Sunday, February 23, 2020

பாரசைட் – மின்சாரகண்ணா


ஜீன்ஸ், பூவெல்லாம் கேட்டுப்பார், கனவே கலையாதே, ஜோடி, மின்சார கண்ணா ஆகிய படங்களும் ஒரே ஒன்லைனில் அமைந்தவையா?
2020 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது வென்ற தென்கொரிய மொழி திரைப்படம் பாரசைட். வறுமையில் வாடும் ஒரு குடும்பத்தினர் வசதியானவர் வீட்டில் வேலைக்காரர், நண்பர் என்ற வகையில் ஒட்டிக் கொண்டு வசதியான வாழ்க்கையை வாழும் நபர்கள் பற்றிய கதை என்று சொன்னார்கள்.
1999ஆம் ஆண்டு வெளிவந்த மின்சார கண்ணா என்ற விஜய் நடித்த திரைப்படத்தின் கதையையும் பாரசைட் கதையும் ஒன்றுதான் என்று தற்போது இணையத்தில் விவாதம் எழுந்துள்ளது.
ஜீன்ஸ் (24 ஏப்ரல் 1998)
பிரசாந்த்–ஐஸ்வர்யாராய் நடிப்பில் வெளியான படம்.
இயக்கம் - ஷங்கர்
பிரசாந்த்தின் தந்தை நாசரும் இன்னொரு நாசரும் இரட்டைப் பிறவிகள். அவர்கள் இருவருக்கும் வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மனைவியானதால் சண்டையிட்டு குடும்பத்தை பிரித்து விட்டார்கள். அதனால் தன்னுடைய இரட்டைப் பிள்ளைகளான பிரசாந்த்துக்கு அதே போல் இரட்டையர்களாக பிறந்த பெண்களைத்தான் மணமுடிக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்.
ஆனால் ஒற்றை பெண்ணாக பிறந்த ஐஸ்வர்யாராய் தனது பாட்டி லெட்சுமியின் ஆலோசனை ப்படி இரட்டைப் பிறவிகள் என்பது போல் நாடகமாடுவது கதை. இதில் என்ன வித்தியாசம் என்றால் காதலி ஐஸ்வர்யாராய் வீட்டுக்கே காதலன் பிரசாந்த் தன்னுடைய இரட்டைப்பிறவி தம்பி பிரசாந்த், தந்தை நாசர் ஆகியோருடன் வந்து விடுவார்.
***
கனவே கலையாதே (6 ஆகஸ்ட் 1999)
முரளி - சிம்ரன் நடிப்பில் வெளியான படம்.
இயக்கம் - வ.கௌதமன்
உறவினர் யாரும் இல்லாத முரளி தன் காதலியான பஞ்சாபி பெண் சிம்ரன் வீட்டு மாடியில் வசித்துக் கொண்டு சிம்ரன் வீட்டு பெரியவர்களின் மனதில் இடம் பிடிக்க முயற்சிப்பார். ஆனால் அந்த பஞ்சாபி சிம்ரன் மற்றும் குடும்பத்தார் வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்து விட்டதால் காதல் கைகூடாது. பிறகு சென்னையில் பஞ்சாபி சிம்ரனைப்போலவே இன்னொரு சிம்ரன் என்று கதை வேறு டிராக்கில் போகும்.
***
பூவெல்லாம் கேட்டுப்பார் (6 ஆகஸ்ட் 1999)
சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான படம்.
இயக்கம் - வசந்த்
இந்த படத்தில் சூர்யா ஜோதிகா இருவரும் காதலிக்கத் தொடங்கிய போதுதான், இருவரது பெற்றோரும் எதிரிகள் என்ற விசயம் தெரியவரும். அதனால் ஜோதிகாவின் வீட்டில் சூர்யா டிரைவராகவும், சூர்யா வீட்டில் ஜோதிகா செவிலியராகவும் வேலைக்கு சேர்ந்து ஒருவர் மற்றொருவர் குடும்பத்தினர் மனதில் இடம்பிடித்து காதலில் ஜெயிக்க முயற்சிக்கும் கதை.
***
ஜோடி (9 செப்டம்பர் 1999)
பிரசாந்த்  சிம்ரன் நடிப்பில் வெளியான படம்.
இயக்கம் - பிரவீன்காந்த்
பிரசாந்த்தின் தந்தை நாசர் காதல் என்றாலே கெட்ட வார்த்தை என்று நினைக்கும் நபர். சிம்ரனின் தந்தை சங்கீத கச்சேரியில் பாடிய ஒருவரை கடுமையாக விமர்சனம் செய்யப்போவதாக சொல்லி விட்டு வந்ததுமே அந்த பாடகர் தற்கொலை செய்து கொள்ளவும் குற்ற உணர்ச்சியில் மவுனமாகி விட்டவர்.
இந்த படத்திலும் பிரசாந்த் வீட்டில் யாரோ ஒருவர் போல் சென்று சிம்ரன் பழகி அவர்கள் மனதில் இடம் பிடிப்பதும், சிம்ரன் வீட்டுக்கு பிரசாந்த் சென்று அவர்கள் வீட்டினரின் அன்பைப் பெற்று திருமணத்திற்கு சம்மதம் வாங்கி காதலில் ஜெயிப்பதுமான கதை.
***
மின்சார கண்ணா (9 செப்டம்பர் 1999)
விஜய்  மோனிக்கா நடிப்பில் வெளியான படம்.
இயக்கம் - கே.எஸ்.ரவிகுமார்
பல்வேறு கசப்பான சம்பவங்கள் காரணமாக காதலை மட்டுமல்ல, ஆண்களையுமே வெறுக்கிறார் குஷ்பூ. அவரது இளைய சகோதரி மோனிக்கா.
மோனிக்காவும் விஜயும் காதலித்து குஷ்பூவின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முயற்சிக்கிறார்கள். அதனால் கோடீஸ்வரர் விஜய் குடும்பத்தினர் அனைவருமே குஷ்பூவின் வீட்டில் வேலைக்காரர்களாக சேர்ந்துவிடுவார்கள்.
விஜய், அவரது தம்பி, அண்ணன், அப்பா என்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் டிரைவர், வாட்ச்மேன், எடுபிடி சிறுவன், வேலைக்காரி என்று குஷ்பூ வீட்டில் விஜயின் காதலுக்கா சேர்ந்து நாடகமாடும் இந்த ஒன்லைனைத்தான் தற்போது ஆஸ்கர் வென்றுள்ள தென்கொரியப் படமான பாரசைட் படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.
ஜீன்ஸ், பூவெல்லாம் கேட்டுப்பார், கனவே கலையாதே, ஜோடி, மின்சார கண்ணா ஆகிய படங்கள் வெளிவந்த காலகட்டத்திலும் காதலுக்கு சம்மதம் பெற காதலனோ, காதலியோ மூன்றாம் நபர் போல் உள் நுழைந்து பழகுவது என்ற ஒன்லைன் இந்த ஐந்து படங்களிலும் ஒன்றாக இருக்கிறதே என்ற விமர்சனம் எழுந்தது.
இசைக்கு ஏழு ஸ்வரங்கள்தான். அதற்காக ஏழு ஸ்வரங்களையும் காப்பி அடித்து விட்டார்கள் என்று சொல்ல முடியாது. அதேபோல் ஒரே மாதிரியான கற்பனை நிறைய பேர் மனதில் தோன்றுவது இயற்கைதானே என்றார்கள்.
இப்போதும் அப்படித்தான் என்று நினைக்கலாமோ?

No comments:

Post a Comment