Sunday, May 10, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் – 1

அத்தியாயம் 1 - எதை விட்டாலும் போனை விட மாட்டீங்களே...


  • நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
    வானின்றி அமையாது ஒழுக்கு.

அதிகாரம் : வான்சிறப்பு, குறள் எண்.20

***






தேவிரஞ்சனி வீட்டிலிருந்து ஓடிப்போவது என்ற முடிவுடன்தான் வெளியேறி இருக்கிறாள்.

இங்கே நான்கு வீடியோ கேமராக்கள்... இரண்டு ஸ்டில் கேமராக்கள்... படம் பிடித்துக் கொண்டிருந்தன. அங்கே இருந்த நானூறு பேர் கையிலும் நிச்சயமாக ஒரு கேமரா மொபைலாவது இருந்தது. அவர்களும் அவற்றை சும்மா வைத்திருக்காமல் மொபைல் ஸ்கிரீனை பயமுறுத்தி செல்பி எடுத்துக் கொண்டோ, கூட்டத்தில் இருந்தவர்களை திருட்டுத்தனமாக படம் பிடித்துக் கொண்டோ இருந்தார்கள்.

இவர்கள் யாருடைய கேமரா கண்களிலும், சிக்காமல் மண்டபத்தை விட்டு நழுவ வேண்டும்... அதை எப்படி செய்வது என்ற சிந்தனை அவள் மனதில்.

தஞ்சாவூர் மேல வீதியில் பழமையான அந்த மண்டபம் எழுபத்தைந்து ஆண்டுகளைக் கடந்த கட்டிடம் என்றாலும், உறுதியுடன் கம்பீரமாக நின்றது.

அதன் பழமையான தோற்றம் எதுவுமே வந்திருப்பவர்களின் பார்வையில் பட்டுவிடக்கூடாது என்று மண மேடைக்கு மட்டுமின்றி, சீலிங், பக்கச் சுவர் என்று எல்லா இடங்களையும் வண்ண வண்ண துணிகளால் போர்த்தி, செயற்கையாக உருவாக்கிய பூக்கள், மாலைகள் பூஞ்சோலையை உருவாக்கியிருந்தார்கள். டெக்கரேஷன் அமைக்க இன்னும் பிளாஸ்டிக் தடை விதிக்கப்படவில்லை என்பது நன்றாக தெரிந்தது.

மாப்பிள்ளையையும், பெண்ணையும் ஜோடியாக குதிரை சாரட் வண்டியில் அமர வைத்து ஊர்வலமாக அழைந்து வந்தார்கள்.

பேண்ட் வாத்தியத்திற்கு மிரண்டு ஓடாமல் இருக்க பழக்கிய இரண்டு வெள்ளைக்குதிரைகள் காலில் சலங்கையை கட்டிக் கொண்டு நின்ற இடத்திலேயே டிஸ்கோ டான்ஸ் ஆட முயற்சித்துக் கொண்டிருந்தன.  அவற்றின் கடிவாளங்களை பிடித்திருந்தவர்கள் தலைமுடியை கடிக்க வேண்டும் என்றாலும் அந்த குதிரைகள் இரண்டடி அளவிற்கு குனிந்தால்தான் முடியும்.

ஊர்வலத்தில் குதிரை வண்டிக்கு முன்னால் வந்தவர்களில் பல வயதுகளில் இருந்த பெண்கள் கூட்டம்தான் அதிகம். அவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டுப்புடவைகளில் இருந்தார்கள். இன்னும் பலர் மிடி, சுடிதார் போன்ற உடைகளில் இருந்தாலும் அவற்றில் ஏகப்பட்ட வேலைப்பாடுகள் அடங்கிய டிசைன். அனைவரும் அழகு நிலையங்களுக்கு இன்று பெரிய அளவில் நன்கொடை கொடுத்திருப்பார்கள் என்பது நிச்சயம்.


அவர்களில் தேவி ரஞ்சனி மட்டும் எளிமையான சுடிதார் அணிந்திருந்தாள். முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லாமல், எளிமையாக செயின் மட்டும் போட்டுக் கொண்டிருந்ததே அவளுக்கு மேலும் அழகு சேர்த்திருப்பதை இளைஞிர்கள் அந்த வயதுக்கே உரிய குறுகுறுப்புடன் பார்த்தார்கள் என்றால், பெண்களின் அவளை பார்த்த பார்வையில் பொறாமை வழிந்தது.

