Sunday, May 24, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 15

அத்தியாயம் - 15 - தாய் கவலைக்கிடம்

  • மனிதர்கள் பொழுதுபோக்கிற்காகவும் உடற் பயிற்சிகளுக்காகவும், விளையாட்டுகளுக்காகவும் நீரைப் பயன் படுத்துகின்றனர். இவற்றுள் சில நீச்சல், நீர்ச்சறுக்கு, படகோட்டம், அலையாடல், நீர் மூழ்குதல் போன்றவை. இத்துடன் உறைபனி ஹாக்கி, உறை பனிச்சருக்கு போன்றவை உறைபனியில் விளையாடப்படுபவை. ஏரிக்கரைகள், கடற்கரைகள், மற்றும் நீர்ப்பூங்காக்கள் ஆகியனவற்றிற்கு மக்கள் சென்று இளைப்பாறி, புத்துணர்ச்சியடைகின்றனர். பாய்ந்தோடும் நீரின் சத்தம் மனதுக்கு இதமாயிருப்பதாகப் பலர் கருதுகின்றனர்.

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

‘‘என்ன சார் சொல்றீங்க...?’’

‘‘பின்ன என்னங்க... சொக்கநாதனை கொலை செய்ய முயற்சி நடந்துருக்கு... பேப்பர், டிவி, சோசியல் மீடியான்னு எல்லாத்துலயும் அவரைப் பத்தின செய்தியோட அவரது உதவியாளர் தேவிரஞ்சனி மாயம்னு நிமிசத்துக்கு ஒரு தடவை திரும்ப திரும்ப சொல்றாங்க. 

சொக்கநாதன் மேல கொலைமுயற்சி நடந்ததுக்கு சுமார் எட்டு மணி நேரத்துக்கு முன்னால தேவிரஞ்சனி காணாம போயிருக்கா...

அவ கல்யாண மண்டபத்துலதான் இருக்கான்னு மறுநாள் காலையில வரைக்கும் பெத்தவங்க நினைச்சுகிட்டு இருந்தாங்கன்னே வெச்சுக்குவோம்... 

உண்மையிலேயே இப்படி ஒருத்தர் காணாம போயிருந்தா, இந்நேரம் அவளைப் பெத்தவங்க பொழுதன்னைக்கும் கண்ணீரோட ஸ்டேஷனுக்கும், எஸ்பி ஆபீசுக்கும்னு அலைஞ்சிருப்பாங்க...

ஆனா இந்த பத்து நாள்ல நடுவுல ஒருநாள்தான் அவங்க வந்து கேட்டாங்கன்னா, அது ஏன்னு யோசிக்க மாட்டீங்கிளா...?

இப்போ நேரே தேவிரஞ்சனி வீட்டுக்கு போங்க...!’’

‘சரிதான்... இன்னைக்கு சிவராத்திரியா ஏகாதசியா...’ என்று நல்லதம்பியின் வாய் முணுமுணுத்தது.

வெளி கேட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றபோது, வீட்டுக்குள் ஏதோ ஒரு தொலைக்காட்சி தொடரில், அவளை நிம்மதியா பிள்ளை பெத்துக்க விட்டுடுவேனா... என்று ஒரு பெண் சவால் விட்டுக் கொண்டிருந்தாள்.

அந்த வசனத்தை தனபாலனும் காதில் வாங்கியதால் அண்ணாமலையின் முகத்தைப் பார்த்தார்.

‘‘இவங்கதான் பொண்ணைத் தொலைச்சவங்க...!?’’ என்று சொல்லிவிட்டு, அழைப்பு மணியை அழுத்தினான்.

பதினைந்து வினாடி தாமதத்திற்கு பிறகு கதவைத் திறந்தது, தேவிரஞ்சனியின் தந்தை காத்தலிங்கம்.

‘‘என்ன சார்... எங்க பொண்ணைப் பத்தி ஏதாவது தெரிஞ்சதா...’’ என்று ஆர்வமாக கேட்டார்.

அவரிடம் பதில் சொல்லாமல், தனபாலனைப் பார்த்து, ‘‘நல்லா நடிக்கிறாரே...’’ என்றான் அண்ணாமலை.

‘‘என்ன சார் சொல்றீங்க...?’’

‘‘பதறாதீங்க... உள்ள போய் பேசலாமா...?’’

காத்தலிங்கம் வேறு வழியின்றி ‘‘வாங்க...’’ என்று சொன்னார்.

அவரது மனைவி, தொலைக்காட்சியின் ஒலி அளவைக் குறைத்தார்.

