Sunday, April 26, 2020

தடயம் (2019)

தமயந்தி எழுதி ஆனந்தவிகடனில் வெளியான சிறுகதை - தடயம்.
கதாநாயகி - கனி குஸ்ருதி
நாயகன் - கணபதி முருகேசன்
இசை - ஜஸ்டின் கெனன்யா
படத்தொகுப்பு - ப்ரவீன் பாஸ்கர்

தடயம் - திரைப்படத்தைக் காண...

கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு நாவல்கள் போன்றவை எழுதியதுடன் சில இயக்குநர்களிடம் உதவியாளராக பணியாற்றிய தமயந்தி இயக்கியிருக்கும் திரைப்படம் இது.

படத்தின் டைட்டில் எழுத்துக்களிலேயே கதை சொல்லத் தொடங்கி விடுகிறார் இயக்குநர். தடயம் என்ற எழுத்தில் இருக்கும் புள்ளியை இதயத்திற்கு குறியீடாக பயன்படுத்தும் வடிவத்தில் வைத்ததுடன் அதில் மணல்கடிகாரத்தையும் காண்பிப்பதன் மூலம் இது காலம் கடந்த காதலைப் பற்றி பேசப்போகிறது என்ற தயார் நிலைக்கு சென்று விடுகிறோம்.

படத்தைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் நாயகி ஜெனி படத்தில் இறுதிப்பகுதியில் பேசும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. மொத்த படமும் சொல்ல வரும் விஷயமாக நான் உணருவது அதைத்தான்.

மழை பெய்யும் சத்தத்துடன் படம் தொடங்குகிறது. பின்னணியில் ஒரு இடத்திற்கு வழிகேட்கும் குரல் கேட்கிறது. பிறகு திரையில் மழை பொழியும் காட்சிகள், காரை ஓட்டிச் செல்லும் ஒருவர், டீக்கடையில் சிகரெட் பிடிக்கும் காட்சியைப் பார்க்கவுமே புற்றுநோயைப் பற்றி பேசப்போகிறதோ என்ற எண்ணம் எழுந்தது. அது யூகம் சரிதான் என்பதைப் போல நாயகி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருக்கிறாள்.

இருவரும் சந்தித்த பிறகு ஜெனி மூத்திரப்பையுடன் இணைக்கப்பட்டுள்ள குழாயை அகற்றி விட்டு காதலனுக்கு தட்டில் உணவு எடுத்து வந்து ஊட்டும் காட்சி அவளுடைய கனவு என்று தெரியும் போது அவளுடைய ஆசை என்னவென்று சொல்லப்பட்டு விடுகிறது.

கடைசி வரை என்ன பிரச்சனையால் இருவரும் பிரிந்தார்கள் என்பதை விளக்கமான காட்சிகளால் சொல்லவில்லை. தேவாவும் ஜெனியும் பேசிக்கொள்ளும் வசனங்களின் வாயிலாகவே ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது.

நம் நாட்டில் கோடானு கோடி மக்களில் காதலிப்பவர்கள் அனைவருமே திருமணம் செய்து கொள்வதில்லை. குடும்பம், பொருளாதாரம், சமூகம் என்று ஏதோ ஒரு காரணங்களால் பிரிந்து விடுகிறார்கள். அல்லது பிரிக்கப்பட்டு விடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்கிறோம்.

இருவரும் உரையாடத் தொடங்கும்போது தொலைக்காட்சியில் ரஜினி படத்தில் வரும் மாயநதி பாடல் காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் தேவா-ஜெனி உறவையும் பல ஆண்டுகள் கழித்து இருவரும் சந்திக்கும் சூழலையும் படம் பார்ப்பவர்களுக்கு எளிதாக உணர்த்தி விடுகிறார்கள்.

எத்தனை நாள் சேர்ந்து இருந்தோம், எத்தனை ஆண்டுகள் கழித்து சந்திக்கிறோம் என்று அந்த பாடல் வரிகளும் காட்சிகளும் இந்த கதைக்கும் கச்சிதமாக பொருந்தி விடுகிறது.

