Wednesday, April 29, 2020

கருப்பு நிலா - 1995

இந்த திரைப்படம் 25 ஆண்டுகளுக்கு முன்பு 1995 ஜனவரி 15ஆம் நாள் வெளியானது. 1994ல் விஜயகாந்த் நடித்த என் ஆசை மச்சான் படத்தில் கருப்புநிலா என்ற பாடல் மிகவும் பிரபலமடைந்ததால் இந்த பெயரில் படம் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இந்தப்படத்தில் பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதாக தெரியவில்லை.
ஆனால் சண்டைக் காட்சிகளுக்காக மிகவும் பேசப்பட்ட படம். படத்தில் அவரது தங்கையை தன் முதுகில் சுமந்து கொண்டு சண்டையிடுவதாக இருந்த காட்சிகளும், படத்தின் உச்ச கட்ட காட்சியில் விஜயகாந்த் ஹெலிகாப்டரின் அடியில் இருக்கும் கம்பியில் தொங்கிக் கொண்டு சண்டையிடுவதாக அமைக்கப்பட்ட காட்சிகளும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன.

படத்தில் விஜயகாந்த்தின் தந்தை தொழிலதிபர். அரசியல்வாதிகள் தங்களுக்கு கட்சிநிதி கொடுத்து விட்டு பொருட்கள் தரமற்றதாக விற்றுக் கொள்ளுங்கள், எவ்வளவு விலை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் என்று பேரம் பேசுவார்கள். அதற்கு ஒப்புக்கொள்ளாததால் அவர் மீது வீண் பழி சுமத்தி சிறைக்கு அனுப்புவதாகவும், விஜயகாந்த் அவரது தந்தை குற்றமற்றவர் என்று நிரூபிப்பதாக கதை செல்லும்.
இந்த படம் வெளியானபோது எனக்கு 13 வயது இருந்திருக்கும். நாம் பேராசைப்படவில்லை என்றால் நேர்மையாக வியாபாரம் செய்து நியாயமாக வாழலாம் என்று நம்பினேன். ஆனால் அப்படி நியாயம் பேசினால் இப்படி கூட இடையூறு வருமா... ச்சே...ச்சே... நிஜவாழ்வில் இப்படி எல்லாம் இருக்காது. படத்துல ரொம்ப கதை விட்டிருக்காங்க என்றும் நேர்மறையாக சிந்தித்த வயது அது.

கடந்த சில ஆண்டுகளாக பெண்களை ஒருதலையாக காதலித்து (?!) அந்த பெண் சம்மதிக்கவில்லை என்றால் அந்த பெண்ணின் முகத்தை சிதைப்பது, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது என்று வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களும் நிறையவே இருக்கிறார்கள். ஒரு சில திரைப்படங்களும் உன்னை காதலிக்க மறுத்தாலோ அல்லது காதலித்து ஏமாற்றினாலோ அவளை வாழ விடாதே என்ற கதையுடனும் வெளிவருகின்றன. 

சமீபத்தில் கருப்புநிலா படத்தை மீண்டும் தொலைக்காட்சியில் பார்த்தபோது ஒரு காட்சி என்னை கவனிக்க வைத்தது.

விஜயகாந்தின் சொத்து போய் விட்டது என்பது தெரிந்ததும் தாயார் பேச்சைக் கேட்டுக் கொண்டு ரஞ்சிதா, விஜயகாந்தை திருமணம் செய்ய மறுத்து விடுவார். மேலும், தன் வீட்டிலேயே ஓட்டுநராக பணியாற்றவும் அழைப்பார்.

அதைக் கேட்ட விஜயகாந்த், "நீ பணத்துக்காக மாறியிருக்கலாம். ஆனா நான் அப்படி இல்ல. எங்கிருந்தாலும் நன்றாக இரு..." என்று சொல்லி அத்துடன் விலகிச் செல்வதாக காட்சி இருக்கும்.
இன்றைய திரைப்படங்களிலும் இதுபோன்ற கருத்துக்களுடன் காட்சிகளை சுவாரஸ்யமாக அமைக்க வேண்டும். அது சமுதாயத்திற்கு நல்லது என்று நினைக்கிறேன்.

இப்போது ஒரு நாளில் ஒரே ஒரு படம் மட்டுமே 90 சதவீத திரையரங்குகளில் வெளியாகி, எல்லா வசூலையும் சிந்தாமல் சிதறாமல் எடுத்துவிடும் மார்க்கெட்டிங் உத்தி பயன்படுத்தப்படுகிறது.

1995 பொங்கலுக்கு
கருப்புநிலா - விஜயகாந்த்
எங்கிருந்தோ வந்தான் - சத்யராஜ்
பாட்ஷா - ரஜினிகாந்த்
கட்டுமரக்காரன் - பிரபு
நான் பெத்த மகனே - நிழல்கள் ரவி
ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி - பாக்யராஜ்
சதிலீலாவதி - கமல்ஹாசன்
வேலுச்சாமி - சரத்குமார்
ஆகிய படங்கள் வெளிவந்தன. 

No comments:

Post a Comment