Monday, January 6, 2020

கோமணம்

நான் படித்த புத்தகங்கள் பற்றிய அறிமுகம்
நூலின் பெயர் : கோமணம்
கட்டுரைகள்
ஆசிரியர் : சுப்ரபாரதிமணியன்
பக்கம் : 104
விலை : 100
முதல் பதிப்பு : நவம்பர் 2017
வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 107/103, முதல் தளம், அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை  600 014
ISBN 978-93-86737-36-6பழனியில் இருக்கும் கோமணாண்டி முருகனை தரிசிக்க பல இடங்களில் இருந்து பாத யாத்திரையாக லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வதை பலரும் அறிந்திருப்போம். 

திருப்பூரில் இருக்கும் ஒரு குழுவினர் இப்படி நடந்து செல்லும்போது ஏற்படும் அனுபவங்கள், பக்தி சார்ந்த சடங்குகள், கடவுள் சார்ந்த நம்பிக்கைக் கதைகள் என்று நாவல் செல்கிறது. நாத்திகம் பேசும் இருவர், கட்டுரையோ கதையோ எழுதுவதற்காக அனுபவம் வேண்டும் என்பதற்காக அந்த குழுவில் சேர்ந்து வருவதும், அவர்கள் பார்வையில் சில விசயங்களும் சொல்லப்படுகிறது.

திருப்பூர் ஏற்றுமதியை நம்பி பிழைக்கும் ஆயிரக்கணக்கான சாதாரண குடும்பங்கள், அரசின் கொள்கை, சுற்றுச்சூழல், பொருளாதாரம் என்று பல்வேறு காரணங்களால் திருப்பூரின் தற்போதைய தொழில் நிலை, சாயக்கழிவுகளால் நிலமும் நீரும் மாசடைந்து இருப்பது, பூச்சிக்கொல்லி மருந்துகளால் கேரளாவில் தமிழக காய்கறிகளுக்கு தடை விதிக்கப்பட்டது, கேரளா மாடித்தோட்டம், இயற்கை விவசாயம் என்று தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய அளவுக்கு கட்டமைப்பை திட்டமிட்டு உருவாக்கி வருவது என்று பல விசயங்களையும் நாவல் பேசுகிறது.

எனது உறவினர் சிலர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஆறு நாட்கள் நடந்து பழனி பாதயாத்திரை செல்வார்கள்.

கடுமையான உடல் உழைப்பு செய்யும் உறவுக்காரப் பையன் ஒருவன் சுமார் 20 ஆண்டுகளாக 50 பேர் கொண்ட குழுவுடன் தொடர்ந்து சென்று வருகிறான்.
அவனிடம் பக்தி அதிகமா என்று கேட்டேன்.

பக்தியும் உண்டு. ஆனால், திருமணம், விசேஷங்கள், இத்தனை மணி பஸ்சில் போய் இத்தனை மணி அப்பாய்ட்மெண்ட்டில் சாமியைப் பார்த்து திரும்ப இத்தனை மணி ரயிலைப்பிடித்து ஊர் திரும்ப வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் இல்லாமல்,  ஒருவாரம் வழக்கமான வேலைகள் எதுவும் இல்லாமல், போனின் உபயோகத்தை மிகவும் குறைவாக பயன்படுத்திக் கொண்டு, இப்படி  வேலை தொடர்பான டென்சன் எதுவும் இல்லாமல் குழுவாக நடந்து செல்வது மனதுக்கு நிம்மதியை அளிக்கிறது என்று சொன்னான்.

இந்த ஆண்டும் மாலை போட்டு விட்டான். ஜனவரி 31 ஆம் தேதி நடைபயணம் துவங்குகிறது என்று சொல்லியிருக்கிறான்.

கோமணம் என்று ஏன் நாவலுக்கு பெயர் என்று பார்த்தால், கதையின் இறுதியில் இவ்வளவு பேர் நம்பிக்கையுடன் எதற்காக பாதயாத்திரை வருகிறார்கள், அவர்கள் கோவணாண்டி முருகனிடம் என்னென்ன கோரிக்கை வைக்கிறார்கள் என்பதை சொல்லிவிட்டு கோமணம் என்ற தலைப்புக்கான காரணமும் நமக்கு புரியும் வகையில் கதைமாந்தர்களின் உரையாடல் வழியே அந்த விஷயமும் போகிற போக்கில் இதுதான் என்று சொல்லப்பட்டு விடுகிறது. அதை நாவலைப்படிக்கும்போது தெரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment