Monday, May 25, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 16

அத்தியாயம் - 16 - காதலா... கடத்தலா...


  • மழை நீர் மற்றும் நதி அல்லது ஏரி நீர் என்பது மேலோட்ட நீர் எனப்படும்.  மேலோட்ட நீரை மனித உபயோகத்துக்குப் பயன்படுத்தும் பொழுது சுத்திகரிப்பு செய்தல் அவசியமானது. கரையாத மற்றும் கரையக்கூடிய பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் ஆகியனவற்றை அகற்றுவதாக இது அமையலாம். இதற்கான வழியாகக் கருதப்படும் மணல் வடிகட்டு முறையில் கரையாத பொருட்கள் மட்டுமே அகற்றப்படுகின்றன. ஆனால் குளோரினேற்றம் மற்றும் கொதிக்க வைத்தல் ஆகியன தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அளிக்க வல்லதாய் இருக்கின்றன. நீரை காய்ச்சி வடிகட்டுதல் மேற்கூறிய மூன்று பணிகளையும் செய்கிறது.

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

‘‘சார்...’’ என்று சொல்லி விட்டு வேறு வார்த்தை பேசாமல் தனபாலன் அப்படியே நின்றார்.

‘‘பொண்ணு காதலிச்சது பிடிக்காம மகளை தீ வைச்சு கொளுத்திட்டு அந்த தாயும் தற்கொலைக்கு முயற்சி செஞ்சு ஆஸ்பத்திரியில இருக்காங்க...

இந்த செய்தியை படிச்ச மறுநாள் தேவிரஞ்சனியைக் காணலைன்னா என்ன அர்த்தம்...?’’

‘‘சார்... இந்த பொண்ணு அட்டவணை இனம்... அப்படின்னா அந்த பையன்...?’’

‘‘நம்ம ஊர்ல இப்படித்தான் நடக்குது... இந்த பொண்ணு காதலிச்சது வேற சாதி பையனா இருக்கலாம்... அந்த பையன் குடும்பம் சாதி வெறி புடிச்சு இருந்தா இந்த பொண்ணை கொலை செய்ய முயற்சிக்கலாம்...

இல்லன்னா... ஒரே சாதியா இருந்தா கூட, பொருளாதார அந்தஸ்தை காரணம் காட்டி பெத்தவங்க மறுக்கலாம்... 

அதையும் விடுங்க... ரெண்டு பேரும் ஒரே சாதி... ஒரே வசதி... ஒரே படிப்பு... இப்படி இருந்தாகூட, என்னை மீறி அவ அல்லது அவன் நோக்கத்துக்கு துணையை தேர்ந்தெடுத்துகிட்டா எனக்கு என்ன மரியாதைன்னு பிரிச்சு விடற பெற்றோர் ஊருக்கு ஆயிரம் பேர் இருப்பாங்க...

இந்த கேசைப் பொறுத்த வரை நமக்கு இது முக்கியம் இல்லை... தேவி ரஞ்சனி வீட்டை விட்டுப் போனதுக்கு காரணம் காதலா இல்லை வேலையான்னு தெரிஞ்சாத்தான் அடுத்து தெளிவான பாதை கிடைக்கும்...’’ என்று சொன்ன அண்ணாமலை வெளியில் வந்தபோதும், தேவிரஞ்சனியின் பெற்றோர் அப்படியே நின்றிருந்தார்கள்.

‘‘அப்படியே உறைஞ்சு போய் நின்னுட்டா மட்டும் நான் விட்டுடுவேனா... உங்களை நாளைக்கு வந்து பேசிக்குறேன்...’’ என்று வேகமாக ஜீப்பை நோக்கி அண்ணாமலை செல்லவும், மற்றவர்களும் அவர் பின்னாலேயே வந்து விட்டார்கள்.





மற்றவர்கள் ஜீப்பில் ஏறி அமர்ந்த பிறகு, ஏதோ யோசனை வந்தவனாக, அண்ணாமலை, மீண்டும் வீட்டின் கேட்டைக் கடந்து உள்ளே சென்று காத்தலிங்கத்திடம் எதோ சொன்னான்.

அப்போது காத்தலிங்கம், அண்ணாமலையின் கைகளைப் பிடித்துக் கொண்டு பதில் சொல்லும்போது அவரது கண்களில் கண்ணீர்.

திரும்ப வந்து ஜீப்பில் ஏறிய அண்ணாமலை அமைதியாகவே வந்தார்.

‘‘என்ன மல... ஏதோ சென்டிமெண்ட் எபிசோட் ஓடுது...’’ நல்லதம்பி கேட்டதற்கும் அண்ணாமலை பதில் பேசவில்லை.

