Friday, February 28, 2020

நிதர்சனா - ராஜேஷ்குமார் எழுதிய கதையின் பின் பாதி


நானாக ஒரு கருவை யோசித்து அதை கதையாக்குவதைக் காட்டிலும் ஒருவர் தொடங்கி பாதியில் நிறுத்தியிருக்கும் கதையை கொண்டு செல்வது சற்று எளிதாக இருந்தது.

கல்லூரியில் படிக்கும் போதே ஆண்டு மலர் ஆசிரியர் குழுவில் இருந்ததால் ஒன்றிரண்டு மாணவர்கள், மாணவிகள் எழுதி கொடுத்திருந்த கதையின் மையம், சம்பவங்களை வைத்துக்கொண்டு வெகு வேகமாக தெளிவாக மாற்றி எழுதினேன்.

இப்போது இரண்டு மாதங்களுக்கு முன்பு குமுதத்தில் ராஜேஷ்குமார்
 எழுதி பாதியில் நிறுத்திய சிறுகதையின் மீதியை நான் எழுத முயற்சித்துள்ளேன்.

மா.சரவணன், முகில்தினகரன், சுபக், நா.கோகிலன் ஆகியோர் எழுதிய நான்கு விதமான க்ளைமேக்ஸ் கொண்ட கதையின் பின்பாதி கடந்த இரண்டு வாரங்களாக பிரசுரமாகி விட்டன.

அவற்றைப் படித்ததும் எனக்கு நான் சொல்லிக் கொண்ட அறிவுரை:-

‘தம்பி... இன்னும் நீ நிறைய யோசிக்கணும்.. நீ போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது.’

முதலில் அவர் எழுதிய பாதி கதை இங்கே ––>

*****************************************
‘‘மேடம்!’’

தன்னுடைய பொன்விரல் நகங்களுக்கு வயலட் வண்ண நெய்ல்பாலீஷை தீற்றிக் கொண்டிருந்த நிதர்சனா தலை நிமிர்ந்தாள்.

அவளுடைய பி.ஏ. பூபாலன் கழுத்து டையை தேவையில்லாமல் இல்லாமல் இறுக்கியபடி நின்றிருந்தார்.

‘என்ன?’ என்பது போல் தன் கரிய பெரிய விழிகளால் பார்த்தாள்.

‘‘மேடம்... ஒரு வாரமாவே கதிரேசன்னு ஒருத்தர் போன் பண்ணி உங்களைப் பார்த்துப் பேச அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுக்கிட்டு இருந்தார். நீங்க யார்ன்னு கேட்டா ‘உங்க அண்ணன்’ன்னு சொன்னார். இன்னிக்கு நேர்லயே வந்துட்டார். அவரை...’’

நிதர்சனா நாற்காலியை தள்ளிக் கொண்டு நேராக வெட்டிய ஒரு மின்னல்கோடு மாதிரி எழுந்தாள்.

‘‘கதிர் அண்ணன் வந்திருக்காரா... எங்கே?’’

‘‘ரிசப்ஷன்ல உட்கார வெச்சிருக்கேன்... மேடம்.’’

நிதர்சனா கிட்டத்தட்ட ஓடி ரிசப்ஷன் அறைக்கு வந்தாள். ஒரு செய்தித்தாளைப் புரட்டியபடி சோபாவுக்கு சாய்ந்து உட்கார்ந்திருந்த அந்த இளைஞனின் காலடியில் போய் ஏறக்குறைய விழுந்தாள்.

‘‘கதிரண்ணா... உனக்கு இப்பத்தான் என்னைப் பார்க்கணும்னு தோணிச்சா...’’

அந்த இளைஞன் கதிரேசன் கண்களில் நிரம்பிவிட்ட நீரோடு நிதர்சனாவின் தோள்களைப் பற்றித் தூக்கினான். பக்கம் பக்கமாய் இருவரும் உட்கார்ந்தார்கள்.

‘‘ஸாரி... நிதர்சனா, உன்னைப் பார்க்கணும் பேசணும்னு மனசு துடிச்சாலும், அந்த பழைய கோபமும், வீராப்பும் மெல்ல எட்டிப் பார்த்து ஸ்பீட் பிரேக்கரை போட்டுரும்... ஆனா கடந்த ஒரு வார காலமாய் உன்னைப் பார்த்தேயாகணும்ன்னு மனசுக்குள்ளே ஒரு பெரிய போராட்டம். அதான் பழைய கோபத்தையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு வந்துட்டேன்.’’

‘‘அம்மாவும் அப்பாவும் எப்படியிருக்காங்க?’’

