Thursday, February 13, 2020

உலக வானொலி தினம்

2012ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 13ஆம் தேதி உலக வானொலி தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று இன்று தினத்தந்தி மற்றும் தினமணி நாளிதழ்களில் கட்டுரைகள் படித்தேன்.

இந்த ஆண்டு வானொலி தினம், உரையாடல், சகிப்புத்தன்மை மற்றும் அமைதி எனும் கருத்தாக்கத்துடன் கொண்டாடப்படுகிறது.

வானொலியுடனான என்னுடைய அனுபவங்களில் சில நினைவுக்கு வந்தன.

1978 அல்லது 1979ஆம் ஆண்டு வாக்கில் Sharp நிறுவனத்தின் ரேடியோ கம் டேப் ரெக்கார்டர் எங்கள் வீட்டில் வாங்கப்பட்டிருந்தது. (நான் பிறப்பதற்கு முன்பாகவே)

எங்கள் வீட்டில் இருந்த 
டேப்ரெக்கார்டர் இந்த மாடல்தான்.
அந்த காலகட்டங்களில் நிறைய வீடுகளில் பேட்டரி அல்லது எலிமினேட்டர் எனப்படும் கனமான டிரான்ஸ்பார்மருடன் இணைந்த ரேடியோக்கள்தான் அதிகமாக இருக்கும்.

கேசட்டுகள் போடக்கூடிய வகையில் ரேடியோ கம்  டேப் ரெக்கார்டர் என்றாலும் ஒரு பக்கம் மட்டும் ஸ்பீக்கர் இருக்கக்கூடிய மாடல்கள்தான் ஒரு சில வீடுகளில் வாங்கி வைத்திருப்பார்கள்.

எங்கள் வீட்டில் இருந்த ஷார்ப் கம்பெனியின் டேப் ரெக்கார்டரில் இரண்டு ஸ்பீக்கர்கள், பாடல் ஓடும் எண்ணிக்கையை காட்டக்கூடிய மீட்டர், இரவிலும் ரேடியோ ஸ்டேஷன் அலைவரிசையை பார்த்து வைக்க ஏதுவாக அந்த ஸ்கேல் இருக்கும் பகுதியில் மஞ்சள் வெளிச்சம் தரக்கூடிய பல்ப் எரிவதற்கு சிறிய ஸ்விட்ச். 
அதை அழுத்தியிருக்கும் நேரம் வரை லைட் எரியும். அதிலிருந்து கையை எடுத்து விட்டால் அணைந்து விடும். இப்போது டூவீலர்களில் Passing லைட் சுவிட்ச் கொடுத்திருக்கிறார்களே அப்படி.

1990ஆம் ஆண்டு வரை திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம் விவித பாரதியின் வர்த்தக ஒலிபரப்புதான் அதிகமாக கேட்டதாக நினைவு. பிறகு இலங்கை வானொலி நிலையம். இரண்டும் மாற்றி மாற்றி கேட்டிருக்கிறோம்.

இரவில் 8.30 முதல் 8.45 வரை மூன்று நாட்கள் மூன்று பகுதியாக நாடகம் ஒலிபரப்பாகும். அதன் பிறகு விளம்பரதாரர் நிகழ்ச்சியில் அப்போதைய புதிய திரைப்படங்களின் பாடல்கள் பத்து முதல் 15 நொடிகள் ஒலிக்கும். அதை கேட்பதற்கு அவ்வளவு ஆர்வமாக இருப்போம்.

கேட்டு முடிந்ததும் ஒன்பதே காலுக்கு தூங்கப் போய்விடுவோம். எப்போதாவது அரிதாக பெரும்பாலும் வௌ்ளிக்கிழமை, சனிக்கிழமை இரவு என்றால் அடுத்த நாள் விடுமுறை என்ற சாவகாச மன எண்ணம் காரணமாக இரவு பத்து மணி வரை ரேடியோ கேட்டு விட்டு தூங்கியதாக நினைவு.

