Sunday, April 5, 2020

மாற்றம் என்பதே மாறாதது... (30.09.2018ம் தேதி பிரசுரமான சிறுகதை)

'இந்தியா சுதந்திரமடைந்து, இத்தனை ஆண்டு காலம் கடந்து, நம்ம ஊர்ல, ரயில்வே ஸ்டேஷன் மற்றும் ரயில் பாதை அமைக்க, அரசு முடிவு பண்ணியிருக்குறதை நினைச்சு சந்தோஷப்படுறதா இல்ல, அதுக்காக, நம்ம ஊருல இருக்குற எல்லா விளை நிலம் மற்றும் பாதி பேரின் வீடுகளையும் பறிகொடுத்துட்டு ரோட்டுல நிற்கப் போறோமே... அதை நினைச்சு அழுது புலம்புவதா...' என்று தெரியாமல் தவித்துப் போய் நின்றது, அரசன்பந்தல் கிராமம்.

பக்கத்தில் உள்ள நகரத்திலிருந்து, அந்த கிராமத்துக்கு வரும் வழி முழுவதும், இரு பக்கமும், அரச மரங்கள் பந்தல் போல் குடை பரப்பி நிற்பதால் தான், 'அரசன்பந்தல்' என்று இந்த ஊருக்கு பெயர் வந்ததாக, கிராமத்தில் உள்ள வயதானோர் சொல்வர். அரசன்பந்தல் பெயர், பேச்சு வாக்கில், 'அரசம்பந்தல்' என்றானது.கிராமத்து நுழை வாயிலில் இருந்த அந்த பெரிய அரச மரத்தடியில், ஊர் மக்கள் அனைவரும், அவர்கள் வாழ்வுக்கான வெளிச்சத்தை கண்டு விடலாம் என்ற நம்பிக்கையில், இரவு, 10:00 மணிக்கு கூடி இருந்தனர்.

''ரயில் பாதை அமைக்கப்பட்டா, நாலு பயணியர் ரயிலும், ஆறு விரைவு ரயில்களும் இயக்கப்படும்ன்னு வழித்தடத்தோட அறிவிச்சிருக்காங்க...

''மத்த ரயிலை விடுங்க... சென்னைக்கு ஒரு ரயில், நம்ம ஊர்ல இருந்து கிளம்புனா, இப்ப, நம் மாவட்டத்துல இருக்குறவங்க பயணம் பண்ணுற, 20 பேருந்துகள் தேவையில்லை... ஒரு ரயில், குறைஞ்சது, 20 பேருந்துகளோட தேவையை பூர்த்தி செய்யுது... அவ்வளவு டீசல் மிச்சம்ன்னு சொல்றதை விட, பேருந்து மட்டுமல்லாம, கார், வேன்னு எவ்வளவு பேர் போறாங்க... அது விடுற புகை, ஏற்படுத்துற விபத்து எல்லாம், ரயில் போக்குவரத்து சிறப்பா இருக்குற பகுதிகள்ல குறையுது. நாம இதையெல்லாம் யோசிக்கணும்... இன்னும் பழங்கால கதைகளையே பேசக்கூடாது,'' என, கூட்டத்திலிருந்து ஒருவர் குரல் கொடுத்தார்.

''எது பழங்கால கதை? எங்க தாத்தா காலத்துலேயே, ரயில் பாதை வேணும்ன்னு அரசாங்கத்துக்கு மனு கொடுத்து கொடுத்து, ஆசை நிறைவேறாம, அவர் மட்டுமில்லாமல், அடுத்த தலைமுறையான எங்க அப்பாவும் போய் சேர்ந்துட்டாரு...
''இப்போ நாம சமீப காலமா ரயில் பாதை கேட்குறதையே மறந்தாச்சு... ஆனா, திடீர்னு அரசு அறிவிச்சு இருக்குன்னா, அது, நம்ம மேல உள்ள அக்கறையாலயா... இல்லவே இல்லை. அவங்க, 10 டிரெயின் என்ன, 60 டிரெயின் விடட்டும்... அதுல பயணம் பண்ண, நாம இங்க வாழப்போறது இல்லை."

''ரயில் பாதை அமைக்க, நம்ம மொத்த நிலத்தையும் கையகப்படுத்த, அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கு... நம்ம பகுதி பூமிக்குள்ள, ஏதோ தாது இருக்காம். அதை வெட்டி எடுத்து, துறைமுகத்துக்கு கொண்டு போறதுக்காக தான் இந்த திட்டம் வர்றதுன்றது, ஊரறிஞ்ச ரகசியம். இது, உங்க எல்லாருக்கும் கூட தெரிஞ்சிருக்கும்,'' என்றான், மற்றொருவன்.