‘‘நல்லாயிருக்காங்க... நீ சினிமா ஆசையால வீட்டை விட்டு சென்னைக்கு வந்த பின்னாடி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அந்த கிராமத்துல இருக்கப் பிடிக்கலை. வீட்டைக் காலி பண்ணிட்டு திருச்சிக்கு போயிட்டோம்.

அங்கே ஒரு ரெண்டு வருஷம், அப்புறம் மதுரைக்கு வந்தோம். அங்கே ஒரு மூணு வருஷம். போன வருஷம் ஆகஸ்ட்லதான் எனக்கு சென்னையில வேலை கிடைச்சது. அம்மாவையும் அப்பாவையும் கூட்டிக்கிட்டு சென்னைக்கு வந்துட்டேன்.’’

‘‘சென்னையில எங்கே வீடு...?’’

‘‘அயனம்பாக்கம்.’’

நிதர்சனா கதிரேசனின் கைகளைப் பற்றிக் கொண்டு அழுதாள். ‘‘அண்ணா... சினிமா மேல் இருந்த ஆசையால், ஏதோ ஒரு வேகத்துல வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன். அது தப்புதான்... கடந்த ஆறு வருஷ காலமாய் நீங்க எங்கே இருக்கீங்கன்னு தேடித் தேடி களைச்சுப் போயிட்டேன். இன்னிக்கே நீயே தேடி வந்துட்டே... அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இன்னும் என் மேல கோபம் இருக்கா?’’

கதிரேசன் கண்ணீரோடு சிரித்தான்.

‘‘கோபம் இல்லாம இருக்குமா...? ஒரு வருஷம் வரைக்கும் அம்மாவோட கோபம் இருந்தது... ரெண்டு வருஷம் வரைக்கும் அப்பாவோட கோபம் இருந்தது...

எனக்கு மூணு வருஷம் வரைக்கும் இருந்தது. அப்புறம் எல்லாமே நீர்த்துக் காணாமே போயிடுச்சு... போன வருஷம் ஒரு நாள் ராத்திரி உன்னை நேர்ல பார்த்துப் பேச ஆசைப்பட்டு அழுதுகிட்டு இருந்தாங்க... எனக்கும் மனசு கேட்கலை. அப்பாவுக்கு நடுவுல சின்னதாய் ஒரு ஹார்ட் ப்ராப்ளம் வந்து சரியாச்சு... அம்மா ரொம்பவும் பயந்துட்டாங்க. அவங்க ரெண்டு பேரும் உன்னை நேர்ல பார்க்க ஆசைப்படறாங்க... ஆனா என்கிட்ட சொல்ல பயப்படறாங்க...’’

நிதர்சனா குறுக்கிட்டாள்.

‘‘அண்ணா...! தப்பு பண்ணினது நான்தான். அவங்க இருக்கிற இடத்துக்கு நான்தான் போகணும்...
வாண்ணா... இப்பவே போலாம்.’’

‘‘திடீர்ன்னு போய் நின்னா நல்லாயிருக்காது நிதர்சனா. அப்பா ஏதாவது பேசினாலும் பேசிடுவார்.’’

‘‘இல்லேண்ணா... எதிர்பாராத ஒரு விநாடியில் போய் அம்மா அப்பாவுக்கு முன்னாடி நின்னா அது அவங்களுக்கு ஒரு பெரிய சந்தோஷமாய் இருக்கும்.’’ என்று சொன்ன நிதர்சனா திரும்பிப் பார்த்து குரல் கொடுத்தாள்.

‘‘பூபாலன்!’’

‘‘மேடம்!’’ கதவோரமாய் நின்றிருந்த பூபாலன் உள்ளே வந்தார். நிதர்சனா கேட்டாள்.

‘‘இன்னிக்கு நாம யார்க்கு கால்ஷீட் கொடுத்து இருக்கோம்...?’’

‘‘சுர்யப்ரகாஷ் புரொடக்ஷனுக்கு.’’

‘‘கான்சல் பண்ணிட்டு வேற டேட் குடுத்துடுங்க.’’

‘‘எஸ்... மேடம்.’’

‘‘வாண்ணா போலாம்!’’

நிதர்சனா எழுந்து கொண்டாள்.

அயனம்பாக்கத்தில் இருந்த அந்த குட்டி பங்களாவுக்கு முன்பாய் போய் காரை நிறுத்தினான் கதிரேசன்.

இருவரும் இறங்கிக் கொண்டார்கள்.

‘‘அண்ணா... வீடு அழகாயிருக்கு!’’

‘‘புதுசா கட்டின வீடு. விலைக்கு வந்தது வாங்கிட்டேன். அக்கம்பக்கத்துல வீடுகள் இல்லை. போகப் போக டெவலப் ஆகும்.’’

