Saturday, January 11, 2020

நீர்


நான் படித்த புத்தகங்கள் பற்றிய அறிமுகம்
நூலின் பெயர் : நீர்
நாவல்
ஆசிரியர் : விநாயக முருகன்
பக்கம் : 152
விலை : 150
முதல் பதிப்பு : டிசம்பர் 2016
வெளியீடு : உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை – 600 018
ISBN 978-93-85104-67-1
உயிர்மை – 576
இந்தநூலாசிரியர் கும்பகோணத்தை சேர்ந்தவர். இவரது நான்காவது நாவல் ‘நீர்’

***************************************
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26 காலையில் சுனாமி தாக்கியது. அன்று ஞாயிறு. அப்போது நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றியதால் அலுவலகத்திற்கு விடுமுறை. ஆழிப்பேரலையினால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பு பற்றிய செய்திகள் தொலைக்காட்சியில் ஔிபரப்பானபோது எதோ புள்ளிவிபரங்கள் அதிகரித்துச் செல்வதாக சாதாரணமாக செய்தியை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அடுத்தநாள் நான் பணியாற்றிய நிறுவனம் சென்னையில் உள்ள பெரிய தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிவருவதால் அவர்கள் சார்பாக வந்த பிரதிநிதிகளுடன் என்னையும் நாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே  நேரில் சென்று பார்த்தபோதுதான் சுற்றிலும் இருந்த துர்நாற்றமும், வாகனங்கள், படகுகள் என பல பொருட்களும் எங்கெங்கோ தூக்கி வீசப்பட்டிருந்தன. இது போன்ற காட்சிகளை சினிமாக்களில் மட்டும் பார்த்திருந்த எனக்கு ஆழிப்பேரலையினால் ஏற்பட்ட இழப்பின் தீவிரம் எனக்கு அப்போதுதான் புரிந்தது.

நாங்கள் அபாயமான நிலையில் எப்போதும் இடிந்து விழலாம் என்ற அளவில் இருந்த பழைய ஓட்டுவீட்டில்தான் பல ஆண்டுகளாக வசித்து வந்தோம். வழக்கமாக ஒருவாரம் வரை கூட அடைமழை பெய்யும். மழை பெய்யும் நேரத்தில் சாலையில் சாக்கடை எது, மழைநீர் எது என்று தெரியாத அளவுக்கு நீர்ப்பெருக்கு இருக்கும் தெருவில்தான் நானும் வசித்தேன்.

மழை பெய்யும் நேரத்தில் பேண்ட்டை முட்டி அளவுக்கு ஏற்றி விட்டுக்கொண்டு அல்லது லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு குடையை பிடித்துக் கொண்டு தெருவின் இன்னொரு முனையில் இருக்கும் கடைக்குச் சென்று சமையலுக்கு பொருட்கள் வாங்கி வந்திருக்கிறேன்.

ஆனால் பல்வேறு வசதிகளுடன் ஐம்பது முதல் ஒரு கோடி என்றெல்லாம் விலை கொடுத்து வாங்கிய மாடிவீட்டில் வசிப்பவர்கள் கூட 2015 டிசம்பர் 2ஆம் தேதி சென்னையில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாகவும் பல நாட்கள் வெளியேறாத மழைநீர், புதை சாக்கடை நீர், தரை தள வீடுகளில் வசித்தவர்கள் அனைவரும் அவரவர்கள் வீட்டில் இருந்த காசு கொடுத்தால் வாங்கிக்கொள்ளக்கூடிய பொருட்கள் முதல், என்ன விலை கொடுத்தாலும் மீட்க முடியாத நினைவுச்சின்னங்களை இழந்தது வரை எவ்வளவு இன்னல்களை அனுபவித்திருக்கிறார்கள் என்பதை இந்த நாவலில் ஓரளவு சொல்லியிருக்கிறார்.

எவ்வளவு காசு கொடுக்க தயாராக இருந்தாலும் கிடைக்காத உயரத்திற்கு சென்று விட்ட தண்ணீர், பால், உணவுப்பொருட்கள், சுயநலம் பிடித்த சிலர் செய்த விதிமீறல்கள், அவர்களுக்கு துணைபோன அதிகாரிகள், அரசியல்வாதிகள், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் என்று பலவற்றையும் கோடிட்டுக் காட்டிச் செல்கிறது இந்த நாவல்.

இந்த நாவலில் சென்னையின் முழு பாதிப்பும் சொல்லப்படவில்லைதான். இது ஒரு பாதுகாப்பான தெரு என்று நம்பப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வீட்டுக்கடனில் வீடு வாங்கி மாதாந்திர தவணை கட்டி வசித்து வரும் நடுத்தர வர்க்க நபர் ஒருவரின் பார்வையில்தான் சொல்லப்பட்டுள்ளது.
எந்தவித பாதுகாப்பும் இல்லாமல், ஆற்றங்கரையோரம், கால்வாய்கள் ஓரமாக தகரம், சிமெண்ட் பலகை போன்ற கிடைத்த ஏதோ ஒன்றை வீடு என்ற பெயரில் அமைத்துக் கொண்டு வசித்து வந்த மக்கள் இந்த வௌ்ளத்தால் என்ன ஆனார்கள் என்பது பற்றி எழுதினால் அது இதை விட பெரிய நாவலாக இருக்கும் போலிருக்கிறது.

இப்படி ஒரு பாதிப்பு ஏற்படும்போதுதான் அந்த நேரத்திற்கு மட்டும் மனிதனுக்கு ஞானம் கிடைக்கிறது என்பதைப்போல யோசிக்க வைக்கும் பல கருத்துக்களும், செய்திகளும் நாவலில் இடை இடையே பொருத்தமான இடங்களில் சொல்லப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டு சென்னை நகரம் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டதை முழுவதுமாக சொல்லவில்லை என்றாலும், குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்ட பாதிப்பைப் பற்றி பேசிய முக்கியமான பதிவு என்று இந்த நாவலை குறிப்பிடலாம்.

ஏனென்றால் இந்த நாவலில் சொல்லப்படும் பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு என்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் என்ற வார்த்தைக்கு ஏற்ப ஒட்டு மொத்த சென்னையின் பல பகுதிகளும் இப்படித்தான் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது.

No comments:

Post a Comment