Wednesday, May 27, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 18

அத்தியாயம் - 18 - மதுரை - ராமேஸ்வரம்

  • நீரானது மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது.நீர்விசை மின்சாரம் என்பது நீர்சக்தியிலிருந்து பெறப்படுவது. நீர்விசைமின்சாரம் நீரானது மின்னாக்கியுடன் இணைக்கப்பட்ட நீர்ச் சுழலியை சுற்றும் போது ஏற்படுகிறது. நீர்விசைமின்சாரம் செலவு குறைந்ததாயும் ,மாசுபடுத்தாததாயும்,புதுப்பிக்கப்படவல்ல ஆற்றல் மூலமாகவும் இருக்கிறது. இதற்கான ஆற்றல் சூரியனிலிருந்து பெறப்படுகிறது. சூரிய வெப்பம் நீரை ஆவியாக்கியபின், அந்நீராவி மேலெழும்பி உயரங்களில் ஆட்படும் குளிர்விப்பிற்குப் பின் மழையாக மாறி கீழ் நோக்கி பொழிகிறது. த்ரீ கோர்ஜஸ் அணையே உலகத்தின் மிகப்பெரிய நீர் விசை மின்சார மின் நிலையம்.

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

‘‘சார்... நீங்க என்ன சொல்றீங்க... யாரு...’’ என்று ஏதேதோ உளறினார்.

‘‘விஜயகுமார்... ரிலாக்ஸ்... இப்படி நீங்க பதறுவீங்கன்னுதான் நான் திருப்பூர் வரைக்கும் அமைதியா வந்தேன்... உங்களுக்கோ, தேவிரஞ்சனிக்கோ ஒண்ணும் ஆகாது... அதுக்கு நான் கியாரண்டி...’’

‘‘யார் சார் நீங்க... அதை சொல்லுங்க முதல்ல...’’ இப்போது விஜயகுமார் பேச்சில் தெளிவு.

‘‘அண்ணாமலை... சிபிசிஐடி...!’’

இதைக் கேட்டதும் விஜயகுமாருக்கு பேச்சே வரவில்லை.

‘‘பாவம் சார் அந்த பொண்ணு... அவளும் அவ கணவனும் இருக்குற இடம் தெரிஞ்சா வாழ விடமாட்டாங்க சார்... சாதி வெறி புடிச்சவங்க அந்த பொண்ணையோ, பையனையோ கொலை செய்யுறது தொடர்கதையாத்தான் இருக்கு... அவங்கள்ல எத்தனை பேரை அரசாங்கமும் காவல்துறையும் காப்பாத்தியிருக்காங்க...’’ என்று மெல்லிய குரலில் விஜயகுமார் வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன.

‘‘விஜயகுமார்... இங்க இருந்தே பேச வேண்டாம்...’’ என்று சொல்லவும், எல்லாவற்றையும் சரிபார்த்து விட்டு இருக்கையை விட்டு எழுந்து வந்தார்.

பேருந்தை விட்டு அண்ணாமலைதான் முதலில் இறங்கி நடக்கத் தொடங்கினான்.

‘‘விஜயகுமார்... தேவிரஞ்சனியும் அவள் காதலனும்...’’ என்று பேசிக்கொண்டிருக்கும்போதே, ‘‘சார்... ஒரு திருத்தம்... முன்னாடிதான் காதலன்... இப்போ கணவன்.’’ என்று திருத்தம் சொன்னார்.

‘‘சரி... கணவன்... அவங்க ரெண்டு பேரும் இருக்குற இடம் தெரிஞ்சா உயிருக்கு ஆபத்துன்னு நானும் ஒத்துக்குறேன்... அதனாலதான் என்னோட போனைக்கூட வீட்டுலயே வெச்சுட்டு பஸ் ஏறி தனியா வந்துருக்கேன்...

வாரண்ட்டோட உங்களை ஸ்டேஷனுக்கு தூக்கிட்டு போய் விசாரிக்க எவ்வளவு நேரம் ஆகும்...?

சொக்கநாதன் இன்னும் கண் விழிக்கலை... அவர் மேட்டர் எவ்வளவு பெரிசா போய்கிட்டு இருக்குதுன்னு நீங்களே டிவியிலயும், பேப்பர்லயும் பார்த்துருப்பீங்க...’’

‘‘ஆமா சார்... எதாவது பண்ணி நம்பர் ஒண்ணா இருக்கணும்னு டிவி, பேப்பர்காரங்க எதையாச்சும் சொல்லிகிட்டே இருக்காங்க... அது எல்லாமே உண்மைன்னு நாங்க நம்பணுமாக்கும்...’’ என்று ரொம்ப சாதாரணமாக ஊடகங்களின் மேல் பொதுமக்களுக்கு இன்றைய காலகட்டத்தில் எந்த அளவுக்கு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாக சொல்லிவிட்டார்.

