Wednesday, May 20, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 11

அத்தியாயம் - 11 - அண்ணாமலை - நல்லதம்பி


  • நீர் வளமற்ற நாடுகள் நீரை இறக்குமதி செய்வதற்கு பதிலாக தயாரிப்பு முழுமை பெற்ற பொருட்களை இறக்குமதி செய்கின்றன. இதனால் மனிதர்கள் உட்கொள்வதற்கு போதிய அளவு தண்ணீர் மிஞ்சுகிறது. ஏனெனில் பொருட்களின் உற்பத்திக்கு அப்பொருட்களின் எடையை விட 10 முதல் 100 மடங்கு அதிக எடையுள்ள நீர் தேவைப்படுகிறது. வளரும் நாடுகளில், 90% கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் உள்ளூர் நதிகளுக்கும் ஓடைகளுக்கும் போய்க் கொண்டிருக்கிறது.

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

‘‘அண்ணாமலை...’’ என்று சொல்லிவிட்டு புன்னகைத்தார் தனபாலன்.

‘‘குற்றவாளி யாருன்னு தெரிஞ்சுக்க பொதுமக்களை விட மேலிடம் ரொம்ப ஆர்வமா இருக்குறதுமாதிரி தெரியுதே... அப்படி சொக்கநாதன் விசயத்துல என்ன ரகசியம்?...’’ என்று சேதுராமன் சொல்லவும்,

‘‘நமக்கு சந்தேகமே வேண்டாம்... அண்ணாமலையை களம் இறக்கியிருக்காங்கன்னா, கன்ஃபர்மா சொல்லிடலாம்... 

சொக்கநாதன் ஏதோ பெரிசா கண்டுபிடிச்சிருக்காரு... அது யாரோ அரசியல்வாதிக்கு அல்லது பெரிய கம்பெனி முதலாளிக்கு இடைஞ்சல் தரப்போற விசயமா இருக்கணும். இல்லன்னா... வருமானத்தை குறைக்கிற விசயமா இருக்கலாம்...

ஒண்ணு மட்டும் நிச்சயம். அவரோட கண்டுபிடிப்பு பொதுமக்களுக்கு பலன்தர்ற சமாச்சாரம்தான். இல்லன்னா கொலை செய்யுற அளவுக்கு இறங்க மாட்டாங்க.’’ என்று தனபாலன் பெரிய வருத்தமின்றி பேசினார்.

அப்போது திலீப்குமார், ‘‘சார்... நானும் அவங்களைப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன்... அவங்க ரெண்டு பேரும் அவ்வளவு டேலண்டா சார்... அண்ணாமலையும் நல்லதம்பியும் ஜாலியா பேசிக்குவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்...’’ என்று தன் சந்தேகத்தை வெளியிட்டார்.

‘‘அப்படின்னு யார் சொன்னா...?’’ தனபாலனிடமிருந்து கேள்வி.

‘‘இல்ல... பேசிகிட்டாங்க...’’ என்று திலீப்குமார் இழுக்க,

‘‘யார் எதை சொன்னாலும் நம்பிடுவீங்கிளா...’’ என்று தனபாலனிடமிருந்து அடுத்த கேள்வியும் வந்தது.

திலீப்குமாருக்கு ஏதோ கேட்கக்கூடாததை கேட்டுவிட்டோமோ என்ற அச்சம். இப்போது எதுவும் பேசாமல் மவுனமாக அமர்ந்திருந்தார்.

‘‘பயப்படாதீங்க... நீங்க சொன்னதெல்லாம் சரிதான்... ஊருக்குள்ள நாலு பேரு நாலு விதமா பல நேரங்கள்ல உண்மையையும் பேசுறாங்க... அண்ணாமலை, நல்லதம்பியைப் பத்தி என்னை விட சேதுராமன் சாருக்கு ரொம்ப நல்லாவே தெரியும்...’’ என்று தனபாலன் அவரைப் பார்க்க,

சேதுராமன் தொடர்ந்தார்.

