Tuesday, January 7, 2020

இணையம் வெல்வோம்

நான் படித்த புத்தகங்கள் பற்றிய அறிமுகம்
நூலின் பெயர் : இணையம் வெல்வோம்
கட்டுரைகள்
ஆசிரியர் : தமிழரசன் (சுடுதண்ணி)
பக்கம் : 128
விலை : 90
முதல் பதிப்பு : 2016
வெளியீடு : மணிமேகலை பிரசுரம், 7 (ப.எண்.4) தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை  600 017
ISBN 978 - 0 - 9950437 - 1 - 8


போனில் அல்லது கம்ப்யூட்டரில் வைரஸ் வந்து விட்டால் சர்வீஸ் எஞ்சினியரை அழைத்து பார்மட் அடிப்பதுதான் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த ஒரே வழி. அப்படி கொடுக்கும்போது ஒருவரின் கணிணி அல்லது போனில் உள்ள பல அந்தரங்க தகவல்கள் படங்கள் வெளியில் வந்து சந்தி சிரிப்பது என்பது வரைதான் நமக்கு தெரிகிறது.

செல்போன் நிறுவனங்கள், சமூக வலைதளங்கள் ஆகியவை தனிநபர் தகவல்களை விற்றுக்கொண்டிருப்பது, ஆதார் கார்டு விபரங்கள் கசிந்து விட்டது என்பது போன்ற தகவல்களை அவ்வப்போது ஊடகங்களில் படித்து விட்டு மறந்து விடுகிறோம். 

ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி இணையத்தில் உலவும் ஒவ்வொருவரும் எப்படி கண்காணிக்கப்படுகிறோம். இப்படி கண்காணிக்கப்படுவதை விரும்பாத குழுவினர் என்ன செய்கிறார்கள், நமது சாதாரண கணிணியிலேயே நம்மை உளவு பார்ப்பது எப்படி? உண்மையில் இணையத்தை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் எங்குமே ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்ற கசப்பான உண்மை உள்ளிட்ட பல்வேறு விபரங்களுடன் இணையத்தில் தமிழரசன் என்பவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

இந்த புத்தகத்தை படித்து முடித்தபோது,

பழைய சிறுவர்கள் கதையில், ஒருவனின் கண்ணைக் கட்டி காட்டு வழியே இழுத்துச் செல்லும்போது பையில் வைத்திருந்த விதையை கீழே போட்டுக் கொண்டே சென்றதாகவும், அடுத்தநாள் பெய்த மழையின் காரணமாக சில நாட்களில் அந்த விதை முளைத்து பூச்செடியாக வளர்ந்து நிற்பதாகவும், கடத்தப்பட்டவனின் தம்பி அந்த பூச்செடியை அடையாளம் வைத்து பின் தொடர்ந்து கண்டுபிடிப்பதாகவும் எழுதியிருப்பார்கள்.

ஆனால் இன்றைய இணைய உலகில் அழிக்கவே முடியாதபடி தினம் தினம் நாம் எந்த தளத்திற்கு செல்கிறோம், என்னவெல்லாம் செய்கிறோம் என்பதை அழுத்தமான ஆதாரமாக இணைய உலகின் மீது உள்ள போதையின் காரணமாக விட்டுக்கொண்டே செல்கிறோம் என்பதை யாரும் உணர்வதே இல்லை என்ற உண்மையை நான் புரிந்து கொண்டேன்.

No comments:

Post a Comment