இப்போது, அந்த கிராமத்திலேயே படித்த, ஓரளவு சிந்திக்கக் கூடிய கோபால்
பேச ஆரம்பித்தான்...
''நீ சொல்றது, நுாத்துக்கு நுாறு உண்மை தான். ஆனா, நாம இன்னொரு விஷயத்தையும் யோசிக்கணும்... 'சுந்தரம்... ' என்று தன் நண்பனை விளித்து, ''நம்ம ஊரு கிளை நுாலகத்துல, வைரமுத்துவோட, 'கள்ளிக்காட்டு இதிகாசம்' நாவலை எத்தனை முறை எடுத்து படிச்ச... வைகை ஆத்துல அணை கட்டும்போது, மக்களோட எத்தனை கிராமம், காணாமப் போனதுன்னு படிச்சிட்டு, எப்படி அழுதுருக்க...
அணையோட நீர்ப்பிடிப்பு பகுதிகள்ல காலம் காலமா வாழ்ந்தவங்களோட தியாகத்தால, எத்தனையோ ஊர், பாசன வசதி பெற்று செழிக்கிறது... ஆக மொத்தத்துல, யாரோ தியாகம் பண்ண, யாரோ வாழப் போறாங்க...

''ஆனா, இப்போ, நாம காணாமப் போகப் போறோம்... நம்ம கதையை எழுத யாராச்சும் இருப்பாங்களான்னு தெரியலை... நம்ம சோகக் கதை வெளியில தெரியாமலேயே போகப் போகுது,'' என்ற கோபாலுக்கு, கண்கள் கலங்கின.

''ஏம்ப்பா... நம்ம ஊர்ல நிறைய பேர் படிச்சிருந்தாலும், எதையும் ஆராய்ஞ்சு பார்த்து, கொஞ்சம் புத்தியோட பேசுறது நீயும், சுந்தரமும் தான். இப்போ நீங்களே, அரசாங்கம் கொண்டு வந்த இந்த திட்டத்தால, நாம சமாதியாகப் போறது மாதிரி பேசுறீங்களே,'' என்றார் முன்னாள் பஞ்சாயத்து தலைவர், வீரமணி.

அதைத் தொடர்ந்து ஆளாளுக்கு பேசினர்...

''அரசாங்கத்தை எதிர்த்து, நாம எதுவும் செய்ய முடியாது... வலுக்கட்டாயமா கிளம்பணும்ன்னு உத்தரவு போட்டுட்டாங்கன்னா, நாம வேற என்ன செய்யுறது!
''நாட்டுல எத்தனையோ அணை, ரோடு, பஸ் ஸ்டாண்ட் கட்டுறாங்க... எல்லாமுமே விளைச்சல் நிலத்துக்கும், மரம் மட்டைக்கும் சமாதி கட்டித்தான் எழும்பி நிக்குது.

''இன்னைக்கு நஷ்டம் நமக்குன்னு சொன்னதும், புலம்பி தவிக்கிறோம். பக்கத்து ஊர்ல மெடிக்கல் காலேஜ், கலெக்டர் ஆபீஸ், பஸ் ஸ்டாண்ட், கோர்ட்டுன்னு மொத்தமா நிலத்தை வளைச்சப்போ, நாம யோசிச்சோமா?''

''நிலத்தை, வீட்டை விட்டு வெளியேறுறது பிரச்னை இல்லை. அரசாங்கத்தோட திட்டத்துக்காக, நிலம் எடுக்குறப்ப, சில பெரும் முதலாளி, பண்ணையாருங்க, வேணும்ன்னா, அரசாங்கத்துகிட்ட இருந்து, சாமர்த்தியமா, நஷ்ட ஈடு வாங்கி, வேற முதலீடு பண்ணி முன்னேறி இருப்பாங்க...

''ஆனா, நம்மள மாதிரியான சாமானிய ஆளுங்களுக்கு, சந்தை விலை இல்லாம, அரசாங்கத்தோட, 'கைடு வேல்யூ'படி கிடைக்கிற நஷ்டஈடு, நாலு நாளைக்கு கூட காணாது. அந்த பணத்தை வெச்சு எதையும் உருப்படியா பண்ண முடியாம, அடுத்து, என்ன செய்யலாம்ன்னு யோசிக்கிறப்பவே, அந்த இத்தனுாண்டு காசும், காணாம போயிடும்...''

''விவசாயம் பார்த்துகிட்டு நிம்மதியா இருந்தவனெல்லாம், சென்னை, திருப்பூர் மாதிரி ஊருக்கு, 'வாட்ச்மேன்' வேலைக்கும், ஜவுளிக் கடை, இரும்புக் கடை வேலைக்கும் போயிடுறான்.

