Friday, April 3, 2020

தேங்காயில் பந்துவீச்சு...

தமிழ்ச்சரம் - சித்திரைத்திருநாள் கட்டுரைப்போட்டி

அன்றாட வாழ்வில் நகைச்சுவை / பிரிவு 2

3-ஆம் பரிசு பெற்ற கட்டுரை
சினிமாவில் அடுத்தவரை மட்டப்படுத்தி பேசுவதும், தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு அவதிப்படுவதும்தான் அதிக அளவில் நகைச்சுவையாக பார்க்கப்படுகிறது. 
தமிழ்ப்படங்களை விட்டு விடுங்கள். வசனமே இல்லாமல் தன்னுடைய செய்கைகள் மூலமாக உலகத்தையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் படங்களின் நகைச்சுவை கூட இப்படித்தான். 
பட்டிமன்றம், பள்ளி, கல்லூரி விழாக்களில் என்னிடம் படித்த மாணவர் இப்படி செய்தார், என் வீட்டுக்கு எதிரில் குடியிருந்தவர், ரயிலில் உடன் பயணம் செய்தவர் ஆகியோர்கள் பேசியது, செய்ததாக கூறும் நகைச்சுவைகள் கூட பல நேரங்களில் மிகைப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றன.
இன்றைய சமூக வலைதள உலகில் கூட அரசியல் மற்றும் நாட்டு நடப்பை வைத்து கேலி செய்யும் மீம்ஸ் எனப்படும் வகை நகைச்சுவையையும் மக்கள் அதிகமாகவே ரசிக்கிறார்கள்.
அப்படி இல்லாமல் நம் அன்றாட வாழ்வில் சின்ன சின்ன குழப்பங்கள், விபரம் புரியாமல் கேட்கும் கேள்விகள் ஆகியவற்றில் கூட நகைச்சுவைகள் நிறையவே நிரம்பியிருக்கின்றன. ஆனால் நாம்தான் அவற்றை ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் எந்நேரமும் எதை நோக்கியாவது ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
அதையும் மீறி யாராவது நகைச்சுவையாக பேசினாலோ அல்லது நம்மை நகைச்சுவை காட்சிப் பொருளாக்கினாலோ, என்னை எப்படி அசிங்கப்படுத்தலாம் என்று சண்டைக்கு சென்று விடுகிறோம்.
இப்போது கூட தமிழ்ச்சரம் அறிவித்துள்ள இந்த கட்டுரைப்போட்டிக்கான அறிவிப்பைப் பார்த்ததும்தான் பழைய நினைவுகளை வரிசையாக அசை போட்டுப் பார்த்தேன். அவ்வளவு சம்பவங்கள் வரிசைகட்டி வருகின்றன.

***
எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன்பு பிள்ளையாரை வணங்கி தொடங்க வேண்டும் என்று தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் சொல்வார்கள். நானும் பிள்ளையார் கோவிலில் நடந்த சிறு சம்பவத்தில் இருந்து தொடங்குகிறேன்.
ஒரு பிள்ளையார் கோவிலில் அன்று சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் முடிந்த பிறகு அர்ச்சனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெரிய தீபாராதனை முடிந்த பிறகு பிரசாதம் கொடுக்கும் இடத்தில் நீண்ட வரிசை. நானும் வரிசையில் நின்றேன்.
ஒரு பெண்மணி, பிரசாதம் கொடுக்கும் நபரிடம் 'இன்னும் கொஞ்சம் கொடுப்பா...' என்றார்.
அந்த நபர் கொஞ்சமும் சிரிக்காமல், 'அக்கா... கொஞ்சமா சாப்பிட்டாதான் பிரசாதம், அதிகமானா அது டிபன்.' என்று சொன்னார். சுற்றி இருந்தவர்களில் நிறைய பேர் சிரித்து விட்டார்கள். நானும்தான்.
ஆனால் அந்த பெண், விடாமல், 'இல்ல தம்பி... என் பொண்ணு வரிசையில நின்னு வாங்க கூச்சப்பட்டு என்னைய வாங்கிட்டு வர சொன்னா...' என்று கேட்கவும், பிரசாதம் கொடுத்த நபர், 'அக்கா... சாமியையும் சர்க்கரை பொங்கலையும் நாமதான் தேடிப் போகணும்னு பொண்ணுகிட்ட சொல்லுங்க...' என்று சொன்னபடி இன்னொரு கரண்டி பிரசாதம் கொடுத்து அனுப்பினார். இப்போதும் கூட்டத்தில் மீண்டும் சிரிப்பு.
***
சிலருக்கு கோவிலில் சிதறு தேங்காய் உடைத்து பழக்கம் இருக்காது. பழக்கம் இல்லாத சிலர் எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று அர்ச்சகரிடமோ அல்லது வேறு நபரிடமோ கொடுத்து உடைக்கச் சொல்வார்கள். வேறு சிலர் தாங்களே முயற்சித்துப் பார்ப்பார்கள். தேங்காய் உடையாமல் கிரிக்கெட்டில் பீல்டிங் செய்து பந்தை தூக்கி வீசியது போல் உருண்டு ஓடும்.
இன்னும் சிலர் உடைக்கும் தேங்காய் சிதறாமல் சரிபாதியாக உடையும். அதைப் பார்த்தால் சட்னி அரைக்க தேங்காயை துருவும் சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக இப்படி உடைக்கிறார்களோ என்று தோன்றும்.
