Thursday, May 21, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 12

அத்தியாயம் - 12 - ஆளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆயிரம் காரணங்கள்...

  • உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ள 50 நாடுகள் மிதமான அல்லது மிகுதியான நீர்ப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றன. இவற்றில் 17 நாடுகள் நீர் சுழற்சியினால் வருடமுழுவதும் தங்களுக்குக் கிடைக்கும் நீராதாரத்திற்கும் மேலாக செயற்கையாக நீரைப் பிரித்தெடுப்பனவாய் இருக்கின்றன. இத்தகைய இழுபறி நன்னீர் நிலைகளான நதிகளையும் ஏரிகளையும் பாதிப்பதோடல்லாமல், நிலத்தடி நீராதாரங்களையும் குறைக்கிறது.

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

புல்லட் சத்தம் ஓய்ந்த சில நொடிகளிலேயே, ‘‘உள்ளே வரலாமா?...’’ என்ற குரல்.

‘‘அட... உங்களுக்கு இல்லாத அனுமதியா... வாங்க சார்...’’ என்று சொல்லிக் கொண்டே தனபாலன் எழுந்து நிற்கவும் ஸ்பிரிங் டோரை தள்ளிக் கொண்டு அண்ணாமலை உள்ளே நுழைந்தார்.

அந்த கதவை விட்ட நேரத்தில் மீண்டும் சாத்திக்கொள்வதற்குள் கையை வைத்து தடுத்துக் கொண்டு, ‘‘சார்... பின்னால மனுசன் வர்றது தெரியாம மூஞ்சில சாத்திட்டு போவீங்கிளா...?’’ என்றவாறு நல்லதம்பி உள்ளே வந்தான்.

‘‘அதானே பார்த்தேன்... சார் எவ்விட... நல்லதம்பி அவ்விட... இல்லியோ...’’ என்று சேதுராமன் சிரித்தார்.

‘‘சார்... ரெண்டு பேரும் வீட்டுல இருக்கும்போதும் சார்னுதான் கூப்பிட்டுக்குவீங்கிளா... இல்ல... மச்சான், மாப்ளயா?...’’ என்ற தனபாலனின் குரலில் ஆர்வம்.

‘‘இப்போ வழக்கைப் பத்தி மட்டும் பேசுவோமா...!’’ என்று கச்சிதமாக கத்தரித்தான் அண்ணாமலை.

‘‘சாரி சார்...’’ என்ற தனபாலன், நான்கு பைல்கள் அடங்கிய பெரிய கட்டு ஒன்றை தூக்கி அண்ணாமலையிடம் கொடுத்தார்.

அதை அப்படியே வாங்கி நல்லதம்பியிடம் கொடுத்துவிட்டு, ‘‘சார்... நீங்க கொடுத்துருக்குற ரெக்கார்டுகள்ல ஏதாவது சந்தேகம்னா அப்புறம் கேட்டுக்குறேன்...

இப்போ எனக்கு எஸ் பி மூலமா வந்த தகவல்களில் ஒரு சில சந்தேகம்...’’ என்றார்.

‘‘சொல்லுங்க சார்...’’

‘‘சொக்கநாதன் சாரோட ஃபேமிலி மெம்பர்ஸ்கிட்ட இருந்து எதாவது உருப்படியான தகவல் கிடைச்சதா?...’’

‘‘சார் அவரோட மனைவி ராஜேஸ்வரி ஹவுஸ் ஒய்ப். அவங்களை விசாரிச்சேன்.

‘எனக்கு சாரோட ஆராய்ச்சியில எந்த ஆர்வமும் இல்லை. குடும்பம் வேற... ஆராய்ச்சி வேறன்னு நாங்க ரெண்டு பேருமே தெளிவா இருந்தோம்... அதனால என்கிட்ட கேட்குறதை விட, அவரோட அசிஸ்டெண்ட், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரா இருந்த தேவிரஞ்சனியை கேட்டாதான் உங்களுக்கு அவர் ஆராய்ச்சியைப் பத்தி விபரம் கிடைக்கும்’... அப்படின்னு சொல்லிட்டாங்க. இனி தேவைப்பட்டா விசாரிச்சுக்கலாம்னு நான் வேற எதுவும் அவங்களை கேட்கலை. 

