Friday, May 22, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 13

அத்தியாயம் - 13 - பாக்கெட் பால்...?


  • உடல் பருமனுக்கேற்றவாறு மனித உடம்பு 55% முதல் 78% நீராலானது. 27 வறட்சியை ஈடுசெய்து சரிவர செயல்பட உடலுக்கு நாள் ஒன்றிற்கு 1 முதல் 7 லிட்டர்கள் நீர் தேவைப்படுகிறது. உடல் இயக்கம், வெப்பநிலை, ஈரப்பதம், மற்றும் ஏனைய காரணிகளைப் பொறுத்து நீரின் தேவை  மாறுபடுகிறது. ஆரோக்கியமான மக்களுக்காகும் நீரின் அளவு தெளிவாகக் கணிக்கப்படவில்லையென்றாலும், சரியான நீரேற்றத்தைத் தக்கவைக்க குறைந்தது 6 முதல் 7 டம்ளர் நீர் (சுமார் 2 லிட்டர்கள் நீர்) அவசியமென வல்லுனர்கள் கருதுகின்றனர். ஆரோக்கியமான சிறுநீரகங்களை உடையவர்களுக்கு அதிக நீர் உட்கொள்ளுதல் கடினமாயிருந்தாலும், தேவையை விட (குறிப்பாக வெப்பமான ஈரபதமான வானிலையின் பொழுதும்,உடற்பயிற்சியின் பொழுதும்) குறைவாக நீர் உட்கொள்ளுதல் ஆபத்தானது.

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

இரவு 8.45 மணி.

புல்லட் சத்தம் கேட்டபோதே தனபாலனுக்கு புரிந்து விட்டது. அவர் அறையை விட்டு எழுந்து வெளியே வந்து விட்டார். அவர் எதிர்பார்த்தபடியே அண்ணாமலையும், நல்லதம்பியும் காவல் நிலையத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். புல்லட் ஓரங்கட்டி காம்பவுண்ட் சுவர் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது.

‘‘வாங்க சார்... உடனே கிளம்பப் போறதில்லையா... வண்டியை ஓரங்கட்டிட்டீங்க...?’’

‘‘வானத்துல மின்னல்... மழை வர்ற மாதிரி இருக்கு. ஏன் நனையணும்... அதனால ஜீப்புலயே போயிட்டு வந்துடுவோம்...’’

‘‘ஓக்கே... குமரவேல்... ஜீப்பை ரெடி பண்ணுங்க...’’ என்று தனபாலன் குரல் கொடுத்தார்.

அண்ணாமலை, நல்லதம்பி, தனபாலன், திலீப்குமார் ஆகிய நால்வரும் ஜீப்பில் ஏறிக்கொள்ள, குமரவேல் ஓட்டினார். சத்திரம் மெயின்ரோட்டைக் கடந்து மேல அலங்கம் வழியாக வசந்தம் நகர் நுழைவாயிலை அடைந்தது.

‘‘நிறுத்துங்க...’’

வண்டி நின்றதும் கீழே இறங்கிய அண்ணாமலை, பார்வையை சுழல விட்டான். வெளியில் இருந்த மெயின்ரோட்டில் ஆங்காங்கே மஞ்சள் நிற சோடியம் விளக்குகள் மந்தமாக ஒளியை பாய்ச்சிக் கொண்டிருந்தன. 

ஆனால் நகருக்குள் இருந்த மின்கம்பங்களில் எல்இடி விளக்குகளில் வெண்மை நிற ஒளி. அந்த பிரமாண்டமான வளைவை பார்த்தார்.  சென்னை அண்ணாநகரில் உள்ள வளைவுகளைக் காட்டிலும் பெரியதாக தெரிந்தது.

‘‘தனபாலன்... இந்த நகருக்கு இது ஒண்ணுதான் வழியா?...’’