எனக்கு தெரிந்த ஒருவர் எப்போது தேங்காயை உடைத்தாலும் குறைந்தது இருபது இருபத்தைந்து சில்லுகளாக சிதறும். அவரின் திறமை குறித்த ரகசியம் கேட்டேன். வேறு யாரிடமும் சொல்லி விடாதீர்கள்... முக்கியமாக, என் மனைவியிடம் என்று புதிர் போட்டார். ஆவல் தாங்காமல், சரி... சொல்லுங்க என்றேன். 'என் மனைவி அல்லது அவள் தந்தையின் முகத்தை மனக் கண்ணில் கொண்டு வந்தால் போதும்... தூள்தான்...' என்றார்.
***
ஒரு நர்சரி பள்ளியில் என்னை சேர்த்திருந்தார்கள். அங்கு இருந்த ஆசிரியை என் பெயரை ஆங்கிலத்தில் எழுத சொல்லிக் கொடுக்கிறார். அதற்காக சிலேட்டில் என்னுடைய பெயரை ஆங்கிலத்தில் எழுதியும் கொடுத்தார். நான் அதைப் பார்த்தேன். அக்கம் பக்கத்தில் இருந்தவர்களின் சிலேட்டையும் பார்த்தேன். 

உடனே ஆசிரியையிடம் சென்று, "மிஸ்... மத்த பசங்க பேர்ல "A" அப்படிங்குற எழுத்து எங்கயாச்சும் ஒரு இடத்துலதான் எழுதியிருக்கீங்க... சில பசங்க சிலேட்ல எழுதவே இல்லை. என்னோட ‍பேர்ல மட்டும் ஒவ்வொரு எழுத்துக்கு பக்கத்துலயும் ஏன் எழுதுனீங்க..." என்று கேட்டேன். அப்போது அந்த ஆசிரியை சிரிப்பதா திட்டுவதா என்று குழம்பிய முகம் இன்னும் நினைவில் இருக்கிறது. வேறொன்றும் இல்லை ஜெண்டில்மேன்... "SARAVANAN" என்ற பெயரில் இருக்கும் எழுத்துக்களைப் பார்த்துதான் இந்த கேள்வியைக் கேட்டேன்.
***
அதே பள்ளியில் படிக்கும்போது வேறொரு சம்பவம். ஒருநாள் எனது பெற்றோருடன் பாண்டி நாட்டு தங்கம் என்ற சினிமாவை சோழா திரையரங்கில் சென்று பார்த்து விட்டு வந்தோம். 30 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் திரையரங்கம் சென்று படம் பார்ப்பது அவ்வளவு பெருமைக்குரிய விசயம். அதிலும் சிறுவர் சிறுமியருக்கு கொண்டாட்டமாகத்தான் இருக்கும். நானும் விதிவிலக்கா என்ன... அந்த செய்தியை பள்ளியில் பெருமையாக சக மாணவ மாணவிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். 

ஆசிரியை, "பர்ஸ்ட் ஷோ போனீங்களா...?" என்று கேட்டார். அவர் கேட்ட அர்த்தம் மாலை காட்சிக்கு சென்றீர்களா என்பது. ஆனால் எனக்கு அது புரியவில்லை. 
"இல்ல மிஸ்... படம் வந்து மூணு நாளாச்சு... பர்ஸ்ட் ஷோ எல்லாம் போகலை... நாங்க நேத்து சாயந்திரம்தான் போனோம்..." என்று உண்மை விளம்பியாக பதில் சொன்னேன். ஆசிரியையுடன் மற்ற மாணவர்கள், மாணவிகளும் இதைக் கேட்டு சிரித்தது எனக்கு நினைவில் இருக்கிறது. ஆக அன்றைய தினம் "பர்ஸ்ட் ஷோ" என்பதற்கு அர்த்தம் தெரியாத பச்சை மண்ணாக இருந்திருக்கிறேன்.
***
கல்லூரியில் படிக்கும்போது ஒரு சம்பவம்.
அன்று வகுப்பில் வருகைப்பதிவேடு எடுக்கும்போது வேறு வகுப்பைச் சேர்ந்த ஒருவன் வந்து அமர்ந்திருக்கிறான். வழக்கமாக வராத நபருடைய எண்ணை அழைக்கும்போது வேறு ஒருவன் யெஸ் சார் என்று சொல்லிவிடுவான். அன்று அப்படி சொல்லும்போது சொதப்பிவிட, தலைகளை எண்ணிப்பார்த்தபோது அந்த வகுப்பைச் சேராதவன் மாட்டிக் கொண்டான்.
அவ்வப்போது அரசுக் கல்லூரிகளில் இது வழக்கமாக நடக்கும் செயல்தான் என்றாலும் அன்று அந்த பேராசிரியர் அதிர்ச்சி அடைய வேறு ஒரு காரணம் இருந்தது.
ஆம்... அவன் அந்த கல்லூரி மாணவனே கிடையாது. கும்பகோணத்தில் படித்து வந்தவன், நண்பர்களைப் பார்க்க வந்து இப்படி மாட்டிக் கொண்டான்.
அந்த மாணவன் சொன்ன ஒரு வாக்கியத்தால் மாணவர்கள், மாணவிகள் மட்டுமல்ல... கல்லூரி துறைத்தலைவரும் முதல்வருமே சிரிப்பை அடக்க முடியாமல் தவித்துப் போய் விட்டார்கள்.