ஏனென்றால் அப்போது நாங்கள் குடியிருந்த தெருவில் அதிகபட்சம் ஏழெட்டு வீடுகளில் மட்டும்தான் தொலைக்காட்சி இருந்தது. அவர்கள் வீட்டில் வௌ்ளிக்கிழமை ஒலியும் ஒலியும், ஞாயிறு அன்று படம் பார்க்க மட்டும்தான் மற்றவீட்டினருக்கு அனுமதி என்பதால் ஒரே பொழுது போக்கு வானொலி மட்டுமே.

எங்கள் ஊரைப் பொறுத்தவரை படம் ரிலீசாகும்போதே வருவது கடினம். பெரும்பாலும் ரிலீசான படங்கள் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழித்துதான் வரும். அதற்குள் ரேடியோ விளம்பரங்கள் நிறுத்தப்பட்டிருக்கும்.

ரேடியோ விளம்பரங்களில் கேட்ட பாடல்களை தியேட்டரில் படத்தில் காணும்போதும், அபூர்வமாக எங்கள் ஊரில் படம் ரிலீசாகி விட்டால், ஒரு வாரத்திற்குள் பார்க்க வாய்ப்பு கிடைக்கும். (எந்தப் படம் என்றாலும் டிக்கட் விலைக்கே கிடைக்கும். பிளாக், கூடுதல் கட்டணம் எல்லாம் பின்னால் வந்தவை.) அப்போது தியேட்டரில் பார்த்து ரசித்த பாடல்வரிகளை ரேடியோவில் கேட்கவும் ஆர்வமாக இருப்போம்.

தினமும் காலை 10 மணிக்கு நிறுத்தப்படும் ஒலிபரப்பு அடுத்ததாக 12 மணிக்குதான் ஆரம்பமாகும். அதற்காக 11.55க்கே வானொலியை போட்டு விட்டு நீண்டு ஒலிக்கும் பீப் சத்தத்தை கேட்டுக் கொண்டு அமர்ந்திருப்போம்.

அதேபோல் ஞாயிறு மதியம் 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஒலிச்சித்திரம் என்ற தலைப்பில் ஏதாவது திரைப்படத்தின் வசனச் சுருக்கத்தை ஒலிபரப்புவார்கள். அதைக் கேட்கவும் தயாராக இருப்போம். ஏனென்றால் அந்த நேரத்தில் எங்கள் வீட்டில் அம்மன் கோவில் கிழக்காலே திரைப்படத்தின் கதைச்சுருக்க கேசட் மட்டும்தான் இருந்தது. 

நாடா அடிக்கடி சிக்கிக் கொள்ளும் அளவுக்கு அந்த கேசட்டை போட்டுக் கேட்ட பிறகு வேறு வழி? ஒவ்வொரு ஞாயிறும் ஒலிச்சித்திரத்திற்காக காத்திருந்தோம்.

1993ஆம் ஆண்டு தினமும் மாலையில் சன் டிவி தனது செயற்கைக்கோள் தொலைக்காட்சி ஔிபரப்பை தொடங்கிய பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக கணிசமான மக்கள் வானொலியை தவிர்த்தார்கள்.

ஆனாலும் இப்போதும் விவசாயிகள், மீனவர்கள், கடைத்தெரு வியாபாரிகள் என்று கணிசமான மக்கள் வானொலியை தொடர்ந்து கேட்டு வருகிறார்கள் என்பதற்கு பல்வேறு பண்பலை வானொலிகள் வெற்றிகரமாக இயங்கி வருவதே சாட்சி.

2006–2007ல் சென்னையில் பணியாற்றியபோது சூரியன், பிக், ரேடியோ மிர்ச்சி, ஆஹா, ஹலோ ஆகிய தனியார் பண்பலைகளும் ரெயின்போ அரசு பண்பலை என்று இயங்கி வந்தன.

பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அல்லது விளம்பரம் மட்டுமே வருகிறது என்று சிலர் அலுத்துக் கொண்டாலும், ஆண்ட்ராய்டு மொபைல் பரவலாவதற்கு முன்பு பெருநகரவாசிகளை ரேடியோ கேட்கும் பழக்கத்தை அதிகரித்தவை இந்த பண்பலை வானொலிகள் என்பதையும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.