காம்பௌண்ட் கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே போனார்கள்.

‘‘நிதர்சனா.’’

‘‘ம்....’’

‘‘அப்பா டென்ஷனாகி ஏதாவது பேசினாலும் பதிலுக்கு நீ ஏதும் பேசிடாதே!’’

‘‘அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேண்ணா.’’

கதிரேசன் வாசற்படி ஏறி காலிங் பெல்லை அழுத்த சில விநாடிகளுக்குப் பின் கதவு திறந்தது.

ஒரு வேலைக்காரப் பெண் நின்றிருந்தாள். கதிரேசன் உள்ளே நுழைந்து கொண்டே கேட்டான்.

‘‘அம்மாவும் அப்பாவும் எங்கே இருக்காங்க?’’

‘‘இப்பத்தான் மாடிக்குப் போனாங்க.’’

‘‘வா... நிதர்சனா!’’

இருவரும் மாடிப்படிகளில் ஏறினார்கள். நிதர்சனாவின் இருதயத் துடிப்பு எகிறியது.

‘‘அ... அ... அண்ணா!’’

‘‘என்ன பயமாய் இருக்கா?’’

‘‘சின்னதாய் ஒரு டென்ஷன்...!’’

‘‘அம்மாவையும், அப்பாவையும் பார்த்துட்டா அந்த டென்ஷன் காணாமே போயிடும்.’’

இருவரும் மாடிப்படிகளை முடித்துக் கொண்டு வராந்தாவில் இருந்த அந்த சாத்தப்பட்ட அறைக்கு முன்பாய் நின்றார்கள்.

கதிரேசன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான். நிதர்சனா பின் தொடர்ந்தாள்.

பெரிய அறை.

அறையில் யாரும் இல்லை. நிதர்சனாவின் கண்கள் அம்மாவையும் அப்பாவையும் தேடியது.

‘‘என்ன நிதர்சனா... அம்மாவும் அப்பாவும் எங்கேன்னு பார்க்கறியா...?’’

‘‘ஆ... ஆமா...’’

‘‘அதோ மேலே பார்.’’

அவன் சுட்டிக்காட்டிய பக்கம் பார்வையை திருப்பினாள் நிதர்சனா.

இடது பக்கச் சுவரின் மேற்பரப்பில் அம்மா, அப்பாவின் போட்டோக்கள் வாடிய மாலைகளோடு தெரிய, அருகிலேயே நிதர்சனாவின் போட்டோ புதிய மாலையோடு தெரிந்தது!


************
என்னுடன் கதை எழுத தயாராகுங்கள்!

23-10-2019 குமுதம் இதழில் ராஜேஷ்குமாருடன் கதை எழுத வாசகர்களை அழைத்த திடீர் சிறுகதைப்போட்டிக்கு என்னுடைய கதையின் தொடர்ச்சி....
இடது பக்கச் சுவரின் மேற்பரப்பில் அம்மா, அப்பாவின் போட்டோக்கள் வாடிய மாலைகளோடு தெரிய, அருகிலேயே நிதர்சனாவின் போட்டோ புதிய மாலையோடு தெரிந்தது! என்று ராஜேஷ்குமார் நிறுத்தியிருந்தார்.

இனி நான் தொடர்கிறேன்...
************


அதைப் பார்த்த நொடியில், போன வாரம் ஒரு பேய்ப்பட ஷுட்டிங்கில் இயக்குநரும் உதவி இயக்குநர்களும் உங்க முகத்துல உயிரே போயிடும்னுங்குற ஃபீல் உங்க டேலண்ட்டுக்கு இன்னும் குறைவாத்தான் இருக்குறதா நினைக்கிறோம்... ஒன்மோர் டேக் போறதுல உங்களுக்கு ஒண்ணும் ஆட்சேபனை இல்லையே என்று கேட்டுக் கேட்டு பதிமூன்று டேக்குகள் எடுத்தார்கள்.

அப்போது அவர்கள் எதிர்பார்த்த உயிர்பயம் இப்போது தன் முகத்தில் தெரிந்திருக்கும் என்பதை நிதர்சனாவால் உணர முடிந்தது.

உதடுகளில் லிப்ஸ்டிக் இருப்பதைக்கூட மறந்து உலர்ந்து கொண்டிருந்த உதடுகளை நாவால் ஈரமாக்கினாள்.

முகப்பூச்சு பவுடர்களைக் கடந்து முகம் மட்டுமின்றி உடலெங்கும் வேர்த்துவிட்டதை நிதர்சனாவின் உடலில் ஆங்காங்கே ஈரமாகி ஒட்டிக்கொண்ட உடைகளே சொல்லிவிட்டன.