'ஒரு பேங்க்ல அக்கவுண்ட் வச்சிருந்தா, கோர் பேங்கிங் சிஸ்டம் மூலமா அந்த பேங்க்கோட எந்த கிளையிலயும் பணம் போடலாம் எடுக்கலாம்னு வசதி வர ஆரம்பிச்சிடுச்சு... நான் வேற கல்லூரி வகுப்புல வந்து உட்கார்ந்ததை தப்புன்னு சொல்றீங்களே...' என்று அவன் சொன்னது 2001ஆம் ஆண்டில். நகைச்சுவையாக சொன்ன பதிலால், 'வகுப்பை கட் அடிக்காம படிக்கிறது நல்ல விசயம்தான்... அதை நீ அட்மிஷன் போட்ட கல்லூரியில நீ படிக்கிற வகுப்புல போய் படிக்கணும்... அடுத்த ஊர்ல இருக்குற கல்லூரிக்கு வந்து நுழையக்கூடாது...' என்று அவனை எச்சரித்ததுடன் அனுப்பி விட்டார்கள்.
***
கல்லூரி மாணவர் பேரவை தேர்தல் நடந்து முடிந்திருந்தது. செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன் ஊர்வலமாக சென்று எங்கள் நகரத்தில் இருந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்றதும் காவலர்களும் சம்மதித்தார்கள்.
அந்த செயலாளர் சிலைக்கு மாலை அணிவிப்பது வரை, 'எங்கள் செகரட்டரி ............ வாழ்க...' என்று சொல்லிக் கொண்டிருந்த மாணவர்கள் திடீரென 'வருங்கால தமிழக முதல்வர் ................. வாழ்க...' என்று கோஷம் போடவும் ஒரு நொடி அங்கே இருந்த பொதுமக்கள் மட்டுமின்றி காவல்துறை அதிகாரிகளும் அதிர்ச்சியுற்று பின்பு சிரித்து விட்டார்கள்.
பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு காவலர் மட்டும், 'தம்பி... இது உங்களுக்கே ஓவரா தெரியலையா...?' என்று கேட்கவும், 'சார்... அப்துல்கலாம் ஐயா அவர்களே கனவு காணுங்கள்னு சொல்லியிருக்காங்க... அந்த உரிமை கூட இந்திய சுதந்திர நாட்டில் எங்களுக்கு இல்லையா...'ன்னு கேட்கவும், அந்த காவலர் புன்னகையுடன், 'நடத்துங்கப்பா... நடத்துங்க...' என்று வழி விட்டார்.
***
2001ஆம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட ஒரு அசாதாரண அரசியல் சூழ்நிலையால் கலவரம் ஏற்பட்டு பேருந்துகள் எல்லாம் நிறுத்தப்பட்டன. நாங்கள் குற்றாலம் சென்று விட்டு திரும்ப வரும்போது மதுரையில் சிக்கிக் கொண்டோம். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் திருச்சி வழியாக சென்னைக்கு மட்டும் ஐந்து ஐந்து பேருந்துகளாக காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
பேருந்து நிலையமே வெறிச்சோடி இருந்தது. அப்போது எங்களுடன் வந்த ஒரு நண்பனைக் காணவில்லை. மற்ற நான்கு பேரும் ஆளுக்கு ஒரு பக்கமாக தேடத் தொடங்கினோம்... ஒரு நடத்துனர், தெற்கே பேருந்து நிலையத்தின் பின்புறம் நோக்கி தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த நபரைக் காட்டி, அவரான்னு பாருங்க என்றார்.
அவனேதான் என்றபடி நான் ஓடினேன். எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் தூக்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்தான். ஒரு படத்தில் கவுண்டமணியை பயில்வான் ரெங்கநாதன் 'கோட்டைச்சாமி...' என்றவாறு பிடித்து உலுக்கி நிகழ் உலகத்திற்கு கொண்டு வருவாரே அப்படி அவனை பிடித்து உலுக்கிய பிறகுதான் அவனுக்கே சுய நினைவு வந்தது. சுற்றிலும் பார்த்து விட்டு, அதிர்ச்சியுடன் 'மாப்ள... இங்க என்ன இருக்கு... எதுக்கு இங்க வந்து நிக்கிறோம்...' என்று கேட்டான்.
'அது ஒண்ணும் இல்லடா... புதுசா கட்டின பேருந்து நிலையத்தோட பிளாட்பார்ம் எல்லாம் உறுதியா இருக்கான்னு இன்ஸ்பெக்ஷன் செய்ய வந்த... எல்லாம் சரியா இருக்கு... வா போகலாம்...' என்று சொல்லி அவனை திரும்ப அழைத்து வந்தேன். அதன் பிறகு ஊர் திரும்பும் வரை அவனுக்கு முன்னால் இரண்டு பேர், பின்னால் இரண்டு பேர் பாதுகாப்புடன்தான்(?!) அழைத்து வந்தோம்.
***
ரயில்வே துறையில் பணியாற்றிய அலுவலர் ஒருவர் சென்னையில் தனி வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்தினார். அந்த நிகழ்வுகளை படம் பிடிக்க வீடியோ கேமராமேனாக சென்றிருந்தேன். காலையில் யாகம் நடைபெற்றபோது மிகச் சில உறவினர்கள்தான் நாற்காலிகளில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
வீட்டின் உரிமையாளர் வரிசையாக வந்து கொண்டிருந்த உறவினர்களை வரவேற்கவும் முடியாமல் யாகத்திலும் கவனம் செலுத்தாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு இரண்டு பெண்கள். ஒரு பெண்ணுக்கு ஏழு வயது இருக்கலாம். அடுத்தவளுக்கு ஐந்து வயது இருக்கும் அவ்வளவுதான்.