தனியார் பண்பலைகள் 24 மணி நேரமும் ஒலிபரப்பியதால் என்னுடன் வீட்டில் தங்கியிருந்த நண்பன் இரவில் ரேடியோவை கேட்டுக் கொண்டே தூங்க வேண்டும் என்று சொல்லுவான்.

விடிய விடிய ஓடினால் ரேடியோ டிரான்ஸ்பார்மர் சூடாகி வெடித்துவிடப்போகிறது என்று நான் பயந்திருக்கிறேன். (எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை எண்ணம்தான்)

திருச்சியில் நகரப்பேருந்துகளில் ஒலிநாடா கேசட்டுகள் வழக்கொழிந்து மெமரிகார்டு, பென் டிரைவ் மூலம் பாடல்கள் போடத்தொடங்கிய நேரத்தில்  இந்த தனியார் பண்பலைகள் வருகையினால் பெரும்பாலான பேருந்துகளில் சூரியன் அல்லது ரேடியோ மிர்ச்சி என்று ஏதாவது ஒன்றுதான் அதிகமாக ஒலிக்கத் தொடங்கியது.

நான் இருக்கும் திருவாரூர் பகுதியில் காரைக்கால் பண்பலை வெகு பிரபலம். பரமக்குடியில் இருக்கும் எனது உறவினர் வீட்டில் கடந்த பல ஆண்டுகளாக இரண்டு குழந்தைகள் படிப்பிற்காக தொலைக்காட்சியே இல்லாமல் இருக்கிறார்கள். இரண்டு தமிழ் நாளிதழ்கள், ஒரு ஆங்கில நாளிதழ் மற்றும்  கொடை பண்பலை ஆகியவைதான் அவர்கள் வீட்டில் பொழுதுபோக்கு.

உலகில் இயங்கும் வானொலிகள் பற்றி தெரிந்து கொள்ள சில தளங்கள்...

http://radio.garden/
https://farmradio.org/why-radio/


ரேடியோ கார்டன் : http://radio.garden/
இணையத்தில் வானொலி என்றவுடன், ரேடியோ காரட்ன் தளம் தான் முதலில் நினைவுக்கு வர வேண்டும். அந்த அளவுக்கு அருமையான இணையதளம் இது.
உலகில் உள்ள வானொலி நிலைய நிலையங்களை எல்லாம் அந்த தளத்தின் மூலம் அணுகலாம். இணைய வானொலி, பண்பலை வானொலி உள்ளிட்ட எல்லா வகையான வானொலி நிலையங்கள் மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை இந்தத் தளம் ஒரே இடத்தில் அணுக வழி செய்கிறது. அந்த தளத்தின் இடைமுகம் தான் இன்னும் அற்புதமானது.
அதன் முகப்புப் பக்கத்தில் கிளிக் செய்தால் பூமி உருண்டை தோன்றுகிறது. அந்த பூமி உருண்டையில் பச்சை புள்ளிகளாக தோன்றும் இடங்களை கிளிக் செய்தால், அந்த இடத்தில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலியை கேட்டு ரசிக்கலாம்.
நாம் கிளிக் செய்வதற்கு முன்னரே, நம்முடைய இருப்பிட நகரத்தை அடையாளம் கண்டு, அங்குள்ள வானொலி தானாக கேட்கத்துவங்குகிறது.
இது தவிர அருகாமையில் உள்ள வானொலிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம். புதுவிதமான இசையைக் கேட்க விரும்பினால், உலகின் மற்ற பகுதிகளில் உள்ள பச்சை புள்ளிகளை கிளிக் செய்து அங்குள்ள பாடல் அல்லது இசையை கேட்டு மகிழலாம். வானொலி பிரியர்களுக்கு சரியான வேட்டைக்களம் என்று தான் இந்த தளத்தை சொல்ல வேண்டும்.
***

நான் முயற்சித்து பார்த்தேன். திருவாரூரில் அமுதம் என்ற பண்பலை ஒலிபரப்பாக தொடங்குகிறது. இப்போது (13/02/2020 - மதியம் 3 மணிக்கு) பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசிய உரை ஒலிபரப்பாகிறது.

No comments:

Post a Comment