Monday, March 2, 2020

முள்ளும் மலரும் – சொல்ல மறந்த கதை

2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எழுதிய கட்டுரை இது.
(இந்த கட்டுரை ஓராண்டுக்கு பிறகு சற்று திருத்தம் செய்து தற்போது எழுதப்பட்டுள்ளது.)
எத்தனையோ படங்கள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே கதாநாயனை மாற்றுவது, நாயகியை மாற்றுவது, வேறு வில்லனை நடிக்க வைப்பது, பாடல்களுக்கு இசையமைத்தவருடன் பிரச்சனை ஏற்பட்டால் பின்னணி இசையை வேறு ஒருவரை வைத்து முடித்துக் கொள்வது என்று எவ்வளவோ நடந்திருக்கின்றன.அவ்வளவு ஏன், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சரத்குமார், முரளி உள்ளிடோர் நடித்த ‘சமுத்திரம்’ படம் வெளியாகி நான்கு வாரங்கள் கழித்து நமது கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு கிளைமாக்ஸ் புதிதாக எடுத்து மாற்றப்பட்டது.
சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் படம் வெளியாகி பத்து நாட்கள் கழித்து படத்தின் கதாநாயகி நடித்த இருபது நிமிட காட்சிகளை நீக்கினார்கள். அப்படியும் படத்தின் ரிசல்ட் திருப்தி இல்லை என்பதால் தியேட்டரில் திரையிடப்படுவதை நிறுத்தி பிறகு சில தினங்கள் கழித்து வெளியாகும் என்று அறிவித்தார்கள்.  ஆனால் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சமீப காலத்தில் முழுப் படமும் எடுத்து முடித்த பிறகு திருப்தியாக இல்லை என்று ரிலீஸ் செய்யவே மாட்டோம். புதிதாக மீண்டும் எடுக்கப் போகிறோம் என்று ஒரு நிகழ்வை இப்போதுதான் பார்க்கிறோம்.
தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி என்ற படத்தின் ரீமேக்கில் நடிகர் விக்ரம் மகன் துருவ் நடிக்க, பாலா இயக்கினார். இப்போது அந்தப் படம் கைவிடப்படுவதற்கு முக்கிய குற்றச்சாட்டாக கூறப்படும் விசயங்கள் இரண்டு.
மூன்று மணி நேரப்படத்தை இரண்டு மணி நேரமாக்கிவிட்டார் என்பது முதல் குற்றச்சாட்டு.
மற்றொன்று, தெலுங்கில் ஜீவனுடன் இருந்த காட்சிகள் பலவற்றையும் நீக்கிவிட்டு இந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளார் என்பதை இரண்டாவது முக்கிய காரணமாக கூறுகிறார்கள். இந்தப்படம் வேறு ஒரு இயக்குநர் மூலம் படமாக்கப்பட்டு 2019ஆம் ஆண்டு இறுதியில் திரைக்கு வந்து கவனம் பெற்றது.
ஒரு படம் ரீமேக் செய்யப்பட்டால், அதிலும் இந்தியா போன்று பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள் அடங்கிய ஒரு நாட்டில், ஒரு மொழியில் எடுக்கப்பட்ட படம் இன்னொரு மொழியில் பெரும்பாலும் எடுபடுவதில்லை. அதற்கு முக்கிய காரணம் ஒவ்வொரு பகுதி மக்களை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட படம் இன்னொரு மாநில மக்களுக்கு அந்நிய சூழலாக தெரிவதுதான்.
ஏற்கனவே வேறு மொழிகளில் இருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்ட வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், நண்பன் போன்று ஒரு சில படங்கள் பெரும் வெற்றியை பெற்றிருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம், பிற மொழியில் இருந்து அப்படியே மொழிபெயர்த்தாற்போல் இல்லாமல் தமிழ் சூழலுக்கு ஏற்ப மறு உருவாக்கம் செய்யப்பட்டதுதான்.
அதிலும் 2012ல் வெளியான நண்பன் படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம். இப்போது இரண்டரை மணி நேரப் படம் என்றாலே எப்போதுடா முடியும் என்ற அளவுக்கு போரடிக்கத் தொடங்கிவிடுகிறது.
விஜயகாந்த் நடிப்பில் வல்லரசு என்ற படம் 2000வது ஆண்டில் வெளியானது. இந்தப் படமும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்தை நெருங்கும். ஆனால் அந்தப் படம் வேகமான காட்சி நகர்வுகளால் அவ்வளவு பெரிய படம் என்பதே தெரியாது. ஆனால் இப்போது தொலைக்காட்சியில் அந்தப் படத்தை போடும்போது இரண்டு மணி நேரப் படமாக சுருக்கி, மூன்று மணி நேர விளம்பரத்துடன் சேர்த்து ஐந்து மணிநேரமாக உருவாக்கியிருப்பது பெரிய சாதனைதான்.
