Saturday, May 2, 2020

இளங்காத்து வீசுதே - 1


திரைப்படங்களைப் பற்றியும் இன்றைய நகர வாழ்க்கையைப் பற்றி மட்டுமே எழுதி வருவதும் சலிப்பாக இருப்பதால் ஒரு மாறுதலுக்காக சிறு வயது கிராமத்து அனுபவங்களை இங்கே பகிர்கிறேன்.

40 நாட்களாக ஊரங்கு காரணமாக வீட்டிலேயே பொழுதைக் கழிக்கும் அனுபவம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். உலகமயமாக்கலுக்கு பிறகு சொந்த வீட்டிலேயே ரெண்டு நாள் சேர்ந்தாற்போல் ஓய்வெடுத்திருக்க மாட்டார்கள்.

அப்படி இருக்கும்போது உறவினர்கள் வீடுகளுக்கு சென்று மாதக்கணக்கில், வாரக்கணக்கில் தங்கிய அனுபவங்கள் எல்லாம் முந்தைய தலைமுறையினருக்கு மட்டுமே சொந்தமானதாகிவிட்டது.
நமக்கு அவ்வாறு சென்று தங்குவதற்கு முடியாத அளவுக்கு பணிச்சுமை என்று காரணம் வைத்திருந்தால், தற்போது கிராமத்தில் உள்ளவர்களும் நகரவாசிகளைப் போல் வேலைச்சுமையுடன் இருக்கிறார்கள்.

இதையும் மீறி உறவுகளுடன் பொழுதைக் கழிக்கலாம் என்றால் தொலைக்காட்சியும் திறன் பேசிகளின் இணைய உலாவலும் அதற்கும் வேட்டு வைத்து விடுகிறது.
1994ஆம் ஆண்டு வரை கோடை விடுமுறை காலத்தில் தாத்தா பாட்டி, மாமா அத்தை வசிக்கும் கிராமத்திற்கு செல்வோம்.
அப்போது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியில் சென்னை தொலைக்காட்சி அலைவரிசையை மட்டும் பார்த்த காலம்.
மிகச்சில கிராமங்களில்தான் செயற்கைக்கோள் அலைவரிசைகள் கம்பிவடம் (கேபிள்டிவி) மூலம் தெரிந்து கொண்டிருந்தன.

கிழக்கு வெளுத்தாச்சு
கொசுக்கடிக்கு பயந்து கொண்டும், நகரப்பகுதிகளில் கள்வர் பயம் உள்ளிட்ட பாதுகாப்பு காரணங்களாலும் காற்றும் நுழைவதற்கு அஞ்சும் அறைகளில் உஷ்ணக்காற்றை சுவாசித்துக் கொண்டு வியர்வையில் குளித்துக் கொண்டு தூங்கப் பழகி விட்டோம்.
அப்போது தாத்தா வீட்டுக்கு அருகில் உள்ள காலி இடத்தில் ரெட் கட்டில் என்று சொல்லப்படும் கட்டிலில் படுத்து தூங்குவோம். அல்லது மொட்டை மாடியில்தான் உறக்கம்.

கொசுக்கடி அபாயமோ, கள்வர் பயமோ கிடையாது. நிம்மதியான உறக்கம் நிச்சயம். சூரியன் உதிப்பதற்கு முன்பு ஒரு வெளிச்சம் பரவும். அதை கிழக்கு வெளுத்தாச்சு என்று கிராமங்களில் சொல்வார்கள். கோடைக்காலங்களில் காலை ஐந்தரை மணிக்கே இந்த வெளிச்சம் வந்து விடும். அப்படி அதிகாலையில் கிழக்கு வெளுத்ததும் அந்த வெளிச்சத்தால் விழிப்பு வரும்.

ஆற்றில் ஊற்று
அங்கே பெரும்பாலான வீடுகளில் காலை உணவு நீராகாரமும் கேழ்வரகு கூழும்தான். ஆற்றில் ஊறி வரும் ஊற்று தண்ணீரில் சமைத்த சோறில் இரவு அந்த தண்ணீரை ஊற்றி வைப்பார்கள். மூன்று நாள் வரை கூட கெடாமல் இருக்கும்.