அவர்கள் இருவரும் எவர்சில்வர் பிளாஸ்க்கில் இருந்த காபியை கப்புகளில் ஊற்றி ஒரு தாம்பாளத்தில் எடுத்துச் சென்று, கதை பேசிக் கொண்டிருந்த உறவினர்களிடம் நீட்டியபடி, 'இதைக் குடிச்சுட்டு தெம்பா கதை பேசுங்க...' என்று சொன்னார்கள்.
அவர்களுக்கு வெட்கமாக போய், 'கண்ணுங்களா... வந்தவங்களை நாங்க கவனிக்கிறோம்... நீங்க போய் விளையாடுங்க...' என்று காபி கப் இருந்த டிரேயை வாங்கியதுடன், விருந்தினர்களை கவனிக்க ஆரம்பித்தார்கள்.
நெருங்கிய அந்த உறவினர்களுக்கு வெட்கம் வரக் காரணம், சிறுமிகள் சொன்னதைக் கேட்டு வந்திருந்தவர்கள் சிரித்ததுதான் என்று சொல்லவும் வேண்டுமா?
***
நண்பனின் அண்ணன் திருமணத்திற்கு சென்றிருந்தோம். முதல் நாள் இரவு மாப்பிள்ளைக்கு நலுங்கு வைக்க வேண்டும். அழைத்து வாருங்கள் என்று சொன்னதும், நண்பர்கள் மணமகன் அறைக்கு சென்றார்கள்.
சில நொடிகளிலேயே அவர்கள் மாப்பிள்ளை இல்லாமல் வேகமாக ஓடி வந்ததைப் பார்த்து நண்பன் என்ன என்று விசாரிக்க, கூல்டிரிங்ஸ் வாங்கிக் கொடுத்தால்தான் மாப்பிள்ளை வருவேன் என்று அடம்பிடிப்பதாக கூறினார்கள். 'நீ வாடா...' என்று அழைக்க, நானும் நண்பனும் சென்றோம்.
போனதுமே நண்பன், 'ஏண்டா வெண்ணை... பொண்ணு வீட்டுல ஆம்பளைங்க யாரும் இல்லன்னு நாமதான் பொறுப்பு எடுத்து இந்த கல்யாணத்தை செஞ்சுகிட்டு இருக்கோம்... இப்ப உனக்கு கூல்டிரிங்ஸ் வேணுன்னா நான்தான் கடைக்கு ஓடணும்... என்ன நினைச்சுகிட்டு இருக்க ராஸ்கல்...' என்று திட்டவும், அங்கிருந்த பெண்கள் சத்தமாக சிரித்து விட்டார்கள். அப்போதுதான் மாப்பிள்ளையை தூண்டி விட்டது பெண்ணின் தோழிகள் என்பது தெரிந்தது.
'அண்ணே... மாப்பிள்ளை கெத்தை காட்ட நினைச்சது எல்லாம் சரிதான்... ஆனா கல்யாணத்தை யார் செய்யுறாங்கன்னு ஞாபகம் இல்லாத அளவுக்கு அண்ணி நினைவா?' என்று நானும் என் பங்குக்கு லேசாக வாரி விட்டு வந்தேன்.
***
ஒரு சில மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் செய்தித்தாள் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது என் பக்கத்தில் ஒரு பதிமூன்று பதினான்கு வயதுடைய சிறுவனும் ஏதோ பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தான்.
மீத தொகைக்கு ஐந்து ரூபாய் நாணயமும் ஒரு சாக்லேட்டும் கடைக்காரர் கொடுத்தார்.
அதற்கு அந்த பையன், 'ஏண்ணே... ஏற்கனவே பஸ்ஸ்டாண்டுல வாடகை அதிகம்னு இந்த பொருட்கள்ல நாலஞ்சு ரூபாயை அதிகமா வாங்கிட்டீங்க... வேற வழியில்ல, சரின்னு விட்டா என்னைக் கேட்காமலே இன்னொரு சாக்லேட்டையும் விக்கிறீங்க... உங்களுக்கு சில்லரைதானே எவ்வளவுக்கு வேணும்... என்றவாறு சட்டைப்பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்கள் சிலவற்றை எடுத்து கொடுத்து, பத்து ரூபாய் நோட்டைக் கொடுங்க...' என்று கேட்டான்.
அப்போதும் அருகில் இருந்தவர்கள் சிரித்தார்கள். அதைப் பார்க்கும்போது அங்கிருந்த பலர் பலமுறை பல்வேறு இடங்களில் இதுபோல் சாக்லேட் வாங்கியிருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. நாட்டு நடப்பு தெரியாத சின்னப் பசங்க என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்களில் பலர் வளரும் சூழ்நிலையைப் பொறுத்து எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
***
சென்னை நகரை விட்டு விடுங்கள். அங்கே பேருந்தினுள் நுழைவதற்கே பெரிய போராட்டமாக இருக்கும். அப்படியே ஏறி அமர்ந்தாலும் பக்கத்தில் பெண்கள் தாராளமாக அமர்ந்து பயணம் செய்வார்கள்.