‘‘இல்ல சார்... அந்தப்பக்கமும் இந்தப்பக்கமும் ஒவ்வொரு வழி இருக்கு. ஆனா மூணுமே தெற்குப் பக்கமான இந்த ஒரே ரோட்டுல இருந்துதான் போகும்... மேற்கே நீளமான காம்பவுண்டு... அடுத்ததா வயல்வெளி. கிழக்கே, அரசுக்கு சொந்தமான ஆற்று புறம்போக்கு... ஆனா, நிறைய கருவை மரங்கள்தான் இருக்கு. வடக்கே வெண்ணாறு.’’ 

‘‘அப்படியா...’’ என்று சொல்லிக்கொண்டே வளைவைத் தாண்டி நடக்கத் தொடங்கினான் அண்ணாமலை.

‘‘சார்... இது ரொம்ப பெரிய நகர்... சம்பவம் நடந்த இடம் இங்கிருந்து ஒண்ணரை கிலோமீட்டருக்கு மேல இருக்கும்... வண்டியில ஏறுங்க... ஜீப்பை வேணுன்னா மெதுவா ஓட்ட சொல்லலாம்...’’ என்று தனபாலன் சொல்லவும், அண்ணாமலைக்கு இந்த வசந்தம் நகரின் பிரமாண்டம் புரிந்தது. திரும்ப வந்து ஜீப்பில் ஏறிக் கொண்டான்.

எல்லா சாலைகளுமே சுமார் அறுபது அடிக்கு குறையாத அகலம் கொண்டவையாக இருந்தன. இரண்டு பக்கமும் பெரிய அளவில் படர்ந்து சாலைக்கு குடை பிடிப்பது போன்று மரங்கள். அவற்றின் அடர்த்தியான நிழல்களுக்கு நடுவில் ஆங்காங்கே நிலா வெளிச்சம் பாய்வது, நடன மேடையில் மெல்லிய விளக்கு வெளிச்சம் பாய்ச்சியது போல் இருந்தது. 

நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். சிறிது நேரத்திற்கு முன்பு மேகம் சூழ்ந்து நிலா இருப்பதே தெரியவில்லை. ஆனால் இப்போது தெளிவான வானம். இயற்கையின் விளையாட்டு என்று நினைத்துக் கொண்டான் அண்ணாமலை.

ஒரே அளவிலான மனைகள். அவற்றில் தனித்தனி வீடுகள். 

இன்றைய இளம் தலைமுறையினரைப் பொறுத்த வரை அந்த நகருக்குள் நுழைந்தாலே இருக்கும் அமைதியானது, ஏதோ பெரிய நட்சத்திர ஓட்டல்களில் அதிகாரிகள் கலந்து கொள்ளும் கூட்ட அறையில் இருக்கும் அமைதியைப் போல் தெரியும். 

ஆனால் முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய கிராமத்து மனிதர்கள் வந்தால், இதை நகரப்பகுதி என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அந்த அளவுக்கு கிராமத்தின் அமைதி வசந்தம் நகரிலும் தவழும்.

ஆங்காங்கே செல்போன் டவர்கள் இருந்தாலும், பெரிய பெரிய மரங்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால் பலவகையான பறவைகளின் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். 

அவற்றின் குரல்களை தவிர்த்துப் பார்த்தால் அங்கு குடியிருப்பவர்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவைகளின் சத்தம்தான் வசந்தம் நகரின் அமைதியை கலைத்துப் போடும்.

மாதம் குறைந்த பட்சம் ஆறு இலக்கத்திலாவது சம்பாதிக்கும் பெரிய அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள்தான் அதிகமாக இருந்தார்கள்.

அரசுக் கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றி வரும் சொக்கநாதன், ஐந்து இலக்கத்தில் ஊதியம் பெற்ற காலத்திலேயே வசந்தம் நகர் குடியிருப்புவாசி.

சொக்கநாதன் ஆடம்பரம் பிடிக்காத எளிமையான மனிதர்தான். ஆனால் அவர் வசந்தம் நகரில் இடம் வாங்கி வீடு கட்டுவதற்கு வேறு ஒரு முக்கிய காரணம் உண்டு.

