Friday, February 28, 2020

இர்மா – அந்த ஆறு ஆறா நாட்கள்

நான் படித்த புத்தகங்கள் பற்றிய அறிமுகம்
நூலின் பெயர் : இர்மா – அந்த ஆறு ஆறா நாட்கள்
நாவல்
ஆசிரியர் : ஆரூர் பாஸ்கர்
பக்கம் : 182
விலை : 230
முதல் பதிப்பு : ஜனவரி 2020 (எழுத்து பிரசுரம்)
வெளியீடு : ஜீரோ டிகிரி பப்ளிகேஷன்ஸ், எண்.55(7), R பிளாக், 6வது அவென்யூ, அண்ணா நகர், சென்னை – 40.
www.zerodegreepublishing.com
ISBN 978-93-88860-31-4
**************************

25 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒருவர் அயல் நாட்டில் வேலை பார்க்கிறார் என்றாலே அவரும் அவரது குடும்பத்தினரும் குபேர பகவான் குடும்ப உறுப்பினர் என்று மற்றவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.
சிங்கப்பூர், மலேசியா, குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு தொழிலாளர் என்ற நிலையில் செல்லும் நபர்களின் நிலை என்ன, அப்படி வேலைக்கு செல்பவர்களும் எதை இழக்கிறார்கள், எதைப் பெறுகிறார்கள் என்ற உண்மை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரிகிறது.
ஆனால் இப்போதும் அமெரிக்க நாட்டில் இருப்பவர்கள் என்றால் அவர்கள் உலகவங்கியின் பங்குதாரர் என்பதாகவும், எந்த கவலையும் இல்லை, ஏதோ போனோம், சம்பாதித்தோம், இந்தியா திரும்பி அமைதியாக (?!) வாழ்ந்தால் என்ன, பெற்றவர்களைக்கூட இந்தியாவில் தவிக்க விட்டு விட்டு அப்படி என்ன பணத்தை தேடி அலைகிறார்கள் என்றும் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மை அது அல்ல. அங்கு வாழும் மக்கள் அதிலும் பணி நிமித்தம் பல்வேறு நாடுகளிலிருந்து செல்லும் நபர்கள் அவர்கள் குடும்பங்களின் நிலையை மட்டுமின்றி, புயல், சூறாவளி போன்று இயற்கை சீற்றங்களினால் எந்த அளவுக்கு சாமானியர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை குறுக்கு வெட்டுத்தோற்றமாக விவரித்து விட்டது இந்த நாவல்.
தமிழகத்தில் 2018ஆம் ஆண்டு கஜா புயலினால் ஏற்பட்ட சேதத்தை பாதிக்கப்பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் எந்த அளவு உணர்ந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.
ஆனால் ஒரு புயலை சந்தித்த அமெரிக்க நாட்டின் ஒரு மாகாணத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டது இந்த நாவல்.
தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருவாரூரும் ஒன்று. நான் வசித்த பகுதியில் மின்சாரம் கிடைக்க 4 நாட்கள் ஆனது. அடுத்த தெருவுக்கு மட்டும் நேற்றே வந்து விட்டது? நாங்க ஓட்டு போடலியா, வரி கட்டலியா என்று பலரும் சாலையை மறைத்து உட்கார ஆரம்பித்தார்கள்.
மின்சாரம் இல்லாததால் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க மின்விசிறி இயக்க முடியாததுதான் கஜா புயலின் போது என் குடும்பத்திற்கு ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு.
(கஜா புயல் நேரத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்களையும், அந்த நேரத்தில் மின்வினியோகம் வழங்குவதில் அதிகாரமும், அரசியலும் எப்படி கை கோர்த்துக் கொண்டு மக்களை என்ன செய்தார்கள் என்பதை வைத்து நாவல் எழுதலாம் என்று இருக்கிறேன்.)
உலகின் பெரியண்ணன் என்ற நிலையில் இருக்கும் அமெரிக்காவிலும் இயற்கை இடர்பாடுகளின்போது இப்படி ஒரு மறுபக்கம் இருக்கிறது என்பதை தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
நாவலில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ள அமெரிக்காவின் கடந்த கால வரலாறுகளை படிக்கும்போது, எல்லோரும் மனிதர்கள்தான், மனிதன் ஒரு சமூக பிராணி என்று உணர முடிகிறது.
நாவலில் ஹரிக்கேன் இர்மா (புயலை அமெரிக்காவில் ஹரிக்கேன் என்று குறிப்பிடுகிறார்கள்) புளோரிடாவை தாக்கும் நாள் வருவதற்கு முந்தைய அத்தியாயம் வரை இந்த புயல்கள் உருவாவதற்கு புவியியல் காரணம் என்ன என்பது உள்ளிட்ட பல தகவல்கள் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் தரப்பட்டுள்ளன.
ஆனால் புயல் வீசப்போகும் அத்தியாயத்திலிருந்து அந்த முன் குறிப்புகள் இல்லை. அதுதான் புயல் வந்து விட்டதே, இனி அதைப் பற்றிய பில்ட்அப் எதற்கு என்று நேரடியாக அடுத்தடுத்த அத்தியாயங்கள் தொடர்கிறது என்று நினைக்கிறேன்.
படம் பார்க்க தியேட்டருக்கு சென்று அமர்ந்திருக்கும்போது ஏற்கனவே படம் பார்த்த யாராவது ஒருவர் அடுத்த காட்சியை சொல்லிக்கொண்டே இருந்தால் என் மனம் சமநிலையை இழக்கும்.
அதனால்தான் நாவலில் உள்ள அத்தியாயங்கள், என் கவனம் ஈர்த்த முக்கிய வசனங்கள், சம்பவங்களை இங்கே குறிப்பிடவில்லை.

No comments:

Post a Comment