ஆனால் புறநகர் பகுதிகளில் தனியாக பேருந்து பயணம் செய்வது, அதிலும் நாலைந்து லக்கேஜ்களுடன் செல்வது எவ்வளவு அவஸ்தை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏனென்றால் ஒவ்வொருவரும் அவ்வளவு அவஸ்தைப்பட்டிருப்பார்கள்.
அப்படி என்ன அவஸ்தை என்பது தெரியாதவர்களுக்கு, 'எக்ஸ்யூஸ்மீ... நாங்க ரெண்டு பேரும் இதுல உட்கார்ந்துக்குறோம்... கொஞ்சம் மாறி உட்கார்றீங்களா...' என்றுதான் அழகாக கேட்பார்கள்.
ஆண்கள் மறுக்க முடியாது. ஏனென்றால் நடத்துனரும் ஓட்டுநரும் பெண் பயணிகளுக்கு சாதகமாகத்தான் முடிவெடுக்க வேண்டியிருக்கும்.
ஒருமுறை இப்படித்தான் நான் ஓட்டுநருக்கு எதிர் திசையில் இரண்டாவது வரிசையில் அமர்ந்து தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணத்தை தொடங்கினேன்.
சாந்தபிள்ளை கேட் பகுதிக்கு வரும் முன்பே அந்த இடத்தை தியாகம் செய்ய வேண்டியதாயிற்று.
அடுத்து சாலியமங்கலம், பூண்டி, அம்மாப்பேட்டை, நீடாமங்கலம், கொரடாச்சேரி என்று ஒவ்வொரு நிறுத்தத்திலும் பேருந்து நின்று புறப்படும்போது பேருந்து டேக் டைவர்சன் எடுக்கிறதோ இல்லையோ நான் இருக்கை மாறி அமர வேண்டியதாயிற்று. கடைசியாக அம்மையப்பன் பேருந்து நிறுத்தத்திலும் இரண்டு பெண்கள் ஏறியவுடன் நடத்துனர் என்னைத்தான் பார்த்தார்.
நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். கண்ணாடியில் என் முகம் மோதியது. உடனே நடத்துநரைப் பார்த்து, 'சார்... இதுக்கு மேல மாறி உட்கார சொன்னீங்கன்னா கண்ணாடியை உடைச்சுகிட்டு கீழே குதிக்க வேண்டியதுதான்... தஞ்சாவூர்ல டிரைவருக்கு எதிர்ல உட்கார்ந்து இருந்த என்னை மாத்தி மாத்தி உட்கார வெச்சு கடைசி வரிசைக்கு கொண்டு வந்துட்டீங்க... இன்னுமா உங்க கோபம் தீரலை?... நான் என்ன சார் தப்பு செஞ்சேன்...' என்று கேட்கவும், என்னைத் தவிர சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சிரித்தார்கள்.
***
அப்போது எங்கள் ஊரில் நிறைய இடங்களில் புதை சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. ஒரு நாள் மதியம் நிறைய மழை பெய்து கொண்டிருந்தது. நானும் பெரியகோயில் பகுதியில் பள்ளங்களுக்கு நடுவில் இருந்த சாலையை தேடிப்பிடித்து சைக்கிளில் குடை பிடித்துக் கொண்டு மெதுவாக சென்று கொண்டிருந்தேன்.
அப்போது முன்னால் நாலைந்து பள்ளி மாணவிகள் (பதினொன்று அல்லது பனிரெண்டாம் வகுப்பு மாணவிகள்தான் என்று நினைக்கிறேன்) அவர்களும் சாலையைக் கண்டுபிடித்துவிட்டார்கள் போலிருக்கிறது. திடீரென்று சாலையின் நடுவில் வந்து விட்டார்கள்.
நான் ஒரு கையில் குடை பிடித்தவாறு சைக்கிள் ஓட்டியதால் அழுத்தமாக பிரேக் பிடித்தேன். சேறு சகதிகளும் ரிம்மில் ஒட்டியிருந்ததால் ஒருவழியாக தேய்த்துக் கொண்டு நின்று விட்டது. அதிர்ச்சியில் 'ஏய்...' என்று கத்தி விட்டேன்.
உடனே பின்னால் திரும்பி பார்த்த அந்த மாணவிகள், பதறிப்போய் 'சாரி அங்கிள்...' என்று சொல்லவும் எனக்கு பகீர் என்று இருந்தது.
அதற்கு காரணம் வேறு ஒன்றுமில்லை, நான் கல்லூரி முடித்து ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் ஆகியிருக்கும். அந்த வயதில், பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கக்கூடிய மாணவிகள் அங்கிள் என்றால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.
***
ஒருவர் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்து கிளட்ச் பிடித்து கியர் போட்டு வண்டியை நகர்த்தவே திணறிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் ஆஃப் ஆகிக் கொண்டேதான் இருந்தது. அந்த வண்டியின் பின்னால் அமர்ந்து கொண்டு இருந்தவர், கிளட்சை முழுசா விட்டுடக் கூடாது... கொஞ்சம் விடற நேரத்துல ஆக்சிலேட்டரை திருகணும் என்று வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
இது சாதாரணமாக நடக்கக்கூடியதுதானே என்றுதானே கேட்குறீங்க. இந்த சம்பவம், அந்த வண்டியை ஓட்டும் நபர் லைசன்ஸ் எடுக்க டெஸ்ட்டுக்கு போயிருந்தப்ப, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெளியில நடந்தா அந்த விபரீதத்தை நினைச்சு ஒருபக்கம் பகீர்னு இருந்தாலும் இன்னொரு பக்கம் சிரிப்புதான் வந்தது.