இன்றைய காலகட்டத்தில் வசந்தம் நகரில் மனையின் மதிப்பே கோடி ரூபாயைத் தொடும். தனது சிறிய அளவிலான ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு சுற்றுப்புற அமைதியும் அவசியம் என்று கருதியதால் நகர் உருவான காலத்தியே இரண்டு கிரவுண்ட் அளவிலான மனையை கடன் உதவியுடன் வாங்கி விட்டார்.

ஆனால் இங்கே வீடு கட்டி குடிவந்து சுமார் பனிரெண்டு ஆண்டுகள்தான் இருக்கும்.

ஒரு தமிழ் திரைப்படத்தில் கதாநாயகி சென்னை ஐஐடியில் படித்து விட்டு பள்ளியில் கணக்கு ஆசிரியையாக பணியாற்றுவார். நாயகன் ஏன் இப்படி என்று கேட்கும்போது பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவது பிடிச்சிருக்கு என்பார்.

சொக்கநாதனும் அப்படித்தான். கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினாலும், அந்தப் பணி பாதிக்காத அளவில் நேரம் ஒதுக்கி, அரசுப்பள்ளி மாணவர்கள் அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு புதிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வழிகாட்டுவார்.

ஆராய்ச்சியில் ஈடுபடும் பேராசிரியர் என்றாலும், சொக்கநாதன் கல்லூரிக்கு சென்று வந்த நேரம் போக மீதி நேரங்களில் எல்லாம் ஆராய்ச்சிக்கூடமே கதி என்று இருக்கும் வகை அல்ல. 

அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்துவிடுவார். காலைக்கடன்களை முடித்துவிட்டு, பதினைந்து நிமிடம் எளிய உடற்பயிற்சி. பிறகு சுமார் நாலே முக்கால் மணிக்கு நடைபயிற்சிக்கு கிளம்புவார். 


வசந்தம் நகருக்கு வெளியே மெயின்ரோட்டில் கிழக்கே வந்தால் மேல அலங்கம். அடுத்தது சத்திரம் மெயின்ரோடு. சத்திரம் மெயின்ரோட்டில் ஒரு இடத்தில் நான்கு சாலைகள் பிரியும். அங்கேதான் ராமலிங்கம் டீக்கடை வைத்திருக்கிறார். அங்கிருந்துதான் சிவகங்கை பூங்கா, பெரிய கோயிலுக்கு செல்லும் வழி.

அந்த இடத்துக்கும் சொக்கநாதன் வீட்டுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் மூன்று கிலோ மீட்டர் இருக்கும். போக வர மொத்தம் ஆறு கிலோ மீட்டர் தூரம்தான் சொக்கநாதனின் தினசரி நடைபயிற்சிக்கான அளவு.

வசந்தம் நகர் பகலிலேயே அவ்வளவு அமைதியாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறோம். அப்படி என்றால் இரவு நேரங்களில் கேட்கவே வேண்டாம். அங்கிருக்கும் வீடுகளின் வெளி கேட்டுகளில் பால் பாக்கெட் போடுபவர்களுக்காகவே பிளாஸ்டிக் கூடைகள் அல்லது பைகள் தொங்கிக் கொண்டிருக்கும்.

கறவைப்பால் வாங்குபவர்களின் வீட்டுக் கதவுகளிலும் எவர்சில்வர் பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் பாட்டில்கள் காத்துக் கொண்டிருக்கும். அதனால் பால்காரர்கள் ஹாரன் அடித்து யாரையும் எழுப்புவதில்லை. 

ஆனால் இரவின் நிசப்தத்தை கிழித்துக் கொண்டு அவர்களின் இருசக்கர வாகனங்களின் இஞ்சின் ஒலி ஒழுப்பும். அவர்களும் காலை 5.30 மணிக்கு மேல்தான் வசந்தம் நகருக்குள் வருவார்கள்.


