Saturday, March 21, 2020

மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அரசு அறிவுறுத்த காரணம் என்ன?

கொரானா முன்னெச்சரிக்கை, அரசுக்கு ஒத்துழைப்பு

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு சளி அதிகமாக உள்ளது என்று சிகிச்சைக்காக மருத்துவர்கள் பரிந்துரைத்தபோது தஞ்சை–திருச்சி நெடுஞ்சாலையில் உள்கிராமமான செங்கிப்பட்டியில் உள்ள மகாத்மா காந்தி மெமோரியல் சானடோரியம் மருத்துவமனைக்கு எனது பெற்றோர் அழைத்துச் சென்றார்கள்.






Courtesy : Google
அந்த வயதில், ஏன் இந்த மருத்துவமனையை இவ்வளவு தொலைவில் காட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்? பஸ்சை விட்டு இறங்கியதும் செல்வது போல் மெயின் ரோட்டில் கட்டி வைத்தால் என்ன என்று நினைத்திருக்கிறேன்.

ஆனால் ஏன் காட்டுக்குள் இந்த மருத்துவமனை இருக்கிறது என்ற கேள்வியை யாரிடமும் நான் கேட்டதில்லை.

இப்போது கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் ஒவ்வொருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிப்பதற்கான காரணமும், செங்கிப்பட்டியில் மரங்கள் அடர்ந்த சூழலில் மகாத்மா காந்தி மருத்துவமனை அமைக்கப்பட்டதற்கான காரணமும் யாரும் சொல்லாமலேயே எனக்கு புரிந்து விட்டது.

தெளிவாகவே சொல்கிறேன், 1951ஆம் ஆண்டு செங்கிப்பட்டியில் காசநோய் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க இந்த மருத்துவமனையை கட்டியுள்ளார்கள். அந்த காலத்தில் காசநோய் காற்றில் பரவக்கூடிய கொடிய வியாதியாக இருந்ததால் பொது மக்கள் அதிகம் வருவதற்கு வாய்ப்பில்லாத தனிமைப்படுத்த இடமாக இருக்கும் வகையில் இடம் தேர்வு செய்ய காரணமான அன்றைய மருத்துவர்கள், அரசு ஆலோசகர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரையும் தலைவணங்குகிறேன்.

இப்போது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதில் கரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால்தான் இந்த பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், கூட்டம்கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று சரியான எச்சரிக்கையை அரசாங்கம் விடுக்கிறது.

அதை மதித்து நாம் நம்மையும், நாட்டையும் காப்பாற்றிக் கொள்ள ஒத்துழைப்பு தர வேண்டியது ஒவ்வொரு இந்தியர்களின் கடமை என்பது என்னுடைய கருத்து.

No comments:

Post a Comment