முளைப்பாரி திருவிழா கொண்டாடி விட்டு அவற்றை ஊற்று நீரில் விடுவதற்காக ஆற்றில் இறங்கி ஊற்றை அடைவதற்கு வசதியாக மணலிலேயே படிகள் செதுக்கி வைப்பார்கள்.
ஆனால் திருவிழா முடிந்த மறுநாள் படியும் இருக்காது. எதுவும் இருக்காது. ஆனால் கிராமத்து பெண்கள் தங்கள் உடலை சமநிலைப்படுத்தி இடுப்பில் ஒரு குடம் தலையில் இரண்டு குடம், வலது கையில் ஒரு குடம் என்றெல்லாம் அந்த ஊற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருவார்கள்.
மாடு ஓட்டுதல்
மாடு மேய்க்கிறது கேள்விப்பட்டிருப்பீங்க... அது என்ன மாடு ஓட்டுறதுன்னுதானே உங்க கேள்வி? அது ஊரில் ஒன்றிரண்டு பெரிய பணக்காரர்களிடம் மட்டுமே உழவுக்காக டிராக்டர் இருந்த நேரம். பெரும்பாலான வீடுகளில் உழவு மாடுகளும் ஏர் கலப்பையும் நிச்சயமாக இருக்கும்.
அந்த மாடுகளை வயலில் மேய விட்டு திரும்பவும் வீட்டுக்கு ஓட்டி வருவார்கள். அந்த மாடுகளை மாலை வேளைகளில் வீட்டுக்கு ஓட்டி வருவதும், வீடுகளில் கட்டிப் போட்டு வைத்திருக்கும்போது இரை வைப்பதும் பெரும்பாலும் பெண்கள்தான் என்பதால் நிறைய பேர் சாதுவான மாடுகளாக பார்த்துதான் வாங்கி வருவார்கள்.

அந்த மாடுகளை முன்னே விட்டு பின்னால் நான் கயிறை பிடித்துக் கொண்டு நடந்து வருவேன். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் மாட்டை நான் ஓட்டிச் செல்வதாக தெரியும். 

உண்மையில் அது பின்னால் நான்தான் வழி மாறாமல் நடந்து வீடு வந்து சேருவேன் என்ற உண்மை சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

மண்டை வெல்லம்
என்னுடைய ஏழு அல்லது எட்டு வயதில் சளித்தொந்தரவுக்கு பெற்றிருந்ததால் என்னை பழைய சோறு சாப்பிட அனுமதிக்க மாட்டார்கள். இடியாப்பம், குழிப்பணியாரம் சுட்டு விற்கும் இடத்தில் சென்று எனக்கு இடியாப்பம் வாங்கி வருவார்கள். அந்தப் பகுதியில் அதிகமாக கிடைக்கும் உருண்டை வெல்லத்தை (பேச்சு வழக்கில் மண்டை வெல்லம்) கதிர் அறுக்கும் அரிவாளால் கீறி இடியாப்பாம் மீது தூவி சாப்பிட கொடுப்பார்கள். இளம் சூட்டில் அதை சாப்பிட அவ்வளவு ஆசையாகவும் ருசியாகவும் இருக்கும்.
பனை நுங்கு
நகரப்பகுதிகளில் ஒரு சுளை இரண்டு ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய் வரை கொடுத்து வாங்குபவர்களில் அதிகமான நபர்களுக்கு இது உடல் சூட்டைத் தணிப்பதற்காக ஒரு சில மருத்துவர்கள் பரிந்துரை செய்த உணவுப்பொருள் என்ற அளவில்தான் தெரிந்திருக்கும்.ஒருமுறை நுங்கு வெட்டித் தருகிறேன் என்று அழைத்துச் சென்ற உறவுக்காரரிடம், "அரிவாள் இல்லாம எப்படி நுங்கு வெட்டுவீங்க மாமா... வீட்டுக்கு போகணும்னு அடம்பிடிக்கிறதாலதானே இப்படி பொய் சொல்லி கூட்டிட்டு போறீங்க... என்று கேட்டேன்.
பதில் ஏதும் பேசாமல் என்னை பனைமரங்களுக்கு அருகில் கூட்டிச் சென்ற அவர், பனைமரத்திலிருந்து காய்ந்து கீழே விழுந்திருந்த மட்டையில் ஒன்றை தேர்வு செய்து, பக்கவாட்டில் கூர்மையாக இருந்த (கருக்கு என்று சொல்லக்கூடிய) பகுதியாலேயே குலை குலையாக அறுத்து தள்ளினார்.
பிறகு அவற்றை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் இருந்த கொட்டகைக்கு கொண்டு சென்று அங்கிருந்த அரிவாளால் சீவி கொடுத்தார். நுங்கு கண்ணை நோண்டி முகத்திலும் சட்டையிலும் பிசுபிசுவென ஒட்டும் அளவுக்கு சாப்பிட்டிருக்கிறேன். மூன்று கண் உள்ள நுங்கை தின்ற பிறகு மேலே உள்ள படத்தில் இருப்பதை கோந்தை என்று சொல்வார்கள். இது போல் இரண்டு கோந்தைகளை எடுத்து மையத்தில் குச்சியை சொருகி, கவட்டை போன்ற குச்சியால் தள்ளிக் கொண்டு வண்டி ஓட்டி விளையாடுவதை கிராமங்களில் வளர்ந்த பலரும் தவறாமல் செய்திருப்பார்கள். நானும்தான்.
இப்போதும் அவர் நுங்கு சித்தப்பா என்றுதான் நினைவில் இருக்கிறார்.

