Thursday, May 28, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 19

அத்தியாயம் - 19 - நாளிதழ் முகவர் சுந்தரேசன்

  • ஒரு காலன் நீரில் இருக்கும் அகற்றப்படக்கூடிய கால்சியம் கார்பனேட் அளவை வைத்து நீரின் கடினத்தன்மை நிர்ணயிக்கப்படுகிறது. கடின நீர் தெள்ளத் தெளிவான பானங்களின் தயாரிப்பைத் தடுக்கிறது.நீரின் கடினத்தன்மை சுத்தப்படுத்தும் திரவத்தின் செயல்பாட்டைத் தடுப்பதன் மூலம் சுகாதாரத்தையும் பாதிக்கிறது.

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

அண்ணாமலை கிடைத்த விஷயங்களை பேசி முடித்ததும், ‘‘மல... தேவிரஞ்சனி எந்த ஊர்ல இருக்கான்னு தெரிஞ்சுகிட்டீங்களா...’’

‘‘இல்லடா...’’

‘‘ஏன் மல... ஒருவேளை அவ ஏதாவது நாடகமாடினா...?’’

‘‘அன்னைக்கு முத்துராஜ் சொந்தக்காரங்க எப்படி வெறிபுடிச்சு போய் இருந்தாங்கன்னு பார்த்தீல்ல...’’

‘‘ஆமாம்... எந்த பொண்ணு... யாருன்னு தெரியாதப்பவே இந்த கொலை வெறி... தேவிரஞ்சனிதான்னு தெரிஞ்சா, கன்பர்மா ரெண்டு பேரையுமே கட்டி வச்சு கொளுத்திடுவானுங்க போலிருக்கே...’’

‘‘இந்த சூழ்நிலையில தேவிரஞ்சனியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து மாட்டி விட சொல்றியா...?’’

‘‘நம்ம மேலிடத்துக்கு பதில் சொல்ல வேண்டி வருமே...’’

‘‘அதெல்லாம் சமாளிச்சுக்கலாம்... கொலைகாரங்க, கோடிக்கணக்குல கடன் வாங்கி ஏமாத்துனவங்கன்னு பல பேர் வெளிநாட்டுக்கு தப்பிச்சு போய் நிம்மதியா வாழ்ந்துகிட்டு இருக்காங்க...

வாழணும்னு ஆசைப்படுற ரெண்டு ஜீவன் ஏதோ ஒரு ஊர்ல அடையாளம் தெரியாம வாழ்ந்துட்டு போகட்டுமே...  இந்த வழக்குல அவ குற்றவாளி கிடையாது... அப்படி இருக்கும்போது ஏன் அவங்களை காட்டிக்கொடுக்கணும்...?

வழக்குல மற்ற ஆதாரங்கள் வலுவா இருந்தா, அவ மேல இருக்குற ஃபோகசை குறைச்சுகிட்டே போய் ஒரு கட்டத்துல சுத்தமா கழட்டிவிட்டுடலாம்... அது ஒரு மேட்டரே இல்லை...’’

‘‘நீங்க சொல்றதும் சரிதான்...’’ என்ற நல்லதம்பியின் முகத்தில் திருப்தி தெரிந்தது.

‘‘நீ போன காரியம் என்னாச்சு...’’

‘‘முதல்ல பத்து இடத்தைதான் டார்கெட் பண்ணி ரெய்டு போயிருக்காங்க. ஆறாவது ஸ்பாட்ல சிக்கினவன் பாக்கெட் நோட்டுல நிறைய நம்பர் எழுதி வெச்சிருந்துருக்கான். அந்த போன்நம்பர்கள் மூலமா கூடுதலா மூணு இடத்துக்கு ரெய்டு போயிருக்காங்க. 

பாக்கெட் நோட்டுல கடைசியா இருந்த நம்பரும் அந்த குடோன்ல குப்பையில கிடந்த ஒரு கிழிஞ்ச பேப்பர்ல எழுதியிருந்த நம்பரும் ஒண்ணா இருந்துருக்கு... அதையும் போட்டோ எடுத்துருக்காங்க... அந்த நம்பர்தான் போன்ல இருக்கேன்னு பேப்பரை ஸ்பாட்லயே விட்டுட்டதா தெரியவும் நான் மறுபடி அவங்களை அழைச்சுட்டு போனேன்.

அந்த போன் நம்பர் இருந்த பேப்பர் எதோ ஒரு பார்சல்ல ஒட்டுற லேபிளை கோணலா கிழிச்சு பின்னால எழுதியிருக்காங்க. அதை எவிடென்சா சென்னை போலீஸ் கலெக்ட் பண்ணிகிட்டதால நான் அதை போட்டோ எடுத்துகிட்டேன். பத்திரிகை ஆபீஸ் அட்ரஸ் கிழிஞ்சு இருந்தது. அந்த புத்தகத்தை தேடி வாங்கி கண்டுபிடிச்சு... அதுக்கு நேரம் புடிக்கும் போல இருந்தது.

