Sunday, February 23, 2020

பார்றா!...

2007ஆம் ஆண்டு எழுதிய சிறுகதை.

பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அதீத செல்லம் கொடுப்பதுடன், தாங்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர் உட்பட யாரையுமே குழந்தைகளை கண்டிக்கவிடுவதில்லை. இதனால் வளரும் மாணவர்கள், மாணவிகள் குணம் நல்லவிதமாக இல்லை என்ற குற்றச்சாட்டு சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இந்த பின்னணியில் 2007ஆம் ஆண்டே நான் எழுதிய சிறுகதை.
***
தனக்கென தனி இடம் பிடித்துக்கொண்டு இந்தியா முழுவதும் விற்பனையாகும் பிஸ்கட் கம்பெனி பொன்விழா கண்ட பிறகும் திருவாரூரில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

அந்த நிறுவனத்தை உருவாக்கிய முதலாளியின் பேரன் பழனியப்பன்தான் தற்போது நிர்வாக இயக்குநராக இருக்கிறார். அவர்களுக்கு பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனம்தான் பிரதான தொழில் என்றாலும் போக்குவரத்து, திரையரங்கம், திருமணஅரங்கம், மருத்துவமனை, உணவுவிடுதி என்று பல துணைத் தொழில்களையும் லாபகரமாக நடத்தி வந்தார்கள். இந்த ஆண்டு அவர்கள் புதியதாக பள்ளிக்கூடத்தை துவங்கியுள்ளார்கள்.மற்றொரு வியாபாரம்(?!)

பழனியப்பனின் மனைவி சொர்ணாம்பிகாதான் பள்ளி முதல்வர்.
அந்தப்பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்ட முதல் கல்வி ஆண்டிலேயே இருநூற்று பதினான்கு பேர் சேர்ந்த சந்தோ­ஷத்தில் இருந்தார் பள்ளி முதல்வர் சொர்ணாம்பிகா.

ஆனால் பதினைந்தே நாட்களில் இப்படி ஒரு சிக்கல் வரும் என்று அவர் மட்டுமின்றி அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளும் எதிர்பார்க்கவில்லை. சொர்ணாம்பிகா சட்டென்று டெலிபோன் மூலம் கணவரிடம் விவரத்தை தெரிவித்துவிட்டார்.

அவர் பேசி முடித்ததும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியை விஷ்ணுப்ரியா, “சார் என்ன சொன்னாங்க மேடம்?
  ” என்றார்.

“முரளியை அனுப்புறேன்... வி­ஷயத்தை அவரோட பொறுப்புல விட்டுடுங்கன்னு சொல்லிட்டார்.”

“மேடம்... முரளி அக்கவுண்ட்ஸ்ல பெரிய ஆள்தான் ஒத்துக்குறோம். இது பசங்க சம்மந்தப்பட்டது. ரொம்பவும் சென்சிட்டிவான விஷ­யம். இந்த மாதிரி சூழ்நிலையில அதிரடியாத்தான் முடிவெடுக்கணும். அலட்சியமா ஹேண்டில் பண்ணினா இதுவே தொடர்கதையாக வாய்ப்பு இருக்கு. நான் சொல்றதுதான் சரியான வழி. ஸ்ருதியோட பேரண்ட்ஸ் சமாதானமாகுற விதமா நாம ஏதாவது செய்யலைன்னா நம்ம ஸ்கூலுக்குதான் கெட்டபேர். அப்புறம் உங்க இஷ்டம்.” என்றார் சசிகலா என்ற ஆசிரியை.

இந்த விஷ­யத்தைக் கையாளும் பொறுப்பு முரளியிடம் போவதை சசிகலா விரும்பாததை இந்தப் பேச்சிலிருந்தே அனைவரும் தெரிந்து கொண்டனர். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பள்ளி அலுவலகப் பணிகளுக்கு
  இன்னும் ஆட்கள் நியமிக்கப்படவில்லை. பள்ளிக்கூடத்தில் மாணவர் சேர்க்கை நடந்தபோது ரசீது போட்டுக் கொடுக்கும் பணியை சசிகலாவே ஆர்வமாக ஏற்றுக் கொண்டார்.