‘‘சார்... இந்த கேசுக்காக தேவிரஞ்சனியை பிடிச்சு கொண்டு வந்தாலும் காதல் காரணமாக அவ உயிருக்கு ஏதாச்சும் ஆபத்து வந்தா நம்மளால பாதுகாப்பு கொடுக்க முடியுமா...?’’ திலீப்குமார் குரலில் சந்தேகம்.

இதற்கும் அண்ணாமலை பதில் சொல்லவில்லை.

காவல் நிலையத்திற்கு வந்து விட்டார்கள்.

‘‘தனபாலன்... திலீப்குமார்... மறுபடி சந்திப்போம்...’’ என்று சொல்லி விட்டு, புல்லட் சாவியை நல்லதம்பியிடம் கொடுத்தான்.

‘‘காத்தலிங்கம் ஏன் சார் அழுதாரு...?’’

‘‘அவர் சரிப்பட்டு வர்ற மாதிரி தெரியலை... நாளைக்கு பகல்ல மறுபடி போவோம்... லேடி கான்ஸ்டபிளையும் அழைச்சுட்டு போற மாதிரி இருக்கும்...’’ என்று அண்ணாமலை சொல்லவும் அவர்கள் இருவரும் குழம்பிப் போய் பார்த்தார்கள்.

அப்போது நல்லதம்பி புல்லட்டை ஸ்டார்ட் செய்து அண்ணாமலையின் அருகில் கொண்டு வந்து நிறுத்தினான்.

‘‘தேவிரஞ்சனியோட அம்மாவை ஸ்டேஷனுக்கு அழைச்சுட்டு வர்ற மாதிரி இருந்தா...’’ என்று சொல்லிவிட்டு பின்னால் ஏறிக்கொள்ள, நல்லதம்பியும், ‘‘பை சார்...’’ என்று சொல்லி கிளம்பிவிட்டான்.

‘‘சொக்கநாதன் சம்பவத்துக்கு முதல் நாள் சாயந்திரம் நாலு வயசு பையன் கழுத்துல மாஞ்சா நூல் சிக்கி உயிரை விட்டதால அன்னைக்கு ராத்திரியே மாஞ்சா நூல் சப்ளை இருக்குறதா சந்தேகப்பட்ட இடத்துல எல்லாம் ரைடு போயிருக்காங்க...

அதுல சிக்குன ஆளுங்க எல்லாருமே எங்க வியாபார எல்லை வட சென்னையில நல்லா தெரிஞ்ச ஆளுங்களுக்கு மட்டும்தான்... நீங்க கேட்குற மாதிரி வெளியூர் ஆளுங்களுக்கெல்லாம் நாங்க விற்க மாட்டோம்... ஒவ்வொரு ஸ்டேட்டுலயும் ஒரு ஊர்ல இதை தயாரிச்சு சப்ளை செய்ய கேங் இருக்கு... அப்படின்னு சொல்லியிருக்கானுங்க...

சாதாரண பெட்டிக்கடை, சின்ன மளிகை கடை மாதிரி வாயால விலை சொல்லி கையில காசு வாங்கிட்டு பண்ற வியாபாரம் இது. அதனால எந்த அக்கவுண்ட்ஸ்சும் கிடையாது. அங்க இருந்த ஒருத்தனோட டைரியை பறிமுதல் பண்ணியிருக்காங்க. வீட்டுல துண்டு சீட்டுலயும் சில முகவரி, போன் நம்பர்கள் கிடைச்சுதாம்...

எனக்கு அந்த ஆதாரங்களை பார்த்தா இந்த கேசுல ஏதாச்சும் புது லீட் கிடைக்கலாம்னு தோணுது. அதனால இப்பவே சென்னைக்கு போ...’’

‘‘மல... இப்படியேவா... எதுவும் துணி எடுத்துக்கலை...’’

‘‘அங்க போய் நீ ஒரு வாரம் தங்கி விருந்து சாப்பிடப் போறதில்லை. சந்தேகம் வந்தாலும், வரலைன்னாலும் எல்லா எவிடன்சையும் பார்த்து காப்பி எடுத்துக்க... தேவைப்பட்டா மாஞ்சா நூல் சீல் வச்சிருக்குற குடோன்ல போயும் ஏதாவது தடயம சிக்குதான்னு பாரு...’’

‘‘நீங்க எங்க மல போறீங்க...?’’

‘‘அதை நீ ஊருக்கு போயிட்டு வந்த பிறகு பேசிக்குவோம்...’’ என்ற பதில் வந்த பிறகு நல்லதம்பி வேறு எதுவும் கேட்கவில்லை.

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9

No comments:

Post a Comment