Tuesday, May 19, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 10

அத்தியாயம் - 10 - ஓட முடியாது... ஒளிய முடியாது...


  • நாகரீகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் மெஸொப்படாமியா இரு முக்கிய நதிகளான டைக்ரிஸ் மற்றும் இயுஃப்ரட்டீஸ் இடையே அமையப் பெற்றிருந்தது; எகிப்தியர்களின் பண்டைய சமூகங்கள் நைல் நதியை முழுமையாக நம்பியிருந்தன. பெருநகரங்களான ராட்டர்டேம், லண்டன், மாண்ட்ரீல், பாரிஸ், நியுயார்க் நகரம், பியுனோஸ் அயர்ஸ், ஷாங்கய், டோக்கியோ, சிகாகோ, ஹாங்காங் போன்றவை தண்ணீர் வழியாக எளிதில் அணுகக்கூடிய நகரங்களாக இருந்ததால்தான் பெருமளவு வியாபார வெற்றி கிடைத்தது என்று சொல்கிறார்கள். பாதுகாப்பான துறைமுகங்களையுடைய சிங்கப்பூர் போன்ற தீவுகளும் அதன் காரணமாகவே வளம் பெற்றன. தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்படும் வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் போன்ற நாடுகளில், சுத்தமான குடிநீர் மனித வள மேம்பாட்டுக்கு தேவைப்படும் முக்கிய காரணியாய் இருக்கிறது.

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

காவல் நிலையம்.

காலை சுமார் 10 மணி.

ஆய்வாளர் தனபாலன் மேசைக்கு இந்தப்பக்க நாற்காலியில் உதவி ஆய்வாளர் திலீப்குமார் அமர்ந்திருக்க, அவருக்கு பின்னால் தலைமைக் காவலர் சேதுராமன் நின்று கொண்டிருந்தார்.

தனபாலன் முகம் மட்டுமல்ல, அங்கிருந்த மூன்று பேரின் முகங்களுமே இறுகிப்போய்தான் இருந்தது.

‘‘சார்... இந்த கேசைப் பொறுத்தவரை நாம கஷ்டப்பட்டு ஒவ்வொரு ஸ்டெப்பா முன்னேறிதானே போறோம்... அதுக்குள்ள என்ன அவசரம்னு இப்ப சிபிசிஐடிக்கு கொண்டு போறாங்க...?

நியாயமா பார்த்தா, நாம உண்மையான குற்றவாளியை நோக்கி போய்கிட்டு இருக்குறதை பாராட்டி, தேவையான வசதிகளை செஞ்சு கொடுக்கணும். யாரையாச்சும் குற்றவாளின்னு இதுவரை ஏன் கைது பண்ணலைன்னு எதிர்கட்சி கோஷம் போடுறதும், ஆளுங்கட்சி அரசியல் செய்ய, நம்மளை பந்தாடுறதும்னு இதே வேலையாப் போச்சு...’’ என்ற திலீப்குமாரின் குரலில் உண்மையான ஆதங்கம்.

‘‘நாம என்ன புலம்பி என்ன ஆகப்போகுது... டூ... வாட் ஐ சே... அப்படின்னு ஒரே வரியில முடிச்சிடுவாங்க. மேலதிகாரி உத்தரவுக்கு கீழ்ப்படிதல்தான் நம்மோட முதல் கடமையா இருக்கும்போது எல்லாத்துக்கும் தயாராத்தான் இருக்கணும்...’’ என்றார் தனபாலன்.

‘‘சார்... அந்த ஏரியாவுல அவ்வளவு சிசி டிவி கேமரா இருக்கு... அதை ஏமாத்தியிருக்கானுங்க. சொக்கநாதனோட அசிஸ்டெண்ட் தேவிரஞ்சனியை நாம தேடிப் போனோம். ஆனா சம்பவம் நடந்ததுக்கு முதல் நாள் இரவு தோழியோட திருமணத்துக்கு போனவ, ரிசப்ஷன் ஆரம்பிக்கிறப்பவே காணாம போயிட்டான்னு நம்ம ஸ்டேஷனுக்கே புகார் வருது. மொபைல் போனை வெச்சு டிரேஸ் பண்ணலாம்னா, அதை மண்டபத்துலயே பத்திரமா விட்டுட்டு போயிட்டா... 

பொண்ணோட நடவடிக்கையில சந்தேகம் வரலையான்னு பெத்தவங்க கிட்ட கேட்டா, அவ எங்களுக்கு தெரியாம எதுவுமே செய்ய மாட்டா... அவ குழந்தை சார்னு எல்லா பெத்தவங்களும் பாடுற பல்லவிக்கு மேல வேற எதையும் பேச மாட்டெங்குறாங்க...