‘‘உண்மையை மறைக்காம சொல்லுங்க... உங்க பொண்ணு எங்க...?’’

‘‘சார்... அவளைக் காணோம்... கண்டுபிடிச்சு கொடுங்கன்னு உங்க ஸ்டேஷன்லதானே புகார் கொடுத்துருக்கோம்... இப்போ திடீர்னு ராத்திரி நேரத்துல வந்து இப்படி கேட்குறீங்க...?’’

‘‘மறுபடி மறுபடி உண்மையை மறைக்க முயற்சி பண்ணாதீங்க... எங்களுக்கு உண்மை தெரியலைன்னாலும், உங்க பாடி லாங்குவேஜ் தெரியுது... பொண்ணு என்ன ஆனான்னு தெரியாம தவிக்கிற பெற்றோர் நீங்க இல்லை...

எங்க நேரத்தை வீணடிக்காம உள்ளதை சொன்னீங்கன்னா நல்லது... இல்லன்னா, தேவிரஞ்சனியை கைது பண்ற வரைக்கும் உங்களை கொண்டு போய் உள்ள வைக்க வேண்டியிருக்கும்...’’  அண்ணாமலை இவ்வளவு பேசியும் அவர்கள் இருவரும் அசருவதாக தெரியவில்லை.

மவுனமாகவே நின்றார்கள்.

‘‘பொண்ணை விட சீரியல் அவ்வளவு முக்கியமா போயிடுச்சா... அதை நிறுத்துங்க...!’’ என்ற குரலின் கடுமை தாங்காமல் ரிமோட்டை எடுத்த காத்தலிங்கம் ஏதோ ஒரு பொத்தானை அழுத்தி வைக்க, இப்போது டி.வியில் 

பரத் நடித்த காதல் திரைப்படத்தில், ஒரு கையுடன் துணை நடிகர்,‘‘நாங்க சிங்கம்டா...’’ என்று சொல்லி ஆவேசத்துடன் பரத் தலைமுடியை பிடித்து உலுக்கினார்... பதற வைக்கும் பின்னணி இசையுடன் அந்த சுமோ ஒரு வளைவில் திரும்பும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது.

அதைப்பார்த்த காத்தலிங்கம், அவரது மனைவியின் முகம் மேலும் அதிர்ச்சிக்குள்ளானதை அண்ணாமலை கவனித்துக் கொண்டான்.

ஒரு வழியாக ரிமோட்டில் இருந்த சிவப்பு பொத்தானை அழுத்த, தொலைக்காட்சியின் திரை அமைதியாகிவிட்டது.

‘‘திலீப்குமார்... இது வேலைக்காகாது... தேவிரஞ்சனியோட ரூம்ல ஏற்கனவே சர்ச் பண்ணியிருப்பீங்கிளே... எதுன்னு காட்டுங்க... நான் பார்க்கணும்...’’ என்று எழுந்து விட்டான்.

‘‘வாங்க சார்...’’ என்ற திலீப்குமார் எதிர்புறம் சும்மா சாத்தியிருந்த கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

அண்ணாமலை அந்த அறைக்குள் நுழையும்போது, காத்தலிங்கமும் அவர் மனைவியும் பேசும் சக்தியை இழந்து விட்டது போல் நின்றிருந்தார்கள்.

தேவிரஞ்சனி காணாமல் போன மறுநாளே போலீசார் சோதனை செய்தார்கள். அதன் பிறகு யாரும் இந்த அறைக்குள் வரவில்லை என்பதை, மேசை, கட்டில், ஒப்பனை உபகரணங்கள் மீது லேசாக தூசி படிந்திருந்ததை வைத்தே புரிந்து கொள்ள முடிந்தது.

ஆங்காங்கே சில செய்தித்தாள்கள்.

டிரஸ்ஸிங் டேபிள் ஓரமாகவும் பழைய செய்தித்தாள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

கட்டிலில் மூன்று தலையணைகள், பெட்ஷீட் ஆகியவை ஒழுங்கற்று கிடந்தன. அவற்றின் மீதும் ஒரு செய்தித்தாள்.

அண்ணாமலை அதனை எடுத்துப் பார்த்தான்.

‘‘சார்... ரூமுக்குள்ள எவ்வளவோ பழைய பேப்பர்... அதுல இதுவும் ஒண்ணு...’’ என்று தனபாலன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அண்ணாமலை செய்தித்தாளை நான்காக மடக்கி ஒரு செய்தியைக் காட்டினான்.


தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9


No comments:

Post a Comment