திரும்பி அண்ணனைப் பார்த்தாள். அவன் முகத்தில் தெரிந்த கொடூரமான வில்லத்தனத்தை நடிக்க ஆரம்பித்த ஐந்து ஆண்டுகளில் எந்த புதிய பழைய வில்லன் நடிகரின் ஆக்டிங்கிலும் இவள் பார்க்கவில்லை.

‘‘என்னடி... உயிர் போயிடுமோன்னு பயம் வந்துடுச்சா...’’ என்று கதிரேசன் ஒரு வாக்கியத்துடன் கேள்வியை நிறுத்தவும், பழைய கோபத்தில் போட்டோவுக்கு மாலை போட்டு வைத்திருந்தாலும், நேரில் பார்த்த பிறகு கொலை செய்யமாட்டான் என்று மனதின் ஓரமாக லேசாக இருந்த நம்பிக்கை அவள் முகத்தில் இருந்து வியர்வையால் கரைந்து போன பவுடர் பூச்சைப் போலவே காணாமல் போயிருந்தது.

தப்பித்து ஓடலாமா என்று ஒரு கணம் யோசித்தாள்.

3 அடி அகலம் மட்டுமே உள்ள அந்த அறை வாயிலின் மையத்தில் கதிரேசன் நின்று கொண்டிருந்தான்.

அவனை தள்ளிவிட்டு படியில் இறங்கி கீழே ஓடி பிறகு தப்பிப்பது என்பது நடக்கிற காரியமாக நிதர்சனாவுக்கு தெரியவில்லை.

அம்மா அப்பா இப்போதுதான் மாடிக்கு போனார்கள் என்று கொஞ்சமும் சந்தேகப்படாதது போல் வேலைக்காரி சொன்னாளே... அப்போ, எல்லாரும் திட்டமிட்டுதான் தன்னை தீர்த்துக்கட்ட முடிவு செஞ்சிருக்காங்களோ...

கொலை செய்யுற முடிவுல இருந்தா அப்பவே என்னைத் தேடிப்பிடிச்சு கொன்னுருக்க வேண்டியதுதானே... இத்தனை வருசம் கழிச்சு ஏன் இந்த வன்மம்? என்று நிதர்சனா மனதில் பலவித சிந்தனைகள் தாறுமாறாக அலைபாய்ந்தன.

‘‘என்ன... இங்கிருந்து தப்பிக்க முடியுமா?...

இல்லன்னா, சின்ன வயசுல தூக்கி வளர்த்த அண்ணன், நம்ம செய்கை புடிக்காம இத்தனை வருசம் ஒதுங்கி இருந்தவன் அவ்வளவு சீக்கிரம் உன்னை கொன்னுட மாட்டான்னு நப்பாசையில இருக்கியா...?’’ என்று, நிதர்சனா மனதில் இருந்ததை அப்படியே வார்த்தைகளாக தவழ விட்டான் கதிரேசன்.

அப்போதுதான் மீண்டும் அண்ணனை நன்றாக ஏறிட்டு பார்த்தாள். எப்போது அவன் கைக்கு வந்தது என்று தெரியவில்லை.

சுமார் ஒரு அடி நீளம் இருக்கக்கூடிய லேசாக துருப்பிடித்த கத்தியின் அதனுடைய கூர்முனை நிதர்சனாவை சுட்டிக்காட்டியபடி அவன் கைகளுக்குள் இருந்தது.

‘அவ்வளவுதான்... நம் வாழ்வு இந்த அறையிலேயே முடியத்தான் போகிறது... இனி என்னுடைய நிரந்தரமான உறக்கம் இந்த வீட்டின் கொல்லையிலா அல்லது ஏதாவது ஆறு, குளத்தில் நாலைந்து நாள் ஊறிப்போய், பல ரசிகர்கள் கோவில் கட்டும் ஆவேசத்துடன் ரசித்துக் கொண்டிருக்கும் இந்த உடல் முழுவதும் அழுகி உப்பி வெடித்து...’ என்று என்னென்னவோ சிந்தனைகள் நிதர்சனாவின் மனதில்.

ஒரு முடிவுக்கு வந்தவளாய், அண்ணனைப் பார்த்து, ‘‘ஏண்ணே... இத்தனை வருசம் உங்களை எல்லாம் பிரிஞ்சு இருந்ததை நினைச்சு நான் தினம் தினம் அழுதுருக்கேன்... உன் மேலயோ, அப்பா அம்மா மேலயோ சின்ன கோபம் கூட இல்லை. அதனாலதான் உன்னைப் பார்த்ததுமே உன் கூட கிளம்பி வந்துட்டேன்.