‘‘சொக்கநாதன் என்னென்ன கண்டுபிடிப்புகள்ல ஈடுபட்டிருந்தார்னு ஓரளவாச்சும் தெரிஞ்சாதான், எந்த பொருள் காரணமா யார் கொலை முயற்சியில இறங்கியிருப்பான்னு நாங்க குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும்...

இப்போ தேவிரஞ்சனி உண்மையை என்கிட்ட சொல்லிட்டான்னா, நாங்க குற்றவாளியை கண்டு பிடிக்கிறதுல கவனம் செலுத்தி, தேவிரஞ்சனியை டிஸ்டர்ப் பண்ண மாட்டோம்...

நிலைமை சிக்கலாயிடுச்சுன்னா, தேவிரஞ்சனியை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டிய சூழ்நிலை வந்துடும்... அப்புறம் உடந்தையா இருந்ததுக்காக உங்க மேல கூட நடவடிக்கை எடுக்க முடியும்...’’ என்று சொன்ன அண்ணாமலையைப் பார்த்து, விஜயகுமார் விரக்தியாக சிரித்தார்.

‘‘ஒரு அளவுக்குமேல எதையும் கண்டுபிடிக்க முடியலைன்னா, யாரையாச்சும் பிடிச்சு வெச்சுகிட்டு விசாரணை நடந்துகிட்டு இருக்கு... உண்மை விரைவில் வெளிவரும்னு காலத்தை கடத்துவீங்க...அதானே உங்களால முடியும்...’’

இதைக் கேட்ட அண்ணாமலைக்கு கோபம் வரவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக எப்போதாவது அரிதான தருணத்தில் நடந்துவரும் உண்மையைத்தான் விஜயகுமார் சொன்னார். 

அதற்காக நம்ம டிபார்ட்மெண்ட்ல இருக்குற பலவீனத்தை பொதுமக்கள்கிட்ட எப்படி ஒப்புக்கொள்ள முடியும்... என்ற சிந்தனையுடன், ‘‘விஜயகுமார்... நாம அதிக நேரம் பேசிகிட்டு இருக்குறது கூட எதாவது பிரச்சனையை கொண்டு வரலாம்... உங்களை மாதிரி நானும் தேவிரஞ்சனியை அவ மாமனார் குடும்பத்துகிட்ட இருந்து காப்பாத்தணும்னு நினைக்கிறேன்... சட்டுன்னு முடிவெடுங்க...!’’ என்று அண்ணாமலை சொல்லவும், இனிமேல் விவாதம் செய்ய அவன் தயாராக இல்லை என்பதை விஜயகுமார் உணர்ந்து கொண்டார்.

‘‘மதுரை ராமேஸ்வரம் பஸ் நிக்கிற இடத்துல அலங்கார் ஹோட்டலுக்கு வர்றேன்னு சொல்லியிருக்கா...’’

‘‘அப்போ மதுரையிலதான் இருக்காங்களா...’’என்று லேசாக கிளறிப் பார்த்தான் அண்ணாமலை.

‘‘சார்... அவ எந்த ஊர்ல இருக்கான்னு எனக்கே தெரியாது... சொல்லவும் வேண்டாம்னுட்டேன்...’’

அப்போது, அவர்கள் அருகில் வந்த நடத்துநர், ‘‘சாருக்கு தஞ்சாவூரேவா... பஸ்சை விட்டு இறங்கின உடனே எல்லாரும் பறந்துடுவாங்க... ஆனா நீங்க இவ்வளவு நேரம் பேசிகிட்டு இருக்கீங்க...’’என்று இயல்பாக உரையாடலில் கலந்து கொண்டார்.

‘‘அண்ணே... சார் சிபிசிஐடி... தேவிரஞ்சனி மேட்டர் தெரிஞ்சுதான் வந்துருக்காங்க...’’ என்று விஜயகுமார் சொல்லவும் அவரது முகத்திலும் அதிர்ச்சி.

‘‘நம்பிக்கை வர்ற மாதிரிதான் பேசியிருக்கார்... என்ன பண்றது... நம்பிக்கைதானே வாழ்க்கை... சார்... நீங்க ரெண்டு டேபிள் தள்ளி உட்காருங்க... நாங்க பக்குவமா பேசினதுக்கப்புறம் நீங்க வரலாம்...’’ என்று சொல்லிவிட்டு அவர்கள் முதலில் சென்று கை அலம்பினார்கள்.

இவர்களுக்கு முன்பே தேவிரஞ்சனியும் அவள் கணவனும் வந்து அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

மெரூன் கலர் சுடிதார் அணிந்து, கருப்பு துப்பட்டாவால் தலையை சேர்த்து முக்காடு போட்டிருந்தாள். அவள் கணவன் தலையில் தொப்பி.

அண்ணாமலை அவளிடம் பேசத் தொடங்கி அரைமணி நேரம் கடந்திருந்தது.