''இதிலும் பல பேர், சென்னை மாதிரி ஊர்ல, வாடகைக்கு வீடு பிடிச்சு, தங்க கூட வருமானம் இல்லாம, 'பிளாட்பாரத்'துல வாழ்க்கையை நடத்திட்டு இருக்காங்க... நம்ம நிலைமையும் அப்படி ஆகிடுமோன்னு பயமா இருக்கு,'' என்று, நியாயமான கவலையை வெளியிட்டார், ஒருவர்.

கடைசியாக பேசிய அந்த நபர், நிதர்சனத்தை சொன்னதும், கிராமமே அதிர்ச்சியில் உறைந்தது.

இதுபோல் நடப்பதை பத்திரிகைகளில் அவ்வப்போது படித்திருந்தாலும், ஏதோ ஒரு செய்திக் கட்டுரை என்ற அளவில் கடந்து சென்று விடுவர்.

இப்போது தங்களுக்கும் அந்த நிலைமை ஏற்படப் போகிறது என்ற அச்சம், அந்த கிராம மக்கள் கண்களில் நன்றாகவே தெரிந்தது.

''இதையெல்லாம் யோசிக்கும்போது, போராடித்தான் ஆகணும் போலிருக்கே,'' என்று இன்னொருவர் கூறவும், அவசரமாக இடைமறித்தான், சுந்தரம்...

''ஊரே திரண்டு நின்னு போராட்டம் பண்ணினா, அரசு அதிகாரி யாராச்சும் வந்து, பிரச்னையை கேட்டுட்டாச்சும் போனாங்க... அது எல்லாம் இப்ப வழக்கொழிஞ்சு போச்சு...
நாம அமைதியா போராடினாலும், அதுல ஏதாவது ஒரு முறையில வன்முறையை வெடிக்க வெச்சு, போராட்டத்தை அடக்க நினைச்சா, நாம என்ன செய்ய முடியும்?

''அதனால, நான் ஒரு வழியை யோசிச்சு வச்சிருக்கேன்... அரசாங்கம் அதை செஞ்சு குடுக்கும்ன்னு நம்பறேன். நாம, நம்பிக்கையோட கேட்டுத்தான் பார்ப்போம்.

''ஒருவேளை, நம்ம கோரிக்கையை அரசு ஏத்துக்கிட்டா, நாம யாரும் சென்னை, திருப்பூர்ன்னு கூலி வேலைக்கு போய், 'பிளாட்பாரத்'துல வாழ்ந்து, 'அட்ரஸ்' இல்லாம தொலைஞ்சு போக வேணாம்,'' என்ற சுந்தரத்தை, எல்லாரும் ஆவலுடன் பார்த்தனர்.

''மார்க்கெட் விலையை விட, அஞ்சு மடங்கு நஷ்டஈடு வேணும்ன்னு கேட்கணும்...''
அப்போது ஒருவர் எழுந்து, ''அப்படி கேட்டோம்ன்னு வெச்சுக்க... இன்னைக்கு நம்மளை காலி பண்ணி விரட்டுறதுக்காக, முதல்ல சரின்னு சொல்லிட்டு, பிறகு, எத்தனை வருஷம் ஆனாலும் கண்டுக்கவே மாட்டாங்க... நாம தான் கோர்ட்டுல வழக்கு போட்டுட்டு அலையணும். முன்பெல்லாம், அப்படி வழக்கு போட்டா, 20 வருஷம் கழிச்சாவது தீர்ப்பு வந்துச்சு. இப்போ, மக்கள் நலனுக்காக, நிலத்தை அரசு எடுக்குறப்ப, அது குடுக்குறதை வாங்கிட்டு போங்கன்னு, வழக்கு தள்ளுபடியானாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை,'' என்றார்.

''ஏண்ணே அவசரப்படுறீங்க... என்று இடைமறித்த சுந்தரம், 'ரேஷன்ல அரிசியா கொடுக்குறதால தான் பல குடும்பங்கள்ல சாப்பிட முடியுது... மானியத்தை, பணமா போட்டிருந்தாங்கன்னா, நிச்சயம் பொறுப்பில்லாத குடும்பத் தலைவர்கள் உள்ள குடும்பத்தினர் பட்டினி தான் கிடக்கணும்... உங்களுக்கு விஷயம் புரிஞ்சிருக்கும்'ன்னு நினைக்கிறேன்.