தொட்டித் தண்ணீரில் குதூகலம்
சென்னையில் சுமார் ஓர் ஆண்டு வசித்து வந்தபோது, நான் தங்கியிருந்த வீட்டில் அதிகாலை 5 மணிக்கு மோட்டார் போடுவார்கள். அதிகபட்சம் ஐந்து அல்லது ஆறு குடம் பிடிப்பதற்குள் தண்ணீர் நின்றுவிடும்.

அதனால் முதல்நாள் இரவு கால்குடம் தண்ணீரில் துணியை ஊறவைத்து சோப் போட்டு தேய்த்தும் வைத்து விடுவேன். அதிகாலையில் முதல் குடம் தண்ணீரைப் பிடித்ததும் அடுத்தடுத்த குடங்கள் நிறைவதற்குள் துணிகளை அலசி விட்டு குளித்தும் முடித்து விடுவேன்.

நாலாவது குடம் நிறைவதற்குள் தண்ணீர் நின்றிருக்கும். அறையில் என்னுடன் தங்கியிருந்த நண்பன் குளிப்பதற்கும், கழிவறை உபயோகத்திற்கும் இந்த தண்ணீர்தான் அடுத்த நாள் அதிகாலை 5 மணி வரை எங்கள் சுகாதாரத்தை காப்பாற்றும்.

கிராமத்தில் மாமா வீட்டில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வயல் வரப்பு வழியாக நடந்து சென்றால் மிகப்பெரிய தென்னந்தோப்பும் ஆழ்துளை குழாய் கிணறும் வரும். அதற்கான சுவிட்சுகள் இருக்கும் அறையை ஒட்டி உயரம் குறைவாக சிறுவர்களும் ஏறக்கூடிய அளவில் மிகப்பெரிய குடை பரப்பி நிழல் தரும் மாமரமும் இருக்கும். 
அக்னி நட்சத்திர வெயில் என்றாலும் எதையும் உணர அவசியம் இருக்காது. இப்போது அளவுக்கு மின்சார தட்டுப்பாடு இல்லாத நேரம். பகலிலேயே பெரும்பாலான நேரம் வயல்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். ஆறு குளம் என்று குளித்து பழக்கப்படாத ஆள் நான். அது மட்டுமின்றி சென்னையில் ஒரு மாதிரியான தண்ணீர் பற்றாக்குறையில் அவதிப்பட்ட போது எனக்கு 25 வயது.

சிறுவனாக இருந்தபோது நகரத்தில் நான் வசித்து வந்த வீட்டில் இருபது அல்லது இருபத்தைந்து லிட்டர் தண்ணீரை ஒரு வாளியில் வைத்து சிறிய குவளையால் அள்ளி ஊற்றி குளித்துதான் பழக்கம். அதனால் அந்த சின்ன தொட்டியில் இறங்கி குளிப்பதே அவ்வளவு குதூகலத்தை தரும்.