பேப்பர்களை போடுவதற்கும் ஒவ்வொரு வீட்டின் கேட்டுகளில் பிளாஸ்டிக் பைப்புகள் மூடியுடன் தொங்கிக் கொண்டிருக்கும். மழை பெய்யும் நேரத்தில் பேப்பர்களை வீட்டுக்குள் வீசி எறிய முடியாது என்பதால் இந்த ஏற்பாடு.

ஒரு காலத்தில் பேப்பர் போடுபவர்கள் காலை 6.00 மணிக்குள் எல்லா பேப்பர்களையும் வினியோகம் செய்து விட்டு அவரவர் வீட்டுக்கே திரும்பி விடுவார்கள். 

ஆனால் தற்போது இந்த வேலைக்கு ஆட்கள் கிடைப்பது அரிதாகிவிட்ட நிலையில், ஏழ்மை நிலை காரணமாக வந்து கொண்டிருக்கும் ஒன்றிரண்டு நபர்களை பகைத்துக் கொள்ள நாளிதழ் முகவர்கள் தயாராக இல்லை.

வாடிக்கையாளரே தெய்வம் என்பதை எல்லாம் விட்டு விட்டு பையன்கள் வந்து போடும்போதுதான் சார் என்று பேச வேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது.

‘‘ரெக்கார்டுல எந்த இடத்துலயும் சிசி டிவி கேமராவுல சந்தேகப்படும்படியா யாரோட உருவமும் தெரியலைன்னு எழுதியிருக்கீங்கிளே...

அஞ்சரை மணிக்கு முன்னால, பால்காரங்க... பேப்பர்காரங்க மாதிரி எந்த நடமாட்டமும் இல்லையா?... ஆச்சர்யமா இருக்கே...’’ என்று அண்ணாமலை சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு இடத்தில் ஜீப் நின்றது.

‘‘நிறைய பேர் டூவீலர்லதான் பால் வியாபாரம் பண்றாங்க. ஆனா ஒருசில ஆட்கள் இப்போதும் சைக்கிளின் பின்னால் ஒன்று அல்லது இரண்டு பிளாஸ்டிக் கிரேடுகளை வைத்து பால் பாக்கெட்டுகளை வினியோகம் செய்துகிட்டுதான் இருக்காங்க... அவங்கள்ல நாலஞ்சு பேரு இயர்போன்ல பாட்டு கேட்டுகிட்டு, தலையையும் சேர்த்து கவர் செய்யுற மாதிரி குளிருக்கு ஜெர்கின் போட்டுகிட்டு போறாங்க. அவங்களை எல்லாம் கூப்பிட்டு விசாரிச்சாச்சு... 

இன்னும் ஒண்ணு ரெண்டு ஆளுங்க லுங்கி, சட்டை, முண்டாசுன்னு ரொம்ப பழைய கெட்டப். அவங்க எல்லாரையும் தேடிப்பிடிச்சு விசாரிச்சாச்சு... அவங்கள்ல ஒரு சிலர் மட்டும்தான் பல வருஷமா இந்த ஏரியாவுல லைன் பார்க்குற ஆளுங்க. 

அது தவிர காலேஜ் போற பசங்க, பள்ளியில படிக்கிற பசங்க பேப்பர் போடுறது, பால் பாக்கெட் போடுறதுன்னு மூணு மாசத்துல இருந்து ஆறு மாசத்துக்குள்ள கூட ஆளு மாறி மாறி வருவாங்களாம்... அதனால யார் புதுசு, பழசு, ரெகுலர், இர்ரெகுலர்னு நினைவு வச்சிக்க முடியாதுன்னு பதில் வருது.

அது தவிர, இந்த சம்பவத்துக்கு பிறகு எந்த பால் ஏஜெண்ட், பேப்பர் ஏஜெண்ட் கிட்ட இருந்து யாருமே வேலையை விட்டு நிக்கலைன்னு சொல்றாங்க... ஒண்ணுமே புரியல சார்...’’ என்று தனபாலன் தலையை சொறிந்தார்.

அப்போது அண்ணாமலை அந்த இடத்துக்கு அருகில் இருந்த இருந்த மரங்களை பார்த்தான். 