அவங்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் இருக்காங்க.

மூத்த மகள் வைஷ்ணவி கோயம்புத்தூர்ல எம்.இ கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறாங்க. ரெண்டாவது பொண்ணு பிரியதர்ஷினி காரைக்குடி அழகப்பாவுல பி.இ சிவில் கடைசி வருஷம் படிக்கிறாங்க. பையன் சித்தார்த் சென்னை லயோலாவுல விஸ்காம் முதல் வருஷம் படிக்கிறார். 

இவங்களும் சொக்கநாதன் சார் ஆராய்ச்சிக்கும் தங்களுக்கும் ரொம்ப தூரம்... அப்பாவும் எங்ககிட்ட அது பத்தி எதுவும் பேச மாட்டார். அப்பப்ப, கோவில், பூங்கா, சினிமான்னு எங்க கூட நேரம் செலவழிப்பார். அவ்வளவுதான்னு சொல்லிட்டாங்க. ஆக சொக்கநாதன் சாருக்கு நெருங்கிய நபர்கள் யாரைக் கேட்டாலும் எல்லாரும் கையைக் காட்டுறது தேவிரஞ்சனியைத்தான் சார்.’’ என்று மனப்பாடம் செய்தது போல் தனபாலன் தகவல்களை ஒப்பித்து விட்டார்.

‘‘சரி... இப்போ தேவிரஞ்சனி எங்க?’’

‘‘சொக்கநாதன் சார் சம்பவத்துக்கு முதல் நாள் இரவு, தோழியோட திருமணத்துக்காக போன தேவிரஞ்சனியை காணலைன்னு அவங்க பெற்றோர் புகார் கொடுத்துருக்காங்க. 

பொண்ணு கடத்தப்பட்டாளா அல்லது இந்த சதிக்கு உடந்தையான்னு முடிவு பண்ண முடியலை... கல்யாண மண்டபத்துல இருந்து மிஸ்ஸிங். விசாரணை போய்கிட்டு இருக்கு. அதுக்குள்ள கேஸ் உங்க கைக்கு வந்துடுச்சு...’’ என்று திலீப்குமார் முந்திக் கொண்டு பதில் சொன்னார்.

‘‘எனக்கு மெயில்ல ஆர்டரை அனுப்பிட்டு அதை நான் திறந்து பார்க்குறதுக்குள்ளயே ஐ.ஜி சென்னையில இருந்து போன் பண்றாரு...

சி.எம்.மே வாய்மொழியா உத்தரவு போட்டுட்டாராம்...

சொக்கநாதனோட ஆபீஸ் அசிஸ்டெண்ட் தேவிரஞ்சனியை முதல்ல கண்டுபிடிக்கணுமாம்... அப்படி இல்லன்னா... சொக்கநாதன் இன்னும் வெளியில எஸ்டாபிளிஷ் பண்ணாத கண்டுபிடிப்பு என்னன்னு ரெண்டு நாளைக்குள்ள சொல்லணும்னு எனக்கு ஆர்டர் போட்டிருக்காங்க.

மக்களுக்கு நல்லது செய்யுற ஆட்களுக்கு இந்த ஆட்சியில பாதுகாப்பு இல்லைன்னு எதிர்கட்சிகள் கோஷம் போட்டதுல முதலமைச்சர் ரொம்பவே அப்செட் ஆகிட்டாராம்....

இங்க ஒரு உயிரோட மதிப்பை அரசியல் உட்பட பல காரணிகள் தீர்மானிக்குது... இந்த மாதிரி நேரத்துல நம்ம டிப்பார்ட்மெண்ட்டு தலையை உருட்டுறதுலதான் எல்லாரும் குறியா இருக்காங்க...’’ என்று தன்னுடைய சூழ்நிலையை அண்ணாமலை சுருக்கமாக சொல்லிவிட்டான்.

‘‘இவ்வளவு பெரிய சிட்டி... நிறைய இடங்கள்ல சி.சி டிவி கேமரா... மொபைல்போனை டிராக் பண்ண வசதிகள்... இவ்வளவு இருந்துமா அந்த பொண்ணு இருக்குற இடத்தை டிரேஸ் பண்ண முடியலை?...’’ இந்த கேள்வியை கேட்டது நல்லதம்பி. 