‘‘சார்... அண்ணாமலை டிஎன்பிஎஸ்சியில சில வருஷங்களுக்கு முன்னால குரூப் 1 தேர்வுல பாஸ் பண்ணி இந்த வேலைக்கு வந்தார். 

நம்ம டிபார்ட்மெண்ட்டுக்கு மிக முக்கியமான மந்திர வாக்கியம் ஒண்ணு இருக்கு.

அதாவது, எவ்வளவுதான் புத்திசாலித்தனமா திட்டம் போட்டு ஒருத்தன் குற்றம் செஞ்சாலும் சின்ன தடயமாச்சும் அவனுக்கே தெரியாம விட்டுட்டு போயிடுவான்... அது என்னன்னு அடையாளம் கண்டுபிடிக்கிறதுதான் நமக்கு இருக்குற சவால்னு சொல்லுவாங்க...

அதை 100க்கு 200 சதவீதம் கச்சிதமா புரிஞ்சுகிட்டு வேலை பார்க்குற ஆபிசர்னு அண்ணாமலையை சொல்லலாம். அவர் விவசாயக் குடும்பம்தான். அவரோட ஒண்ணுவிட்ட மாமா அன்பரசன் தமிழ் ஆசிரியரா வேலை பார்க்குறாரு... அவருக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். தமிழ் பெயரா வைக்கணும்னு ரொம்பவும் யோசிச்சு அந்த பொண்ணுக்கு ஒரு வயசு ஆகுறப்பதான் நறுமுகைன்னு பேர் வெச்சாரு...

ஆனா நல்லதம்பிக்கு அவன் பிறந்த உடனே இந்த பேரை வெச்சிட்டாரு...’’ என்று சேதுராமன் நிறுத்தவும், திலீப்குமாருக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது.

‘‘ஏன் சார்... அவர் மனைவி கர்ப்பமானதுமே என்ன பேர் வைக்கிறதுன்னு தேட ஆரம்பிச்சுட்டாரா?...’’

‘‘சேச்சே... அப்படி எல்லாம் எதுவும் இல்லை... அன்பரசனுக்கு ஜோதிடத்துல நம்பிக்கை கொஞ்சம் அதிகமா இருந்த காலகட்டம் அது. 

இப்போ உனக்கு பிறக்கப்போறது பையன்தான்... அவன் ரொம்ப குறும்புக்காரனாவும், பெத்தவங்க பேச்சையோ, பெரியவங்க பேச்சையோ கேட்காம, அடாவடியா வளர வாய்ப்பு இருக்குன்னு ஒரு பந்தத்தை அந்த ஜோதிடர் கொளுத்திப் போட, ‘நல்லதம்பி’ன்னு பேர் வெச்சிட்டாரு.

அதுக்கு அவர் சொன்ன காரணம், எல்லாரும் இப்படி கூப்பிட, கூப்பிட நல்ல பிள்ளையா வளருவான்னு உறுதியா இருந்தாரு. அந்த காலத்துலயே லா ஆஃப் அட்ராக்சன் பத்தி தெரியாமலேயே, அதை வெற்றிகரமா செயல்படுத்தியிருக்காருன்னு சொல்லலாம்...’’

‘‘சரியாத்தான் பேரு வெச்சிருக்காங்க... ஒழுங்கா வளரலைன்னா, போலீஸ்ல சேர்ந்துருக்க முடியுமா?...’’ என்று திலீப்குமார் ஆமோதித்து பேசினார்.

‘‘நீங்க சொன்னதுல பாதிதான் சரி... ஏன்னா, ரொம்ப சுமாரான ஸ்டூடண்ட்டுதான் இந்த நல்லதம்பி. ஏதோ தட்டுத்தடுமாறி கல்லூரி வரைக்கும் வந்த தம்பிக்கு, அவரோட அக்கா நறுமுகைதான் பாடம் சொல்லிக் கொடுத்து குரூப் ஃபோர்ல நல்ல மார்க்கோட பாஸ் பண்ண வெச்சிருக்காங்க... இவரும், மச்சான் இருக்குற துறையை கேட்டு வாங்கிட்டு வந்துட்டாரு...’’ என்றார் சேதுராமன்.

