Wednesday, January 8, 2020

நீருக்கடியில் சில குரல்கள்


நான் படித்த புத்தகங்கள் பற்றிய அறிமுகம்
நூலின் பெயர் : நீருக்கடியில் சில குரல்கள்
நாவல்
ஆசிரியர் : பிரபு காளிதாஸ்
பக்கம் : 128
விலை : 120
முதல் பதிப்பு : டிசம்பர் 2016 (உயிர்மை)
திருத்திய இரண்டாம் பதிப்பு : 2019

வெளியீடு : ஸீரோ டிகிரி பப்ளிகேஷன்ஸ்

முதல் பதிப்பின் அட்டை வடிவமைப்புதான் இந்த புத்தகத்தை நூலகத்தில் இருந்து என்னை எடுத்துப் பார்க்கச் செய்தது. உள்ளே ஒரு சில பக்கங்களைப் புரட்டிப் பார்க்கவும், சில வாக்கியங்கள் கதையைப் படிக்கச் சொன்னது.

பதின்ம வயதைக் கடந்து தனக்கான வேலை, வாழ்க்கையை தேர்வு செய்ய வேண்டிய வயதில் வன்முறை உலகத்திற்குள் அதை தங்களுக்கான பாதையாக வைத்துக் கொண்ட சுந்தர், கதிரவன் ஆகியோரைப் பற்றிய கதை.

‘தவறான நடத்தை’ இப்படி சொல்வதே இன்றைய சூழலில் தவறாக எடுத்துக் கொள்ளப்படும். அம்மாவின் நடத்தை பிடிக்காத மகன், தன்னை புரிந்து கொள்ளாமல் எந்நேரமும் இவன் எங்க உருப்படப்போறான் என்று சொல்லிக்கொண்டே இருக்கும் அப்பாவை பிடிக்காத மகன் ஆகிய இரண்டு பேரும் ஒரு கட்டத்தில் சாதாரணமாக சுந்தரின் தந்தை பணியாற்றும் தபால் நிலையத்தில் இருக்கிறார்கள். அவ்வளவுதான் இந்த இரண்டு பேருக்கும் உள்ள சம்மந்தம்.
(நான் படித்த புத்தகத்தின் அட்டை)
இன்றைய காலகட்டத்தில் வரும் படங்களை உதாரணமாக சொல்ல முடியாது. வீட்டுக்குப் பெரியவர் அண்ணன். அவர் தப்பான தீர்ப்பை சொன்னாலும் அவர் பேர் கெட்டுடக்கூடாது என்று தண்டனை அனுபவிக்கும் தம்பி, உருப்படவே மாட்ட என்று அப்பா சொன்னாலும், பொண்டாட்டியை கலெக்டராக்கி, தானும் தொழிலதிபர் ஆவேன் என்று நேர்மையாக வாழும் மகன் இப்படிப் பட்ட கேரக்டர்களை மட்டுமே எதிர்பார்த்து கதையை படித்தால் அவர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

நிழல் உலகத்திற்குள் சென்றுவிடும் நபர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் யாரால் வேண்டுமானாலும் தனக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவனுக்கு வைக்கப்படும் குறியில் தவறுதலாக பலியாகக்கூடும் என்பது போன்ற ஆயிரம் அபாய வழிகள்தான் இருக்கும். ஆனாலும் எதனால் வன்முறையை விரும்பி தேர்வு செய்கிறார்கள் என்ற கேள்விக்கு யாராலும் இறுதியான பதில்களை சொல்ல இயலாது.

இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடணும் என்ற கோட்பாட்டின்படி வாழ்ந்து வருபவர்களுக்கு கதிரவனின் அம்மா, ராஜாவின் பொண்டாட்டி, ரவியை ஏமாற்றிய மனோகரின் மனைவி இவர்கள் எல்லாருடைய தேடல்களும் உடல் சார்ந்ததாக மட்டுமே இருப்பதைப் பார்த்து, கதையில் கதிரவன் உள்ளிட்ட கேரக்டர்கள் சொல்லும் பொதுவான வசவு வார்த்தைகளை சொல்லி திட்டி நாம எல்லாம் யோக்கியம் என்று சமாதானப்படுத்திக் கொள்ளும்.
(திருத்திய புதிய பதிப்பின் அட்டை)
உண்மையில் ஒருவனின் பெற்றோர், அவன் பழகும் நண்பர்கள், சுற்றி இருக்கும் சமுதாயம், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் என்று பல்வேறு நபர்களின் வாழ்க்கை முறைதான் ஒருவனின் ஒழுக்கத்தையும் குணத்தையும் தீர்மானிக்கிறது என்பதை மையமாக கொண்டு கதை எழுதப்பட்டுள்ளது.

இந்த உலகத்தில் கதிரவனின் தாய், ராஜாவின் மனைவி, சுந்தரின் அப்பா, ஆசிரமத்தில் உள்ள சாமியார், ரவி பயன்படுத்திக் கொண்ட மனோகரின் மனைவி என்பது போன்ற பள்ளங்கள் (அ) வேகத்தடைகளுக்கு பஞ்சமே கிடையாது.

ஒருவன் இது போன்றவற்றில் சிக்கி வாழ்க்கைப்பாதை திசைமாறிப்போகாமல் இருக்க வேண்டும் என்றால் அது சாமானிய விஷயமில்லை.

எனக்கு என்னவோ, தப்பு செய்ய பயப்பட்டுக்கொண்டே இருக்கும் ஒருவனை, நீ தப்பு செஞ்சிடுவ என்று கண்டித்து அடிக்கும் அப்பா அல்லது அதிகாரம் செலுத்தும் உறவுதான் வன்முறையை நோக்கித் தள்ளும் முதல் விசை என்று தோன்றுகிறது. அடுத்தடுத்து தள்ளி விடும் வேலையை அவனைச்சுற்றி உள்ள நண்பர்களும், வசிக்கும் இடத்தில் உள்ள சமுதாயமும் பார்த்துக் கொள்ளும்.
*****
(இந்த புத்தகம் தற்போது பிரபல ஆன்லைன் ஷாப்பிங்கிலும், சென்னை புத்தக கண்காட்சியிலும் கிடைக்கிறது.)

No comments:

Post a Comment