Thursday, February 13, 2020

திருவாரூரில் திருவிழா – 2


அத்தியாயம்–4

"என்னடா...எதோ ஆப்பு அது இதுன்னு சொன்ன?"என்று சுந்தர்ராஜன் கேட்கவும்,

"இல்லப்பா...அந்த வீட்டுல யாரோ தெரிஞ்சவங்க இருக்காங்களோன்னு யோசிச்சேன்." என்று வெற்றி கிசுகிசுப்பான குரலில் சொன்னான்.

"அந்த வீட்டுல இருக்குறது மூணும் பொண்ணு. சின்ன பொண்ணு ஸ்கூல்லதான் படிக்குது.ரெண்டாவது பொண்ணு காலேஜீல படிக்கிறாளாம்.
அவ உனக்கு சினேகமா?...எவ்வளவு நாளா இதெல்லாம்."

திருவாரூரில் திருவிழா  1 முதல் 3 அத்தியாயங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

"அய்யோ...அதெல்லாம் ஒண்ணும் இல்லப்பா...அந்த பொண்ணு படிக்கிறதே என் கிளாஸ்லதான்.அதனால தெரியும்.வேற ஒண்ணும் இல்லப்பா."

"இந்த முகரைக்கு இது ஒண்ணுதான் குறைச்சல். நீ ஓட்டு கேட்கப் போறேன்னு ஊர் பூராவும் சுத்தும் போதே நினைச்சேன். இந்த மாதிரி எல்லா பொண்ணுங்களோட முகவரியைத் தெரிஞ்சுக்கதான் அலைஞ்சுருக்க. அங்க வந்து எதாவது ஏடாகூடமா பேசுன, தொலைச்சுடுவேன். நீ கல்லூரியில என்ன வில்லங்கம் பண்றன்னு இனி நானும் தெரிஞ்சுக்கலாம். ஒழுங்கா நேரத்தோட வீடு வந்து சேர்." என்ற சுந்தர்ராஜன் வீட்டுக்குள் சென்று விட்டார்.

"சொந்தமாகப்போறோமேன்னு நம்பி ஒரு வார்த்தை கூடுதலா பேசினேன். அப்பாகிட்ட அது உல்டாவாயிடுச்சே. சந்தியா இனி எனக்கு தொடர்ந்து வேட்டு வெப்பாளே. இது என்னடா வெற்றி புது சோதனை." என்று மீண்டும் புலம்பிய வெற்றி, கல்லூரிக்குச் சென்றான்.

வகுப்புக்குள் சென்று,"டேய்...மாப்ள...கூடிய சீக்கிரம் என்னைய அத்தான் அப்படின்னு ஒரு பொண்ணு கூப்பிடப்போகுதுடா..."என்று பன்னீர்செல்வத்திடம் சொன்னான்.

உடனே மற்ற மாணவர்களும் சூழ்ந்து கொண்டார்கள். மாணவிகளுக்கும் ஆச்சர்யம். ஆனால் சந்தியாவின் முகம் மட்டும் இறுக்கமாகவே இருந்தது.
"யார்றா அது... போட்டோ வெச்சிருக்கியா?"என்று ஆளாளுக்கு வெற்றியை கேள்வி கேட்டு சுற்றி வந்தார்கள்.

"யாருன்னு இன்னைக்கு சாயந்திரம்தான் தெரியும். நாளைக்கு வந்து சொல்றேன். ஆனா ஒரு க்ளூ தர்றேன். அந்த பொண்ணு நம்ம வகுப்புலதான் இருக்கா." என்று சொன்னதும் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகள் சிலரிடமிருந்தும் 'ஓ'என்ற சத்தம்.

"பார்த்து...நம்ம சோப்பு புரொபசர் தூக்கத்துல இருந்து எழுந்து வந்துடப்போறாரு..." என்று வெற்றி சொன்னதும் வகுப்பறை மீண்டும் அதிர்ந்தது.

"ஆஹா...இந்த கொரங்கோட குடும்பம்தான் இன்னைக்கு சாயந்திரம் வரப்போகுதா...இரு உன்னைய கவனிச்சுக்குறேன்."என்று மனதுக்குள்ளேயே சந்தியா சொல்லிக்கொண்டாள்.
******
உள்ளூராக இருந்ததால் டாடா சுமோவில் பெரியவர்களும் சில பெண்களும் ஏறிக்கொள்ள மற்ற முக்கிய உறவினர்கள் தங்களின் டூவீலரிலேயே கைலாசநாதர் கோவில் தெருவில் இருந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்றார்கள்.

"போட்டோவுலயே எங்களுக்கு புடிச்சுப்போச்சு. ஜாதகமும் பிரமாதமா பொருந்திருக்கு. பையனும் பொண்ணும் நேர்ல பார்த்து புடிச்சிருக்குன்னு சொல்லிட்டா மத்த விஷயங்களைப்பேசிடலாம்னுதான் இப்ப வந்துருக்கோம். 

