Monday, May 11, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

அத்தியாயம் - 2 - சத்திரத்து ரோட்டில் டீக்கடை


 • நீர் (Water) என்பது H2O என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். நிறமற்றும் நெடியற்றும் ஒரு ஒளிபுகும் தன்மையும் இச்சேர்மத்தின் தோற்றப் பண்புகளாகும். புவியிலுள்ள ஓடைகள், ஏரிகள், கடல்கள், அனைத்தும் பெரும்பாலும் நீராலேயே ஆக்கப்பட்டுள்ளன. மேலும் உலகில் காணப்படும் உயிரினங்கள் அனைத்திலும் நீரானது நீர்மவடிவில் காணப்படுகிறது. உயிரினங்களின் உடலுக்கு ஆற்றலையோ, கனிம ஊட்டச்சத்துகள் எதையுமோ நீர் தருவதில்லை என்றாலும் அவ்வுயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானதாகும்.

தண்ணீர் : ஒரு தகவல்

(விக்கிபீடியாவிலிருந்து)

***


தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு மேற்கில் மேல அலங்கம் பகுதியில் குறுகலான சாலை, மிக நெருக்கமான வீடுகள் என்று இருக்கும்.

அந்த இடத்தில் இருந்து சற்று வடமேற்கில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் வசந்தம் நகர் அமைந்துள்ளது.

அங்கிருந்துதான் தினமும் நடைபயிற்சியாக மேல அலங்கம் வழியாக சத்திரம் ரோட்டில் உள்ள ராமலிங்கம் டீக்கடை வரை வந்து செல்வார் சொக்கநாதன்.

அன்று அதிகாலை ராமலிங்கம் வழக்கம்போல் டீக்கடையில் அடுப்பு பற்ற வைத்து, ஒரு எவர்சில்வர் சட்டியில் பாலை ஊற்றிக் கொண்டிருந்தார். கடைக்குள் இருந்த மேசையில் முழங்கைகளை ஊன்றி இரண்டு கைகளையும் இறுக்கமாக கட்டிக் கொண்டு ஒருவர் அமர்ந்திருந்தார். அவருடைய தலையுடன் சேர்த்து காதுகளையும் மறைத்து கட்டிய முண்டாசு.


கடையில் இருந்த எல்.சி.டி டிவியில் ஏதோ ஒரு சேனலில் பக்திப்பாடல் மெலிதாக ஒலித்துக் கொண்டிருந்தது. மற்றபடி அதிகாலை அமைதி.

திடீரென்று அந்த அமைதியை கிழித்துக் கொண்டு 108 ஆம்புலன்ஸ் மேல அலங்கம் வழியாக சென்றது.

அதைப் பார்த்த ராமலிங்கம், ‘‘நடு ராத்திரியில இல்லன்னா ரெண்டு மணி, மூணு மணிக்குதான் ஹார்ட் அட்டாக் வரும்னு சொல்லுவாங்க... பொழுது விடியுற நேரத்துல யாருக்கு என்னாச்சுன்னு தெரியலையே...’’ என்று பேசிக்கொண்டு வேலையை தொடர முற்பட்டார்.

அப்போது மூன்று மோட்டார் சைக்கிள்களில் வண்டிக்கு இரண்டு பேராக காவலர்கள் அதே வழியாக சென்றார்கள். அவர்களின் வேகத்திலேயே ஏதோ விபரீதம் என்று தெரிந்தது.

அதைக் கண்ட முண்டாசு பார்ட்டி, ‘‘பைபாஸ் ரோடு, மெயின்ரோட்டுல அடிக்கடி ஏதாச்சும் விபத்து நடக்கும்... இங்க எல்லாம் பால்வியாபாரிங்களும், பேப்பர் போடுற பசங்களும்தானே இந்த நேரத்துல அலையுவாங்க... ஆம்புலன்ஸ்சும், போலீசும் போற அளவுக்கு என்னன்னு தெரியலையே...’’ என்றார்.

‘‘மேல அலங்கத்துல ஏதாச்சும்னா வையாபுரி வந்து சொல்லிடுவான். வசந்தம் நகர்ல சம்பவம்னா நம்ம சொக்கநாதன் சார்கிட்ட கேட்டுக்கலாம்... இந்நேரம் அவர் வந்துருக்கணும்... ஒருவேளை அவர் ஏரியாவுலதான் எதுவும் சம்பவம் நடந்து, சார் அங்கே போயிட்டார்னு நினைக்கிறேன்...’’என்று ராமலிங்கம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே வாசலில் இருசக்கர வாகனத்தின் சத்தம்.

