Saturday, February 29, 2020

சீறு – தியேட்டர் சோழா

தமிழ் திரைப்படங்களைப் பொறுத்தவரை சென்னையில் உள்ள படப்பிடிப்பு அரங்கங்களை விட்டு 16 வயதினிலே காலத்திற்கு பிறகு அதிகமாக கோபிச்செட்டிபாளையம், பொள்ளாச்சி போன்ற பகுதிகளுக்கு சென்றன. பிறகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு கும்பகோணத்தை கதைக்களமாகக் கொண்டு அதிகமான படங்கள் வெளிவந்தன. 2001ஆம் ஆண்டு ஆனந்தம் படத்திற்கு பிறகுதான் கும்பகோணத்தில் படப்பிடிப்பு அதிகரித்ததாக திரைத்துறையில் உள்ள ஒருவர் சொன்னார்.
சீறு திரைப்படத்தின் ஆரம்ப காட்சிகள் மயிலாடுதுறையில் இருந்து ஆரம்பிக்கிறது. பின்பாதி சென்னையில்தான். ஒருவன் நமக்கு தீங்கிழைக்கும்போது அவன் பலசாலி, நம்மால் எதுவும் செய்யமுடியாது. அவனை எதிர்க்க முடியாது என்று அஞ்சி நிற்காமல் தேவைப்படும் நேரத்தில் பாதகம் செய்பவர்களைக் கண்டு அறச்சீற்றம் கொள்ள வேண்டும் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. 
ஜீவாவை கொலை செய்ய வந்தவன் ஜீவாவின் தங்கையை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்ததும் நன்றிக்கடனுக்காக அந்த வில்லனை காப்பாற்றும் கதையின் நாயகன். கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கும் ஒருவரிக்கதைதான்.
முன்பெல்லாம் இரண்டே முக்காமல் மணி நேரத்திற்கு குறைவாக வரும் படங்கள் வருத்தத்தை ஏற்படுத்தும். இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சிடுச்சே... இன்னும் ஒரு பாட்டு ரெண்டு சண்டைக்காட்சி இருந்தால் என்ற என்ற எதிர்பார்த்திருக்கிறோம்.
ஆனால் இப்போது இரண்டு மணி நேரப்படம் விறுவிறுப்பாக இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு ரசிகர்கள் வந்து விட்டார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
சென்னை தங்க கடற்கரையில் அசையாமல் நிற்கும் ஒருவரை சிரிக்க வைத்தால் பரிசு என்று அறிவித்திருந்தார்களே. அந்த நபரின் மன நிலைக்கு நாமும் வந்து விட்டோமோ என்று தோன்றுகிறது.
எப்படி படத்தை பார்த்தாலும், அவ்வளவுதானா... இன்னும் எதிர்பார்க்கிறோம் என்ற மனநிலை இணைதளத்தில் மிதமிஞ்சி கொட்டிக்கிடக்கும் படங்கள், பாடல்கள், தொடர்கள், குறும்படங்களும் ஒரு காரணமோ என்று நினைக்கிறேன்.
அன்றையதினம் மின்வினியோகம் இல்லை என்பதால் திடீரென முடிவு செய்து நானும் நண்பரும் திருவாரூர் சோழா திரையரங்கத்தில் சீறு திரைப்படம் சென்று பார்த்தோம்.
திருவாரூரில் தைலம்மை இரண்டு குளிர்சாதன வசதி திரையரங்கமாக தன்னை புதுப்பித்துக் கொண்டு இயங்கி வருகிறது. தற்போது நடேஷ் திரையரங்கத்தையும் பொலிவுறச்செய்யும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக அறிகிறேன்.
இப்போது சோழா திரையரங்கம் மிகப் பெரியதாக இருப்பதால் பால்கனி பகுதியில் மட்டும் (சுமார் 200 இருக்கைகள்) குஷனில் புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.
2001 ஆம் ஆண்டு நந்தா படம் பார்க்கும்போது திரைக்கு புதியதாக பெயிண்ட் அடித்திருந்தார்கள் என்று நினைக்கிறேன். படம் பளிச்சென்று இருந்தது.
இப்போது டிஜிட்டல் புரொஜக்டர் என்றாலும் திரை அழுக்கடைந்து மங்கலாக இருந்ததால் டூரிங் டாக்கீசில் மங்கலான திரையில் படம் பார்த்த அனுபவம்தான்.
சீறு – ஒரு முறை பார்க்கக்கூடிய படமே.

No comments:

Post a Comment