இதெல்லாம் பழங்கதைகளாகிவிட்ட நேரத்தில் இரண்டு மணி நேரப்படத்தை விறுவிறுப்பாக கொடுப்பதே பெரிய சவால் என்பதை மறுக்க முடியாது. ஆனால் ஒரிஜினலில் இருந்து மறு ஆக்கத்திற்காக காட்சிகளை குறைப்பது என்று முடிவாகி விட்டால் அப்போதும் படம் சிறப்பாக அமைந்துவிட்டால் அதைப் பற்றி கேள்வி எழப்போவதில்லை.
பழம்பெரும் படத்தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் தயாரித்த படங்களில் 90 சதவீதத்திற்கு மேல் பிற மொழி தழுவல் ரீ மேக்தான். இதை ஏ.வி.எம்.சரவணன் அவர்களே ஒரு வார இதழில் எழுதிய தொடரில் தெளிவாக கூறியிருந்தார்.
ஆனால் ஒரிஜினலை அப்படியே காப்பியடிக்காமல் நம் சூழலுக்கு ஏற்றவாறு திரைக்கதையாக்கியதில்தான் அவர்களால் நிறைய வெற்றிப்படங்களை கொடுக்க முடிந்தது.
முள்ளும் மலரும்
ரஜினி காந்த் நடிப்பில் உருவான படங்களில் படங்களில் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை ஆகிய படங்களை எடுத்துக் கொள்வோம். இதில் ஆறிலிருந்து அறுபது வரை படம் சோகத்தைப் பிழிந்து கண்ணீரை வரவழைப்பதற்காக மிகையாகவே பல காட்சிகள் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால் முள்ளும் மலரும் படத்தில் வள்ளி அண்ணன் மீது வைத்திருந்த பாசத்தையும் சரி, காளி அந்த எஞ்சினியர் மீது உள்ள விரோத மனப்பான்மையையும் சரி மாற்றிக் கொள்ளாமல் இருக்கும் இயல்பைக் கூறியது. ஆனால் முள்ளும்மலரும் நாவலை எழுதிய உமாசந்திரன் கதையின் பிற்பகுதியை நம்ப முடியாத திருப்பங்களுடன் வார இதழுக்கான சஸ்பென்சுடன் திடீர் திடீர் என முட்டு சந்துக்குள் விட்டு திருப்பி காளி கதா பாத்திரத்தையும் மங்காவையும் சாகடித்து கதையை முடித்திருந்தார். அதை அப்படியே படமாக எடுத்திருந்தால் இந்த அளவுக்கு பேசப் பட்டிருக்குமோ என்னவோ? ஆக, இப்படத்தின் இயக்குநர் மகேந்திரன் சொல்வது என்னவென்றால், ஒரு நாவலை படமாக்க முயற்சித்தால் சினிமாவுக்காக நல்லவிதமாக எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம் என்பதுதான். ஆனால் அது ரசிகன் ஏற்றுக்கொள்ளும் படியாக இருக்க வேண்டும்.
சொல்ல மறந்த கதை
நாஞ்சில் நாடன் எழுதிய தலைகீழ் விகிதங்கள் நாவலை தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் சேரன் நடிப்பில் இயக்கியிருந்தார். அந்த நாவலை வரிக்கு வரி படமாக எடுத்து வைத்திருந்ததால் அந்த படத்தை ரசிக்க முடியாமல் போய்விட்டது. இப்படி எல்லாம் கதையில் இருப்பதை அப்படியே வரிக்கு வரி எடுத்தால் என்ன ஆகும் என்பதை நான் உணர்ந்து கொண்ட படம்.
அழகி
தங்கர்பச்சான் எழுதிய கல்வெட்டு என்ற சிறுகதையைத்தான் அழகி என்ற படமாக்கினார். ஆனால் சிறுகதை என்பதால் கதைக்கு தகுந்தவாறு நிறைய காட்சிகளை உருவாக்கி கொண்டு சென்றதால் அது எல்லோரையும் கவரும் படமாக அமைந்தது. அப்படி இருந்தும் இடைவேளைக்குப் பிறகு விவேக்கை வைத்து காமெடி டிராக், அது இது என்று கொண்டு சென்று ஒப்பேத்தி இருந்தார்.
அசுரன்
1983ஆம் ஆண்டு வாக்கில் பூமணி எழுதிய வெக்கை என்ற நாவல் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் 2019ஆம் ஆண்டு படமானது. இதிலும் கதையை புத்தகத்திலிருந்து வரிக்கு வரி மாறாமல் படமாக்கியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

புத்தகத்தில் வாசிப்பனுபவம் என்பது வேறு. அதே கதையை திரைப்படமாக்குதல் என்பது வேறு. இரண்டிலும் தேவையான அளவு தனித்துவத்துடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அவை வாசகர்கள், ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெறக்கூடும்.

No comments:

Post a Comment