இப்போது கணக்குகளை முறையாகப் பராமரிக்கும் பணியை பகுதிநேரமாக செய்யும் பொறுப்பு பிஸ்கட்தொழிற்சாலையில் வேலை செய்யும் கணக்காளரான முரளியிடமே பழனியப்பன் ஒப்படைத்ததும்தான் சிக்கலே.

பள்ளிக்கூடத்திற்கு வந்த கணக்காளரைப் பார்த்த சொர்ணாம்பிகாவுக்கு மட்டுமின்றி மற்ற ஆசிரியைகளுக்குமே நம்பிக்கை இல்லை.

காரணம் முரளியின் வயதுதான். திருவாரூர் கல்லூரியில் பி.காம் முடித்ததுமே, தான் கணிணி பயிற்சி பெற்ற நிறுவனத்தின் மூலமாக இந்த பிஸ்கட் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தவன்.

அவனை வரவேற்பறையில் அமரவைத்துவிட்டு சொர்ணாம்பிகா செய்த முதல் காரியம், பழனியப்பனுக்கு போன் செய்து, “என்னங்க இது... ஒரு சின்னப் பையனை நம்பி இவ்வளவு பொறுப்பைக் குடுத்துருக்கீங்க...”என்று கேட்டதுதான்.

“என்னைய என்ன முட்டாளுன்னு நினைச்சியா... சேல்ஸ்டாக்ஸ், இன்கம்டாக்ஸ்ல எல்லாம் சின்ன மிஸ்டேக்கை கண்டுபிடிக்காததால பல வரு­மா இழுத்துகிட்டு இருந்த கணக்கு வழக்கை எல்லாம் வேலைக்கு சேர்ந்த ரெண்டு மாசத்துக்குள்ள சரிசெஞ்சுட்டார்.
 

முரளி இப்ப பிஸ்கட் பாக்டரிக்கு மட்டும் அக்கவுண்டன்ட் கிடையாது. நம்மளோட எல்லா தொழில்லயும் சிக்கலான கணக்குகளை சரிபண்ணி பராமரிக்கிறதுதான் அவரோட முக்கிய வேலை. ஆளைப் பார்த்து எடை போடாம ஒழுங்கா அவருக்கு உதவி பண்ணுங்க.”என்று கோபமாகப் பேசிய பழனியப்பன் சட்டென்று டெலிபோன் தொடர்பைத் துண்டித்தார்.

ரசீதுப் புத்தகங்கள், ஓர் எண்ணுக்கு மூன்று பிரதிகள் வீதம் தயாரிக்கப்பட்டிருந்தன. மாணவருக்கு முதல் பிரதியும், அலுவலகத்தின் கோப்புகளில் வைப்பதற்கு இரண்டாவது பிரதியும், பணம் வசூலிப்பவர்களின் வசதிக்காக அடிக்கட்டாகப் பயன்படும் வகையில் மூன்றாவது பிரதியும் இருந்தன.

ஆனால் சசிகலாவுக்கு இந்த விவரம் புரியமலோ தெரியாமலோ ஒன்றாம் எண் ரசீதின் மூன்று பிரதிகளிலும் மூன்று மாணவர்களுக்கு பில் போட்டுக் கொடுத்துவிட்டார். மாணவரின் பெயர், வகுப்பு, தொகை ஆகிய விவரங்களை தனியே ஒரு வெள்ளைத்தாளில் மிக அழகாக எழுதி வைத்திருந்தார்.

“என்ன மேடம் இப்படி பண்ணிட்டீங்க...”என்று முரளி சாதாரணமாகத்தான் கேட்டான். ஆனால் சசிகலாவுக்கு தவறை ஒப்புக்கொள்ள மனமில்லை.

“நாங்க எல்லாம் டீச்சர்ஸ். பாடம் நடத்துறதுதான் எங்க வேலை. ஆள் இல்லையேன்னு ஏதோ ‍ஹெல்ப் பண்ணினேன். பழக்கமில்லாத வேலையில இப்படி சின்ன சின்ன தப்பு வரத்தான் செய்யும்... ”என்று சமாளித்தார்.