''அதனால, நான் என்ன சொல்றேன்னா, நாம பாடுபட்டு, நிலத்தை பசுமையா மாற்றி வெச்சிருக்கோம். அதை, நாட்டு மக்கள் நலனுக்காக, அரசாங்கம் எடுக்குறதை தடுக்குறது நியாயம் இல்லை. அதுக்கான சக்தியும் நம்மகிட்ட இல்லை. ஒவ்வொருத்தர்கிட்டயும் எடுக்குற நிலத்துக்கு ஈடா, அரசுக்கு சொந்தமான, ரெண்டு மடங்கு தரிசு நிலத்தை கொடுக்கட்டுமே... அந்த தரிசு நிலத்துல நமக்கு தனித்தனியா வீடும் கட்டி கொடுக்கட்டும்.
அந்த நிலத்துல, இலவசமா, 'போர்' போட்டு தரட்டும்... இலவச மின்சாரம் கொடுக்க வேண்டாம்... அதுக்கு பதில், சூரிய மின் சக்தி மோட்டார் செட் அமைச்சு கொடுக்கட்டும்.

ராஜஸ்தான் பாலைவனத்துல, குளங்கள் வெட்டி, மழை தண்ணீரை சேமிச்சு, சிறப்பா விவசாயம் செய்யுறாங்க... நாம, நம்ம செலவுலயோ, அரசு செலவுலயோ கூட குளம் வெட்ட வேண்டாம்... மண் பாண்டங்கள், செங்கல் செய்யுறவங்களுக்கு மண்ணை வித்தா, அவங்களே குளத்தோட அளவுக்கு மண்ணை வெட்டி எடுத்துட்டு, நமக்கான குளத்தையும், பணத்தையும் தந்துடப் போறாங்க.

குளத்து தண்ணீரை வீணடிக்காம, சொட்டு நீர் பாசனமோ, அதைவிட மேம்பட்ட தொழில்நுட்பம் என்ன இருக்கோ அதை பயன்படுத்தி, தரிசு நிலங்களை, விளை நிலமா மாத்துவோம்... யாரோ போட்ட பாதையில போறதை விட, நாமே புது ராஜபாட்டையை உருவாக்கி, அதுல பயணம் செய்யுறது எவ்வளவு சுகம் தெரியுமா?

நிலத்தை தர மறுத்தா தான் அரசு வலுக்கட்டாயமா நம்மை வெளியேற்றும். அதுக்கு முன், நாமளே மாற்று வழியை சொல்லி, வாழ வழி கேட்டா, செய்யாமலா போவாங்க... நம்ம கிராமம் முன்னுதாரணமாகும். தொழிற்சாலைகளும் பெருகி, இன்னொரு பக்கம் தரிசு நிலங்கள், விவசாய நிலமாவும் மாறினா, நாடு எங்கேயோ போயிடும்; நம் வாழ்வாதாரமும் பாதிக்காது.

நாளைக்கு, இந்த மாற்று யோசனையை முன் வைத்து, அதிகாரிகள்கிட்ட கோரிக்கை வைப்போம்... இதுக்கு எத்தனை பேர் சம்மதிக்கிறீங்க,'' என்று கேட்டான், சுந்தரம்.
எல்லாவற்றுக்கும் மாற்றம் உண்டு; மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை, அரசன்பந்தல் கிராம மக்கள் ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக, அனைத்து மக்களின் கைகளும் உயர்ந்தன.

வாசகர்களின் கருத்து
1. திருஅருட்செல்வன் - dindigul, இந்தியா 03-அக்-2018
அட அட அட வாங்கப்பா இது மாதிரி எதாவது ஆலோசனை சொல்லுங்கப்பா. செம செம சூப்பர் பா.

2. dChallenger - thanjavur,இந்தியா 30-செப்-2018

யாரோ போட்ட பாதையில போறதை விட, நாமே புது ராஜபாட்டையை உருவாக்கி, அதுல பயணம் செய்யுறது எவ்வளவு சுகம் தெரியுமா? ''நிலத்தை தர மறுத்தா தான் அரசு வலுக்கட்டாயமா நம்மை வெளியேற்றும். அதுக்கு முன், நாமளே மாற்று வழியை சொல்லி, வாழ வழி கேட்டா, செய்யாமலா போவாங்க... நம்ம கிராமம் முன்னுதாரணமாகும். தொழிற்சாலைகளும் பெருகி, இன்னொரு பக்கம் தரிசு நிலங்கள், விவசாய நிலமாவும் மாறினா, நாடு எங்கேயோ போயிடும் நம் வாழ்வாதாரமும் பாதிக்காது.......சிறப்பு. அருமையான கதை.கருத்துகள். வாழ்த்துகள் கதையாசிரியர் திரு சரவணன் அவர்களுக்கு.........

3. Manian - chennai,இந்தியா 30-செப்-2018

நல்ல சிந்தனையை வெளியிடும் கதை இது.

No comments:

Post a Comment