அடிக்கடி தேவா தன் காதலியை மூதேவி என்று திட்டுகிறான். கலாச்சாரம், பண்பாடு, மரபு என்ற கோட்பாட்டில் வாழ்ந்து வரும் சமூகத்தில் அதிலும் தமிழகத்தைப் பொறுத்தவரை மூதேவி என்பது அமங்கலமான வார்த்தை. அதை காதலன் அடிக்கடி சொல்வதும் காதலி அதைக் கேட்டு உணர்ச்சிவசப்படுவதும் இது எதையும் எதிர்பார்க்காத காதலில் மட்டுமே சாத்தியம் என்று கூறுகிறது. ஆம்... பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நடைபெற்றிருந்தாலும் சரி, காதலித்து செய்திருந்தாலும் சரி, திருமணமான பிறகு மூதேவி என்ற வார்த்தையை கணவன் சொன்னால் அது இருவருக்கிடையில் மிகப்பெரிய விரிசலை இட்டுச்செல்லும் அளவுக்கு அமங்கலமான வார்த்தையாக திகழ்கிறது. அவ்வளவு ஏன்... இந்த வார்த்தைகளால் மருமகன் தன்னுடைய மகளை திட்டினான் என்பது தெரிந்தால் அந்த பெண்ணின் பெற்றோர் கூட அந்த மாப்பிள்ளைக்கு மிகப்பெரிய எதிரியாக தெரிய வாய்ப்பு இருக்கிறது.

"உன்னைய அழைச்சிட்டு போய் பார்த்துக்குறேன்" என்று தேவா சொல்லவும், "பார்த்துக்குறியா இல்ல வச்சிக்குறியா... இனி நீ என்னை பார்த்துக்கிட்டா வப்பாட்டிதானே..."

"நம்மளை இப்படி பார்த்தா கள்ளகாதலர்கள்னுதான் சமூகம் சொல்லும்" போன்ற வசனங்கள் நிதர்சனத்தை சொல்லுகின்றன.
எனக்கு தெரிந்த ஒருவர் தொடர்ந்து மது அருந்தியதன் காரணமாக குடல் மிக மோசமாக பாதிக்கப்பட்டு மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்த பிறகு உயிர் பிழைத்தார். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அவரது மகனிடம், "நான் பட்ட அவஸ்தை உனக்கு வேணாண்டா... இனிமே குடிக்காத..." என்று சொன்னார். அப்போது தலையை ஆட்டிய அவரது மகன் வெளியில் வந்ததும் என்னிடம், "அவருக்கு உடம்பு வீக்கா இருந்துருக்கு... அதனால சரக்கு ஒத்துக்கலை... இவர் என்னைய குடிக்காதன்னு சொன்னா நான் கேட்பேனா...?" என்று சொன்னதுடன் நேராக அவன் தேடிச் சென்றது மதுக்கடையைத்தான்.

தான் விரும்பிய காதலிக்கு புற்றுநோய் இருப்பது தெரிந்தும், காதலன் கதாபாத்திரம் சிகரெட் பிடிப்பதை விடாமல் இருப்பது, இப்படி ஒரு சம்பவம் நடந்த பிறகு உடனே திருந்துவது எல்லாம் சினிமாவிலும் கதைகளிலும்தான் சாத்தியம் என்ற எதார்த்தத்தை கூறிச் செல்கிறது.

பல்வேறு நிகழ்வுகளில் திருமணத்தை மீறிய உறவுகளில் பொதுவாக பேசப்படுவது உடல் சார்ந்த தொடர்புதான். ஆனால் அது மிகக் குறைவாகவே இருக்கக்கூடும். உண்மையில் என்ன நிகழ்கிறது என்பதை இந்த படத்தைப் பார்த்தால் ஓரளவேனும் புரிந்து கொள்ளலாம்.

உண்மையில் புற்றுநோய் பாதித்த ஒரு நோயாளியுடன் நாமும் சென்று அந்த அறையில் உரையாடிய மனநிலையை இந்த படம் ஏற்படுத்தி விட்டது. நடிகர்கள் நடிப்பது தெரியாமல் அந்த கதாபாத்திரங்கள் நம் கண் முன் இருப்பதாக உணரச்செய்வதுதான் சிறந்த நடிப்பு என்று சொல்வார்கள். அதை மிகவும் கச்சிதமாக செய்திருக்கிறார்கள் கதையின் நாயகனும் நாயகியும். 
இந்த படம் ஏன் மழை பெய்யும் காட்சியுடன் துவங்குகிறது என்று யோசித்தேன். நம்முடைய பழைய நினைவுகளை, அதிலும் இதமாக உணரக்கூடிய ஞாபகங்களை மீண்டும் கண் முன்னால் கொண்டு வருதில் மழைக்கு முக்கிய பங்கு உண்டு.