சில பம்புசெட்டுகள் ஆயில் இஞ்சினில் இயங்கும் வகையில் இருக்கும். ஜெனரேட்டரில் டைனமோ மூலம் மின்சாரம் உற்பத்தியாகி மோட்டார்கள் இயங்குவது ஒரு வகை. மற்றொன்று நேரடியாக ஆயில் இஞ்சின் மூலம் சுழலும் வகை.

இந்த வகைகள் தவிர மின்சாரத்தில் நேரடியாக இயங்கும் மின்மோட்டார்கள்தான் அதிகம். அவை பெரும்பாலும் கிணற்றுக்குள்தான் பொருத்தப்பட்டிருக்கும்.

அந்த மோட்டார்களை திருடி எடுத்துச் சென்று வைத்துக் கொண்டு, யாரையாவது தூது அனுப்பி சில ஆயிரங்கள் பெற்றுக் கொண்டு, வேறு ஒரு இடம் சொல்லி அங்கே மோட்டார் இருக்கிறது என்று கை காட்டி விடுவார்கள். பாதிக்கப்பட்டவர்களும் சென்று பார்க்கும்போது அந்த இடத்தில் இருக்கும்.
ஒரு முறை தூக்கிச் சென்ற மோட்டாரை திரும்ப குறிப்பிட்ட காலம் வரை எடுத்துச் செல்ல மாட்டார்கள். அது யார் என்ற விபரம் பொதுமக்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

தென்னந்தோப்பும் இளநீரும்
மாமரமும் தென்னந்தோப்பும் உள்ள இடத்தைப் பற்றி சொன்னேனே... அங்கு சென்றால் நாம் போதும், குடிக்க முடியவில்லை என்று சண்டை போட்டால் கூட இரண்டு அல்லது மூன்று இளநீரை என் முகத்தில் கவிழ்த்து விடுவார்கள்.

பலமுறை ஒண்ணு போதும்னு சொன்னா கேட்க மாட்டீங்கிளா... ஏன் இம்சை செய்யுறீங்க என்று சண்டை போட்டிருக்கிறேன். அது அறியாத வயது.
இப்போது சமீப காலமாக சிறிய இளநீரே நாற்பது ரூபாய் விற்கிறது. கொஞ்சம் பெரியதாகவோ தண்ணீர் அதிகமாகவோ இருந்தால் ஐம்பது அறுபது என்று விலை சொல்கிறார்கள். ஊரடங்கு காலத்தில் கேட்கவே வேண்டாம்.

நிலக்கடலை
ஒரு சில ஆண்டுகளில் நிலக்கடலை அறுவடை நேரமான பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் தொடக்க வாரங்களில் ஊருக்கு செல்வோம். பத்து பனிரெண்டு காய்ந்த பனை ஓலைகளை படல் போன்று கட்டி நாற்பத்து ஐந்து டிகிரி கோணத்தில் சாய்வாக ஒற்றை கம்பை முட்டுக் கொடுத்து நிறுத்தியிருப்பார்கள்.
வெயிலில் நின்று நிலக்கடலை செடியை வேருடன் பிடுங்கிப் போடுபவர்கள் சிறிது நேரம் நிழலில் இளைப்பாறவும், செடியில் இருந்து நிலக்கடலையை ஆய்ந்து (பிய்த்து) போடுபவர்களும் அந்த படலின் நிழல் பயன்படும்.

வெயில் அடிக்கும் திசையைப் பொறுத்து ஒரு சில நொடிகளில் இடத்தை மாற்றி வைத்துக் கொள்ளும் வசதி இந்த படல்களின் சிறப்பம்சம்.
ஒரே ஒரு வயல் ஓரத்தில் மட்டும் நடுத்தர அளவில் ஒரு வேப்பமரம் இருக்கும். அந்த நிழலில்தான் நான் அடிக்கடி இளைப்பாறுவேன்.

பேருந்து கூரையில் பயணம்
இப்போதும் பல ஊர்களில் பள்ளி மாணவர்கள் பேருந்தினுள் நிற்கக்கூட இடம் இல்லாமல் பேருந்தின் மீது அல்லது பின்புற ஏணிகளில் நின்று பயணம் செய்வதைக் காண்கிறோம்.

எங்கள் கிராமத்திற்கு அருகாமையில் உள்ள அந்த நகராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க வேண்டும்.

