Saturday, April 25, 2020

மாண்புமிகு பாரதப் பிரதமர் உரையில் கூறிய - சுயசார்பு வாழ்க்கை

மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள் யாரையும் சார்ந்து இருக்காமல் சுயசார்பு வாழ்க்கை வாழ வேண்டும் என்று கொரோனா வைரஸ் இந்த உலகுக்கே பாடம் கற்றுத் தந்துள்ளதாக உரையாற்றிய செய்தி படித்தேன்.
அதிலிருந்து சில வரிகள்-
இந்த வைரஸ் நமக்கு பல பாடங்களை கற்றுத் தந்துள்ளது. நம் அன்றாட தேவைகளை நாமே நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் சுய சார்புடையவர்களாக மாற வேண்டும் என்பதை கற்றுத் தந்துள்ளது. நாம் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை கொரோனா வைரஸ் நமக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
********
சுயசார்பு வாழ்க்கை என்ன என்று புரியாதவர்களுக்காக எனக்கு கிடைத்த சில விபரங்களை கீழே எழுதியுள்ளேன்.
50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில ஆண்டுகளில் புரட்டாசி மாதம் முதல் மார்கழி 15 நாள் வரையிலும் கூட அடிக்கடி மழை பெய்து கொண்டே இருக்குமாம். அதாவது சுமார் 100 நாட்கள்.
1965 - 1968 காலகட்டத்தில் அப்படி அடைமழை பெய்த காலத்தில் முன்பே விளைவித்து வைத்துக்கொண்ட துவரம்பருப்பு, தட்டைப்பயிறு (காராமணி) ஆகியவை குழம்புக்கு பயன்படுத்துவார்களாம். அரிசி, கேழ்வரகு, வரகு, குதிரைவாலி அரிசி போன்றவை வீடுகளில் சேமிப்பில் உள்ளதுதான் தினசரி உணவு.
வைக்கோல், கடலை அறுவடை முடிந்த பிறகு கிடைக்கும் காய்ந்த செடி, பருத்திச் செடி போன்றவை மழையில் நனையாதவாறு கால் நடைகளுக்காக சேமிப்பில் இருக்குமாம். மழை விடும் நேரத்தில் புற்கள் மட்டும் அறுத்து வருவார்களாம்.
கீரை, பூசணி, பரங்கிக்காய், கத்திரிக்காய், தக்காளி போன்றவை ஏழெட்டு பேர் வீடுகளில் காய்த்திருந்தால், வளர்ந்திருந்தால் கூட அந்த கிராமத்தில் உள்ள எழுபது எண்பது வீடுகளுக்கு இலவச வினியோகம் நடக்குமாம். (நிபந்தனை இல்லாத பண்ட மாற்று).
கிடைக்கும் காய்கள், பயறு, கூழ்வடகம், கருவாடு, மிதுக்கு வத்தல், மோர்மிளகாய் ஆகியவற்றை வைத்து உணவு தேவைகளை முடித்து விடுவார்களாம்.
மழையினால் அருகில் உள்ள நகரத்துக்கு செல்ல முடியாமல் சிரமமாக இருக்காதா? என்று கேட்டேன்.
வசதி இருப்பவர்கள் மாதம் ஒருமுறை நகரத்தில் உள்ள சந்தைக்கு செல்வார்கள். மற்றவர்கள் எல்லாம் தீபாவளி, பொங்கல், ஆடி மாதப்பிறப்பு, சித்திரை பிறப்பு ஆகியவற்றுக்குதான் பொருட்கள் வாங்க நகரம் நோக்கி செல்வோம் என்றார்கள்.
இப்போது ஒரு வேளை பால் கிடைக்கவில்லை என்றால் எல்லாம் ஸ்தம்பித்து விடுகிறது.
தண்ணி வரலைன்னா என்ன செய்வீங்க?
மழை காலத்துல வீட்டு கூரையில் விழுந்து வர்ற தண்ணீரே வெளி புழக்கத்துக்கு போதும். அது தவிர ஆத்துல தண்ணீர் கரை புரண்டு ஓடும். அதில்குளிக்க பயப்படுப்வர்கள் கண்மாய்களிலும், ஊருணி (குளம்) ஆகியவற்றிலும் குளிப்போம்.
கரண்ட் இல்லன்னா என்ன செய்வீங்க?
அப்போ எங்க கிராமத்துக்கே கரண்ட் கிடையாதே. மண்ணெண்ணை விளக்குதான்.
(இந்த தகவல்கள் எல்லாம் என்னுடைய அம்மா அவரது 12 வயது வாக்கில் பெற்ற நேரடி அனுபவத்திலிருந்து எனக்கு சொன்னவை. அவர் சொன்னதில் மிகச் சிறு விவரங்களை மட்டும்தான் இங்கே நான் கூறியுள்ளேன்.)

No comments:

Post a Comment