நான் நடிகையா ஆனது உங்க எல்லாருக்கும் பிடிக்கலைன்னு சொல்றீங்க. ஆனா நீ என்னை கொலை செய்ய வலுவான திட்டம் போட்டுட்டு உன் கூட நான் கிளம்புனப்ப, இப்ப வர வேண்டாம்... அப்பா ஏதாச்சும் சொல்லிடுவார்னு எவ்வளவு அழகா நடிச்ச...?

நிஜ வாழ்க்கையில இப்படி நடிக்கிற உன்னை மாதிரி ஆளுங்க இருக்குற சமுதாயத்துல நான் எந்த விதத்துலண்ணா குறைஞ்சுட்டேன்...?’’ என்று கேட்ட நிதர்சனாவில் கண்களில் இருந்து கண்ணீர் அவள் கன்னங்களில் நீர் வழித்தடத்தை உருவாக்கியிருந்தது.

‘‘நீ பெரிய நடிகையாயிட்ட... உன் உலகம் பெருசு. ஊர் பேர் தெரியாத எவ்வளவோ பேர், திரையுலகத்துல இருக்குற முக்கிய நபர்கள்னு அத்தனை பேரும் உன் புகழுக்காகவும் உன்கிட்ட இருக்குற பணத்துக்காகவும் உனக்கு மரியாதை கொடுப்பாங்க.

ஆனா எங்களை மாதிரி சாதாரண ஆளுக்கு பல வருஷமா வாழ்ந்த வீடும், தெருவும், ஊரும், சொந்தக்காரங்களும்தான் உலகம். நீ செஞ்ச காரியத்தால தலைகுனிவோட அந்த ஊரை விட்டு வேற ஊர்ல ஏதோ அனாதை மாதிரி வாழ்ந்து, சொந்தக்காரங்க யாருமே எந்த விசேசம், நல்லது கெட்டதுக்கு கூப்பிடாம ஒதுக்கி வெச்ச வேதனையையும் தாங்கி கிட்டு இருந்த அவஸ்தை எங்களுக்குதான் தெரியும்.

நாங்க திருச்சிக்கு வந்த பிறகு சில சொந்தக்காரங்களை தொடர்பு கொள்ள முயற்சிப்ப அவங்க என்ன சொன்னாங்கன்னு தெரியுமா?

‘உங்க பொண்ணாச்சும் ஓடிப்போய் ஒரு வருசம் ஆச்சு நடிகையா வெளியில தெரியுறதுக்கு.

எங்க வீட்டுலயும் பொண்ணு இருக்கு. ஆனா, உங்க பொண்ணு சிபாரிசு பண்ணுவான்னு அவளுக்கும் சினிமா ஆசை வந்து சென்னைக்கு ஓடிப்போயிட்டா எங்களால அதுக்கப்புறம் உயிரோட இருக்க முடியாது... தயவு பண்ணி எங்க கூட போன்ல கூட பேசாதீங்க...’ன்னு சொல்லிட்டாங்க.

ஒருத்தருக்கு எவ்வளவுதான் காசு, பணம், பேரு, புகழ் இருந்தாலும் தெரிஞ்சவங்க, சொந்தக்காரங்க புறக்கணிப்பு காரணமா அனாதையா வாழ்ந்து செத்துப்போறது எவ்வளவு கேவலமான நிலை தெரியுமா...?

அம்மாவும் அப்பாவும் நோய்வந்துதான் செத்துப்போனாங்க.

ஆனா அந்த நோய் வரக் காரணமே நீதான். அப்போ என்னோட அம்மா அப்பாவைக் கொன்ன கொலைகாரி நீ... அவங்க மனசு நொந்து போய் சாகக் காரணமான உன்னைய ஏன் உயிரோட விடணும்...’’ என்றவாறு நிதர்சனாவை நெருங்கினான் கதிரேசன்.

‘‘அண்ணா... ஊர்ஜனங்க... சொந்தக்காரங்க... கவுரவம் அது இதுன்னு பேசுறீங்கிளே... அவங்க...’’ என்று நிதர்சனா பேசிக்கொண்டிருக்கும்போதே இடைமறித்தான் கதிரேசன்.

‘‘ச்சீ... வாயை மூடு... நீ பேசுறதை முட்டாள் ரசிகர்கள் வேணுன்னா படத்துல பார்த்து ரசிக்கட்டும். நான் அதுக்காக உன்னை இங்கே கூட்டிகிட்டு வரலை...