உள்ளூரா இருக்குறதால எங்களோட நெருங்கிய உறவினர்கள் எல்லாம் அடிக்கடி வந்து பொண்ணைப் பார்க்கணும்னு உங்களுக்கு தொந்தரவு கொடுத்தா அது கொஞ்சம் சிரமம் பாருங்க. அதனாலதான் இப்பவே எல்லாரையும் அழைச்சுட்டு வந்துட்டேன்." சுந்தர்ராஜன்தான் முதலில் பேசினார்.

"இதுல சிரமப்படுறதுக்கு என்னங்க இருக்கு. நீங்க இத்தனை பேர் வருவோம்னு சொல்லிட்டுதானே வந்துருக்கீங்க. இந்த செயலே உங்க உயர்ந்த குணத்தை சொல்லிடுச்சு." என்று பெண்ணின் தந்தை ராமலிங்கம் லேசாக குழைந்தார்.

'அப்பாவைக் கவுத்துட்டார். மேட்டர் ஓவர்.' என்று வெற்றி வழக்கம்போல் முணுமுணுத்தான்.

"தம்பி என்னவோ சொல்றாரே..."என்று ராமலிங்கம் சுந்தர்ராஜனிடம் கேட்டார்.

"இவன் என் சின்னப்பையன். காலேஜீல படிக்கிறான்னு ஜாதகத்துல குறிச்சிருந்தோமே. அந்த ஆர்வக்கோளாறுதான் இது.

ஆனா என் பெரிய பையன் ரொம்ப அமைதி. பேங்க்ல வேலைக்குப் போறதோட சரி. அனாவசியமா எங்கயும் அலைய மாட்டான்."என்று பெருமிதமாக சுந்தர்ராஜன் தன் மூத்த மகன் அன்புச்செல்வனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

'ஆஹா...ஒத்தப்படையா இருக்கணும்னு ஒரு எண்ணிக்கைக்காகதான் நம்மளைக் கூட்டிட்டு வந்தாருன்னு நினைச்சா அண்ணனை விலைபேச என்னைய வில்லனாக்கிடுவாரு போலிருக்கே. இப்படி நெகட்டிவ் பப்ளிசிட்டி கிடைச்சா நாளைக்கு எனக்கு பொண்ணு கிடைக்குறதுல சிக்கலாகுமே... டேய் வெற்றி... இதுவரை எவ்வளவோ அவமானப்பட்டுருக்க... இதையும் கொஞ்சம் தாங்கிக்க. உன் அண்ணன் நல்லவனா இருந்தாலும் உன் தயவாலதான் இப்ப அவனுக்கு பொண்ணு கிடைக்கப்போகுது.' என்று வெற்றி மீண்டும் தனக்குள்ளேயே பேசிக்கொண்டான்.

"அன்னைக்கு மாணவர் தலைவர் தேர்தலுக்கு ஓட்டு கேட்டுவந்தப்ப அரசியல்வாதிகளே தோத்துப்போற மாதிரி பேசுன தம்பி, இப்ப வாயையே திறந்து பேச மாட்டெங்குறாரு... அப்பாவுக்கு அவ்வளவு பயமா?" என்று ராமலிங்கம் சிரித்தார்.

"இவனா...எனக்கு பயப்புடுறவனா... இப்படி எல்லாம் காமெடி பண்ணாதீங்க சார். இவனைப்பத்திப் பேசி நேரத்தை வீணடிக்க வேணாம். பொண்ணை வரசொல்லுங்க. ஆவுற விஷயத்தைப் பத்தி பேசுவோம்."என்று சுந்தர்ராஜன் சொல்லவும் காபி டம்ளர்கள் வைத்த டிரேயை காயத்ரி எடுத்து வந்தாள்.

அவள் உடன் துணைக்கு வந்தது, அவளுடைய பாட்டி.
'அடச்சே...கூட வர்ற பிகர் தேறுமான்னு பார்த்தா உஷாராயிட்டாங்களே. அது சரி... இவங்க சொந்தக்கார பொண்ணு எதையாவது எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க நினைச்சாலும் அப்பாதான் விடமாட்டாரே. நமக்கு நாமே உதவி...பேசாம யாரையாவது லவ் பண்ணிடவேண்டியதுதான்.' என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தபோது காயத்ரி இவன் முன்னால் நின்று கொண்டிருந்தாள்.

"டேய்...என்னடா யோசனை. எவ்வளவு நேரம் காத்துகிட்டு நிப்பாங்க... சீக்கிரம் எடுத்துக்கடா..."என்று சுந்தர்ராஜன் அதட்டினார்.

"அண்ணி...எனக்கு வேண்டாம்."என்று வெற்றி சொன்னதும் காயத்ரி முகத்தில் வெட்கத்துடன் ஏன் என்ற கேள்வியும் எழுந்தது.