“வரிசையா மூணு ரசீதும் வேறவேற கலர்ல ஆனா ஒரே சீரியல் நம்பரா இருக்கே...கார்பன் வெச்சுதான எழுதணும்னு புரிஞ்சுக்க இதுல பி.ஹெச்.டி பண்ணிட்டு வரணுமாக்கும். என்னமோ போங்க... பிரின்சிபால் மேடமும் நீங்க ரசீது போட்ட அழகைப் பார்க்கவே இல்லை போலிருக்கு...” என்று சொர்ணாம்பிகாவையும் சேர்த்து வாரினான்.

அவனுடைய பேச்சு இப்படி இருந்தாலும் அக்கவுண்ட் விச­யத்தில் பழனியப்பன் சொன்னபடியே மிகவும் திறமைசாலிதான். மூன்று மணிநேரத்திலேயே கணிணியில் எல்லா விவரங்களையும் பதிவேற்றம் செய்துவிட்டான்.

மறுநாள் வந்து  ஒவ்வொரு பிள்ளையின் பெயர், முகவரி, பெற்ற கட்டணம், பெற வேண்டிய கட்டணம் உட்பட எல்லா விவரங்களையும் ஒரே ஒரு தாளைப் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் ஆவணம் தயாரித்து அதை ஒரு ஃபைலிலும் போட்டுக் கொடுத்துவிட்டான்.

அதே போல் இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனைக்கு முரளியால் நல்ல முறையில் தீர்வு காணமுடியும் என்று பழனியப்பன் நம்பி அனுப்புகிறார். ஆனால் சசிகலாவுக்கு முரளிமேல் உள்ள கோபத்தால் இது பிடிக்கவில்லை. நிறைய இடங்களில் இப்படித்தான் உண்மையான திறமையை காழ்ப்புணர்ச்சி கீழே தள்ளிவிட முயற்சி செய்கிறது.

முரளி வந்ததும் சொர்ணாம்பிகா சொன்ன விவரங்களை எந்தக் குறுக்கீடும் இல்லாமல் கேட்டுக் கொண்டான்.

பிறகு அவன் கேட்ட முதல் கேள்வி, “மேடம்...மற்ற டீச்சர்ஸ் எல்லாம் என்ன செய்யலாம்னு சொல்றாங்க?...அந்த விவரம் தெரிஞ்சா எனக்கு உதவியா இருக்கும்...ஒருவேளை, அதுவே சரியான யோசனையா கூட இருக்கலாம்.’’என்பதுதான்.

சொர்ணாம்பிகாவுக்கு தன் கணவர் ஏன் முரளிமேல் இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று புரிந்து விட்டது.

“விஷ்ணுப்ரியா...நீங்க சொல்லுங்க...”என்று முதல்வர் சொன்னார்.

“சார்...சசிகலா மேடம் எல்லாரையும் சந்தேகப்படுறதுக்கு பதிலா குறிப்பிட்ட மூணுபேரை மட்டும் சோதனை போட்டாலே உண்மை தெரிஞ்சுடும்னு சொல்றாங்க. ஆனா எனக்கு இப்ப என்ன பண்றதுன்னே புரியலை. அந்தப் பசங்களை நினைச்சா பரிதாபமா இருக்கு.”

“எந்த மூணு பேர் மேல சந்தேகம்?”

விஷ்ணுப்ரியா விவரம் சொன்னார்.

“மேடம்...உங்களை நினைச்சு நான் பெருமைப்படுறேன். உறுதியான முடிவு எடுக்க முடியலைன்னாலும் பசங்க மனசு வீண்பழியை சுமக்கக் கூடாதுன்னு நினைக்குறீங்க. ஆசிரியர் பணிக்கு முக்கிய தகுதிகள்ல இதுவும் ஒண்ணு.

கல்வியை முழுஅளவுல வியாபாரமாக்குறவங்க பெருகிட்ட இந்தக் காலத்துல ஒவ்வொரு வகுப்புலேயும் மூணு ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்க இந்தப் பள்ளி நிர்வாகம் முடிவு பண்ணியிருக்குறதே பெரிய விஷ­யம்.