***
நானும் ஒரு நண்பரும் எங்களுக்கு பொதுவான இன்னொரு நண்பர் வங்கிக் கடன் பெறுவதற்காக சேகரித்திருந்த ஆவணங்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தோம்.
அவற்றில் வங்கி அறிக்கையை பார்த்த நண்பர், "என்னப்பா இது... கடையில நேர போனா ஒரு ரூபாய்க்கு கீழே எந்த சில்லரையும் புழக்கத்துல இல்ல... ஆனா டிஜிட்டல்ல இன்னும் பைசா சுத்தமா செலவழிக்கிற வசதி இருக்குறது உண்மைதான். அதுக்காக ஒவ்வொரு மாசமும் கடைசி தேதியில ரூ. 45.30க்கு எதையோ கார்டை தேச்சு வாங்கியிருப்ப போலிருக்கே...
ஏடிஎம் கார்டு வந்த புதுசுல தினமும் ஏடிஎம் போய் 100 ரூபா 200 ரூபாயா கூட எடுத்து செலவழிச்ச பழக்கம் விட மாட்டெங்குதா?" என்றார்.
குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாததால் பிடித்தம் செய்யப்பட்ட அபராதத் தொகையைப் பார்த்து விட்டுத்தான் அந்த கேள்வியைக் கேட்டார் அவர்.
இதைக் கேட்டவுடன் எனக்கும் மற்றொரு நண்பருக்கும் சிரிப்பதா அல்லது திட்டுவதா என்று தெரியவில்லை. சில நொடிகளில் தன்னாலேயே சிரிப்பு வந்து விட்டது.  
***
20 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய நகரம் ஒன்றி நட்சத்திர அந்தஸ்துடன் தொடங்கப்பட்டிருந்த ஒரு உணவுவிடுதிக்கு சென்றிருந்தோம். நாங்கள் ஏழு பேரும் அப்போதுதான் முதல்முறையாக அங்கே செல்கிறோம்.
மதிய சாப்பாடு ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருந்தோம். டேபிளில் வலது கை பக்கம் ஒரு தட்டும் முள்கரண்டி, ஸ்பூன் உள்ளிட்டவை இருந்தன.
எங்களில் ஒருவன் அந்த தட்டை அவனுக்கு நேரே நகர்த்தி வைத்துக் கொண்டான். அதைப் பார்த்த மற்ற அனைவரும் அதேபோல் செய்தோம்.
அடுத்த ஓரிரு நிமிடங்களில் எங்கள் அருகே வந்த சர்வர், முகத்தில் எந்தவித குறிப்பையும் காட்டாமல் அனைவரது தட்டுக்களையும் மீண்டும் அவரவர் வலப்பக்கம் எடுத்து வைத்து விட்டு நகர்ந்தார்.
"ஸ்டார் ஓட்டல்னா சாப்பாட்டுத் தட்டை நேர்ல வச்சு சாப்பிடக்கூடாது போலிருக்கு மாப்ள..." என்று ஒருவன் கிசுகிசுத்தான்.
அடுத்த சில நிமிடங்களில் ஏற்கனவே இருந்ததை விட பெரிய தட்டில் சரியான அளவில் வெட்டப்பட்ட வாழை இலையின் மேல் வைக்கப்பட்டு சாப்பாடு வந்தது.
சிலர் தக்காளி, கறிவேப்பிலை, பூண்டு போன்றவற்றை ஒதுக்குவார்கள். அவற்றை மேசை மீது வைத்து அசிங்கப்படுத்தாமல் இருப்பதற்காகத்தான் பக்கவாட்டில் தட்டு வைத்திருக்கிறார்கள் என்பது அப்போதுதான் புரிந்தது.
நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டே, முகத்தை துடைத்துக் கொண்டோம்.
***
கதை எழுதி அனுப்ப ஆரம்பித்த பிறகு, ஒரு கவரில் வைக்கும் பேப்பர் என்ன ஜி.எஸ்.எம், எத்தனை எண்ணிக்கை என்பதை வைத்து தபால் அலுவலகத்தில் எடை போடுவதற்கு முன்பே பெரும்பாலும் சரியான தொகைக்கு ஸ்டாம்ப் ஒட்டி விடுகிறேன்.
ஆனால் மிகச்சிறிய வயதில், உறவினருக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பும்போது அதில் ஸ்டாம் ஒட்ட வேண்டும் என்பது கூட தெரியாமல் முகவரி எழுதி, கையெழுத்து போட்டு அப்படியே அனுப்பி வைத்திருக்கிறேன். தெரியாமல்தான் செய்திருக்கிறேன் என்பதை புரிந்து கொண்ட உறவினர் அதை அபராதம் செலுத்தி பெற்றுக் கொண்டு நன்றி கார்டில் விபரம் எழுதி (ஸ்டாம் ஒட்டி) அனுப்பியது ஒரு அனுபவம் என்றால், அடுத்த ஆண்டு ஆர்வக்கோளாறில் ஸ்டாம்ப் ஒட்டி பெறுநர் முகவரி எழுதாமல், அனுப்புநர் இடத்திலும் பெயரை மட்டும் எழுதி தபால் பெட்டியில் போட்ட பிறகு அடடா... ரெண்டு பொங்கல் வாழ்த்து ஸ்டாம்ப்போட போச்சே என்று நினைத்து, இதை வெளியில் சொன்னால் கெளரவம் என்னாவது என்று அமைதிகாத்ததும் நிகழ்ந்திருக்கிறது.