இப்படி தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக அவள் எளிய ஒப்பனையில் வரவில்லை. அதற்கு வேறு ஒரு காரணம். ஆம்... அவள் இன்னும் சற்று நேரத்தில் ஊரை விட்டு வெளியேறப் போகிறாள்.

மண்டபத்து வாசலில் ஊர்வலம் வந்து நின்றதும், இன்னும் இரண்டு பாட்டுகள் வாசித்து முடித்து, சற்று நேரம் வாண வேடிக்கை முடிந்த பிறகு சாரட்டை விட்டு இறங்கலாம் என்று சொல்லி விட்டார்கள்.

‘‘நாங்க ரெண்டு பேரும் ஒரு டான்ஸ் போட்டா நல்லா இருக்குமே...’’ என்று மாப்பிள்ளை சொன்னதும், அவன் நண்பர்கள்,

‘‘கொஞ்சம் வெயிட் பண்ணு மாப்ளே... வாண வேடிக்கை முடிஞ்சு நீங்க ரெண்டு பேரும் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட பிறகுதான் ஆரத்தி எடுத்து மண்டபத்துக்குள்ள போறீங்க...’’ என்றார்கள்.

கல்யாண பெண் காருண்யா, தேவிரஞ்சனியை அழைத்து தன்னுடைய போனைக் கொடுத்தாள்.

‘‘தேவி... என் ரூமுல சிதம்பரம் பெரியம்மா இருப்பாங்க... அவங்க கிட்ட என் சார்ஜரை வாங்கி இதை சார்ஜ் போட்டு வெச்சிடு...’’

ஏதோ ஒரு திட்டத்தில் இருந்த தேவிரஞ்சனிக்கு இது மிகவும் வசதியாகப் போய் விட்டது.

சார்ஜரை கொடுக்கும்போது, காருண்யாவின் பெரியம்மா, ‘‘நாளைக்கு அவ மண மேடைக்கு மாப்பிள்ளை இல்லாம கூட போய்டுவா போலிருக்கு... ஆனா போன் இல்லாம போக மாட்டான்னு நினைக்கிறேன்...’’ என்று சிரித்தாள்.

காருண்யாவின் போனை சார்ஜ் போட்ட பிறகு, தன்னுடைய மொபைலை சைலண்ட் மோடுக்கு மாற்றி, பக்கத்திலேயே அதையும் சார்ஜ் போட்டு வைத்தாள்.

உன் போன்லயும் சார்ஜ் இறங்கிடுச்சா... உங்க போன்ல பாதி நாள் கூட சார்ஜ் தாங்க மாட்டெங்குது... என் போனுக்கு பத்து நாளைக்கு ஒரு தடவைதான் சார்ஜ் போடுவேன்... என்று சொன்ன அவர் கையில் நோக்கியாவின் 1100 மாடல். அதைப் பார்த்ததும் தேவிரஞ்சனிக்கு சிரிப்பு வந்து விட்டது.

ஒரு செட் மாற்று உடை மட்டும் இருந்த பேக்கை மட்டும் எடுத்துக் கொண்டு மெதுவாக அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

மண்டபத்து வாசலில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாத அளவுக்கு புஸ்வானம், மத்தாப்பு என்று கொளுத்தி அந்த பகுதியையே புகை மூட்டமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

சுவாசப் பிரச்சனை உள்ளவர்கள் அந்த புகையின் நெடி தாங்காமல் மண்டபத்தின் உள்ளே ஓடிக் கொண்டிருந்தார்கள்.

வீடியோ கிராபர்களின் நான்கு கேமராக்கள், செல்பி எடுக்கும் பேர்வழிகள் கையில் இருந்த மொபைல் போன் கேமராக்கள் என்று அனைத்துமே மணமக்களையும், வான வேடிக்கையையும் விழுங்கிக் கொண்டிருந்ததால் எளிதாக எதிலும் பதிவாகாமல் மண்டபத்தை விட்டு வெளியேறினாள் தேவிரஞ்சனி.

கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் மணி பார்த்தாள்.

இரவு 8.20.

