Tuesday, January 7, 2020

கிராமங்களில் டோல் கட்டண வசூலுக்கு அனுமதி வழங்க காரணம் தெரியுமா?


வைகுண்ட ஏகாதசி – திருவாரூர், திருக்கண்ணமங்கையில் தரிசனம்

06–01–2020 அன்று வைகுண்ட ஏகாதசியில் பெருமாள் கோவில்களில் பரமபதவாசல் திறப்பு நடைபெறுவதை தரிசனம் செய்ய வேண்டும் என்று வீட்டில் கேட்டுக் கொண்டதால் அதிகாலையிலேயே புறப்பட்டு சென்றோம்.

நான் இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை கூட பரமபத வாசல் திறக்கும் நேரத்தில் கோயிலுக்கு சென்றது கிடையாது. கூட்டத்தைப் பார்த்து அலர்ஜி. அவ்வளவுதான்.

அதிகாலையில்தான் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று கடந்த ஆண்டு திருக்கண்ணமங்கைக்கு காலை பத்து மணிக்கு மேல் சென்றபோது கூட்டம் ஒழுங்கற்ற முறையில் பாதையை அடைத்துக் கொண்டு நின்றது. அதனால் எத்தனையோ முறை சாதாரண நாட்களில் தரிசனம் செய்த பக்தவத்சல பெருமாளை பார்க்காமலேயே திரும்பி விட்டோம்.

இந்த ஆண்டு திருவாரூர் மடப்புரம் வேணுகோபாலசுவாமி கோயிலில் புதிதாக பரமபதவாசல் கதவு அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததை கேள்விப்பட்டதால் அங்கே சென்றோம்.

courtesy : Raja
காலை சுமார் 5.55 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. முதன் முதலாக இந்த விழாவை இந்த ஆண்டுதான் நேரில் பார்த்திருக்கிறேன்.

வெண்பொங்கலும் லட்டும் பிரசாதமாக கிடைத்தது.

காலை ஆறரை மணிக்கெல்லாம் வீடு திரும்பி விட்டதால், வழக்கமான வேலைகளை முடித்து விட்டு பிறகு காலை 9.30 மணிக்கு திருக்கண்ணமங்கை பெருமாள் கோவிலுக்கு சென்றோம்.

குளத்தைச் சுற்றி வரும் பாதை, கடைவீதியிலிருந்து கோவிலுக்கு வரும் பாதை என்று எல்லா இடங்களிலும் தடுப்புகளை அமைத்து இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாய் டோக்கன் என்றார்கள்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாக பட்சிராஜன் சன்னதி அருகிலிருந்து தெற்கிலும் வடக்கிலும் நீண்ட வரிசையில் செல்லும் வகையில் கம்புகள் கட்டி தடுப்பு வசதி ஏற்படுத்தியிருந்தார்கள்.

இரண்டு வரிசையும் சாமி கும்பிட்டு விட்டு நடுவில் இருக்கும் வழியாக வெளியேறும் வகையில் செய்திருந்தார்கள். நாங்கள் சுவாமி தரிசனம் செய்ய 15 நிமிடங்கள் ஆனது.

இதிலும் சிலர் வி.ஐ.பி என்று கூறிக்கொண்டு நடுவில் இருக்கும் பாதையில் நேராக சாமி கும்பிடப்போனவர்களைப் பார்த்து வரிசையில் நின்றவர்களில் சிலரின் வசவுகளையும் பலரின் இயலாமையால் ஏற்பட்ட புலம்பல்களையும் கேட்க முடிந்தது.

நாங்கள் வண்டியை எடுத்துக் கொ்ண்டு வெளியே வந்தபோது சிலர் கார்களிலும், இருசக்கர வாகனத்திலும் அழைத்து வந்தவர்களை இறக்கிவிட்டுவிட்டு, நாங்க உள்ளேயே வரலை... என்று மெயின்ரோட்டிலேயே வேறு பகுதிக்கு வண்டியை ஓட்டிச் சென்று விட்டார்கள்.
courtesy : Wikipedia
அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் கார் ஓட்டுநரிடம், ‘இன்னைக்கு ஒருநாள்தானே சார்... எவ்வளவோ செலவு பண்றீங்க... இதுக்கெல்லாம் கணக்கு பார்க்கலாமா?’ என்றார்.

‘சில ஊர் கோயில்களில் எல்லா நாளுமே நிறைய ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து போவாங்க. அங்க சாலைகள் சீக்கிரமா சேதமடையும். வழக்கமா பஞ்சாயத்துல ஒதுக்குற தொகையை வெச்சு அடிக்கடி ரோட்டை சீரமைக்க முடியாது. அதுக்காக வண்டிக்கு டோல் வசூல் பண்றதுக்கு அந்த மாதிரி வாகனப் புழக்கம் அதிகமா இருக்குற ஊர்கள்ல அனுமதி கொடுத்தாங்க.

இன்னைக்கு ஒருநாள் வந்து போற வண்டிகளால அதுவும் நாலு கரைகள்ல அப்படி என்ன சேதம் உண்டாகிடப் போகுது. என்ன கணக்குல இப்படி குளத்தங்கரையிலேயே நின்று வசூல் பண்றீங்கன்னு தெரியலை... என் வாயைக் கிளறாதீங்க...’ என்று சொல்லிவிட்டுச் சென்றார் அவர்.

அவர் தகவலாக சொன்னாலும் அதில் சில கேள்விகளும் இருந்ததாக எனக்கு தெரிந்தது. ஆனால் விடைதான் தெரியவில்லை.

No comments:

Post a Comment