‘‘கேஸ் சிக்கலானதே இந்த இடத்துலதான் சார்... தேவிரஞ்சனி வீட்டுல இருந்து ஒரே ஒரு செட் டிரஸ் மட்டும்தான் எடுத்துட்டு போயிருக்கா. மொபைலை கல்யாண மண்டபத்துல பொண்ணு ரூம்ல சார்ஜ் போட்டுட்டு அப்படியே எஸ்கேப். மண்பத்துல இருக்குற சிசி டிவி கேமராவுல பார்த்ததுல எந்த இடத்துலயும் அவ பதிவாகலை. ரொம்ப கவனமா நழுவியிருக்கா.

அந்த தெருவுல மொத்தம் ஏழு கல்யாணமண்டபம்... அடுத்த நாள் வளர்பிறை முகூர்த்த நாள். எல்லா மண்டபத்துலயும் திருமணம் நடந்துருக்கு. அதனால ஏகப்பட்ட வாகனங்கள் வந்து போனதால தேவிரஞ்சனி எதுல ஏறிப் போனான்னு எதுவும் டிரேஸ் பண்ண முடியலை.

அது தவிர அவ தோழி காருண்யா திருமணம் நடந்த மண்டபத்து வாசல்ல சுமார் அரைமணி நேரம் வாணவேடிக்கை, பொண்ணு மாப்பிள்ளை ஆட்டம் பாட்டம்னு ஒரே அமர்க்களமா இருந்துருக்கு... அந்த நேரத்துலதான் நழுவியிருக்கணும்.

ரயில்வே ஸ்டேஷன்ல இருந்த சிசி டிவி கேமராவை செக் பண்ணியாச்சு. அங்கயும் போகலை. மதுரை ரோடு, திருச்சி ரோட்டுல இருக்குற டோல்கேட்டுலயும் சந்தேகப்படும்படியா யாரையும் அடையாளம் காண முடியலை...

புது பஸ்ஸ்டாண்ட்ல பாதி இடங்கள்ல சிசி டிவி கேமரா வேலை செய்யலை. ஆக, நாம இருபது வருஷத்துக்கு முந்தைய தொழில்நுட்ப வசதிகளை மட்டும் வைத்து விசாரணை செய்யுற முறைகளைத்தான் இந்த இரண்டு வழக்குலயும் பயன்படுத்தணும் போலிருக்கு.’’ தனபாலன் இப்போதும் ஏதோ பள்ளியில் பேச்சுப் போட்டியில் பேசுவது போல் ஏற்ற இறக்கமின்றி சொல்லி முடித்தார்.

‘‘ஆளைக் கண்டு பிடிக்க முடியலைன்னு ஆயிரம் காரணங்களை அடுக்குறீங்க... பொண்ணு மொபைலை எடுத்துட்டு போகலைன்னா என்ன?... அந்த மொபைல்ல எந்த செய்தியுமா கிடைக்கலை?...’’

‘‘ஆமாம் சார்... அந்த மொபைல்ல இருந்த நம்பர் எல்லாரையும் கூப்பிட்டு விசாரிச்சாச்சு... அது தவிர அந்த பொண்ணு சொக்கநாதன் சார் நம்பருக்கும், அவங்க அம்மா, அப்பா மொபைலுக்கும்தான் அதிகமா அதாவது தினமும் பேசியிருக்கு.

மற்ற எல்லா நம்பருக்கும் ரொம்ப இடைவெளிவிட்டு எப்பவாச்சும்தான் கால் போயிருக்கு... சந்தேகப்படும்படியான இடைவெளியில கால் போகலை...

போன் ஹிஸ்ட்ரியில இல்லாத நம்பருக்கு கால், மெசேஜ், வாட்சப் அப்படின்னு ஏதாவது போயிருக்கான்னு மொபைல் ஆப்ரேட்டர்கிட்ட விசாரிச்சுட்டோம்... அப்படி எதுவும் இல்லை சார்...

அது மட்டுமில்லை... பேஸ்புக் அக்கவுண்ட், இ மெயில்கள்ல கூட சந்தேகப்படும்படியான ஆக்டிவிட்டி எதுவுமே இல்லை...