நீ நடிகையா ஜெயிச்சுட்டதால உன்கிட்ட இருக்குற பணத்துக்காக எப்பவும் நாலு பேர் இருக்காங்க... இதுதான் உலகம்னு நினைக்குற...

உனக்கு சாதாரண மனிதனோட வாழ்க்கை, அவனோட உறவுகள், மரியாதைன்னு எதுவுமே புரியாது.
அதனால எதுக்காக சாகப்போறோம்னு நீ தெரிஞ்சுக்கணும்னுதான் இவ்வளவு நேரம் பேசினேனே தவிர... நீ என்ன சொன்னாலும் என்னுடைய முடிவும் மாறாது. உன் வாழ்க்கை இத்தோட முடியப்போறதையும் யாராலயும் தடுக்க முடியாது...’’ என்று சொல்லிக் கொண்டே கத்தியை ஓங்கி நிதர்சனாவின் மீது வீசினான் கதிரேசன்.

நிதர்சனா எத்தனையோ படங்களில் இது போன்ற காட்சிகளில் நடிக்கும்போது அட்டைக்கத்தி என்றாலும் லாவகமாக விலகி ஓடியிருக்கிறாள்.

அந்த அனுபவம் கைகொடுக்க கதிரேசனின் கத்தியிலிருந்து தப்பித்து அந்த அறையை விட்டு வெளியே பாய்ந்தாள் நிதர்சனா.

அப்போது கதிரேசனின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் ‘அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே...’ என்று பாடி அழைத்தது.

ஆனால் கதிரேசன் அதை பொருட்படுத்தாமல் நிதர்சனாவை விரட்டினான்.

அவள் மாடிப்படி வழியாக இறங்கி கீழ் தளத்தில் இருந்த கூடத்தில் ஓடிக்கொண்டிருந்தாள்.

நிதர்சனா எதிர்பார்த்தது போலவே அந்த வீட்டின் வாசல் கதவு பூட்டப்பட்டிருந்தது.

சரி... கொல்லைக்கதவு இருந்தால் அதன் வழியாக தப்பிக்கலாமா என்று அவள் யோசிக்கும் நொடியில் கதிரேசன் அவள் அருகில் வந்து விட்டான்.

இனி தப்பிப்பது சிரமம்... யாராவது காப்பாத்துங்களேன் என்று கத்தி ஊரைக் கூட்டலாம் என்று நினைத்தால், அக்கம்பக்கத்தில் வீடுகள் எதுவும் இல்லையே என்று நிதர்சனா யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அருகில் இருந்த அறைக்கதவு திறந்தது.

‘‘ஐயா... நிறுத்துங்க...’’ என்ற அலறலுடன் வேலைக்கார பெண் நிதர்சனாவுக்கும் கதிரேசனுக்கும் நடுவில் வந்து நின்றாள். அவள் கையில் அவளுடைய செல்போன்.

மூச்சிரைக்க, ‘‘ஐயா... உங்க பிரண்டு சந்திரன்...’’ என்று செல்போனை கொடுத்தாள்.

முகம் நிறைய கோபத்துடன், வேலைக்காரப்பெண்ணின் கையில் இருந்த செல்போனை பறித்து காதில் வைத்தான்.

‘‘எல்லாத்தையும் நிறுத்திட்டு முதல்ல டி.வியில ஏதாவது செய்தி சேனலைப் போடு... நான் பத்து நிமிஷத்துக்குள்ள அங்க வந்து பேசுறேன்...’’ என்றது மறுமுனை.

‘‘ஏண்டா... இங்க என்ன சினிமா ஷுட்டிங்கா எடுக்குறோம்... கிளைமேக்ஸ்ல வந்து ட்விஸ்ட் கொடுக்குற மாதிரி நிறுத்த சொல்ற... ஆறு வருஷமா எவ்வளவு வேதனைப்பட்டு....’’ என்று பேசிக் கொண்டிருந்த கதிரேசனை சந்திரன் இடைமறித்து நிறுத்தி ஏதோ சொன்னான்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த கதிரேசனின் கத்தி ஓங்கிய கை தானாகவே கீழே இறங்கியது.

‘‘சரி... வா!’’ என்று சொல்லிவிட்டு போனை கட் செய்து வேலைக்கார பெண்ணிடம் கொடுத்தான்.

நிதர்சனாவைக் காட்டிலும் வேலைக்கார பெண்ணின் முகத்தில் பயம் அப்பட்டமாக தெரிந்தது.

அவள் பார்வையிலிருந்தே, கொலை செய்யும் திட்டம் அவளுக்கு தெரியாது, வேறு ஏதோ சொல்லி, நிதர்சனா வரும்போது அப்பாவும் அம்மாவும் இப்பதான் மாடிக்கு போனாங்க என்று சொல்வதற்கு பயிற்சி கொடுத்திருக்கிறான் என்பது நிதர்சனாவுக்கு புரிந்து விட்டது.

