Saturday, May 23, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 14

அத்தியாயம் - 14 - சைக்கிள் டயர்


  • நீரானது அதிக ஆவியாதல் வெப்பத்தைக் கொண்டிருப்பதாலும் அதன் வினைபுரியா தன்மையாலும் தீயை அணைப்பதற்கு சிறந்த கருவியாகப் பயன்படுகிறது. நீராவியாதல் நெருப்பின் வெப்பத்தைத் தணிக்கிறது. எனினும் சுத்தமற்ற நீர் மின்சாரத்தை கடத்துவதால் மின்சாதனங்களில் அதாவது சுவிட்ச், பிரிட்ஜ், ஏசி, மோட்டார், பேன், கிரைண்டர், மிக்சி, டி.வி உள்ளிட்டவற்றில் னுபகரணங்களில் பற்றிய நெருப்பை அணைக்க நீரை பயன்படுத்த இயலாது.

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

‘‘நல்லதம்பி...!’’

‘‘எஸ் சார்...’’

‘‘நாம பிரிண்ட் போட்ட போட்டோக்களை எடுத்துட்டு வா...’’

அந்த படங்கள் ஏ4 அளவுள்ள தாளில் கலரில் அச்சிடப்பட்டிருந்தது.

அவற்றை ஒரு முறை பார்த்த அண்ணாமலை, அதை தனபாலனிடம் கொடுத்தான்.

‘‘இதை எப்ப சார் எடுத்தீங்க...’’

‘‘நீங்க படம் பிடிச்ச வீடியோவுல இருந்து கேப்சர் பண்ணி பிரிண்ட் போட்டதுதான்.’’

படத்தைப் பார்த்துக் கொண்டே, ‘‘அதான் கொஞ்சம் தெளிவில்லாம இருக்கா...’’ என்று தனபாலன் சொல்லிவிட்டு நிமிர்ந்தார்.

அப்போது அண்ணாமலையின் பார்வை தனபாலன் முகத்தில்.

‘‘சாரி சார்... இதுல என்ன ஒரு அடி நீளத்துக்கு லேசா மண்ணை வெட்டி விட்ட மாதிரி இருக்கு...?’’

‘‘நீங்க எதாச்சும் சொல்லுவீங்கன்னு காண்பிச்சா, என்னைய கேள்வி கேளுங்க...!’’

பதில் சொல்லாமல் தனபாலன் அமைதியாக இருக்கவும்,

‘‘சைக்கிள் ஸ்டாண்டை எடுத்துவிடும்போதுதான் இந்த மாதிரி பள்ளம் விழும். இப்பவும் லேசா அந்த தடம் இருக்கு பாருங்க...’’ என்று அண்ணாமலை சொன்னதும்தான் மற்றவர்கள் அந்த இடத்தை கவனித்தார்கள்.

‘‘தொடர்ந்து மழை பெய்தாலும் மரத்தோட கிளைகள் குடை மாதிரி இருக்குறதால நேரடியா இந்த இடம் நனையலை... ரோட்டுல ஓடி வந்த மழைத்தண்ணீர்தான் கடந்த போயிருக்கணும்...

அன்னைக்கு ஸ்பாட்டை வீடியோ எடுத்ததுல, சைக்கிள் டயர் இந்த இடத்துல இருந்து ரோட்டு மேல ஏறிப் போனது சேறு ஒட்டின டயர் தடமா பதிவாயிருக்கு...’’ என்று அடுத்த படத்தைக் காட்டினார்.

ஆனால் பக்கத்திலேயே பல டயர் தடங்கள் மொழுகியதைப் போல் இருந்ததால் இதை கவனிக்காமல் இருந்திருக்கிறார்கள்.

அன்னைக்கு எடுத்த வீடியோ இல்லன்னா, அண்ணாமலையும் இதை கண்டுபிடிச்சிருக்க முடியாது என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.

‘‘அது மட்டுமில்லை... ஸ்டாண்டை எடுத்து விட்டதும், டயர் சேத்துல நல்லா உட்கார்ந்திருக்கு... வெறும் சைக்கிள்னா இப்படி அச்சு பதிஞ்சிருக்காது... 

சைக்கிள்ல ஏதோ வெயிட் இருந்திருக்கணும்... குற்றவாளி சந்தேகம் வராம ஏரியாவை விட்டு வெளியில போகணும்னா, ஒண்ணு பேப்பர் பையன் இல்லன்னா பாக்கெட் பால் போடுற பையனாத்தான் வந்திருக்கணும்...’’

‘‘அப்போ நான் பால் பாக்கெட் ஏஜெண்ட்டை எல்லாம் மறுபடி விசாரிக்கவா சார்...’’ என்று தனபாலன் முந்திக் கொண்டார்.

‘‘ஏன் அவசரம்... கடைக்கு ஒரு பாக்கெட்டுன்னு பத்து கடையில பாலை வாங்கி கூட அவன் சைக்கிள்ல எடுத்துகிட்டு போயிருக்கலாம்... அதனால பால் பாக்கெட் ஏஜெண்ட்டுகளை மறுபடி இப்ப விசாரிக்க தேவையில்லை...

