Thursday, January 9, 2020

குறைந்த ஒளியில்


நான் படித்த புத்தகங்கள் பற்றிய அறிமுகம்
நூலின் பெயர் : குறைந்த ஒளியில்
முகநூல் பதிவுகள் தொகுப்பு
ஆசிரியர் : பிரபு காளிதாஸ்
பக்கம் : 136
விலை : 120
முதல் பதிப்பு : ஏப்ரல் 2016
வெளியீடு : உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை   600 018
ISBN 978-93-85104-46-6

நானும் மூணு வேளை குளிக்கிறேன் என்று வசனம் வருமே, அப்படி நாமும்தான் வெளியில் செல்கிறோம், சுற்றிலும் பார்க்கிறோம், ஆனால் இந்த மாதிரி கவனித்ததை சுவாரஸ்யமாக பதிவு செய்யும் கலை தெரியவில்லை.

இந்த நூலாசிரியர் முகநூலில் எழுதிய அரைபக்கம், ஒருபக்கம், இன்னும் கொஞ்சம் பெரிது என்றால் ஒன்றரை பக்கங்களில் தான் ஒவ்வொரு தலைப்பில் உள்ள கட்டுரையும் இருக்கின்றன. (இதை கட்டுரை என்று சொல்வதா, துணுக்கு என்று சொல்வதா?)

இந்த தொகுப்பை எடுத்து புரட்டியபோது பல விஷயங்கள் அட... இதுதான் எனக்கு தெரியுமே என்று சொல்ல வைத்த, எனக்கும் ஏற்பட்ட அனுபவமாகவே இருந்தன.
போட்டோ எடுத்துக் கொடுத்துவிட்டு பணம் வாங்க பட்ட பாட்டைப் பற்றி படித்ததும் எல்லா தொழில் செய்பவர்களுக்கும் இப்படி சங்கடம் தருவதற்கு என்றே சிலர் ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கிக் கொண்டு வந்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றியது.

எனது தொழிலில் இவர் சொன்னது போன்ற வாடிக்கையாளர்களை நானும் சந்தித்திருக்கிறேன். தினமும் சந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.

நானும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 4 மாதங்கள் வேறு வேலை எதுவும் பார்க்காமல் நிறைய வலைப்பூவில் எழுதிக் குவித்தேன்.

அவற்றினை திரும்ப படித்துப் பார்த்தால் பாதிதான் தேறுகிறது. மெகாத் தொடர்களுக்கு வசனம் எழுதியவனை மணிரத்னம் படத்திற்கு வசனம் எழுதச்சொன்னால் என்ன ஆகும். அப்படித்தான் வலைப்பூவில் பெரிய பெரிய கட்டுரையாகவே எழுதிய எனக்கு, முகநூலிலும் அந்த அளவிலேயே எழுதத்தான் முடிந்தது.

ஆனால் பிரபு காளிதாஸ் எல்லா பதிவுகளையும் சுவாரஸ்யமாக நறுக்கென்று சொல்லி விட்டுச் செல்கிறார்.

ஆயிரம் வார்த்தைகளால் சொல்லிப் புரிய வைக்காத ஒரு விசயத்தை ஒரே ஒரு படம் சொல்லிவிடும் என்று சொல்வார்கள்.

இவர் புகைப்படக்கலைஞர் என்பதால் எழுதுவதிலும் சிக்கனமான வார்த்தைகளிலேயே சுவாரஸ்யம் காட்ட முடிகிறதோ?

No comments:

Post a Comment