கூடியிருந்த பலரும் வாய்விட்டு சிரித்துவிட, அன்புச்செல்வன், காயத்ரியின் அம்மா உள்ளிட்ட சிலரின் முகத்தில் புன்னகை அளவோடு வெளிப்பட்டது.
"ஏண்டா...வெற்றி... நீ இந்தப்பொண்ணுதான் அண்ணின்னு முடிவே பண்ணிட்ட மாதிரி பேசுற?...அப்புறம் பெரியவங்க நாங்க எல்லாம் எதுக்குடா...?"

"இந்த மாதிரி டயலாக் பேசுறதுக்குதான். மாமா..., அண்ணன் விட்ட ஜொள்ளுல முக்கா டம்ளர் காபி முழு டம்ளர் ஆயிடுச்சு.
அப்பா இப்பவே மருமகளுக்கு ஆதரவா என்னைய திட்ட ஆரம்பிச்சுட்டாரு.

இனிமே நான் எதாவது சொன்னா எடுபடுமா என்ன. அதான் நான் முடிவே பண்ணிட்டேன்." என்று வெற்றி மிக சாதாரணமாக பேசினான்.

"அதுக்கு ஏண்டா காபியை வேணாம்னு சொல்றே...மரியாதை தெரியாதா உனக்கு."என்று சுந்தர்ராஜன் சீறினார்.

"அப்பா...நம்ம வீட்டு வென்னீரைக் குடிக்கிறதுல இருந்து எப்படா தப்பிக்கிறதுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். அதனாலதான் இந்த திடீர் முடிவு.

அண்ணி எடுத்துட்டு வந்துருக்குற காபியோட ருசியை அதோட வாசனையே சொல்லுது. எல்லா நாளும் அண்ணியே காபி போட்டு தர முடியுமா... அடிக்கடி அம்மாவோட காபியையும் குடிக்க வேண்டியதா இருக்கும்.

இதெல்லாம் தேவையா. புது வருஷத்தன்னைக்கு தீர்மானம் எடுக்குறதெல்லாம் சும்மா. இப்படி தடாலடியா முடிவெடுத்தாதான் அது உறுதியா இருக்கும்.

நடிகர் சிவகுமார் பல வருஷங்களா டீ,காபியையே தொடுறது இல்லையாம். இதுவும் அவரோட இளமைக்கு ஒரு காரணம். அதுக்காக நீங்க வருத்தப்படாதீங்க அண்ணி. வெறும் தண்ணி கொடுத்தாலும் ஓ.கே...அது இல்லன்னாலும் பூரி, பொங்கல் அப்படின்னு எதாவது செஞ்சு வெச்சிருந்தாலும் கொடுங்க... நான் வேணான்னு சொல்லமாட்டேன்."என்று சொல்லவும் அந்த இடமே கலகலப்பானது.

"அன்பு...நீ பேசாததுக்கும் உன் தம்பி சேர்த்து பேசுறாண்டா..."என்ற அந்தப் பெரியவர் திரும்பி சுந்தர்ராஜனிடம்,"மச்சான்...உன் நிலமை பரிதாபம்தான். இவனை எப்படி வெச்சு இத்தனை வருஷமா மேய்ச்சீங்க...."என்றார்.

"தாத்தா உங்களை பாட்டி வெச்சு சமாளிச்சதைக்காட்டிலுமா நான் படுத்துறேன்."என்று வெற்றி அவரை வார்விடவும், இதற்கும் மற்றவர்கள் சிரித்தார்கள்.

"மாமா...இவன் கிட்ட பேச்சுக்கொடுக்காதீங்க...எது சொன்னாலும் எதிர்வாதம் பண்ணுவான். பொண்ணும் பையனும் தனியா பேசிக்கட்டும். அவங்களுக்கு சம்மதம்னா நாம மற்ற ஏற்பாடுகளை செய்யலாம்."என்று வந்த விஷயத்தில் சுந்தர்ராஜன் தீவிரமானார்.
******
அடுத்த நாள், தன் தோழியின் வீட்டுக்கு சந்தியா சென்று கொண்டிருந்தாள். அங்கிருந்துதான் அவர்கள் இருவரும் கல்லூரிக்குச் செல்வது வழக்கம்.

கடைத்தெரு சென்றுவிட்டுத் திரும்பிய வெற்றி, சந்தியாவை ஓவர்டேக் செய்யும்போது, "மிஸ் சந்தியா...இனி நீங்க என்னைய எப்படி கூப்பிடுவீங்க?" என்றான்.

"அட லூசு..."என்று ஆரம்பித்து அவள் பேசியதைக் கேட்ட வெற்றியின் முகத்தில்...

அத்தியாயம்5

"அட லூசு..." என்று சந்தியா பேச ஆரம்பித்ததும் "இவ என்ன அரசாங்க ரகசியத்தை எல்லாம் வெளியில சொல்லுறா?"என்ற சிந்தனை வெற்றியின் மனதில் ஓடியது.

