நாயகன் அவன் குடும்பத்தில் இருக்கும் நிலையை ஒன்னரை நிமிடத்தில்சொல்லும் துவக்க காட்சியை ரெகுலராக கட் செய்து விட்டார்கள்.
2. பிரபு நடித்த பரம்பரை திரைப்படத்தில் செந்தில் ஒரு மொட்டை மாடியில் டிவியை சும்மா வைத்து விட்டு வானத்தில் சூரியனை காண்பிப்பார், பிறகு டிவியை காண்பிப்பார். கேட்டால் சன் டிவி காண்பிக்கிறேன் என்பார். இந்த வசனத்தை வேறு ஒரு தொலைக்காட்சியில் கட் செய்துதான் ஔிபரப்பி வருகிறார்கள். காமெடி காட்சி மட்டும் போடும்போது கூட இந்த வசனம் இருப்பதில்லை.
3. முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் வந்த இன்னொரு படம்மௌனம் சம்மதம். ஒரு கொலையை துப்பறியும் கதை. கொஞ்சம் கொஞ்சமாக முடிவை நோக்கி நகர்ந்து கொண்டு அழகாக திரைக்கதை சென்று கொண்டிருக்கும்.
கொலையான நபரின் கணவர் கதாபாத்திரம் மூலம் வழக்கில் முக்கியமான லீட் கிடைக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமைக்கும் அந்த நடிகருக்கும் ஏதோ உரசல். அதனால் அந்த நடிகர் நடித்துள்ள காட்சிகள் அனைத்தையுமே கட் செய்து விட்டார்கள்.
கிராமங்களில் பாண்டி ஆடுபவர்கள் லாங் ஜம்ப் செய்து சென்றது போல் கதை ஜம்ப் ஆகி முடிந்து விட்டது.
இது மிகச்சில உதாரணங்கள்தான்.
சுஜாதா கூறியதுபோல் எவ்வளவுதான் சுவாரஸ்யமாக திரைக்கதை காட்சிகளை அமைத்தாலும், தொலைக்காட்சி எடிட்டோரியல் வரை அரசியல் காரணமாக தணிக்கை சான்று பெற்ற படங்களை அவர்கள் இஷ்டத்திற்கு வெட்டி எறிகிறார்கள்.
இப்படியே சென்றால், ஒரு நகைச்சுவை காட்சியில் இங்கு மீன் விற்கப்படும் போர்டில் ஒவ்வொன்றாக அழித்த பிறகு வெறும் போர்டுதான் இருக்குமே அது போல் படங்களும் ஆகிவிடும்போலிருக்கிறது.

No comments:

Post a Comment