அதுலயும் அவ பேஸ்புக்ல ஒரு இடத்துல கூட அவளோட போட்டோ இல்லை. புரொபைல் போட்டோவுல கூட திருச்செந்தூர் முருகன் படம்தான் இருக்கு.

பொன்மொழிகள், மருத்துவக்குறிப்புகள் மாதிரியான செய்திகள், போட்டோக்கள் மட்டும்தான் இருக்கு.

இவ்வளவு கிளீனா இருக்குறதாலதான் சந்தேகம் அதிகமாகுது. ஆனா எந்த பாயிண்ட்டை மிஸ் பண்றோம்னு தெரியலை...’’ என்று தனபாலன் அலுப்பில்லாமல் பேசினார்.

‘‘அது மட்டுமில்லை சார்... அந்த பொண்ணோட சர்க்கிள் மட்டுமில்லாம, சொக்கநாதன் பேமிலி கூட தேவிரஞ்சனி ரொம்ப நல்ல பொண்ணு... அவ காதலிச்சிருப்பான்னு சொன்னா நம்ப முடியலை... சொக்கநாதன் மேல தாக்குதல் நடத்துனவங்கதான் அவளையும் கடத்தியிருக்கணும்னு சொல்றாங்க...

ஆனா, வெளியில இவ்வளவு நல்ல பேர் எடுத்துருக்குறவங்கதான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிகிட்டு எதுவும் தெரியாத மாதிரி அவங்கவங்க வீட்டுலயே இருப்பாங்க...

வீட்டுல கல்யாண பேச்சை எடுக்கும்போதுதான் மேட்டரே வெளியில வரும்... அதனால யாரும் காதலிச்சிருப்பாங்க... காதலிச்சிருக்கமாட்டாங்கன்னு ஒரு முடிவுக்கு வர முடியாது சார்...’’ என்று பேசியது திலீப்குமார்.

‘‘ஒருவேளை தேவிரஞ்சனி காதலனோட ஓடிப்போனதும், சொக்கநாதன் மேல தாக்குதல் நடந்ததும் இரு வேறு சம்பவங்கள்... ஒண்ணுக்கொண்ணு எதிர்பாராம நடந்த கோ இன்சிடென்ஸ் அப்படின்னு வெச்சுக்குவோம்...

அந்த பொண்ணு ஏன் தோழியோட திருமணத்துக்கு போயிட்டு அப்படியே கிளம்பி போகணும்...? அவ வீட்டுக்கோ, அவ காதலன் வீட்டாருக்கோ இவங்க காதல் விசயம் தெரியுமா... அவளோட காதலன் வீட்டுக்கு தெரிஞ்சிருந்தா, அவங்க ஏன் போலீஸ்ல புகார் கொடுக்கலை...?

இந்த பொண்ணு அட்டவணை பட்டியல்ல இருக்குற சாதி. அவ காதலிச்சது வேற சாதியா இருக்கலாம்.  அதனால அந்த பையன் குடும்பத்தார் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்காம, அவங்களாவே தேடிப்பிடிச்சு காதலர்களை கொலை செய்ய முயற்சிக்கிறாங்களா...?

இவ்வளவு சந்தேகம் வருது சார்...?’’ என்று தனபாலன் சொல்லி முடித்தார்.

‘‘நாங்க எதிர்பார்த்ததை விட ரொம்ப அதிகமாத்தான் வேலை பார்த்திருக்கீங்க... இன்னும் கொஞ்சம் டைம் கொடுத்தா நீங்களே சால்வ் பண்ற கேஸ் மாதிரிதான் தெரியுது... எதுக்கு எங்களை தேவையில்லாம நுழைச்சு, உங்களுக்கும் சங்கடம் கொடுக்குறாங்கன்னு தெரியலை...’’ என்ற அண்ணாமலையின் குரலில் லேசான வருத்தம் தெரிந்தது.