"நான் உன்னைய 'அத்தான்' அப்படின்னு கூப்பிட்டு வழியணும்னு நீ ஆசைப்படுறது நல்லாவே தெரியுது.அந்த ஆசையை எல்லாம் ஓரங்கட்டிடு. நியாயமா பார்த்தா உன்னைய பொறுக்கி, அதிகப்பிரசங்கி அப்படின்னுதான் கூப்பிடணும். மாமா, அத்தான் அதான் உன் அப்பா, அண்ணன் - இவங்களுக்காக உனக்கு கொஞ்சமா மரியாதை கொடுக்கலாம்னு நினைக்குறேன். 

நீயா அந்த மரியாதையைக் கெடுத்துக்காத.
அக்காவோட கல்யாணத்துக்கு வரப்போற என் பிரெண்ட்சையே எப்படி சமாளிக்கிறதுன்னு நானே குழம்பி இருக்கேன்.ச்சீ போ..." என்று சந்தியா தன் தோழியின் வீடு இருந்த தெருவுக்குள் நுழைந்துவிட்டாள்.

'ச்சீ...போன்னு சொல்லிட்டுப்போறா...இப்படித்தானா அசிங்கப்படுறது... ம்...சரி... எங்க போயிடப்போறா... இப்படி கோபப்படுறவளை சுலபமா வழிக்கு கொண்டுவந்துடலாம். அப்பாதான் கவுத்துவிடாம இருக்கணும்.

எங்க... நான் ஊதுற பலூனை எல்லாம் ஒரே அடியில உடைக்கிறதுதான் அவரு பிழைப்பா இருக்கு. நம்மளைப் பொறுத்த வரை வீட்டுக்குள்ளதான் வில்லன். எதுவா இருந்தாலும் சமாளிச்சுதானே ஆகணும்' என்று நினைத்துக் கொண்ட வெற்றி வீட்டுக்குச் சென்றான்.

இரண்டு மாதங்களுக்குள் திருமணத்தை முடித்துவிடுவது என்று சுந்தர்ராஜனும், ராமலிங்கமும் தீவிரமாக இயங்கினார்கள்.

ராமலிங்கத்தின் பொருளாதார நிலை சற்று சிரமநிலையில் இருந்ததால் சுந்தர்ராஜனே திருமண செலவுகளை ஏற்றுக்கொண்டு நடத்திக்கொள்வதாக சொல்லிவிட்டார்.

கல்லூரியில் ஆண்டு விழா நடத்துவதற்காக சிறப்புவிருந்தினர்கள் இரண்டு பேரை அழைத்திருந்தார்கள். ஒருவர் தமிழ்த்திரைப்பட இயக்குனர், மற்றொருவர் மாவட்டக்காவல்துறை கண்காணிப்பாளர். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத துறையாக இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். 

அந்த இரண்டு பேரும் இந்தக் கல்லூரியில் படித்தவர்கள் என்ற காரணம்தான் அவர்களை இந்தக் கல்லூரி விழாவின் மேடையில் ஏற்றியிருந்தது.

மாணவர் பேரவை தலைவரும், செயலாளரும் சிறப்புவிருந்தினர்களை அழைத்துவர சென்றபோது வெற்றியும் ஒரு காரை ஏற்பாடு செய்து ஐந்து மாணவர்களுடன் ஏறிக்கொண்டான்.

எஸ்.பியும் இயக்குனரும் காரில் வந்தபோது முன்னால் வந்த பைலட் கார் கண்ணாடியில் ஒட்டியிருந்த போஸ்டரைப்பார்த்து கல்லூரி முதல்வர்தான் முதலில் அதிர்ந்தார். விருந்தினர்கள் முன்னால் வெற்றியை என்ன சொல்வது என்ற தயக்கத்தில் அவர்களை முதல்வரும் பேராசிரியரும் வரவேற்றார்கள். அவர்கள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சிக்கு காரணமான போஸ்டரை முன்னாள் மாணவர்களும் பார்த்தார்கள்.

விழா நல்ல முறையில் நிறைவடையும் நேரம், எஸ்.பி, இயக்குனர் இருவரும் சேர்ந்து எழுந்து நின்றார்கள்.

இயக்குனர்,"எங்களுக்கு முன்னால வந்த கார்ல 'பேட் பாய்ஸ்'அப்படின்னு போஸ்டர் ஒட்டி இருந்ததே... அந்த ஐடியாவுக்கு சொந்தக்காரர் கொஞ்சம் மேடைக்கு வர்றீங்களா.?"என்றார்.

"ஏன் சார்... போலீஸ்கிட்ட புடிச்சுக்கொடுக்கப்போறீங்களா?இந்த வெற்றி அவ்வளவு சீக்கிரத்துல சிக்க மாட்டான். ரொம்ப கஷ்டப்படணும்." என்று முன் வரிசையில் நின்று குரல் கொடுத்தான். 

அருகில் நின்ற மாணவர்கள் எல்லாம் பெரியதாக 'ஓ' போடவும் கல்லூரி அரங்கமே அதிர்ந்தது.