நம்ம இஷ்டத்துக்கு ஏழைங்கதான் காசை எடுத்துருப்பாங்கன்னு கண்மூடித்தனமா நம்பி அவங்களை சோதனை போட்டா என்ன ஆகும் தெரியுமா?... அவங்களே இந்த பணக்கார பள்ளிக்கூட சகவாசம் நமக்கு வேண்டாம்னு ஒதுங்கி ஓடிடுவாங்க. இல்ல...வேற ஏதாவது தப்பான முடிவை எடுத்துடுவாங்க.”என்று முரளி சொன்னபோது, சசிகலா குறுக்கிட்டார்.

“அவங்க எடுத்துருந்தாங்கன்னா? ”

“அதைப் பத்தி அப்புறம் யோசிப்போம்.” என்ற முரளி, மற்ற ஆசிரியைகளை அவரவர் வகுப்புக்கு போகச் சொல்லிவிட்டு சொர்ணாம்பிகா, விஷ்ணுப்ரியாவுடன் ஐந்தாம் வகுப்புக்குச் சென்றான்.

விஷ்ணுப்ரியாவிடம் “மேடம்... அந்தப் பொண்ணைக் கூப்பிடுங்க.” என்றதும், ஸ்ருதி வகுப்பாசிரியையின் உத்தரவை எதிர்பார்க்காமலேயே எழுந்து அருகில் வந்தாள். அழுததில் கண்கள் சிவந்திருந்தன. கன்னங்களில் கண்ணீர்க் கோடுகள்.


“ஸ்ருதி அழுததுக்கு என்ன காரணம்னு உங்களுக்கு தெரியுமா? ”என்று அமர்ந்திருந்த மாணவர்கள், மாணவிகளைப் பார்த்து முரளி கேட்டதும், “இருநூறு ரூபா பணம் காணாமப் போயிடுச்சு சார்...”என்று அவர்கள் போட்ட சத்தத்தால் முரளி, விஷ்ணுப்ரியா ஆகியோர் காதுகளைப் பொத்திக்கொண்டனர்.

“நீங்க பதில் சொன்னாலே ச்சும்மா அதிருதுல்ல...”என்று ரஜினிகாந்த் ஸ்டைலில் முரளி பேசிக் காண்பித்ததும் மீண்டும் குழந்தைகளின் உற்சாகக் கூச்சல்.

“சரி...போதும். இத்தோட நிறுத்திக்குவோம்.”

உடனே
  ஒருவன்,  “இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே சார்...என்றான்.

“அது சரி... உங்களுக்கு பாடத்தெரியுமா...”

“ஓஹோ...”மீண்டும் கோரசாக பதில்.

“சரி...நான் அலுவலக அறைக்கு போறேன். நீங்க ஒவ்வொருத்தரா வந்து எனக்கு பாட்டு பாடிக் காட்டுங்க. பாடத் தெரியாதவங்க கதை சொல்லலாம். ஏன்னா எனக்கு கதை ரொம்ப பிடிக்கும். ஓ.கேவா...”

“ஓஓஓஓஓக்கே...”என்று மீண்டும் வகுப்பறை அதிர்ந்தது.

“நல்லா பாட்டு பாடுனவங்கள்ல ஒருத்தருக்கும், பிரமாதமா கதை சொன்னவங்கள்ல ஒருத்தருக்கும் நாளைக்கு காலையில
  பிரேயரின்போது பேனா பரிசா தருவேன். ”என்று முரளி சொன்னதும் பாதி மாணவ மாணவிகள் அப்போதே எழுந்து தயாராகிவிட்டார்கள்.

“முதல்ல எல்லாரும் உட்காருங்க... வருகைப்பதிவேட்டுல உள்ள வரிசைப்படிதான் வரணும். ஆனா ஒரு வி­ஷயம். இருநூறு ரூபாயை எடுத்தது யாருன்னு நான் கண்டுபிடிச்சுட்டேன். ”என்று சொன்ன அதே நொடியில் எல்லாரையும் நோட்டம் விட்டுக்கொண்டான்.

“என்கிட்ட பாட்டுப்பாடிக் காண்பிக்க அறைக்குள்ள வரும்போது அவங்களாவே கொடுத்துட்டா நான் அடிக்க மாட்டேன். வேற யாரும் அடிக்கவும் விட மாட்டேன். அவ்வளவு ஏன், பணத்தை தொலைச்ச ஸ்ருதிக்கே வி­ஷயத்தை தெரியாம பண்ணிடுவேன்.