கதிரேசன் அந்த ஹாலில் இருந்த டி.வி.யை ஆன் செய்து விட்டு, ரிமோட்டுடன் சோபாவில் அமர்ந்தான்.

இன்னும் நிதர்சனாவின் இதயத்துடிப்பின் வேகம் குறையவில்லை. தொலைக்காட்சி சத்தம் வரும் வரை அவள் இதயத்துடிப்பு வேலைக்கார பெண்ணுக்கே நன்றாக கேட்டது.

‘சந்திரன் எதுக்கு செய்தி தொலைக்காட்சியை பார்க்க சொன்னான்னு தெரியலையே... ஒரு வாரமா அந்த ரெண்டு வயசுப் பையன் போர்வெல் குழிக்குள்ள விழுந்து அவனைக் காப்பாத்த நடைபெற்ற முயற்சிகள்தான் பிரதான செய்தி.

இப்ப வேற என்ன ஹெட்லைன் அவ்வளவு முக்கிய செய்தியா இருக்கும்’ என்று யோசித்துக் கொண்டே சேனல் மாற்றிக் கொண்டு வந்தவன் ஒரு செய்தித் தொலைக்காட்சி வரவும் அப்படியே இருந்தான்.

அந்த தொலைக்காட்சி திரையில் ஏகப்பட்ட மைக்குகளுக்கு முன்னால் நிதர்சனா அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.

அதைப் பார்க்கவும் கதிரேசன் ஆத்திரத்துடன் மீண்டும் ரிமோட் பட்டனை அழுத்தப் போனான்.

‘‘கதிர் அண்ணா... எல்லாத்துக்கும் அவசரப்படாத... இந்த நியூஸ் கிளிப்பை முழுசா பாரு... நேத்து நான் கொடுத்த பேட்டிதான் இது.’’ என்றாள் நிதர்சனா.

‘‘இந்த பையன் உயிரிழந்ததுக்கு அப்புறம்தான் பொதுமக்களே இது மாதிரி பயனில்லாத ஆழ்துளை கிணறுகளை மூடணும்னு பேசத் தொடங்கியிருக்காங்க.

நீதி மன்றமும் இந்த மாதிரி தண்ணீர் இல்லாத கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பா மாத்தணும்னு சொல்லியிருக்காங்க.

ஆனா உங்க சொந்த பணத்தை கொடுத்து, நீங்க பிறந்து வளர்ந்த ஊர் மட்டுமில்லாம, அந்த மாவட்ட முழுவதும் இருக்குற 430 கிராமங்கள்லயும் உங்க ரசிகர் மன்றம் மூலமா சுமார் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட பயன்பாடில்லாத ஆழ்துளைக் கிணறுகளை பாதுகாப்பா சுற்றிலும் வேலி அமைச்சு மழைநீர் சேகரிக்கிற இடமா மாத்தியிருக்கீங்க.

இந்த செய்தி இப்பதான் வெளியில வருது... இப்படி செய்யணும்னு உங்களுக்கு எப்படி தோணுச்சு...’’ என்று கேள்வி கேட்டார்கள்.

‘‘போன வருஷம் வந்த படத்துல குழந்தை மூடப்படாத போர்வெல் குழியில விழறதையும், அதைக் காப்பாத்துறதுல எவ்வளவு சிக்கல் இருக்குன்னு சொல்லி ஒரு படம் வந்துச்சே...

அந்த படத்தை நானும் பார்த்தேன். அப்பவே இது மாதிரி எவ்வளவோ குழந்தைகள் அவ்வப்போது குழியில விழுந்து இறந்துடுறாங்களே...

குழியில விழுந்த குழந்தைகளை பாதுகாப்பா வெளியில எடுக்குற கருவியை கண்டு பிடிக்கிறதை விஞ்ஞானிகள் செய்யட்டும்...

வருமுன் காக்கும் நடவடிக்கையா, குழந்தைகள் விழாம இருக்க என்ன செய்யலாம்னு யோசிச்சுதான் இந்த வேலையை செஞ்சேன்...

ஆனா என்னால நாடு பூராவும் செய்ய முடியாது. அதனால நான் பிறந்து வளர்ந்த ஊரையும், மாவட்டத்தையும் தேர்ந்தெடுத்துகிட்டேன்...’’ என்று பதில் சொல்லி முடித்தபோது ரெடிமேட் புன்னகையை முகத்திற்கு கொண்டு வந்தாள் நிதர்சனா.