"இதெல்லாம் என்ன பெரிய சத்தம்...நாங்க விட்ட சவுண்டுல பத்து சதவீதம் கூட இல்லை. நீங்க எல்லாம் வேஸ்டுப்பா..."என்று எஸ்.பி சொன்னதும் மாணவர், மாணவிகள் கூட்டத்தில் மீண்டும் உற்சாக கூச்சல்.
"மாணவர்கள்னா மனசாட்சியைத் தவிர எதுக்கும் அஞ்சக்கூடாது.

வெற்றி உன்னைப் பத்தி உங்க ஹெச்.ஓ.டி கிட்ட கேட்டுட்டேன். மேடையில ஏறு. உன்னை வெச்சு சில செய்திகளை மற்ற எல்லாருக்கும் சொல்லணும்."என்று இயக்குனர் சொன்னார்.

"அப்பாவுல இருந்து அதிகாரிங்க வரைக்கும் என்னைய காட்சிப் பொருளாக்குறதுலயே குறியா இருக்காங்களே. என்ன கொடுமைடா இது... சரி...எதிர்மறையாவது பப்ளிசிட்டி கிடைக்குதேன்னு பெருமைப்பட்டுக்க வேண்டியதுதான்." என்று வெற்றி மேடையேறினான்.

மாணவர்களின் உற்சாக கூச்சலைக்கேட்டதும் பெரிய தலைவராக தன்னைக் கற்பனை செய்துகொண்ட வெற்றி, கூட்டத்தைப் பார்த்து கையசைத்தான்.

எஸ்.பி. "எங்களோட ஜூனியர் மாணவ சமுதாயத்துக்கு மறுபடியும் வணக்கம். சேட்டை செய்தாதான் அது குழந்தை. இப்படி அட்டகாசம் பண்றியேன்னு குழந்தையை அம்மா அடிக்கிறது சகஜம். ஆனா அதே குழந்தைக்கு உடம்பு சரியில்லாம படுத்துட்டா அதிகமா தவிச்சுப்போறது தாயாத்தான் இருக்கும்.

மாணவர்களும் ஆசிரியர்களும் கூட தாய் சேய் மாதிரிதான் இருக்கணும்னு நினைக்கிறோம். மாணவர் பருவம் குறும்பு நிறைஞ்சதா இருக்குறது தப்பே இல்லை. 

ஆனா அதனால அடுத்தவங்களுக்கு துன்பம் வரக்கூடாது. யாரோட மனசும் புண்படக்கூடாது. முக்கியப்பாடங்களில் வெற்றிதான் தொடர்ந்து நல்ல மார்க் எடுத்துட்டு வர்றதா சொன்னாங்க.

கார்ல ஒட்டுன போஸ்டர்ல பேட் பாய்ஸ் அப்படின்னு போட்டதால யாருக்கும் நேரடியா கஷ்டம் இல்லை. ஆனா அது ஒரு படத்துல இருக்குற காட்சின்னுங்குறதால சினிமா உங்களுக்குள்ள ஏற்படுத்திருக்குற தாக்கம் புரியுது. இந்த மாதிரி யாருக்கும் உதவாத விஷயங்களை செய்து கெட்ட பேர் எடுக்குறதை விட, சொந்தமா யோசிச்சு ஒரு கோமாளித்தனமான போஸ்டர் ஒட்டிருந்தா கூட நகைச்சுவைன்னு நினைச்சு பாராட்டியிருப்பேன்.

கல்லூரி அனுபவம்னுங்குறது  உங்க ஒவ்வொருத்தருக்கும் கிடைச்ச அற்புதமான வாய்ப்பு. பல வருஷம் கடந்து போனாலும் இதைப் பத்தி நினைக்கும்போது உங்க முகத்துல லேசா ஒரு புன்னகையாவது வரும்.அது எந்த வயசா இருந்தாலும்.

இப்ப நான் வெற்றியை மேடையில ஏத்துனதுக்கு வேற ஒரு காரணமும் உண்டு. இவன் செய்யுற செயல்கள் பல ஆசிரியருக்கே பிடிக்கலைன்னு கேள்விப்பட்டேன். இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னுதானே நினைக்குறீங்க... 

அவனும் அவனைச் சுத்தி இருக்குறவங்களும் பெருமைப்படுற ஒரு விஷயத்தை வெற்றி விளையாட்டாவே செய்துகிட்டு வர்றான். ஆனா அது தந்துகிட்டு இருக்குற நல்ல பலன் ஏராளம்.

இது உங்களுக்கு ஊக்கம் கொடுக்குற வகையில இருக்கணும்னு வர்ற குடியரசுதினத்து அன்னைக்கு அந்த விஷயங்களை கொஞ்சம் பப்ளிசிட்டி பண்ணனும்னு முடிவுபண்ணியிருக்கோம்.