ஆனா என்னைய ஏமாத்தணும்னு நினைச்சா அவ்வளவுதான். எல்லார் முன்னாடியும் உண்மையை சொல்லிடுவேன். அப்புறம் யாருமே பணத்தை எடுத்தவங்க கூட சேர மாட்டாங்க.”

முரளியின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. அவனுடைய கணிப்பும் சரியாக இருந்தது. மீண்டும் சசிகலாவுக்கு ஒரு சறுக்கல். பணத்தை எடுத்த மாணவனின் தந்தையும் தாயும் அரசுப்பணியில் இருப்பவர்கள். சசிகலாவின் யோசனைப்படி அந்த ஏழை மாணவர்களை சோதனைப் போட்டிருந்தால் அவர்கள் மனதளவில் நொறுங்கியிருப்பார்கள்.

மறுநாள்.

“என்ன முரளிசார்... இன்னைக்கு காலையிலேயே வந்துருக்கீங்க... ”என்றாள் விஷ்ணுப்ரியா.

“பிரேயர்ல கலந்துக்கதான். ”

இதைக்கேட்ட விஷ்ணுப்ரியா தலையை லேசாக சாய்த்து
  “பார்றா...”என்றதை முரளி கண்டுகொள்ளாமல் தொடர்ந்து,

“நேத்து ரெண்டு பசங்களுக்கு பேனா பரிசா தர்றதா சொல்லியிருந்தேனே. அதான். கொடுத்த வாக்கைக் காப்பாத்தணும்ல.” என்றான்.

“மறுபடியும் பார்றா... ”என்ற விஷ்ணுப்ரியாவுக்கு

“ஓயாம எல்லாம் இந்த மூஞ்சியைப் பார்க்க முடியாது. ”என்ற பதிலடி முரளியிடமிருந்து வந்ததும் அவளுடைய முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது.
Courtesy: Vaseegara Tamil Movie, Mr.Vijay & Mr.Vadivelu
and
M/s.Chola Theatre, Thiruvarur.
“முறைக்காதீங்க மேடம். நகைச்சுவை சேனல்ல வடிவேலு விஜய் பேசுற இந்த காட்சியை காலையில பார்த்தேன். அதனால சும்மா...” என்று அவன் சொல்லிவிட்டாலும் விஷ்ணுப்ரியாவின் மனம் சமாதானமாகவில்லை.

‘பள்ளிக்கூடத்துல படிச்ச காலத்துல இருந்து இப்ப வரைக்கும் எவ்வளவு பேர் நான் பார்க்க மாட்டேனான்னு ஏங்கிகிட்டு இருக்காங்க... இவன் ரொம்ப சாதாரணமா இந்த மூஞ்சியை அடிக்கடி பார்க்க முடியாதுன்னு சொல்றானே...இனி நாமளும் இவனைப் பார்க்கவே கூடாது.’ என்று நினைத்துக்கொண்டாள்.

ஆனால் அவள் மனம், கடிவாளம் போட நினைத்தபின்புதான் அதிகமாக தறிகெட்டு ஓடும்...ஒருநாள்கூட அவனைப் பார்க்காமல் இருக்க அனுமதிக்காது என்று அவளுக்கு அப்போது புரியவில்லை.
பிரேயரின்போது முரளி,  “ஸ்ருதியோட பணத்தை எடுத்தவங்க என்கிட்ட கொடுத்துட்டாங்க. ஆனா அது யாருன்னு உங்க யாருக்கும் நான் சொல்ல மாட்டேன். இனிமே யாரும் இப்படி தப்பு பண்ணக்கூடாது.
எப்படியும் எனக்கு தெரிஞ்சுடும். மறுபடியும் இந்த மாதிரி தப்பு செஞ்சா என்னோட  தண்டனை   முறைகள்  கடுமையா     இருக்கும். ”  என்று சொல்லிவிட்டு, கதை மற்றும் பாட்டுக்காக இரண்டு பேருக்கு பேனா பரிசாக வழங்கினான்.
முரளியின் ஆலோசனைப்படி ஒரு விடுமுறை தினத்தன்று ஸ்ருதியின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்திருந்தனர்.