தஞ்சாவூர் புறநகர், மாரியம்மன்கோவில்னு போட்டிருந்ததால இங்க விசாரிச்சுட்டு தேவைன்னா அந்த ஆபீசுக்கு போகலாம்னு கிளம்பி வந்துட்டேன்...’’

‘‘அமுதஅஞ்சல் வார இதழ் பழைய பஸ்ஸ்டாண்ட் கடைகள்ல் குமுதம், ஆனந்தவிகடன்னு மத்த புத்தகங்களோட தொங்குறதை பார்த்திருக்கேன்... புத்தகத்தோட தேதின்னு ரெய்டு நடந்ததுக்கு மறுவார தேதியைப் போட்டிருக்காங்க... இதை வெறும் குப்பைன்னு கடந்து போயிட முடியாது.

முதல்ல தஞ்சாவூர் ஏஜெண்ட் யாருன்னு விசாரிப்போம்...’’ என்று அப்போதே கிளம்பினார்கள்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டு கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் பேப்பர், புத்தகங்கள் பிரித்து எடுக்கும் ஏஜெண்டுகள் எங்கே கூடுவார்கள் என்பதை ரயில்வே ஜங்ஷன் அருகில் இருந்த கடையில் அமுதஅஞ்சல் ஏஜெண்ட் யார் என்று விசாரித்தார்கள்.

‘‘இதோ... இவரும் பேப்பர் ஏஜெண்டுதான்... இவர்கிட்டயே கேளுங்களேன்...’’ என்று கடைக்காரர் கை காட்டியதும் இவர்கள் இருவரும் திரும்பி பார்க்க, அங்கே ஒரு எக்செல் சூப்பர் மொபட்டை ஒருவர் நிறுத்திக் கொண்டிருந்தார். வண்டியின் நடுப்பகுதியில் பெட்ரோல் டேங்க் உயரம் வரை நாளிதழ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. விற்காதவற்றை ரிட்டன் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

அவரிடம் விஷயத்தை சொன்னதும், ‘‘சார்... நீங்க சொல்ற மோகன்குமார் யாருன்னு எனக்கு தெரியலை... சுந்தரேசன்னு ஒரு ஏஜெண்ட் இருபது இருபத்தஞ்சு புத்தகத்துக்கு ஏஜெண்ட்டா இருக்காரு... அவர்தான் அமுதஅஞ்சல் புத்தகத்துக்கும் ஏஜெண்ட்டுன்னு நினைக்குறேன்...’’ என்றார்.

‘‘மாரியம்மன் கோவில்னு போட்டுருக்கே... அங்க போய் விசாரிக்கலாமா...?’’

‘‘சார்... டவுனை சுத்தி பத்து கிலோ மீட்டர் வரைக்கும் உள்ள ஊருக்கு ஏஜெண்ட் இருந்தா, அந்த கட்டு எல்லாத்தையும் மெயின் ஏஜெண்ட்டோட கட்டுக்குள்ள வச்சு பெரிய கட்டா கட்டி அனுப்பிடுவாங்க...

இதை நாங்க உள்கட்டுன்னு சொல்லுவோம்... பெரும்பாலும் அந்த உள்கட்டை ஏதாவது டவுன்பஸ்ல போட்டு விடுவோம்... சிலர் மார்க்கெட்டுக்கு அல்லது வேற எங்கயாச்சும் இங்க வந்துட்டு போற ஆளா இருந்தா கையிலயே வாங்கிட்டு போயிடுவாங்க...

மாரியம்மன் கோவில் பக்கம்தானே... அதனால நேர்ல வாங்குற கட்டாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்... காலையில மூன்றை மணியில இருந்து ஆறரை, ஏழு வரைக்கும் எல்ஐசி க்கு பக்கத்துலதான் கட்டு பிரிப்போம்... அங்க வந்துடுங்க சார்...’’ என்று விளக்கமாகவே பதில் சொன்னார்.

‘‘சுந்தரேசன் வீடு எங்க இருக்கு...?’’

‘‘நியூ ஹவுசிங் யூனிட்டுல இருக்காருன்னு தெரியும். ஆனா சரியான முகவரி தெரியாது. சாயந்திரம் அவரைப் பார்த்தேன்... மனைவியோட திருக்கருகாவூர் கோயிலுக்கு போய்கிட்டு இருந்தாரு... திரும்பி வந்துட்டாரா இல்லையான்னு தெரியலை... காலையிலன்னா கட்டாயமா வந்துடுவாரு...’’ என்று சொன்ன அவர் தனது வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

அடுத்தநாள் - அதிகாலை 3.45 மணி.

அண்ணாமலை, நல்லதம்பி இருவருமே ஸ்வெட்டர், மங்கி குல்லாய் அணிந்திருந்தார்கள். காது, மூக்கு எல்லாமே கிட்டத்தட்ட மூடப்பட்டிருந்தது. 

அண்ணாமலை ஓட்டிய புல்லட்டும் இருபது கிலோ மீட்டர் வேகத்தை தாண்டவில்லை. அப்படியும் நல்லதம்பியின் பற்கள் பழைய டைப்ரைட்டர் மெஷின் இயங்குவதை நினைவுபடுத்திக் கொண்டிருந்தன. 

