Thursday, January 9, 2020

சாகித்ய அகாடமி விருது பெற்ற சூல் நாவலும் எனக்கு தெரிந்த கண்மாயும்


தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மன் எழுதிய ‘சூல்’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

(Sool - Novel) 

1947ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் கிடைத்தபோது 39,640 கண்மாய்கள் இருந்தனவாம். அந்த கண்மாய்களின் இன்றைய நிலை என்ன என்பதே சூல் நாவலின் மையக்கருவாகும்.

நீர்தான் தற்போது உலகில் முக்கியப் பிரச்சனையாகும். தென் மாவட்டங்கள் முழுவதும் மானாவாரி நிலங்கள் ஆகும். கிணறுகள்தான் நீராதாரமாக உள்ளன. முன்பு கண்மாய்கள் அனைத்தும் அந்தந்த கிராமத்தின் வசமே இருந்தன. கிராம மக்களே மராமத்து பணிகளை மேற்கொண்டு சீரமைத்துக் கொள்வார்களாம்.
Image Credit : Panuval Books
மழையில் என்னுடைய வயல்காட்டில் இருந்து மண் வருகிறது. அதனை கண்மாய் தண்ணீர் பிரித்துக் கொடுக்கிறது. அந்த மண்ணை நான் எடுக்கக்கூடாது என்றால் என்ன நியாயம்? அந்த கண்மாய்களைப் பற்றி பேசக்கூடிய நாவல் சூல்.

தர்மன் குடும்பத்தை காப்பாற்ற வேலையா விருப்பத்திற்காக எழுத்து துறையா என்று குழம்பியபோது, அவரது மனைவி தான் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுகிறேன், எழுதுவது எல்லோராலும் முடியாது. அதனால் நீங்கள் எழுத்தில் கவனம் செலுத்துங்கள் என்றாராம்.

அப்படி தர்மன் என்ற எழுத்தாளரை தொடர்ந்து இயங்கச் செய்த அவரது மனைவி காலமாகி 12 ஆண்டுகள் ஆனபிறகும் இந்த காலகட்டத்தில் அவரது தனிமையை இலக்கிய வாசிப்பு மற்றும் எழுத்துப்பணியினால்தான் போக்கியிருக்கிறார்.
கண்மாய்களைப் பற்றிய கதை என்றதும், என்னுடைய சிறுவயது அனுபவங்கள் நினைவுக்கு வந்தன. நீ எப்போது கண்மாய் நீரை வைத்து விவசாயம் செய்த என்று கேட்காதீர்கள்.

விபரம் தெரிந்த வயதிலிருந்து 13 அல்லது 14 வயது வரை அடிக்கடி கிராமத்தில் உள்ள தாத்தா வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். 1995ஆம் ஆண்டுக்கு பிறகுதான் அந்த கிராமம் வரை பேருந்து செல்ல ஆரம்பித்தது. அதுவும் ஒரு நாளைக்கு 4 முறைதான் என்பதால் பெரும்பாலும் நாங்கள் செல்லும்போது அந்த நேரம் ஒத்து வராது.

அந்த நகரத்தில் இருந்து நகரப் பேருந்து மூலமாக 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிறுத்தத்தில் இறங்கிக் கொள்வோம். அந்த தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 400 மீட்டர் தூரம் நடந்து சென்றால் வயல்வெளிகள் ஊடாக செல்லும் மண்பாதை செல்லும். அது சாலை கிடையாது. சைக்கிள், இருசக்கர வாகனம் தடுமாறிச் செல்லக்கூடிய அளவிலான மண்பாதை அவ்வளவுதான். முன்பு முழுவதும் வயல்வெளியாக இருந்தது.

இப்போது செங்கல் செய்ய வயல்வெளிகளில் மண் வெட்டி எடுத்ததால் பல இடங்களில் ஆறு அடிக்கும் அதிகமான ஆழம் கொண்ட பள்ளங்கள் இருக்கின்றன. இன்னும் சில இடங்களில் சீமைக்கருவை மரங்கள் அடர்ந்து இருக்கும். நாங்கள் பெரும்பாலும் பேருந்தில் இருந்து இறங்கும்போது மதியம் ஆகியிருக்கும்.

வழியில் வடை, பிஸ்கட் என்று எதையாவது சாப்பிட்டு விட்டு பயணம் செய்ததால் லேசான பசி மயக்கத்துடனேயே நடந்து செல்வோம். அந்த மதிய நேரத்தில் தனியாக வந்தால் முனி அடிக்கும் என்று பயமுறுத்துவார்கள்.

அதில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வயல்வெளிக்கிடையே நடந்தால் ஒரு கண்மாய்கரை வரும். அந்த கண்மாய்க்கரை ஓரமாக இருக்கும் பாதை டிராக்டர் செல்லும் அளவுக்கு அகலமாக இருக்கும். பேருந்து நிறுத்தத்தில் இருந்து இந்த வயல்வெளி நடைபாதையில் நுழையாமல் இன்னும் அரை கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலையிலேயே சென்றால் இந்த கண்மாய்க்கரை ஆரம்பமாகும் இடம் தெரியும். அந்த வழியாகத்தான் டிராக்டர் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் கண்மாய்க்கரை ஓரமாகவே வைகை ஆற்றங்கரை ஓரமாக உள்ள அந்த கிராமங்களுக்கு வந்து செல்லும்.