“சார்...உங்க வசதியைக் காண்பிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. அதுக்காக ஐந்தாம் வகுப்பு படிக்கிற குழந்தைக்கு எதுக்கு சார் இருநூறு ரூபா...எங்க பள்ளி வேன் மூலமா உங்க வீட்டுலயே கொண்டுவந்து விட்டுடுறோம். இல்லன்னா நீங்களே வந்துதான் அழைச்சுட்டு போகணும். அப்புறம் பணத்துக்கு தேவை எங்க இருக்கு?...

உங்கமேலயும் எங்க மேலயும் நம்பிக்கை வைங்க சார்... மிதமிஞ்சிய செல்லம், அளவுக்கு அதிகமான பணம் பிள்ளைகளை திசை மாத்திடும் ”என்று முரளி பேசிய அனைத்தும் மிகவும் நியாயமான கருத்துக்கள் என்பதால் அவர்களால் ஆட்சேபம் தெரிவிக்க இயலவில்லை.

அதே நாளில் வேறொரு நேரத்தில் இருநூறு ரூபாயை எடுத்த மாணவனின் பெற்றோரும் வந்திருந்தார்கள். அதுவும் முரளியின் கோரிக்கைதான்.

“சார்...உங்க வீட்டுக்குப் பக்கத்து வீட்டுல இருக்குற பையனால எவ்வளவு பிரச்சனை தெரியுமா? இவனை கேம் சென்டருக்கு அழைச்சுட்டுபோய் வீடியோ கேமுக்கு அடிமையாக்கிட்டான்.”

“சார்...இப்ப அவன்கூட சேரக் கூடாதுன்னு இவனைக் கண்டிச்சுட்டேன். அதுக்கு காசு கூட கொடுக்குறது இல்லை. ”என்றவரின் குரலில் பெருமிதம்.

“சரிதான். முதல்ல அவிழ்த்து விட்டுட்டு இப்ப கட்ட முயற்சிக்கிறீங்க. அதோட விளைவு என்னன்னு தெரியுமா... ஒரு பொண்ணோட இருநூறு ரூபா பணத்தை எடுத்துட்...”என்று முரளி முடிக்கும் முன்பே அவர் தன் மகனை அடிக்கப் பாய்ந்தார்.

“சார்...முழுசா கேளுங்க...”என்ற முரளியின் குரல் அதட்டும் தொனியில் இருந்தது.

மற்றவர்களுக்கு தெரியாமல் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க தான் எடுத்த முயற்சியைப் பற்றிக் கூறியதும், அந்த சிறுவனின் பெற்றோர் கண்களில் மரியாதை தெரிந்தது.

“இப்ப இவனை அடிச்சு உதைக்கிறதால தீர்வு கிடைக்காது.அவன் கவனத்தை நல்ல வழியில திருப்பணும்னா நீங்க தொலைக்காட்சிக்குரிய நேரத்தை குறைச்சுட்டு அவனோட பழகணும்....”என்றதோடு மேலும் சில யோசனைகளை சொன்னான்.

அவர்கள் போனபிறகு சொர்ணாம்பிகா, “மிஸ்டர் முரளி...இந்த சின்ன வயசுலயே இவ்வளவு நிதானமா நடந்துக்க உங்களால எப்படி முடியுது?
  ”என்றார்.

“என்னுடைய ஆசிரியர்தாங்க காரணம். அவரோட தண்டனைகளே வித்தியாசமா இருக்கும். பள்ளிக்கூடத்துல இருந்த பூச்செடிகளை ஒருத்தன் சும்மா உடைச்சுப் போட்டான். அடுத்தநாளே விதவிதமா பத்து பூச்செடிகளை நட்டு
  அந்தப் பையன்தான் தண்ணி ஊற்றி பராமரிக்கணும்னு சொல்லிட்டாரு. அதுல பூக்குற பூக்களைப் பறிச்சு பூஜையும், திங்கள்கிழமையில தேசியக்கொடி ஏற்றும்போது அதுல வெச்சு கட்டுறதும் அந்தப் பையனோட பொறுப்புதான்.  அதுக்கப்புறம் அவன் பூச்செடிகளை உடைச்சதா எனக்கு நினைவில்லை.