போனும், ஆதார் கார்டும் கையில இருந்தா அவங்களால எங்கயுமே ஓட முடியாது... ஒளிய முடியாதுன்னு பேஸ்புக்ல ஒருத்தன் ஸ்டேட்டஸ் போட்டுகிட்டு இருக்கான்... 

இந்த பொண்ணு போன், ஆதார் கார்டு, பேன் கார்டு, டெபிட் கார்டுன்னு எல்லாத்தையும் இங்கேயே விட்டுட்டு போயிருக்கு... பேஸ்புக், மெயில் எல்லாம் அவ காணாம போனதுக்கு அப்புறம் எந்த ஆக்டிவிட்டீசும் இல்லை...

இப்ப தேவி ரஞ்சனி இந்த சம்பவத்துக்கு உடந்தையா அல்லது கடத்தப்பட்டாளான்னு தெரியலை... இது அவசரத்துல செஞ்ச க்ரைம் மாதிரி தெரியலை... பல மாசம் திட்டம் போட்டு செஞ்சிருப்பாங்கன்னு தோணுது... உடனே எல்லா கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க இது என்ன ஒரே நைட்டுல நடக்குற சினிமாவா?...

சொக்கநாதன் இப்போ எதை கண்டுபிடிக்கிற முயற்சியில இருந்தார்னு தெரிஞ்சாதான் அது யாருக்கெல்லாம் பிடிக்காதுன்னு நாம கெஸ் பண்ண முடியும்... அப்போ நாம தேட வேண்டிய எல்லைகள் எந்த அளவுக்குன்னு தெரிஞ்சுடும்... அந்த லிஸ்ட்டுல இருந்து குற்றவாளியை நெருங்குறது சுலபம். 

இது வரைக்கும் நாம எஸ்.பிக்கு கொடுத்த அறிக்கையிலயே விசாரணை அடுத்தடுத்து முன்னேறி போய்கிட்டு இருக்குன்னு நல்லா தெரியும். அப்படி இருந்தும் அவசரமா சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு போட்டா என்ன அர்த்தம்?...’’ என்று தன் மனதில் இருந்த ஆதங்கத்தையும் கொட்டினார் தனபாலன்.

‘‘இதுக்கு பின்னால ஏதோ பெரிய இடம் இருக்குன்னு நினைக்கிறேன்... நாம இதே வேகத்துல விசாரணை பண்ணினா பெரிய தலை சிக்கிடும்னுதான் கேசை நம்ம கிட்ட இருந்து பிடுங்கறாங்களோ..’’ என்று தன்னுடைய பங்குக்கு சந்தேகத்துடன் கேள்வியை எழுப்பினார் சேதுராமன்.

அப்போது செல்போன் ஒலித்தது. அதை எடுத்துப் பார்த்த தனபாலன், அவரது உதடுகளின் குறுக்கே விரலை வைத்து அமைதி என்று எச்சரித்து விட்டு, பவ்யமாக, ‘‘குட்மார்னிங்... சார்...’’ என்று பேசத் தொடங்கினார்.

சிறிது நேரம் தனபாலன் எந்த பதிலும் பேசாமல் மறுமுனை பேசியதை கேட்டுக் கொண்டு இருந்தார். 

கடைசியாக, ‘‘ஓக்கே சார்... கோஆப்ரேட் பண்றோம் சார்...’’ என்று பேசி முடித்தார்.

‘‘என்ன சார்... கேசை புதுசா ஹேண்டில் பண்ணப் போறவங்களுக்கு நாம எல்லா ஒத்துழைப்பையும் கொடுக்கணுமா?...’’ என்று கச்சிதமாக உதவி ஆய்வாளர் கேட்டார்.

‘‘ஆமாம்... ஆனா இந்த சம்பவத்துக்கு பின்னால பெரிய தலை இருக்கா... புது தலை எதுவும் இருக்கான்னு தெரிஞ்சுக்க மேலதிகாரிங்களே ஆர்வமா இருக்காங்க போலிருக்கு...’’ 

‘‘என்ன சார் சொல்றீங்க?...’’

‘‘விசாரணை அதிகாரி யாருன்னு தெரியுமா?...’’ என்று தனபாலன் இடைவெளி விட்டார்.

திலீப்குமார், சேதுராமன் இருவருமே தெரியாது என்ற பொருளில் உதட்டைப் பிதுக்கினார்கள்.

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9

No comments:

Post a Comment