"நம்ம ரெண்டு பேருக்கும் ஏன் கல்யாணம் ஆகலை"

"ஏன்னா நம்ம ரெண்டுபேருக்கும் சண்டையே வராது. அதான் கடவுளாப் பார்த்து சேர்த்து வைக்கலை..."

இந்த வசனத்தைப் பார்க்கும்போது, திருமணம் ஆனவர்கள் சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்க வேண்டும். அவர்களுக்குள் காதல் இருக்கக்கூடாது என்று யாரோ சாபம் விட்டுவிட்டதாகத்தான் தோன்றுகிறது. 

ஒரு தமிழ் திரைப்படத்தில் இதேபோல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட காதலி கடைசி காலத்தில் காதலனைப் பார்க்க வேண்டும் என்று வந்து விடுவாள். அவள் இறந்த பிறகு செய்தி தெரிந்ததும் அந்த காதலனின் மனைவி, "என்கிட்ட சொல்லியிருக்கக் கூடாதா... நான் கடைசி வரைக்கும் அவளுக்கு பணிவிடை செஞ்சு அனுப்பியிருப்பேனே" என்று கோபிப்பதாக காட்சி இருந்தது.

இன்னொரு திரைப்படத்தில் மனைவியின் காதலன் மனநிலை பிறழ்ந்து சுற்றிக் கொண்டிருப்பவனை காதலியின் கணவன் அரவணைத்து அழைத்துச்செல்வதாக இருந்தது.

இந்த படத்தைப் பார்க்கும்போது மிக மிக அரிதான விதிவிலக்குகளாக மட்டுமே இருக்க முடியும் என்பதும், இந்த மாதிரி கணவன் அல்லது மனைவிஅதெல்லாம் நிஜவாழ்வில் கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை என்பதையும் படம் எடுத்து விளக்கியது போல் இருந்தது.

இப்படி ஒரு காதலியை சந்திக்க வரும் கணவன் அவனுடைய மனைவிகிட்ட பொய் சொல்லிட்டுதான் வர வேண்டியிருக்கும் என்பதுதான் உண்மை.

நிஜ வாழ்வில் அல்லது திருமண வாழ்வில் கணவன் அல்லது மனைவி இருவரில் யாராவது ஒருவர் மற்றவரை செயல்களால் அல்லது வார்த்தைகளால் காயப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
நான் என் துணையிடம் அன்பு செலுத்துகிறேன் என்று தனக்கு தானே நியாயம் கற்பித்துக் கொண்டு செயல்படுவது கூட ஒரு கட்டத்தில் அந்த துணையை ஏதோ ஒரு விதத்தில் காயப்படுத்தும் விதமாகவே இருக்கிறது.

இப்படி காயப்படுத்துகிறேன் என்பதைக் கூட ஒப்புக்கொள்ள மறுக்கும் அல்லது உணராமல் இருக்கும் கணவன் அல்லது மனைவிதான் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் பெரும்பகுதியினர் என்பதுதான் உண்மை.

அந்த நேரத்தில் போன் செய்யும் மனைவியிடம், "நான் ஒரு மீட்டிங்ல இருக்கேன்... 5 நிமிசத்துல கிளம்பிடுவேன்..." என்ற வசனம் இதுதான் உலகம். இப்படித்தான் வாழ்க்கை செல்கிறது என்பதை உணர்த்தி விடுகிறது.

இந்த படத்தில் ஜெனி, தன் வீட்டு பணிப்பெண்ணிடம் விபரம் சொல்லியிருக்கேன், எல்லாம் முடிஞ்சதும் வந்து தூக்கி போட்டுட்டு போ என்று சொல்கிறாள்.

ஆனால் அவன் உதட்டளவில், "ஏன் அப்படி சொல்ற... நான் அடிக்கடி வந்து பார்க்குறேன்..."என்பான். அது உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள் அல்ல. வெற்று சமாதானம்தான் என்பதை முக பாவனையிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.

"வேணாம்... நீ யார்கிட்டயும் பொய் சொல்லக் கூடாது. அப்படி சொல்றப்ப நீ தவிப்ப. உன்னைக் கஷ்டப்படுத்திடக் கூடாது என் காதல்.''

இந்த வசனம்தான் மொத்த படத்தின் மையக்கருத்து என்பது என்னுடைய பார்வை.
இந்த படம் "கிரவுட் ஃபண்டிங்" முறையில் தயாரிக்கப்பட்டதால்தான் எந்தவித அலங்கார பூச்சுக்களும் வியாபார சமரசங்களும் இல்லாமல் உண்மையை அப்படியே படமாக்க முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

No comments:

Post a Comment