அந்த காலகட்டத்தில் அந்த பேருந்தினுள் ஏறி நிற்க இடம் பிடிப்பது பல நேரங்களில் முடியாது. அதனால் பேருந்தின் மேற்கூரையில்தான் அடிக்கடி பயணம் செய்திருக்கிறேன். மூன்று கிலோ மீட்டர் தூரம் கடந்ததும் பேருந்து ஓரமாக நிற்கும். நடத்துநர் மேலேஏறி வந்து எல்லாருக்கும் பயணச்சீட்டு கொடுத்து விட்டு மீண்டும் பேருந்தினுள் சென்ற பிறகுதான் பேருந்தின் பயணம் தொடரும்.
நான்கு கிலோ மீட்டர் நடைபயணம்
இப்போது அவரவர் வீட்டு குளியலறைக்கே கூட வாகனங்களில் செல்லும் அளவிற்கு வசதி வாய்ப்புகளுக்கு கட்டுப்பட்டு கிடக்கிறோம்.

நூறு அல்லது இருநூறு மீட்டர் தூரத்திற்கு கூட ஆட்டோ தேடுகிறோம்.
அப்போது நாங்கள் பேருந்தில் இருந்து இறங்கியதும் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வயல்வெளிகளுக்கு நடுவே ஒற்றையடி பாதையில் நடந்து செல்ல வேண்டியிருக்கும். அந்த பாதை முடிந்து கண்மாய்க்கரை (சில பகுதிகளில் ஏரி என்று அழைப்பார்கள்) ஓரமாக சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டி இருக்கும்.

அந்த வயல்வெளிப்பாதை முடியும் இடத்தை சற்று தொலைவிலேயே அடையாளம் கண்டு கொள்வோம்... எப்படி என்றால், அந்த பாதை முடியும் இடத்தில் ஒரு மின்மாற்றி இருக்கும். 
அதுவும் ஒற்றையடி பாதையில் சட்டென்று தெரிந்து விடாது. சுற்றிலும் கருவைச்செடி மரங்கள் மறைத்திருக்கும். காற்றினால் அவ்வப்போது லேசான இடைவெளியில் மின்மாற்றி எங்கள் கண்ணில் பட்டதும் ஏதோ பெரிய இலக்கை அடைந்து விட்டோம் என்ற திருப்தியுடன் ஒரு வித உற்சாகத்துடன் இன்னும் வேகமாக நடப்போம்.

கண்மாய்கரை ஓரமாக நடக்கும்போது ஏதோ பேய்ப்பட காட்சிகள் நகர்வதைப்போல் புளிய மரங்களும் கருவை செடிகளும் பின்னால் செல்ல செல்ல நாங்கள் முன்னால் நடந்து கொண்டிருப்போம்.

அதைக் கடந்து சுமார் அரை கிலோ மீட்டர் அகலத்தில் ஆறு. ஆறு என்றால் கேரளாவிலும் இமயமலை அடிவாரத்திலும் எந்நேரமும் நீர் சலசலப்புடன் ஓடிக் கொண்டிருக்கும் ஆறு கிடையாது. 
மழைக்காலங்களில் எப்போதாவது ஒரு சில வாரங்கள் தண்ணீர் ஓடினால் அதிசயம். மற்ற நாட்களில் பாலைவனம் போல் ஆற்றுமணலும் நாணல் புற்களும்தான் தெரியும்.
அந்த ஆற்று மணலில் கால் புதைய நடந்து செல்வோம். அந்த ஆற்றைக் கடந்தால் கரையோரமாக நிறைய பனை மரங்கள். அவற்றை அந்த கிராம மக்கள் பனங்காடு என்றுதான் அழைப்பார்கள். அந்த பனங்காட்டைக் கடந்துதான் தாத்தா பாட்டி வசிக்கும் கிராமத்திற்கு செல்வோம்.

இப்போது வேறு வழியாக அந்த கிராமத்திற்கே பேருந்து வந்து செல்கிறது. வெளியூர்களில் இருக்கும் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்களும் உறவினர்களும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றில் வந்து செல்கிறார்கள். அந்த மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் நான்குவழிச்சாலை செல்கிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது.... இதுதான் உண்மை.

No comments:

Post a Comment