‘‘சார்... நீங்க எதுவும் ஃபீல் பண்ணாதீங்க... உங்களைப் பத்தி எங்களுக்கு நல்லா தெரியும் சார்... முகத்துக்கு நேரே புகழுறேன்னு நினைக்காதீங்க... இப்போ கொஞ்ச காலமா எங்க விசாரணைக்கு சிசி டிவி கேமராவும், போன், பேஸ்புக், இமெயில், வாட்சப்தான் ரொம்பவே உதவியா இருந்துச்சு...

ஆனா இந்த வழக்குல இது எல்லாமே எங்களை காலை வாரி விட்டுடுச்சு... அதனால நாங்க ஒரு ஸ்டேஜ்ல திணறிப்போய் நின்னுட்டோம்னுங்குறதுதான் உண்மை.

ஏன்னா பிரச்சனை பெரிசா இருந்தா அதற்கு கிடைக்கிற க்ளூவும் பெரிசாத்தான் இருக்கணும்னு அவசியம் இல்லை... அது ரொம்ப சின்ன விஷயமா, நாம அற்பமா நினைக்கிற விஷயத்துல கூட வழக்கோட முக்கிய முடிச்சு அவிழலாம்னு நீங்க பலதடவை நிரூபிச்சுகிட்டே இருக்கீங்க... அதனால இதை உங்க கிட்ட சொல்றதுல வெட்கம் இல்லை சார்...’’ என்றார் தனபாலன்.

‘‘எந்த நிலையிலயும் உங்களை நீங்களே குறைச்சு மதிப்பிடாதீங்க தனபாலன்... அரசு, ஊடகம்னு நாலா பக்கமும் தேவையில்லாத பிரஷர் இருக்குறதால வேணுன்னா தேக்க நிலை ஏற்படலாம்... மற்றபடி உங்க டேலண்ட்டை நான் பல வழக்குகள்ல பார்த்திருக்கேன்...

சரி... இன்னைக்கு ஒரு நாள் மட்டும் ஸ்பாட்டுக்கு நீங்க என் கூட வர்ற மாதிரி இருக்கும். அதன்பிறகு தேவை இருந்தாதான் கூப்பிடுவேன்... இரவு ஒன்பது மணிக்கு மேல சம்பவம் நடந்த இடத்துக்கு போகலாம்... தயாரா இருங்க...’’ என்றான் அண்ணாமலை.

‘‘சார்... இப்பவே வேணுன்னாலும் வர்றோம்... எங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை...’’

‘‘அதுக்காக சொல்லலை தனபாலன்... சம்பவம் இருட்டுலதான் நடந்துருக்கு... நமக்கு க்ளூ கிடைக்க என்னென்ன வாய்ப்புகள் இருக்குன்னு யூகம் செய்ய ராத்திரியில போறதுதான் சரியா வரும். பிறகு தேவைப்பட்டா நாளைக்கு பகல்ல போய் பார்த்துக்குறோம்...’’ என்று கிளம்பிவிட்டான்.

தஞ்சாவூர் சிபிசிஐடி அலுவலகம்.

அண்ணாமலைக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் தனபாலன் கொடுத்த ஆவணங்களை வைத்து பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அருகில் நல்லதம்பி. அவன் கையிலும் ஒரு பைல்.

‘‘மல... இந்த பேங்க் ஸ்டேட்மெண்ட்டை பாருங்களேன்... ரெண்டு வருசமா ஒரு பைசா கூட போடாம ஒவ்வொரு மாசமும் கடைசி தேதியில 45.30க்கு ஏதோ பர்சேஸ் பண்ணியிருக்கா... கடைசியா 12.70 பைசா இருந்துருக்கு... அதுக்கு கூட ஏதோ பர்சேஸ் பண்ணிருக்கா...’’ என்று சொல்லவும், அந்த ஸ்டேட்மெண்ட்டை அண்ணாமலை வாங்கிப் பார்த்தான்.

‘‘உன் புத்திசாலித்தனத்தை நினைச்சு நான் வியக்குறேன்...’’ என்றவாறு அந்த ஸ்டேட்மெண்ட்டை திரும்ப கொடுத்தான்.

‘‘ஏன் மல... அப்படி என்ன நான் தப்பா சொல்லிட்டேன்...?’’