பலரும் கண்மாய்க்கரையில் ஏறி அந்தப் பக்கம் இறங்கிச் சென்ற காலடித்தடம் நன்றாக தெரியும். அந்த இடத்தில் மட்டும்தான் முட்கள் குறைவு. மற்ற இடங்கள் அனைத்திலும் முழுக்க முழுக்க காய்ந்த முட்கள் நாம் அணிந்திருக்கும் செருப்பை மீறி பாதத்தை பதம் பார்க்க காத்திருக்கும்.

25 ஆண்டுகளுக்கு முன்பு என்றால் எப்போதாவது அந்த வழியாக ஒன்றிரண்டு வாகனங்கள் வரும். சைக்கிளில் செல்பவர்கள்கூட மிகவும் குறைவு. கிராமத்து ஆட்கள் பழக்கம் காரணமாக வெகு விரைவாக எங்களை முந்தி நடந்து சென்று கொண்டிருப்பார்கள். வளைந்து நெளிந்து செல்லும் கண்மாய்க்கரையில் அவர்கள் வெகு சீக்கிரமே நம் கண்களை விட்டு மறைந்து விடுவார்கள். எனக்கோ காட்டுக்குள் தனியாக செல்வதைப் போல் எண்ணம் வரும்.

அங்கே அந்த கண்மாய்க்கரை ஓரமாக சுமார் 1 கிலோ மீட்டருக்கு மேல் நடந்து சென்றால் வைகை ஆறு வரும். ஆறு என்றால் இங்கே நகரப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு காரணமாக ஒரு லாங்க் ஜம்ப் செய்து கடக்கும் அளவுக்கு அகலம் இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள்.

இங்கே திருச்சி பகுதியில் கொள்ளிடம், காவிரி ஆறு இருப்பதைப் போல் பரந்து கிடக்கும். என்ன, ஆற்றில் சொட்டு நீர் இருக்காது. ஆற்றுக்கு நடுவில் குடிசை போட்டு ஆட்களே குடியிருப்பார்கள். இன்றைக்கும் ஆங்காங்கே ஊற்றுக்கண் தோண்டி தேங்காய் சிரட்டையில் செய்த ஆப்பை என்று சொல்லக்கூடிய கரண்டியால் தண்ணீரை சேகரித்து எடுத்துச் செல்வார்கள். அந்த நீரில் சமைத்து, பிறகு அந்த நீரையே ஊற்றி வைத்த பழைய சோறு மூன்று நாட்களுக்கு பிறகும் சாப்பிட அவ்வளவு சுவையாக இருப்பது எனக்குள் வியப்பை ஏற்படுத்தும்.

அந்த ஆற்று மணலில் கால்கள் மண்ணில் புதைய நடந்து அக்கரையில் ஏறி கரையோரம் பனைமரக்காட்டை கடந்து சென்ற பிறகுதான் தாத்தா இருக்கும் அந்த கிராமம் கண்ணில் தென்படும்.

அந்த வயதில் சுவிட்ச் போட்டால் பம்பு செட் குழாயில் தண்ணீர் வருகிறது. அப்புறம் ஏன் தண்ணி இல்லாத இந்த கண்மாயை அப்படியே வச்சிருக்காங்க என்று சிறுவனாக இருந்தபோது சின்னப்புள்ளத்தனமாக யோசித்ததும் உண்டு.

30 ஆண்டுகளுக்கு முன்பு வயல்வெளிக்கு நடுவில் மிகப்பெரிய தென்னந்தோப்பும் பம்புசெட்டும் இருக்கும் இடத்தில்தான் குளிக்கச் செல்வோம். வேண்டாம் என்று சொன்னாலும் இளநீரை வெட்டிக்கொடுத்து குடிக்கச் சொல்வார்கள். நகரத்தில் இருக்கும்போது எப்போதாவது சைக்கிள்காரர் வெட்டித்தரும் இளநீரை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சி குடித்துதான் பழக்கம்.

ஸ்ட்ரா எதுவும் இல்லாமல் இளநீரை அப்படியே கவிழ்த்து குடிக்கத் தெரியாமல் முகம், தாடை, கழுத்து வழியாக சட்டையை இளநீர் நனைக்கவும் பிசுபிசுப்பு காரணமாக அப்படியே 6அடி அகலம் 6 அடி நீளம் உள்ள பம்புசெட் தண்ணீர் தொட்டிக்குள் குதித்து குளிப்பேன்.

இப்போது முப்பது ரூபாய்க்கு இளநீர் கிடைப்பதில்லை. நாற்பது ஐம்பது என்று போய்விட்டது.

சோ.தர்மன் இந்த நாவலுக்கு சூல் என்று பெயர் வைத்ததன் காரணம் என்னவென்றால், நிறைசூலி ஒரு உயிரை உற்பத்தி செய்யக்கூடியது. ஒரு கண்மாய் நீர்வாழ் பறவைகள், மீன்கள், தவளை என ஏராளமான உயிர்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும். இவை அத்துணையும் சேர்த்துதான் சூல் என்று குறிப்பிட்டுள்ளார்.
**********************************************
(Courtesy: தினமணி நாளிதழ், காமதேனு வார இதழ் – தர்மன் அவர்கள் பேட்டிக்காக மட்டும்)

No comments:

Post a Comment