விஜயகுமாரிடம் வாக்கு கொடுத்திருந்தவாறு, தேவிரஞ்சனியிடம் இருந்து தகவல்களை மட்டும் கேட்டுக் கொண்டு எழுந்த அண்ணாமலை, மீண்டும் அவளைப் பார்த்து, ‘‘ஏம்மா... போன் நம்பர் கூட புதுசா வாங்கிடுவ... இல்லன்னா வேற யாரோட மொபைலையாச்சும் அவசரத்துக்கு பயன்படுத்திக்கலாம். ஆனா ஆதார் நம்பர் இல்லாம, பேங்க் அக்கவுண்ட் பயன்படுத்தாம எவ்வளவு நாள் உங்களால மறைஞ்சு வாழ முடியும்...?’’

‘‘சார்... இப்பவும் நம்ம நாட்டுல வங்கின்னா என்னன்னே தெரியாம சில கோடிப் பேர் இருக்காங்க...’’ என்று சொல்லிவிட்டு அவளும் கிளம்பிவிட்டாள்.

அதே பேருந்தில் ஊர் திரும்பினால் விஜயகுமாரின் கவனம் கலையும், அதனால் அடுத்த பேருந்தில் ஏறலாமா என்று யோசித்தான் அண்ணாமலை.

‘வேண்டாம்... அவர் கண் எதிரிலேயே ஊருக்கு திரும்பினால்தான் அவருக்கு கொஞ்சமாவது நம்பிக்கை வரும்... இல்லை என்றால் நான் மறைத்து வைத்த போலீஸ் படையுடன் பின்தொடர்ந்து சென்று தேவிரஞ்சனியை பிடித்து விடுவேனோ என்ற சந்தேகம் எழும். அப்படி ஒரு மனநிலையுடன் அவரால் நிம்மதியாக பேருந்தை இயக்க முடியாது. ஐம்பது அறுபது உயிர் சம்மந்தப்பட்ட விஷயம்... அதனால் இந்த பேருந்திலேயே ஊர் திரும்பி விடுவோம்’ என்று முடிவுவெடுத்தான்.

அந்த பேருந்து மீண்டும் தஞ்சாவூருக்குள் வந்தபோது இரவு மணி ஏழேகால் ஆகியிருந்தது.

அண்ணாமலை நகரப்பேருந்தில் ஏறி ஜங்ஷனில் இறங்கி பிறகு மீண்டும் வேறு பேருந்தைப் பிடித்து அவரது வீட்டுக்கு சென்றார்.

எதிர்பார்த்தபடியே நிறைய தவறிய அழைப்புகள் நிறைய இருந்தன.

முதலில் ஐ.ஜியை அழைத்தான்.

‘‘இவ்வளவு நேரம் போனை வச்சிட்டு எங்க போயிருந்தீங்க...’’ என்று கச்சிதமாக விஷயத்தை கவ்வினார்.

‘‘இல்ல சார்... சீக்ரெட் இன்வெஸ்டிகேஷன்...’’

‘‘தேவிரஞ்சனி இருக்குற இடம் தெரிஞ்சதா இல்லையா...?’’

‘‘இல்ல சார்... சொக்கநாதனைப் பத்தின சில தகவல்கள்தான் கிடைச்சது... தேவிரஞ்சனி இருக்குற இடத்தை கண்டுபிடிக்க முடியலை...!’’

‘‘அவளோட போட்டோவை மீடியாவுக்கு கொடுத்துடலாமா...?’’

‘‘அப்படி செஞ்சா, இன்னும் உறுதியா ஏதாவது கண்காணாத இடத்துல போய் பதுங்கிட வாய்ப்பு இருக்கு. அப்புறம் கண்டு பிடிக்கிறது கஷ்டமாயிடும்... அவ மேல போலீசோட சந்தேகம் இல்லைன்னு தெரிஞ்சாத்தான் சுதந்திரமா நடமாடுவா... நம்மாலயும் சீக்கிரம் பிடிக்க முடியும்...’’

‘‘நீங்க சொல்றதும் சரிதான்... அது ஒரு பக்கம் இருக்கட்டும்... சொக்கநாதனை கொல்ல முயற்சி செஞ்சவங்க பத்தின உண்மை தெரிஞ்சுட்டா, தேவிரஞ்சனி இந்த வழக்குக்கு தேவையில்லை.’’ 

‘‘கோமாவுல படுத்துருக்குறவர் கண் முழிச்சுட்டா எந்த அவஸ்தையும் தேவையில்லை சார்...’’ என்று அண்ணாமலை சொல்லவும்,

‘‘அப்படி நடந்துட்டா எனக்கும் உங்களுக்கும் என்ன வேலை... சரி... வேற எதாவது தகவல் இருந்தா கூப்பிடுங்க...’’ என்று அவரே போனை கட் செய்து விட்டார்.

அதன் பிறகு மற்ற எண்களையும் இவரே அழைத்து கவனமாக பதில் அளித்து விட்டு, கடைசியாக நல்லதம்பியை அழைத்து தனது வீட்டுக்கு வர சொன்னான்.

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9

No comments:

Post a Comment