‘‘ஏதோ கோடு நம்பர் போட்டு, சார்ஜஸ்னு போட்டுருக்காங்க... அது மினிமம் பேலன்ஸ் இல்லாததால ஒவ்வொரு மாசமும் அபராதம் பிடிச்சு, கடைசியா மிச்சம் இருந்த தொகையையும் வழிச்சு எடுத்துட்டாங்க...

பேலன்ஸ் ஜீரோவுக்கு வந்துட்டதால விட்டுட மாட்டாங்க... இதே 45.30 டெபிட் ஆகிட்டே இருக்கும்.  அக்கவுண்டை மூடணும்னு கேட்டா, ஆயிரம், ரெண்டாயிரம்னு தெண்டம் அழ வேண்டியிருக்கும்...’’

‘‘எனக்கு தெரியும் மல... உங்களுக்கு தெரியுதான்னு செக் பண்ணினேன்...ஹி...ஹி...’’

‘‘சமாளிக்கிறான்யா...’’ என்ற அண்ணாமலை அடுத்தடுத்த ரெக்கார்டுகளை பார்க்க ஆரம்பித்தான்.

‘‘மல... ஒரு மேட்டர் கவனிச்சீங்கிளா... நாப்பது அம்பது வருசத்துக்கு முன்னால நிறைய இங்கிலீஷ் படத்துல ஒருத்தனை கண்காணிக்கணும்னா அவனை மயக்கமாக்கி ஆப்ரேஷன் பண்ணி சிப் வச்சி அனுப்புறதா காட்டுவாங்க...

அப்புறம் கொஞ்ச வருஷத்துல அவனுக்கே தெரியாம பார்கோடு ரீட் பண்ற நேரத்துல லேசர் மூலமா உடம்புக்குள் சிப்பை பதிக்கிற மாதிரி காட்சிகள் வந்துச்சு...

இப்போ நிஜ வாழ்க்கையில ஒருத்தன் கையில செல் இருந்தா போதும்... அவன் எங்க போறான் யார் கூட பேசுறான்னு எல்லாத்தையும் மானிட்டர் பண்ண முடிஞ்சது. 

இந்த வில்லங்கம் எதுவும் தெரியாம நம்ம மக்கள் குடும்பத்தோட பேச ஒரு சிம்... அடுத்த ஆளோட பேச ஒரு சிம்... டேட்டாவுக்கு ஒரு சிம்முன்னு அலைஞ்சாங்க... 

அப்புறம் ஒரு கம்பெனியோட சிம் எல்லாத்துக்குமே போதும்னு அடிமையாயிட்டாங்க... இதுக்கெல்லாம் பின்னால இருக்குற அபாயம் ஒருத்தணுக்கும் புரியலை...

ஆனா, தேவிரஞ்சனி எல்லாத்தையும் கவனிச்சு அவாய்ட் பண்ணியிருக்கா... அவ போனையும் எடுத்துக்காம போயிருக்கா... 

அவ பேரண்ட்ஸ், பிரண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ் அப்படின்னு எல்லாரோட போனையும் டிரேஸ் பண்ணிகிட்டு இருக்கோம்... 

அவ இருக்குற ஊர் லேண்ட் லைன்ல இருந்தோ, வேற நபர்களோட செல்போன்ல இருந்தோ ஒரு கால் கூட பண்ணலை... ஆதார் நம்பரும் எந்த வகையிலயும் பயன்படுத்தப்படலை...

இவ்வளவு இன்டலிஜெண்ட்டா திட்டம் போட்டுருக்குறதுக்கு பின்னால வேற யார் இருக்கா?... இல்லன்னா ஒன் உமன் ஆர்மியா...?’’

‘‘இந்த கேள்வி எல்லாத்தையும் பைல்ல எழுதி வெச்சுக்க...!’’

‘‘மல... கிண்டல் பண்ணாதீங்க...’’

‘‘நிஜமாத்தாண்டா சொல்றேன்... நீ கேட்டதுல ஏதாச்சும் ஒரு கேள்விக்கு விடை கிடைச்சா கூட மொத்த கேசுமே சால்வ் ஆயிட வாய்ப்பு இருக்கு...’’ என்று அண்ணாமலை சொல்லவும், நல்லதம்பி மனதில் தோன்றிய கேள்விகளை குறிப்பாக எழுதி வைத்தான்.

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9

No comments:

Post a Comment