Saturday, January 11, 2020

வயிறு குப்பைத்தொட்டியா? சுகி.சிவம் கேள்வி

திருவாரூரில் 2011 ஆம் ஆண்டு துவங்கிய ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு முதலாம் ஆண்டு நிறைவிற்கு 2012 தை 1ஆம் தேதி திருவாரூர் பெரிய கோவிலுக்குள் கமலாம்பாள் சன்னதி எதிரில் வடக்கு பிரகாரத்தில் சொற்பொழிவாளர் சுகி.சிவம் பேச்சுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அப்போது நானும் சென்றிருந்தேன்.

மக்கள் கூட்டமும் மிக அதிகமாகத்தான் இருந்தது. சுகி.சிவம் பேச்சுக்கு அவ்வளவு ஈர்ப்பு இருக்கக் காரணமே அவரது எளிமையான கருத்துக்கள்தான். விழா ஏற்பாடு செய்திருந்த ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பிற்காக அந்த வார்த்தைகளை வைத்தே பேச்சை ஆரம்பித்தார்.
 
ஆன்மீகத்தின் பேரில் உடலை பட்டினி போடாமல் இருந்தால் ஆரோக்கியம் வரும். ஆரோக்கியம் இருந்தால் ஆன்மீகத்தில் தன்னை மறந்து ஈடுபாடு வரும். அதில் ஈடுபாடு அதிகமானால் பிரச்சனைகளை வெகு எளிதாக சமாளித்து கடந்து செல்லும் மன நிலை உருவாகும். மன நிலை சமன்பட்டாலே ஆனந்தம்தான். எனக்கு புரிந்த வரையில் என் பார்வையில் சுகி.சிவம் சொல்ல வந்த இதுதான் அவர் ஆற்றிய சொற்பொழிவின் சாரம்சம்.

சொற்பொழிவில் அவர் பேசியவற்றில் முக்கிய துளிகள்:

மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜி ஒரு முறை, எவ்வளவு பேருக்கு நான் அன்னதானம் செய்கிறேன் என்று நினைத்து கர்வமடைந்தாராம். அவரின் குரு ஒரு பாறையை உடைக்கச்சொன்னாராம். அந்த பாறைக்குள் ஒரு தேரையும், சிறிது நீரும் இருந்திருக்கிறது. இந்த தேரைக்கும் நீதான் உணவு படைத்தாயா என்று குரு கேட்டதும் சிவாஜியின் தான் என்ற அகந்தை அழிந்தது.

பொங்கல் என்பதே நன்றி செலுத்தும் விழாதான். ஒருவரிடம் பேனா கடன் வாங்கினாலே திரும்ப கொடுக்கும் போது (எல்லாரும் திருப்பி கொடுப்பதில்லை) நன்றி கூறுகிறோம். நாம் இப்போது உண்ணும் உணவை உருவாக்க காரணமான சூரியனுக்கும், அதற்கு உதவிய கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் விழாதான் பொங்கல். இந்த தகவல் நகர வாசிகளாக இருக்கும் பலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

கடவுள் குடியிருக்கும் வீடு என்பது உடம்பு. அதை விரதம், வேண்டுதல் என்ற பெயரில் துன்புறுத்துவது பாவம். நம் பிள்ளைகள் பட்டினி கிடந்தாலோ, உடலில் காயம் ஏற்படுத்திக்கொண்டாலோ அதை நாம் விரும்புவதில்லை. நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள். நாம் நம்மை வருத்திக்கொண்டால் அது எப்படி கடவுளுக்கு மகிழ்ச்சியைத்தரும்? மனித உடம்பைப்போன்ற ஒரு இயந்திரத்தை எத்தனை கோடி செலவு செய்தும் உருவாக்க முடியவில்லை. அத்தனை மதிப்பு மிக்க உடலை கடவுள் நமக்கு சும்மா கொடுக்காமல் 5 கோடிரூபாய் டெப்பாசிட் வாங்கிக்கொண்டு கொடுத்திருந்தால் ஒழுங்காக பராமரிப்போமோ என்னவோ.

முதலில் அன்னத்தை மனிதன் உண்கிறான். பிறகு அன்னம் மனிதனை உண்கிறது. -இது உண்மைதான். அந்த நேரத்துக்கு காப்பி குடிக்கலைன்னா தலையே வெடிச்சுடும் என்று கூறும் வழக்கம் எவ்வளவோ பேருக்கு உண்டு.

பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்பு என்பதே மற்ற ஆசிரியர்கள் பங்கு போடத்தான் இருக்கிறது. கணக்கு, அறிவியல், ஆங்கிலம் என்று அத்தனை ஆசிரியர்களும் மொத்தமாக குறிவைப்பது உடற்பயிற்சி வகுப்புகளைத்தான்.

உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு உடலில் சேரும்சக்தி நியாயமாக செலவழிக்கப்பட்டால் அந்த குழந்தைகளின் மற்ற சேட்டைகள் குறையும். பாடம் மட்டும் கேட்கும் குழந்தைகள் சிடுமூஞ்சிகளாகத்தான் இருப்பார்கள். உங்கள் மகன் அறிவாளியாக இல்லாமல் போனால் நஷ்டம் இல்லை. அவன் ஏதாவது செய்து பிழைத்துக்கொள்வான். ஆனால் நோயாளியாக இருந்தால் கஷ்டம்.

கிராமத்து ஆசாமி ஒருவர் முதன்முதலில் கிரிக்கெட் பார்க்கும்போது, அவன்தான் பந்து வேணாம் வேணாம்னு சொல்லி அடிக்கிறானே. அப்புறம் ஏன் இவன் திரும்ப திரும்ப போடுறான்? என்று கேட்டாராம். இந்த சொற்பொழிவு நடைபெற்ற கால கட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் உதை வாங்குவதை வைத்தும் நகைச்சுவையாக சில வார்த்தைகள் பேசினார் சுகி.சிவம்.

ஒருவன் நல்லதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் எங்கும் எதிலும் கற்றுக்கொள்ளலாம். கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனை நோக்கி போடப்படும் ஒவ்வொரு பந்தும் அவனை அவுட் செய்யத்தான். அந்த பந்தை விளாசி போர், சிக்ஸ் என்று அடிப்பது பேட்ஸ்மேனின் சாமர்த்தியம். வாழ்க்கையும் இப்படித்தான். நம்மைச் சுற்றி உள்ளவர்கள் நம்மை அவுட்டாக்கத்தான் பார்ப்பார்கள். அந்த முயற்சிகளை சாதனையாக மாற்றுவதுதான் நம் திறமை.

கிரிக்கெட்டில் ஒருவனை அவுட்டாக்க 11 பேர் முயற்சிப்பார்கள். வாழ்க்கையும் அப்படியே. நாம் அவுட்டாகி விட்டால் கூடியிருக்கும் 10ஆயிரம் பேர் கை தட்டுவார்கள். அதே சமயம் நாம் அந்த பந்தில் போர் அல்லது சிக்ஸ் அடித்தாலும் அவர்கள் கைதட்டுவார்கள். உலகம் நாம் வாழ்ந்தாலும் பேசும், தாழ்ந்தாலும் ஏசும்.

வயிறு என்ன குப்பைத்தொட்டியா?

பெண்களிடம் ஒரு கெட்டபழக்கம் உண்டு. விரதம், அது இது என்று காரணம் சொல்லி நாள்கணக்கில் சாப்பிடாமல் கூட இருந்துவிடுவார்கள். அதேசமயம் மீதமாகிவிடும் சாப்பாட்டை குப்பைத்தொட்டியில் போடுவதற்கு பதிலாக தன் வயிற்றுக்குள் போட்டு அடைக்கும் வேலையையும் கச்சிதமாக செய்வார்கள். கேட்டால், விலைவாசி இருக்குற நிலைமையில எப்படி கீழே கொட்டுறது? என்று நமக்கே எதிர்கேள்வி வரும். இப்படி உடம்பைப் படுத்தும் காரணத்தால் வீணாகிவிடும் என்று நினைத்த சாப்பாட்டின் மதிப்பை விட பல மடங்கு மருத்துவத்துக்காக செலவழிக்க நேரிடுவதை உணருவதே இல்லை.

இந்திய கலாச்சாரப்படி ஒரு நாளைக்கு 3 வேளையாக உணவை சாப்பிடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இந்த வி­ஷயத்தில் சீனர்களைப்போல் ஆறு வேளையாக பிரித்து சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது. சர்க்கரை அளவு கூடுதலாக உள்ளவர்களை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து சாப்பிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து சாப்பிட்டால் உடலின் ஜீரண உறுப்புகளுக்கு வேலை சுலபமாக இருக்கும்.

இந்த உலகில் சந்தோ­மாக இருப்பவன் யார்? குறைந்த பட்ச துக்கம் உள்ளவனே ஆனந்தமானவன். ஏனென்றால் யாருமே துக்கம் இல்லாமல் இருக்க முடியாது.

சுகி.சிவம் இன்னும் ஏராளமாக பேசினார். அவ்வளவும் நம் வாழ்க்கையை சிக்கலில்லாமல் சுலபமாக்கக்கூடியவை.

உதாரணமாக கணவன் மனைவிக்குள் பிரச்சனை வராமல் இருக்கவேண்டும் என்றால் கணவன் தன் தாயோடு மனைவியை ஒப்பிடக்கூடாது. மனைவி தன் தந்தையுடன் கணவனை ஒப்பிடக்கூடாது. இது மிகச் சுலபமான சந்தோ­ஷத்திற்கு வழி என்றார். உண்மைதான். இதுபோன்ற கவுன்சிலிங் தருவதற்கு சென்னை போன்ற பெரு நகரங்களில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனால் திருவாரூர் மக்களுக்கு இவை இலவசமாக கிடைக்கட்டும் என்று இந்த பேச்சுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்றார்.

No comments:

Post a Comment