***
1960ஆம் ஆண்டு வாக்கில் அன்றைய தேதிக்கு பல நவீன கருவிகளுடன் கட்டப்பட்டிருந்த தியேட்டர் அது. அங்கே 1996ஆம் ஆண்டு வாக்கில் புரொஜக்டர் அறையில் உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு புரொஜக்டரில் இருந்து மற்றொரு புரொஜக்டரில் படச்சுருளை திரையிடும்போது பிலிம் தீர்ந்து போன புரொஜக்டரின் ஷட்டர் தானாகவே மூடிக்கொள்ளும். அது எப்படி என்று பார்த்தேன். மேலே சீலிங்கில் நடுவில் பேன் மாட்டுவதற்காக U வடிவ கம்பி போடப்பட்டிருந்தது.
இரண்டு புரொஜக்டரின் ஷட்டரை திறந்து மூடக்கூடிய லீவரில் நைலான் கயிறு கட்டி அதை மேலே U வடிவ கம்பி வளையத்தின் வழியாக இணைத்திருந்தார்கள். ஒன்றை திறப்பதற்காக கீழ்நோக்கி இழுக்கும்போது அந்த இழுவிசை காரணமாக அடுத்த புரொஜக்டரின் லீவர் மேலே இழுக்கப்பட்டு அந்த ஷட்டர் மூடப்படும்.
பிறகு 1990ல் கட்டப்பட்ட ஒரு திரையரங்கில் பணிக்கு சென்றேன். முதல் நாள் அங்கு சென்றபோது இரண்டு புரொஜக்டர் லீவரிலும் கயிறு எதுவும் கட்டப்படவில்லை. நான் யோசனையுடன் மேலே சீலிங்கை பார்த்தேன். நடுவில் இருந்த U வடிவ வளையத்தில் சீலிங் பேன்தான் மாட்டப்பட்டிருந்தது.
அதை கவனித்த ஆப்ரேட்டர், "என்னப்பா மேலே பார்க்குற?..." என்றார்.
"இல்லங்க... கயிறு எதையும் காணோம்... அப்புறம் எப்படிங்க ஒரு புரொஜக்டர்ல இருந்து இன்னொன்னை சேஞ்ச் அடிப்பீங்க..." என்றேன்.
இதைக் கேட்டு அந்த ஆப்ரேட்டரும், மற்றொரு உதவியாளரும் சிரித்தார்கள். பிறகுதான், பட்டனை அழுத்தினாலே இதில் திறந்து கொள்ளும் அதே நேரத்தில் மற்றொரு புரொஜக்டரில் உள்ள ஷட்டர் தன்னால் மூடிக்கொள்ளும்... எல்லாம் அறிவியல் முன்னேற்றம் என்பதை தெரிந்து கொண்டேன்.
என்ன, இது தெரியாமல் அவர்களிடம் கேள்வி கேட்டபோது, என்னைப்பார்த்து அவர்கள் சிரிக்க நானும் சேர்ந்து ஒரு மாதிரியாக இளிக்க வேண்டியதாயிற்று.
***
குறும்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிக்கொண்டிருந்தேன். கடைசி நாள் இரவு, பாக்கி இருந்த ஒரே ஒரு காட்சியின் படப்பிடிப்பு. கதைப்படி அந்த சிறுவன் வாங்கி வரும் டிபனை கால் உடைந்து கிடக்கும் அவன் அம்மாவுக்கு ஊட்ட வேண்டும். அவன் அம்மா, நீயும் சாப்பிடுடா என்று அவனுக்கு ஊட்டி விட முயலும்போது, அவன் தடுத்து நீயே சாப்பிடும்மா... என்று தாயாருக்கே ஊட்ட வேண்டும். இதுதான் காட்சி.
ஆனால் அந்த சிறுவன் நல்ல பசியில் இருந்தான் போலிருக்கிறது. அவன் தாயார் ஊட்டும்போது இவன் சாப்பிடத் தொடங்கி விட்டான். இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் எவ்வளவோ சொல்லியும் அவன் மீண்டும் மீண்டும் அம்மாவுக்கு ஊட்டுவதாக நடித்தபோதே, அவன் தாயார் இவனுக்கு ஊட்டியதை மறுக்காமல் முழுங்கிக் கொண்டிருந்தான். அவனுக்கு வாங்கி வந்திருந்த டிபனை கொடுத்து சாப்பிட வைத்தோம். அதன் பிறகும் அவன் தாயர் ஊட்டிய டிபனை சாப்பிடுவதை நிறுத்தவில்லை. இவ்வாறு சொதப்பவும், டேக் ஓ.கே ஆகவில்லை.
கடைசி நாள் படப்பிடிப்பு என்பதால் யூனிட்டில் உள்ள அனைவருக்கும் சப்பாத்தி, கேசரி, சேமியா பாத், போண்டா வந்திருந்தது.  பட்ஜெட்டை மிச்சம் பிடிக்கிறேன் என்று, காட்சியின் தொடர்புக்காக ஒரே ஒரு தோசையை மட்டும் பார்சல் செய்து வந்திருந்தார்கள். ஆனால் அவன் தோசையை காலி செய்து கொண்டிருந்தான். கடைசியாக, நான் பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்று என்னுடைய டிபன் பார்சலை கொடுத்து அந்த சிறுவனை சாப்பிட வைத்த பிறகு படப்பிடிப்பை தொடர்ந்தோம். ஒரு வழியாக டேக் ஓ.கே.ஆகியது.