வெற்றி, இனி நீ இந்த மாதிரி குறும்புகளை இன்னும் ஆக்கப்பூர்வமா செய். உன் கிட்ட நாங்க இன்னும் எதிர்பார்க்குறோம்."என்று பேசியதும் பேராசிரியர்களில் சிலரே அவர்கள் கைகள் வலிக்கும் அளவுக்கு கரகோஷம் எழுப்பினார்கள்.
******
அன்று இரவு ஏழு மணி இருக்கும். வாசலில் வந்து நின்ற காரைப்பார்த்ததும் சுந்தர்ராஜனுக்கு எதுவும் புரியவில்லை. சற்று வயதான இரண்டு தம்பதியர் காரிலிருந்து இறங்கினார்கள்.

அவர்கள் கைகளில் பழங்கள் உள்ளிட்ட சில பொருட்கள் அடங்கிய பைகள் இருந்தன.

அவர்களில் ஒருவர்,"சார்...நான் ....................காலேஜ் பிரின்சிபால். வெற்றியைத் தேடிதான் வந்திருக்கோம்.உள்ள வரலாமா?" என்று கேட்டார்.

பத்திரிகை எழுதுவது தொடர்பாக ராமலிங்கமும் அவர் மனைவியும் வந்திருந்தார்கள். சுந்தர்ராஜனின் குடும்பம் மட்டுமின்றி இவர்களுக்கும் திகைப்பு. ஆனால் எதுவும் கெட்ட விஷயம் இல்லை என்பதே அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது.

அத்தியாயம்-6

"ஒரு பிரின்ஸ்பால் எதுக்கு மாணவனோட வீட்டுக்கு பழங்களோட வந்திருக்காருன்னு உங்களுக்கெல்லாம் வியப்பா இருக்கும். அதிகமா யோசிக்க வைக்காம நானே சொல்லிடுறேன். இது என் அண்ணன். ளவன இலாகா அதிகாரியா இருக்கார்.

இவருக்கு அரிய வகை ரத்தம். ரொம்ப பிரச்சனைக்குரியதும் அரிதானதும் கூட. இப்ப ஒரு அறுவை சிகிச்சைக்காக தேவைப்பட்டப்ப போதுமான அளவு ரத்தம் கிடைக்கலை. வெற்றியோட நண்பர் ஒருத்தர் கிட்ட இருந்து அவசரத்துக்கு கிடைச்ச ரத்தம்தான் இப்ப என் அண்ணன் உங்க முன்னால நிற்க காரணம். 

அதுதான் வெற்றியையும் ரத்தம் கொடுத்த அந்தப் பையனையும் பார்த்துட்டுப் போகலாம்னு கிளம்பி வந்துட்டோம்." என்று கல்லூரி முதல்வர் சொல்லி முடித்தபோதுதான் வெற்றி வெளியில் இருந்து வீட்டுக்குள் நுழைந்தான்.

"அடடே...வாங்க சார்...முதல்ல எல்லாரும் உட்காருங்க...எங்க அப்பா உட்கார சொல்லலையேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. என் அளவுக்கு விபரம் பத்தாது."என்று வெற்றி சொன்னதும்தான் சுந்தர்ராஜனுக்கு தன் தவறு புரிந்தது.

"சாரி சார்...இவன் பேசுறதைப் பத்தி உங்களுக்கும் தெரிஞ்சுருக்கும். எதையும் சீரியசா எடுத்துக்காதீங்க...முதல்ல உட்காருங்க..."என்று சுந்தர்ராஜன் வழிந்தார்.
"கல்லூரியில சேர்ந்த புதுசுல வெற்றி மேல நிறைய புகார் வரும்.ஆனா இவன் மேல எந்த தப்பும் இருக்காது. ஆனா தனக்கு மேல அதிகாரத்தோட இருக்குறவங்க செய்யுற தப்பை சுட்டிக்காண்பிக்கிறதே நம்ம நாட்டுல பெரிய குற்றமாச்சே.

ஜாலியான பையனா இருந்தாலும் இவனோட படிக்கிற மாணவர்கள் மட்டுமில்லாம வெளியில உள்ள பசங்க நிறைய பேரும் சேர்ந்து நிறைய பேருக்கு ரத்த தானம் செய்துகிட்டு இருந்துருக்காங்க.

பல பெரிய ஆளுங்க தலைவர்களோட பிறந்த நாள் அன்னைக்கு ரத்த தான முகாம் நடத்துறதோட சரி. இன்னும் ரத்தம் தானம் கிடைக்காம பலர் பாதிக்கப்பட்டுகிட்டுதான் இருக்காங்க.

ஆனா வெற்றியும் அவன் நண்பர்களும் எந்த விளம்பரமும் இல்லாம இந்த உதவியை செய்துகிட்டு வர்றது நான் மட்டுமில்ல நீங்களும் பெருமைப்பட வேண்டிய விஷயம்." என்று பிரின்ஸ்பால் சொல்லவும் சுந்தர்ராஜனின் குடும்பத்தார் சந்தோஷத்தில் எதுவும் சொல்லத் தோன்றாமல் திகைத்தார்கள்.