‘‘நீங்க படிச்ச அரசு பள்ளிக்கூடம் மட்டுமில்லாம, அந்த தாலுக்கா முழுவதும் இருக்குற அரசுப்பள்ளிகள்ல கழிப்பறை வசதியையும் உங்க செலவுல உங்க ரசிகர் மன்றம் சீரமைக்கிறதா சொன்னாங்க... அதுக்கு என்ன மேடம் காரணம்...’’ என்று அடுத்த கேள்வியை கேட்டார்கள்.

‘‘நான் படிக்கும்போதும் பத்து நிமிஷம்தான் இடைவேளை விடுவாங்க.

அறுநூறு எழுநூறு பொம்பளைப்புள்ளைங்க படிக்குற இடத்துல முப்பது பேர்தான் யூரின் போக வசதி இருக்கும். அதனால யார் போய் முதல்ல இடம்பிடிக்கிறதுன்னு பெல் அடிச்ச உடனே ஓட்டப்பந்தயமே நடக்கும். அப்படி நான் பட்ட சிரமங்கள்தான் இந்த பணிகளுக்கு காரணம்...’’ என்றாள்.

அடுத்து அந்த காட்சி கட் செய்யப்பட்டு, அந்த கிராம மக்கள் சிலர் நிதர்சனாவை புகழ்ந்து பேசுவதை ஒளிபரப்பினார்கள்.

அப்போது வீட்டின் அழைப்புமணி ஒலித்தது.
வேலைக்கார பெண் கதிரேசனைப் பார்த்தாள்.

அவன் தலையை அசைத்து அனுமதி கொடுத்தான். அவள் கதவை நோக்கிச் சென்றபோது தன்னிச்சையாக கதிரேசனின் கையில் இருந்த கத்தி, அவன் அமர்ந்திருந்த சோபாவுக்கு கீழே சென்றது.

உள்ளே நுழைந்தது சந்திரன்.

நிதர்சனா உயிருடன் இருந்ததைப் பார்க்கவும் அவன் முகத்தில் நிம்மதி. நெஞ்சில் கை வைத்து, ‘ஸ்... அப்பாடா...’ என்றான்.

தொலைக்காட்சியில் நிதர்சனாவின் செயலை ஆஹா... ஓஹோ என்று பாராட்டிக் கொண்டிருந்தது வேறு யாருமல்ல...

இவள் சினிமாவில் நடிக்க சென்றதும், அதை கேவலமாக பேசி, கதிரேசனும் அவன் பெற்றோரும் ஊரை விட்டு கிளம்பி வந்தார்களே... அதே சொந்த கிராம மக்கள்தான்.

‘‘டேய் கதிரு... இதாண்டா உலகம்... நமக்கு சொந்தக்காரங்களும், ஊர்க்காரங்களும் அவசியம்தான்... அதுக்காக அவங்க மட்டும்தான் உலகம்னு நினைச்சு மனசுல வேதனையை சுமந்தே செத்துப்போன உங்க அப்பாவும், அம்மாவும் மட்டுமில்ல... உன் தங்கையையே கொலை செய்ய துணிஞ்ச நீயும் முட்டாள்தான்...

நிதர்சனாவோட ரசிகர் மன்றம் சார்பா அவ செஞ்ச நற்பணிகள் எல்லாம் எனக்கு செய்திகள் மூலமா எப்பவோ தெரியும்... கடந்த ஒரு வருஷமாவே அதை உன்கிட்ட சொல்ல முயற்சி பண்ணினேன்... ஆனா நீதான் இவளைப் பத்தி பேச ஆரம்பிச்சா போதும்... என்னையே முறைச்சுக்குவ...

இப்ப வேற வழியில்லாமத்தான், எந்த ஊர் ஜனங்ககிட்ட உன் குடும்ப கவுரவம் போயிடுச்சுன்னு புலம்புனீங்கிளோ... அந்த ஊர்க்காரங்க உன் தங்கச்சியை எப்படி தலையில தூக்கி வச்சு கொண்டாடுறாங்கன்னு பாருன்னு செய்தியை சொன்னேன்.

இந்த தொலைக்காட்சி செய்தி மட்டும் இல்லைன்னா இந்நேரம் தமிழகத்தின் கனவுக்கன்னி நிஜமா கனவுல மட்டுமே பார்க்குறவளா ஆயிருக்குறதோட நீயும் கம்பி எண்ணப் போயிருப்ப...’’ என்றான் சந்திரன்.

இப்போது கதிரேசன் முகத்தைப் பொத்திக் கொண்டு அழ ஆரம்பித்தான்.

கதை நிறைவுற்றது.


No comments:

Post a Comment