ராமலிங்கம் நிமிர்ந்து பார்த்தார். வாசலில் நின்றது பால் வியாபாரி. அவன் முகம் சரியில்லை. ராமலிங்கம் கேஸ் அடுப்பு அருகில் நிற்கும்போதே குளிர் தெரிந்தது. ஆனால், அதிகாலையில், பனி பொழிந்து கொண்டிருக்கும் நேரத்தில், பால் கேனுடன் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அந்த வியாபாரி முகத்தில் ஆங்காங்கே வியர்வைத்துளிகள்.

‘‘ஆம்புலன்ஸ் போயிருக்கே... என்னாச்சு...?’’

ராமலிங்கத்தின் கேள்விக்கு பால்வியாபாரி பதில் சொல்ல வாயை திறந்தார். ஆனால் அவரால் பதில் சொல்ல முடியாதபடி வாயிலிருந்து வெறும் காற்றுதான் வந்தது. மூச்சிரைத்தபடி எதுவும் சொல்ல முடியாமல் தடுமாறினார்.

‘‘சரி... சொக்கநாதன் சாரை வழியில பார்த்தியா...?’’

இப்போதும் பால்வியாபாரியிடமிருந்து பதில் வரவில்லை.

‘‘சரி... நீ வண்டியை நிறுத்திட்டு உள்ள வந்து உட்காரு... முதல்ல தண்ணியைக் குடிச்சுட்டு அப்புறம் பேசு...’’ என்றவாறு ஒரு சில்வர் டம்ளரில் தண்ணீர் பிடித்தார்.

அப்போது அவரது மனதில் ஏதோ யூகங்கள். ஆனால், அப்படி எதுவும் இருக்கக்கூடாது என்று எல்லா இஷ்ட தெய்வங்களையும் வேண்டிக்கொண்டே, தண்ணீரை பால்வியாபாரியிடம் நீட்டினார்.

ஆனால் பால்வியாபாரி அதை வாங்காமல், ‘‘அண்ணே... நம்ம சொக்கநாதன் சார்தான்...’’ என்று நிறுத்தினான்.

ராமலிங்கத்தின் அவசர வேண்டுதல்கள் எதுவும் பலிக்கவில்லை. யாருக்கு எதுவும் ஆகியிருக்கக்கூடாது என்று நினைத்தாரோ, அவருக்குதான் ஏதோ ஆகிவிட்டது என்பது உறுதியாகிவிட்டது.

சட்டென்று தண்ணீர் சிதறும் வகையில் டம்ளரை நங்கென்று அவருக்கு முன்னால் இருந்த மேசையில் வைத்து விட்டு ‘‘என்னாச்சுடா... எதுவும் ஹார்ட் அட்டாக்கா?... அப்படின்னா ஏன் இத்தனை போலீஸ்காரங்க போனாங்க?...’’ என்று ராமலிங்கத்திடமிருந்து அடுத்த கேள்வி வெளிவந்தது.

‘‘யாரோ கழுத்தை அறுத்து போட்டிருக்குறதா சொல்றாங்கண்ணே...’’ என்று பால் வியாபாரி சொல்லும் போதே அவன் தொண்டையை அடைத்தது. முழுவதுமாக அவனால் சொல்லி முடிக்க இயலவில்லை.

அப்போது மீண்டும் ஆம்புலன்ஸ் சத்தம். வெளியில் பார்த்தார். சத்திரத்து ரோட்டில் மேற்கிலிருந்து கிழக்காக அலறியபடி விரைந்து சென்று கொண்டிருந்தது. பின்னாலேயே ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு போலீசார் மட்டும் ஆம்புலன்சை விரட்டிச் செல்வது போல் பறந்து கொண்டிருந்தார்கள்.

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9

2 comments:

 1. தொடரும் என்பதை படித்து உங்கள் கதையினை நானும் தொடர்கிறேன் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

   பெரிய அளவில் களப்பணிகள் எதுவும் செய்யாமல் பார்த்த, கேட்ட, படித்த விசயங்களை அடிப்படையாகக் கொண்டு கற்பனையாக எழுதியுள்ள கதை... முழுவதும் படித்த பிறகும் தங்களின் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள்...

   Delete