சோழன் சிலை பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது கும்பகோணம் செல்லும் பேருந்து ஒன்று வந்தது.

‘‘அய்யம்பேட்டை, பாபநாசம், கும்பகோணம் மட்டும் ஏறுங்க... இடையில எங்கயுமே நிற்காது...’’ என்று நடத்துநர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார்.

தேவிரஞ்சனி எதுவும் பேசாமல் பேருந்தினுள் ஏறி அமர்ந்து விட்டாள்.

நடத்துநர் உள்ளே சென்றதும், தானியங்கி கதவுகள் மூடிக்கொண்டன. போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்ததால் பேருந்து ராஜாஜி மருத்துவமனை சாலையில் திரும்பி வேகம் பிடித்தது.

இனிமேல் பல அத்தியாயங்களுக்கு தேவிரஞ்சனியை நாம் சந்திக்க முடியாது.

அங்கே திருமண மண்டப வாசலில் வானவேடிக்கைக்கு பிறகு, மணமக்கள் ஒரு பாடலுக்கு நடனமாடி முடிக்க, பெரியவர்கள் நேரமாகிவிட்டது என்று வலுக்கட்டாயமாக ஆரத்தி கரைத்து வந்தார்கள்.

பத்து மணி வரை மேடையில் நின்று கைகுலுக்கி, பரிசுப் பொருட்கள், பணக் கவர்களை வாங்கி பக்கத்தில் இருந்த சித்தியிடம் கொடுத்து, சிரித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து... பத்தரை மணி வரை இப்படியே நேரம் போய் விட்டதால் காருண்யாவுக்கு தேவிரஞ்சனியின் நினைவு வர வேண்டிய அவசியம் இல்லை.

இப்போது மேடைக்கு யாரும் வரவில்லை என்பதால், சற்றுநேரம் அமரலாம் என்று காருண்யா அந்த சோபாவை திரும்பி பார்த்தாள்.

‘‘நேரமாயிடுச்சு... ரெண்டு பேரும் சாப்பிட்டுட்டு வந்து மாலையை கழட்டலாம்...’’ என்றபடியே சிதம்பரம் பெரியம்மா வந்து விட்டார்.

அப்போதுதான் காருண்யாவுக்கு போனை தேவிரஞ்சனியிடம் கொடுத்தது நினைவுக்கு வந்தது.

‘‘பெரியம்மா... தேவிகிட்ட போனை சார்ஜ் போட கொடுத்தேன்... அவ எங்க...?’’

‘‘நம்ம ரூம்லதான் சார்ஜ் ஓடிகிட்டு இருக்கு... பக்கத்துலயே அவளோட போனையும் சார்ஜ் போட்டுட்டு போயிருக்கா... ஆனா எங்க போனான்னே தெரியலை... ரொம்ப நேரமா ஆளைக் காணோம்... நீ இவ்வளவு நேரம் போனைத் தேடாம இருந்தது பத்தாவது உலக அதிசயம்...’’

‘‘பெரியம்மா... மொத்த உலக அதிசயமே ஏழுதான்... ஏன் இப்படி மானத்தை வாங்குற... போன் இங்கதான் இருக்குன்னா யார்கிட்ட பேசிட்டு இருக்கான்னு தெரியலையே...

என் பிரண்ட்ஸ் எல்லாரும் ஸ்டேஜுக்கு வந்து போட்டோ எடுத்துகிட்டாங்க... யாரோடயும் அவ வரலை...’’

‘‘உன்னை மாதிரி பொண்ணுங்க புருசனை விட்டுட்டு ஓடுனாலும் போனை விட்டுட்டு எங்கயும் போயிட மாட்டீங்க... முதல்ல சாப்பிட வாங்க... அப்புறம் பாத்துக்கலாம்...’’

‘‘பெரியம்மா... உங்களுக்கு ஆண்ட்ராய்டு போன் யூஸ் பண்ண தெரியாத பொறாமையில எங்களை எல்லாம் அடிக்கடி வாரிகிட்டே இருக்கீங்க... இது நல்லா இல்ல...’’ என்று செல்லமாக கோபித்துக் கொண்டு, தன் இணையுடன் சேர்ந்து டைனிங் ஹாலை நோக்கி நடந்தாள்.

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9

No comments:

Post a Comment