அவ்வளவு ஏன்...நான் கூட எட்டாம்வகுப்பு படிச்சப்ப சார் உட்காருற நாற்காலியை உடைச்சுட்டேன். அவர் என்கிட்ட பணமெல்லாம் கேட்கலை. என் அப்பாகிட்ட சொல்லி ஒரு லீவு நாள்ல பள்ளிக்கூடத்துக்கு அழைச்சுட்டு வந்தாரு. எதுக்குன்னு பார்த்தா, பள்ளிக்கூடத்துல உடைஞ்ச பெஞ்ச், நாற்காலிகளை சரிசெய்ய வந்த கார்பெண்டருக்கு என்னைய ஹெல்ப்பரா ஆக்கிட்டாரு. அவருகிட்ட படிக்க குடுத்து வெச்சிருக்கணுங்க...”என்று முரளி பழைய நினைவுகளில் மூழ்கி விட்டான்.

அதன்பிறகு வந்த நாட்களில் முரளியுடன் பேசக்கூடாது என்றுதான் விஷ்ணுப்ரியா நினைப்பாள். ஆனால் அவனைப் பார்க்காமல் ஒருநாள் கூட இருக்கவே முடியாது என்ற அளவுக்கு அவள் மனம் சண்டித்தனம் செய்யத் தொடங்கியிருந்தது.

சில விடுமுறை நாட்களில் மட்டும் போன் செய்து அவனுடன் பேசிய பழக்கம் வளர்ந்து கொண்டே போனது. சட்டென்று ஒரு நாள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் முரளியிடம் கேட்டுவிடுவது என்று தீர்மானித்துக்கொண்டு போன் செய்தாள்.

ஆனால் அவனே முந்திக் கொண்டு, “உன்னைய கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசைப்படுறேன்...நீ என்ன சொல்ற...”என்றான்.

மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போன விஷ்ணுப்ரியாவால்
  சட்டென்று எதுவுமே பேச முடியவில்லை. “இத்தனை நாளா எந்த ஆசைகளும் இல்லாதமாதிரி நடிச்சு என்னைய தவிக்க விட்டுட்டியேடா திருட்டு ராஸ்கல்.”என்று உற்சாகமாகப் பேசினாள்.

அடுத்த நொடியே அவனிடமிருந்து அவளுடைய மகிழ்ச்சியைக் குலைக்கும் விதமான பேச்சு வந்தது.

“ஆனால் ஆசிரியரா இருக்குறவங்களுக்குன்னு சில சுயக் கட்டுப்பாடு வேணுமே. ஏன்னா பெத்தவங்களுக்கு அடுத்தபடியா ஒருத்தரோட கேரக்டரை தீர்மானிக்கிறது ஆசிரியரோட நடவடிக்கைகள்தான். ”என்று முரளி பேசியதும் விஷ்ணுப்ரியாவால் தன் மன எண்ணங்களை அடக்கி வைக்க முடியவில்லை.

“டீச்சரா இருக்குறதால ஜடம் மாதிரிதான் வாழணுமா...எனக்குன்னு ஆசைகள், உணர்ச்சிகள் இருந்தா அதையயல்லாம் குழிதோண்டிப் புதைச்சிடணுமா?
  ” என்று பேசியவளுக்கு அழுகையே வந்துவிட்டது.

“ஹேய்...ப்ரியாக்குட்டி எதையும் புதைச்சுட சொல்லலை. எதுக்கும் இடம், பொருள், ஏவல் உண்டுன்னு சொல்ல வர்றேன். இப்ப நான் பார்க்குற வேலையில நிறைய விஷயம் கத்துக்கிட்டாலும் சம்பளம் இப்ப மட்டுமில்லாம எதிர்காலத்துக்கும் திருப்தியா இருக்காது. அதனால நான் வேற வேலைக்கு முயற்சி செய்யுறேன். அதுல சேர்ந்ததுக்கு அப்புறம்
  ‘என்னடி ப்ரியா’  ன்னு உன்கிட்ட பேசுற உரிமையை எடுத்துக்குறேன்.”