ஏழெட்டு இடங்களில் காத்தாடிகள் சிக்கியிருந்தன. ஒரு பட்டத்தில் இருந்து தொங்கிய நூல் இப்போதும் மரப்பட்டையில் சிக்கி இருந்தது.

அந்த நூலைப் பிடித்து இழுத்தான். ஒரு இரண்டி நீளத்தில் சட்டென்று அறுந்து கைக்கு வந்து விட்டது. 

அண்ணாமலை, பட்டத்தின் நூலை அறுத்ததும், தனபாலன் ‘‘சார்... தஞ்சாவூரைப் பொறுத்த வரை இதுவரைக்கும் காத்தாடி போட்டியில மாஞ்சா நூல் பயன்படுத்துனதாகவோ அல்லது அதனால யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு கூட இல்லை. 

ஆனா சொக்கநாதன் கழுத்துல மாஞ்சா நூல் இருந்ததையும், அவர் கழுத்துக்கு ரெண்டு பக்கமும் அரை அடி தூரத்துல மாஞ்சா நூல்ல கண்ணாடி தூள் உதிர்ந்துருந்ததையும் பார்க்கும்போது, குற்றவாளி கையில அழுத்தமான கிளவுஸ் போட்டு கழுத்துல சுத்தி இறுக்கியிருக்கணும். அந்த நூலைப் பார்த்து அறுந்து தொங்குன மாஞ்சா நூல் கழுத்தை அறுத்துதான் இந்த சம்பவம்னு நாம கேசை முடிக்கிறதுக்காகவே விட்டுட்டு போன தடயமா இருக்கணும். இல்லன்னா அந்த நூலை அவர் கழுத்துல இருந்து ரிமூவ் பண்றதுக்குள்ள யாராச்சும் வர்றதைப் பார்த்து அப்படிவே விட்டுட்டு ஓடியிருக்கணும் சார்... 

கோமா ஸ்டேஜ்ல இருக்குற சொக்கநாதன் கண்விழிச்சு நடந்த சம்பவத்தை அவர் வாயால சொன்னாலோ, எழுதி காண்பிச்சாலோதான் எப்படி தாக்குதல் நடந்துச்சுன்னு நமக்கு தெரிய வரும்...’’ என்றார்.

‘‘ஏன் தனபாலன்... உண்மையை சொக்கநாதன் மட்டுமேதான் சொல்லணுமா?... அந்த குற்றவாளி சொன்னா ஒத்துக்க மாட்டீங்கிளா...’’ என்ற கேள்வி அண்ணாமலையிடம் இருந்து வந்தது.

‘‘உங்களுக்கு செல்ஃப் கான்பிடன்ஸ் அதிகம் சார்... குற்றவாளியை பிடிச்சுட்டா அவன் கிட்ட இருந்தும் உண்மையை வாங்கிடலாம்... நீங்க சொல்றதை ஒத்துக்குறேன் சார்...’’என்று ஆமோதித்தார்.

‘‘வயல்ல விவசாய வேலை நடந்துகிட்டு இருக்கு... அதனால அந்தப் பக்கம் போக வாய்ப்பில்லை... ஓ.கே... ஆனா ஆத்து புறம்போக்கு கருவக் காட்டுலயும், ஆத்தங்கரையிலயும் எந்த தடயமுமே கிடைக்கலையா?... நிச்சயம் குற்றவாளி ஏதாவது பொருளை இந்த பகுதியில டிஸ்போஸ் பண்ணியிருக்கலாம்... நாம இன்னும் ஒரு தடவை தேடினா நல்லதுன்னு நினைக்கிறேன்... நீங்க என்ன சொல்றீங்க தனபாலன்...’’ என்று அண்ணாமலை கேட்கவும், ‘‘செய்யலாம் சார்...’’ என்ற பதில்தான் வந்தது.

அப்போது, அண்ணாமலை டார்ச் லைட் உதவியுடன் ஒரு மரத்தின் ஓரமாக சென்று எதையோ தேடினான். 

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9

No comments:

Post a Comment