"நல்லா சொல்லுங்க சார். அப்பவாச்சும் அப்பாவுக்கு நல்ல சிந்தனை வருதான்னு பார்ப்போம்.அண்ணே...உன்னை மாதிரி நல்லா படிச்சு நல்ல வேலை பார்க்குறவங்களால நாட்டுக்கும் வீட்டுக்கும் பொருளாதார நன்மை இருக்கு. ஒத்துக்குறோம். இது மறைமுக பலன்தான். ஆனா என்ன மாதிரி ஆளுங்களாலதான் நேரடி நன்மை இந்த நாட்டுக்கு அதிகமா கிடைக்குதுன்னு புரிஞ்சுக்குங்க." என்று வெற்றி சற்று நேரம் சுயபுராணம் பாடினான்.

"அதெல்லாம் சரிதான் வெற்றி. ஆனா நீ அந்த நாலு பேப்பர் அரியர் வெச்சிருக்கியே... அதாம்பா...ஆங்கிலத்தாள்... அதையும் இப்ப எழுதப்போற கடைசி செமஸ்டர்லயாவது பாஸ் பண்ணிடேன்."என்று பிரின்ஸ்பால் சிரித்தார்.

"சார்...டவர் இல்லை...நீங்க பேசுறது சரியா கேட்கலை...அம்மா...நான் தான் டீ காபி குடிக்கிறது இல்லைன்னு முடிவெடுத்துருக்கேன். என்னைப் பார்க்க வர்றவங்களும் அப்படியா இருப்பாங்க...

நான் இவங்களுக்கு தண்ணி கொண்டு வந்து தர்றேன். நீங்க காபி, ஹார்லிக்ஸ் எதாவது கொண்டு வந்து கொடுங்க..." என்று சமையலறைக்குள் நுழைந்தான் வெற்றி.

"உயிர்பிழைச்ச பல பேரோட வாழ்த்து வெற்றிக்கு இருக்கு சார். அவன் நல்லா வருவான்.கவலைப்படாதீங்க. நம்ம மாவட்ட எஸ்.பியும் இந்த காலேஜ் ஸ்டூடண்ட்தான்ன்னு உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். வர்ற குடியரசு தினத்தன்னைக்கு வெற்றியையும் அவன் நண்பர்களையும் கவுரவிக்கப் போறாங்க.

இது மேலும் பல இளைஞர்களுக்கு ஊக்கம் தர்றதா அமையும்.
அடுத்து வெற்றியோட நண்பனையும் போய் பார்க்கணும். நாங்க புறப்படுறோம் சார்..."என்று பிரின்ஸ்பால் சொல்லவும்,

சுந்தர்ராஜன் "எங்க சார் கிளம்பிட்டீங்க... அப்புறம் என் பையன் சொன்னது மாதிரி எனக்கு விவரம் பத்தாதுன்னுங்குறது உண்மையாயிடும்."என்று சிரித்தார்.

உபசரிப்புக்குப் பின் அவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள்.

"வெட்டி...ச்ச...வெற்றி...இப்ப உண்மையிலயே எனக்கு ரொம்பவும் பெருமையா இருக்குப்பா. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். என்ன வேணுமோ கேளு..."என்று சுந்தர்ராஜன் உற்சாகமானார்.

"நாகூர்–கொல்லம் ரயில்தான் இப்ப சென்னைக்கு போறது இல்லையே... அதை வாங்கி கொடுங்க... நான் தூசி தட்டி நம்ம வீட்டு கொல்லைப்பக்கம் நிறுத்திக்குறேன்." என்று வெற்றி வழக்கம்போல் கலாய்க்க, சுந்தர்ராஜன் முகத்தில் வழிசல்.

"சும்மா அரசியல்வாதி மாதிரி வாக்கு கொடுக்க வேண்டியது. நீங்க ஒரு பொருட்டாவே கவனிக்காம இருக்கீங்கிளே... நம்ம தாத்தாவுக்கு எண்பது வயசு பூர்த்தியாகப்போகுது. திருக்கடையூர்ல சதாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்வோம். இதை நீங்க செய்யுறீங்கிளா...இல்ல... நான்..."என்று வெற்றி பாதியிலேயே நிறுத்தினான்.

"நான் நடத்தாட்டி நீ என்னடா செய்வ..."என்று சுந்தர்ராஜனும் சூடானார்.

"உங்க பணத்தை எடுத்து நானே நடத்துவேன்."என்று வெற்றி சொன்னதும் சுந்தர்ராஜனே சிரித்துவிட்டார்.

******
நெருங்கிய உறவினர்களையும் காயத்ரியின் குடும்பத்தையும்தான் திருக்கடையூருக்கு அழைத்திருந்தார்கள். கோயிலில் சாஸ்திரிகள், உணவு உபசரிப்பு, தங்குமிடம், ஒளிப்படம், சலனப்படம் என்று எல்லா ஏற்பாட்டையும் வெற்றிதான் நண்பர்களின் உதவியோடு செய்திருந்தான்.