‘‘அப்போ, அண்ணாமலை சாரோட முறைப்பொண்ணு, அதான் சார் நறுமுகை... அவங்க எந்த டிபார்ட்மெண்ட்ல வேலை பார்க்குறாங்க...?’’

‘‘அதுலதான் ஒரு ட்விஸ்ட்...’’ என்று சேதுராமன் இடைவெளி விட்டார்.

அவர் விட்ட இடத்திலிருந்து தனபாலன் தொடர்ந்தார்.

‘‘ஒரு படத்துல, கவுண்டமணியை பார்த்து காப்பியடிச்ச ஆள் பாஸ் பண்ணிடுவாரு... ஆனா கவுண்டமணி பெயிலாயிடுவாரு தெரியுமா...’’ என்றதுமே திலீப் குமாருக்கு விஷயம் விளங்கி விட்டது. அவரும் சிரித்து விட்டார்.

‘‘அப்போ அந்த அம்மா டிஎன்பிஎஸ்சியில பாஸ் பண்ணலியா...?’’

‘‘என்னது... டிஎன்பிஎஸ்சியா... பத்தாவதுல அறிவியல் பாடத்துல ரெண்டு தடவை முயற்சி பண்ணி அது முடியாம, மூணாவது தடவைதான் பாஸ் பண்ணினாங்க...

பனிரெண்டாம் வகுப்புல அறிவியலே வேண்டாம்னு வேற குரூப் எடுத்து படிச்சும், பார்டர்லதான் பாஸ் பண்ண முடிஞ்சிருக்கு... அதனால படிப்பை ஓரங்கட்டிட்டு வீட்டைச் சுத்தி தோட்டம், இயற்கை உரம், மாடித் தோட்டம்னு பலருக்கும் வழிகாட்டியா இருக்காங்க...’’ என்று தனபாலன் சொல்லி முடிக்கவும், திலீப்குமார் முகத்தில் வியப்பு தெரிந்தது.

‘‘சார்... கொஞ்ச நேரத்துக்கு முன்னால வரைக்கும் ஒரு கேசை ரொம்ப சீரியசா விசாரணை பண்ணிகிட்டு இருந்தோம்... இப்போ ஒரு ஆபிசர் வரப்போறாரு... அவர் கிட்ட என்னென்ன தகவல்கள் கொடுக்கணும்னு ரெடிபண்ணாம அவர் யாரு... அவர் முறைப்பொண்ணு, மச்சான்னு அவங்க குடும்ப விசயத்தை பேசிகிட்டு இருக்கோம்...  அண்ணாமலை விசாரணைன்னு சொன்னதுமே நம்ம பாரம் குறைஞ்ச மாதிரி ஃபீலிங் வருதுல்ல...’’ என்றார் சேதுராமன்.

‘‘உண்மைதான்...’’ என்று தனபாலன் சொல்லவும் திலீப்குமாருக்கு எதுவும் புரியவில்லை.

‘‘திலீப் சார்... இனி அண்ணாமலை சாரைப் பத்தி பேச வேண்டாம்... அவர் கூட பழகப்பழக கொஞ்ச கொஞ்சமா தெரிஞ்சுக்குறதுதான் நல்லது... ஏன்னா, ஒரு அளவுக்கு மேல ஒரே நேரத்துல எல்லா தகவலையும் சொன்னா, எதையும் நினைவுல வெச்சுக்க முடியாது...’’

அப்போது வாசலில் புல்லட் சத்தம் அதிகமாகி நெருங்கி வந்து நின்று விட்டது. 

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9

No comments:

Post a Comment