அண்ணாமலை நிலைமை அந்த அளவுக்கு மோசமில்லை என்றாலும் அவன் புல்லட்டின் ஹேண்ட்டில் பாரை பிடித்திருந்த விதமே, குளிர் தாங்காமல் இருப்பதை விளம்பரம் செய்து கொண்டிருந்தது.

முன்பெல்லாம் பேப்பர் கட்டுக்களை பிரிக்கும் இடம், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம்தான். நாளிதழ்கள்தான் லாரி, வேன், கார் போன்ற சொந்த வாகனம் அல்லது ஒப்பந்த வாகனத்தில் வந்து இறங்கும். பல வார, மாத இதழ்கள் சென்னையிலிருந்து கும்பகோணம் வழியாக தனியார் ஆம்னி பஸ்களில் வருவதால் அவர்களும் புத்தக பார்சல்களை பழைய பேருந்து நிலையத்திலேயே இறக்கிவிட்டுச் செல்வார்கள்.

இப்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டதால், எல்ஐசி அலுவலகம் பகுதியில்தான் பார்சல்களை பிரிக்க ஆரம்பித்திருக்க வேண்டும்.

எல்லா நாளிதழ் முகவர்கள், தெருக்களுக்கு செல்லும் இளைஞர்கள், சிறுவர்கள், நடுத்தர வயதினர் என்று  பலரும் கட்டுக்களை பிரிப்பது, நாளிதழ்களுக்குள் இணைப்பிதழ்களை கோர்த்து வைப்பது, கடைகளுக்கு கொடுக்க வேண்டிய பேப்பர்களை எண்ணி அடுக்கி, வால் போஸ்டர் வைத்து கட்டி, கடையின் பெயரையும் எண்ணிக்கையையும் எழுதுவது என்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். வெளியூர் சென்று திரும்பும் சிலர் அவர்களிடமே நாளிதழ்களை வாங்கினார்கள்.

‘நடு ராத்திரியில கொண்டு வந்து ஆறு ரூபாய்க்கு ஐநூறு ரூபாயை நீட்டுறீங்கிளே... ஏன் சார் இப்படி... சில்லரையா இருந்தா கொடுங்க... இல்லன்னா பேப்பரை வச்சிட்டு போய்கிட்டே இருங்க... பொழுது விடிஞ்சதுக்கப்புறம் ஏதாவது கடையில போய் வாங்கிக்குங்க...’ என்று ஒருவர் பேப்பர்களை எண்ணி பிரித்துக் கொடுக்கும் வேலையை தொடர்ந்தார்.

ஐநூறு ரூபாய் பார்ட்டி சட்டை, பேண்ட் பாக்கெட்டுகளில் துழாவி நாணயங்களை கொடுத்து விட்டு பேப்பரை வாங்கிக் கொண்டு சென்றது.

‘சில்லரை மாத்த நல்ல இடம் பார்க்குறாங்க பாரு...’ என்று அவர்களுக்குள் பேசி சிரித்துக் கொண்டு வேலையை தொடர்ந்தார்கள்.

அவர்களில் பாதிப்பேர் சாதாரண உடைகளைத்தான் அணிந்திருந்தார்கள். ஒரு சிலர் தலையில் மட்டுமே தொப்பி. இந்த சூழ்நிலைக்கு அவர்கள் உடல் நன்கு பழக்கப்பட்டிருக்க வேண்டும். 

‘‘அடப்பாவிகளா... உங்க உடம்பு தோல் மனித தோலா வேற எதுலயாச்சும் ஆர்டர் கொடுத்து செஞ்சாங்களா...’’ என்று நல்லதம்பி வாய் பிளந்தான்.

வண்டியை நிறுத்தி விட்டு சிறிது நேரம் எதுவும் பேசாமல் அவர்கள் செய்யும் வேலையை நோட்டம் விடவும், நேற்று ஜங்ஷனில் பார்த்து பேசிய ஏஜெண்ட், ‘‘சார்... அதோ... கடைசியா ஒருத்தர் இருக்காரே... அவர்தான் சுந்தரேசன்...’’ என்று கை காட்டிய இடத்தில், ஒரு நடுத்தர வயது நபர் ஏழெட்டு பார்சல்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார்.

‘‘என்னைய எதுக்கு சார் தேடுறீங்க... என்ன புத்தகம் வேணும்...?’’ 

அண்ணாமலை நல்லதம்பியைப் பார்க்க, அவன் சட்டைப் பையில் இருந்து சென்னையில் சிக்கிய பகுதி கிழிந்திருந்த அட்ரஸ் சிலிப் நகலை எடுத்து சுந்தரேசனிடம் நீட்டினான். ‘‘இந்த ஆள் பார்சல் வாங்கிட்டு போயிட்டானா...?’’

அதை கையில் வாங்கிப் பார்த்த சுந்தரேசன் முகம் மாறிவிட்டது. 

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9

No comments:

Post a Comment