ஹோமம் முடிந்து புனித நீர் அபிஷேகத்தின் போது,வெற்றியின் தாத்தா  பாட்டி குளிரில் லேசாக நடுங்கியதை வெற்றி பார்த்தான்.

"டேய்...தாத்தாவுக்கு ரெண்டுபானை வென்னீர் பார்சல்..."என்று வெற்றி சவுண்ட் விடவும் தாத்தா உஷாரானார்.

"வெற்றி...அதெல்லாம் வேணாம்.நீ எதையாவது மனசுல வெச்சுகிட்டு உடம்பை கொதிக்க வெச்சுடுவ...எனக்கு குளிரவே இல்லை."என்று நிமிர்ந்து உட்கார்ந்தார்.

"தெய்வமே... என்னைய நம்புறவங்க யாருமே இல்லையா..."என்ற வெற்றி சுற்றிலும் பார்த்தான். அனைவரும் தாத்தா பாட்டிக்கு அபிஷேகம் செய்வதில்தான் மும்முரமாக இருந்தார்களே தவிர, இவனை யாரும் கவனிக்கவில்லை.

"அது சரி...இதுவே சினிமாவா இருந்தா, 'நான் இருக்கேன் அப்படின்னு ஹீரோயின் வந்துருக்கும். 'இங்க சந்தியா கொஞ்சம் கூட கவனிக்காம நிக்கிறா... எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்." என்று தனக்குத்தானே பேசிக்கொண்டான்.

"நாங்க என்ன புது ஜோடியா...ஏண்டா  தாலிகட்டுறதுல இருந்து மாலை மாத்துற வரை எல்லாத்தையும் படம் புடிக்கிறீங்க..."என்று தாத்தா அலுத்துக்கொண்டார்.

"தாத்தா...இவ்வளவு காலம் பாட்டியோட குடும்பம் நடத்தியிருக்க. இப்ப மூணாவது தடவை உனக்கு பாட்டியோடவே கல்யாணம். இந்த கொடுமையை வீடியோ, போட்டோவுல நீ மறுபடி பார்க்க வேணாம்?"என்று வெற்றி சொல்லவும் சுற்றி இருந்தவர்கள் சிரித்தார்கள்.

"நாங்க பாட்டுக்கு சிவனேன்னுதானே கிடந்தோம்.இப்படி எங்களை கூட்டிட்டு வந்து காலை வாரிவிடுறியே?"என்று வெற்றியை தாத்தா பரிதாபமாக பார்த்தார்.

"தாத்தா...கல்யாணம் நடக்கும்போது இதெல்லாம் சகஜம். இப்ப நாங்கதான் பெரியவங்க...அதனால நீங்க எதிர்த்துப்பேசக்கூடாது.ஓ.கே..."என்று வெற்றி சிரிக்காமல் சொன்னாலும் மற்றவர்களால் சும்மா இருக்க முடியவில்லை.

இந்த குடும்பத்தின் குதூகலத்தைப் பார்த்த பிற குடும்பங்களும் தங்கள் வீட்டு மணிவிழா தம்பதியரை அதிகமாகவே சீண்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

தினமும் குறைந்தது இருபதுக்கும் குறையாத சுபகாரியங்கள் நிகழும் இந்த தலத்தில் எப்போதும் குதூகலத்திற்குக் குறைவிருக்காது.

வீடியோ எடுக்கும் நண்பனுடன் உதவிக்கு வந்த வெற்றிக்கு இந்த சூழ்நிலை மிகவும் பிடித்துப்போனதும்தான் தாத்தா பாட்டிக்கு இந்த விசேஷத்தை நடத்திப்பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
******
வெற்றி தாத்தாவின் எண்பது வயது பூர்த்தி திருக்கடையூரில் கொண்டாடிய கையோடு அன்புச்செல்வன்-காயத்ரி திருமண ஏற்பாடுகள் தொடங்கின.

திருமணத்துக்கு முதல் நாள். மாப்பிள்ளையை அழைக்க பெண்வீட்டார் வந்தார்கள். அன்புச்செல்வனுக்கு தங்கை முறை வரும் சில பெண்கள் மாப்பிள்ளைக்கு கூல்டிரிங்கஸ் வாங்கிக்கொடுத்தால்தான் வருவார்." என்று சொன்னார்கள்.

அந்த பெண்களும் அதை அப்படியே வந்திருந்தவர்களிடம் சொல்ல, அவர்களில் ஒருவன் உள்ளே நுழைந்து, "அட வெண்ணை...உனக்கு அறிவிருக்கா..."என்று திட்டவும் அங்கிருந்த அனைவர் முகத்திலும் அதிர்ச்சி.

                                                                        ...தொடரும்

திருவாரூரில் திருவிழா  1 முதல் 3 அத்தியாயங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்

No comments:

Post a Comment