இன்னொரு விசயம்... பாக்கெட் பாலை எடுத்துகிட்டு போன பிளாஸ்டிக் கிரேடுகளை ஒண்ணு வீட்டுல பத்திரப்படுத்தியிருப்பான்... இல்லன்னா ஏதாவது பழைய பிளாஸ்டிக் கடையில போட்டுருப்பான்... இதெல்லாம் ஷாப்பிங் மால்ல புடவை கட்டுன இளம்பெண்ணை தேடுற கதைதான்.

தஞ்சாவூர்ல இருக்குற வாடகை சைக்கிள் கம்பெனி, சைக்கிள் ரிப்பேர் செய்யுற இடம் இங்கல்லாம் போய் ஏதாவது க்ளூ கிடைக்கிதான்னு பார்க்கணும்... எதுவும் உருப்படியா ரூட் கிடைக்கலைன்னா அடுத்தது ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் இங்க எல்லாம் சம்பவம் நடந்தது முதல் இன்னைக்கு வரைக்கும் எத்தனை சைக்கிள் உள்ள வந்த பிறகு வெளியில போகாம இருக்குன்னு பார்க்கணும்...

அதுல நமக்கு விஷயம் கிடைக்க வாய்ப்பு குறைவு...

ஏன்னா, சிசிடிவி கேமரா கண்ணுல சிக்காம தப்பிச்சு போறது குற்றவாளியோட நோக்கமா இருந்தா ரயில்வே ஸ்டேஷன், பஸ்ஸ்டாண்ட் மாதிரியான இடங்கள்ல வாகனம் நிறுத்துமிடத்துக்கு போயிருக்க மாட்டான்... ஏன்னா இங்க எல்லாம் பத்துல ரெண்டு கேமராவாச்சும் வேலை செய்யும்... இந்த வழக்கு சவாலானதுதான்... கண்டுபிடிச்சிடலாம் தனபாலன்’’ என்று கூறிவிட்டு ஸ்டேஷனுக்கு திரும்பலாம் என்று கிளம்பிவிட்டான் அண்ணாமலை.

ஜீப் ஸ்டேஷனுக்கு திரும்பும்போது, 

‘‘மல... என்னால நம்பவே முடியலை... தேவிரஞ்சனி ரொம்ப அழகா இருக்கா...’’

‘‘நல்லதம்பி... இந்த சந்தேகம் உனக்கு இப்போ தேவையா?... உன் விளையாட்டு புத்தி எப்பதான் போகப் போகுதோ...?’’

‘‘இல்ல மல... நான் அந்த அர்த்தத்துல சொல்லலை... இவ்வளவு அழகான பொண்ணாட வாட்சப், பேஸ்புக், போன் நம்பர் எதுலயுமே பாய் பிரண்ட் இருந்ததுக்கான தடயமே இல்லை... அதைத்தான் என்னால நம்பவே முடியலை...’’


‘‘நீ உருப்படியா யோசிச்ச ரொம்ப குறைவான விஷயங்கள்ல இதுவும் ஒண்ணு...’’

‘‘அப்படியா மல... ஆக, தேவி ரஞ்சனி இப்போ காணாமல் போயிருக்குறதுக்கும், பாய் பிரண்டே இல்லாம இருந்தது மாதிரி சீன் கிரியேட் பண்ணியிருக்குறதுக்கும் கண்டிப்பா ஏதோ தொடர்பு இருக்கு...’’

‘‘கலாம்...!’’ 

‘‘கலாம் ஐயா இதுல எங்க வந்தாங்க?... அவங்க காலமாகி நாலு வருசம் ஆகுதே...’’ என்று நல்லதம்பி தலையை சொறிந்தான்.

‘‘தொடர்பு இருக்கலாம்னு சொன்னேன்... நீ எல்லாம் எப்படி எக்சாம் பாஸ் பண்ணின... உன்னைய எதை வெச்சு கிரைம் பிராஞ்சுக்கு தேர்வு பண்ணினாங்க... கொடுமைடா...’’

‘‘மல... கிரைம் பிராஞ்ச் என்னைய தேர்வு செய்யலை... அதிக மார்க் எடுத்ததால என் விருப்பத்துக்கு நானே தேர்வு செய்த துறை இது... எல்லாம் என் மல உங்க சாதனைகளை பார்த்துதான்... அதனால என்னைய குறைவா எடை போடாதீங்க...’’ 

‘‘உன் அருமை பெருமைகளை அப்புறம் பேசுவோம்... தனபாலன்... தேவிரஞ்சனியோட பேரண்ட்ஸ் தொடர்ந்து ஸ்டேஷனுக்கு வர்றாங்களா...?’’

‘‘நடுவுல ஒரு நாள் வந்தாங்க... அவ்வளவுதான்...’’ என்று சொல்லவும், 

‘‘அப்போ... தேவிரஞ்சனி இருக்குற இடம் அவங்களுக்கு தெரியும்... இல்லன்னா, இருக்குற இடத்தை சொல்லாம பத்திரமா இருக்கோம்னு எந்த வகையிலயாச்சும் தகவல் கொடுத்திருப்பா...’’ என்றான் அண்ணாமலை.

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9

No comments:

Post a Comment