முதலில் டேக் ஓ.கே.ஆகவில்லையே என்று அனைவருக்கும் டென்ஷன் இருந்தாலும், பசியின் காரணமாக அவன் சாப்பிட்டதைப் பார்த்தபோது யூனிட்டில் இருந்த பெரும்பாலானவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்ததும் உண்மை.
***
பொங்கல் விடுமுறையின்போது மனைவி, மகனுடன் தர்பார் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றிருந்தேன். நான் டிக்கட் கொடுக்கும் இடத்திற்கு சென்றபோது, பெல் அடித்தார் அவர்.
"என்னங்க... படம் போட்டாச்சா...?" என்றேன்.
"ஏங்க காலையிலேயே இப்படி... இப்பதாங்க கவுண்டரை திறக்குறேன்... முதல் டிக்கட்டே நீங்கதாங்க... நியாயமா பார்த்தா உங்களுக்கு மோதிரம் போடணும்... என்ன பண்றது... தியேட்டரையை சிரமப்பட்டுதான் நடத்திகிட்டு இருக்கோம்..." என்று அவர் சிரிக்காமல் சொன்னார்.
எங்களுக்குதான் சிரிப்பு வந்து விட்டது.
***
உறவினர் ஒருவர் குற்றாலத்தில் வசித்து வருகிறார். அவர் புதுமனை புகுவிழாவிற்கு அழைத்திருந்தார். விழாவில் கலந்து ‍கொண்ட பிறகு, அருவிக்கு போகணும் என்று சொன்னேன்.
விழா நடத்தியவரின் நண்பர் என்னை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். ‍பேரருவியை நெருங்கியபோது ஏமாற்றமாக இருந்தது. "என்னண்ணே இப்படி காய்ஞ்சு போய் இருக்கு..." என்றேன்.
"ஆமாம் தம்பி... சீசன்லதான் தம்பி தண்ணி வரும்... மத்த நாள் இப்படித்தான். இந்த ஊரு சுற்றுலா பயணிகளை நம்பி பொழைப்பு நடத்துற ஊரு. நாலு மாசம் சம்பாதிக்கிறதை வச்சு வருசம் பூரா குடும்பம் நடத்தணும்.
அப்படி இருக்கும்போது சீசன்லயா வீட்டுல விசேசம் வைப்பாங்க... சரி... வந்தது வந்துட்டீங்க... அப்படியே அருவியைப் பார்த்து கும்பிட்டுக்குங்க..." என்று அவர் சொல்லவும் ஏமாற்றத்தை மீறி அவரது நகைச்சுவை என்னை சிரிக்க வைத்தது.
*** 
நண்பரின் அண்ணன் சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வருகிறார். ஒருமுறை அவர் குடும்பத்துடன் விழாவுக்கு சென்றிருந்தோம். அப்போது காரை ஓட்டியது அவரிடம் வேலை பார்க்கும் நபர். வழியில் ஒரு இடத்தில், குறுகலான பாலத்தை நெருங்கிய போது, எதிர் திசையில் பாலத்திற்கு அந்தப் பக்கம் சற்று தொலைவில் அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது.
நாங்கள் சென்ற வாகனத்தின் ஓட்டுநர், ஹெட் லைட்டைப் போட்டுவிட்டு முன்னேற முயற்சித்தபோது, அந்த அண்ணன், 'டேய்... கவர்மெண்ட் பஸ்சோட பிரேக்கை நம்பி ரிஸ்க் எடுக்காத... ஓரங்கட்டி நிப்பாட்டு பஸ் போயிடட்டும்...' என்று சிரிக்காமல் சொன்னபோது காரில் இருந்த மற்ற அனைவரும் சிரித்தோம்.
***
இதுபோல் அன்றாட வாழ்வில் நிறைய நகைச்சுவை தருணங்களை கடந்து சென்றிருப்போம். ஆனால் அது எதையும் ரசிக்காமல் அன்றாட கடமைகளில் மட்டுமே மூழ்கியதால் நிறைய கவனிக்கத் தவறியிருக்கிறோம் என்பது மட்டுமே புரிகிறது. அதனால்தான் அதிகமான சம்பவங்களை நினைவு கூற முடியவில்லை. இனியாவது ரசிக்கவும் சிரிக்கவும் முயற்சிக்க வேண்டும். அவற்றை எழுத்தாக பதிவும் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த கட்டுரைப்போட்டி ஏற்படுத்தியுள்ளது.
(தமிழ்ச்சரம் நடத்தும் கட்டுரைப்போட்டிக்காக புதியதாக எழுதப்பட்ட கட்டுரை இது. வலைதளம், அச்சுஊடகம் உள்ளிட்ட எதிலும் இதற்கு முன்பு பிரசுரமாகாத கட்டுரை.)

4 comments:

 1. இயல்பான நகச்சுவை. போட்டியிக் வெற்றிபெற வழ்த்துகள்

  ReplyDelete
 2. தமிழ்ச்சரம் நடத்திய போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற தங்களுக்கு வாழ்த்துகள். நிறைய நகைச்சுவை சம்பவங்களை தொகுத்து அருமையாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி...

   Delete