“அப்ப அதுவரைக்கும்?...”

“வணக்கம் மேடம்...இன்னைக்கு ஸ்டூடண்ட் யாராவது பணம் குடுத்துருக்காங்களா?...எத்தனை ரசீது போடணும்?
  ”என்று முரளி பேசியதும் சந்தோஷத்தில் சிரித்த விஷ்ணுப்ரியாவின் கண்களில் மகிழ்ச்சி.
*****************************************************
2007ல் கதையை எழுதுவதற்கு முன் என் மனதில் எழுந்த சிந்தனைகள்....

நான் சிறுவனாக இருக்கும்போது பார்த்த உலகம் வேறு. இப்போது குழந்தைகளுக்கு நாம் காட்டும் உலகம் வேறு. தொழில்நுட்பத்தில், பல வித வசதிகளில் உலகம் மேம்பட்டிருந்தாலும் உறவுகளைப் பேணுவதில் நாம் மிக மிக பின்தங்கிய நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக தோன்றுகிறது. சுருங்கச் சொன்னால் சகிப்புத்தன்மை குறைந்து விட்டதே எல்லா பிரச்சனைக்கும் முழு முதல் காரணம்.

சகிப்புத்தன்மை என்பது பிறர் மீது அன்பு செலுத்துவதால் வருவது. ஆனால் மற்றவர் தான் என்னிடம் அன்பு செலுத்த வேண்டும், என்னை சகித்துக்கொள்ள வேண்டும் என்ற சர்வாதிகார மனோபாவம் நம்மில் பலருக்கு உண்டு.

இதாவது பரவாயில்லை. சகிப்புத்தன்மையுடன் இருக்கும் ஒருவர் நம்மிடம் சிக்கினால் ஆஹா...ஒரு அடிமை சிக்கிட்டாண்டா என்று அவனை மேலும் கசக்கிப் பிழிந்து படுத்தி வைப்பார்கள். ஒரு கட்டத்தில் அவனே வெறுத்துப்போய் மிக மோசமான கோபக்காரனாகி விடுவதும் உண்டு. மூன்று முறை அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும் என்ற வரி இதனால்தான் உருவாகி இருக்குமோ.
******************************************************
பார்றா என்ற தலைப்பு வசீகரா படத்தில் வடிவேலு இந்த வார்த்தைகளை சொன்னதும் விஜய், ‘ஓயாமல்லாம் இந்த மூஞ்சியை பார்க்க முடியாது’ என்று சொல்லுவார். அந்த பாதிப்பில்தான் இதை தலைப்பாக வைக்கலாம் என்று முடிவு செய்தேன்.

2 comments:

 1. நான் இப்போதெல்லாம் அவ்வளவாக கதைகள் படிப்பதில்லை.. ஆனால் மனது என்னவோ இதை படி என்றது..படித்து முடித்ததும்தான் தெரிந்தது ஒரு நல்ல கதை என்று.... இந்த காலத்தில் குற்றங்களை ஆராயமலே தண்டனைகள் கொடுக்கும் வழக்கம் அதிகரித்துவிட்டது அதனால்தான் என்னவோ குற்றங்கள் குறையாமல் பெருகி கொண்டே போகின்றது..

  குட் ரைட்டிங்க் தொடர்ந்து எழுதுங்கள் திருவாரூர் சரவனா....பாராட்டுகள்..

  ReplyDelete
  Replies
  1. கதையில் மிக சுலபமாக அறிவுரை சொல்லிவிட்டேன். ஆனால் ‍இதை நடைமுறைப்படுத்துபவர்களுக்குதான் எவ்வளவு சிரமம் என்று தெரியும். எல்லா பிரச்சனைகளுக்கும் அடிப்படை காரணம் சொல் பொறுக்காத மன நிலைதான். மனித மனதுக்கு மிகவும் சவாலான விசயம் சகிப்புத்தன்மை. இது இருந்து விட்டால் நிறைய பிரச்சனைகள் உருவாக வாய்ப்பே இல்லை. இதை எல்லாம் மனது அசை போட்டபோதுதான் இந்த கதை கற்பனையில் உருவானது.

   Delete