Friday, May 29, 2020

காகிதத்தில் ஒரு கடிதம் - 20

அத்தியாயம் - 20 - போட்டோவுல அவரு... ஆதார்ல அவர் சொன்ன பேரு...

  • கொதிக்க வைத்தல், ஆவியில் வேக வைத்தல், மென்மையாகக் கொதிக்க வைத்தல் போன்றவை உணவை நீருடனோ அல்லது நீராவியுடனோ கலந்து வைத்து செய்யப்படும் பிரதான சமையல் நடைமுறைகளாகும். சமையலின் பொழுது பாத்திரங்களைக் கழுவவும் நீர் பயன்படுகிறது.

தண்ணீர் : ஒரு தகவல்

விக்கிபீடியாவிலிருந்து

***

‘‘நீங்க போலீசா சார்...?’’ சுந்தரேசனிடம் இருந்து கச்சிதமாக கேள்வி வந்தது.

‘‘ஆமா... இதை எல்லாம் கரெக்டா கண்டு பிடிச்சுடுவீங்கிளே... இன்னும் சார் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லலை... ஸ்... ஆ...’’ என்று நல்லதம்பி குளிரில் அரற்றினான்.

‘‘இந்த மாசம் ஏழாந்தேதி அதாவது போன சனிக்கிழமை இந்த பார்சல் வரலை.’’

‘‘இந்த கட்டு எவ்வளவு நாளா வருது...?’’

‘‘அது நல்லா ஞாபகம் இருக்கு சார்... ஆடிப்பெருக்கு அன்னைக்குதான் இந்த பார்சல் எக்ஸ்ட்ரா வந்துச்சு... நான்கூட, ஆடிப்பெருக்கு அதுவுமா மாரியம்மன்கோவில் ஏரியாவுக்கு புது ஏஜெண்ட்டான்னு நினைச்சுகிட்டேன்... இந்த உள்கட்டை பஸ்ல எல்லாம் போட வேண்டாம்... நேர்ல வந்து ஆள் வாங்கிக்குவாங்கன்னு போன்ல சொல்லிட்டாங்க... அதே மாதிரி ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு ஆள் சைக்கிள்ல வந்து கரெக்டா வாங்கிட்டு போனாரு... ஏன் சார்... எதுவும் பிரச்சனையா?...’’

‘‘மூணு மாசமா வந்த கட்டு திடீர்னு வரலைன்னா ஏன்னு விசாரிக்க மாட்டீங்களா...?’’

‘‘போன வாரம் உள்கட்டு விபரப்பட்டியல்ல மாரியம்மன் கோவில் பேர் இல்லை... அதனால நான் எதுவும் விசாரிக்கலை... இதெல்லாம் சகஜம் சார்... ஏன்னா, புத்தகத்துக்கு மூணு மாச அட்வான்ஸ் கட்டியிருப்பான்... முதல் மாசம் வித்த புத்தகத்துக்கு பணமும் விக்காத புத்தகத்துக்கு லேபிளை கிழிச்சு சரியா அனுப்பியிருப்பான்...  அடுத்தடுத்த மாசம் பணம் கட்டியிருக்க மாட்டான்... கரெக்டா நாலாவது மாசம் முடிஞ்சதும் பார்சலை நிறுத்திட்டாங்க...’’ என்று சரளமாக பேசிய சுந்தரேசன், ஏதோ யோசனை வந்தவனாக,

‘‘இருங்க சார்... அமுதஅஞ்சல் புத்தகத்துக்கு பணம் கட்டுறது மாசம் ஒரு தடவைதான். ஆனா, ரிட்டன் லேபிள் வாராவாரம் அனுப்ப வேண்டியிருக்கும்... அதாவது 3ஆந்தேதி வர்ற புத்தகத்தை 10ந்தேதி புது புத்தகம் வந்ததும் ரிட்டன் எடுப்போம். அந்த லேபிளை கிழிச்சு கணக்கு பார்த்து 17ந் தேதிக்குள்ள சென்னை ஹெட் ஆபீஸ்ல கிடைக்கிற மாதிரி அனுப்புவோம்... உள்கட்டு ஏஜெண்ட் எல்லாரும் என்கிட்ட ரிட்டன் லேபிள் கவர் கொடுக்குற மாதிரியே மோகன்குமாரும் கொடுத்து, நானும் அனுப்பியிருக்கேனே...

ஆனா, பணம் சரியா கட்டுனாரா இல்லையான்னு எனக்கு தெரியாது சார்...’’ 

‘‘அந்த ரிட்டன் லேபிள் இருக்குற கவரை பிரிச்சு ஒண்ணா அனுப்புவீங்கிளா...’’

‘‘அப்படி பிரிக்க மாட்டோம் சார்... ஏன்னா ஒவ்வொருத்தருக்கு தனித்தனி ஐடி நம்பர், தனித்தனி வரவு செலவு... அதனால பத்து சின்ன கவரை சேர்த்து போட்டு ஒரே பார்சலா அனுப்புவோம்...’’

‘‘என்ன நடந்துருக்குன்னு புரியுதாடா...?’’ என்று நல்லதம்பியை பார்த்து கேள்வி கேட்ட அண்ணாமலை தொடர்ந்து பதிலையும் சொன்னார். ‘‘காகிதத்தில் ஒரு கடிதம் அந்த கடிதம் சென்றது காகிதத்தின் வழியாகவே...’’

‘‘மல... கவிதை சூப்பர்...’’

‘‘மோகன்குமாரோட அட்ரஸ்... போன் நம்பர்... எதாச்சும் தெரியுமா...?’’

‘‘தெரியாதே சார்...’’

‘‘ஏன்ப்பா... பார்சலை தெரியாத ஆள் யார் வந்து கேட்டாலும் கொடுத்துருவீங்கிளா...’’

‘‘இல்ல சார்... நாளையில இருந்து மாரியம்மன் கோவிலுக்கு எக்ஸ்ட்ரா கட்டு வரும்... மோகன்குமார்னு ஒருத்தர் நேர்ல வந்து வாங்கிக்குவாரு... உங்க நம்பரை கொடுத்துருக்கேன்னு டெஸ்பாச்ல இருந்து போன் பண்ணினாங்க...

என் நம்பரை மோகன்குமார்கிட்ட  கொடுத்துருக்குறதா சொன்னாங்க. அதனால நான் அவரோட நம்பரை கேட்கலை... அடுத்தநாள் வந்தப்ப ஆதார் கார்டு காண்பிச்சாரு... போட்டோவுல அவர்தான் இருந்தாரு... பேர் மோகன்குமார்னு போட்டுருந்துச்சு... நான் கைரேகை வச்சு செக் பண்ற மிஷினுக்கு எங்க சார் போவேன்...

அது தவிர, உள்கட்டு ஏஜெண்ட் பலரும் சில நேரத்துல அவங்களோட சொந்தக்காரங்க, ஊர்க்காரங்களை அனுப்பி வாங்கிக்குவாங்க... இதெல்லாம் காலம் காலமா இருந்து வர்ற பழக்கம்...’’ என்று சந்தேகம் ஏற்படாத வகையில் தெளிவாக சுந்தரேசனிடமிருந்து பதில் வந்தது.

தொடர்ந்து சுந்தரேசனை இவர்கள் விசாரிப்பதை பார்த்து விட்டு, மற்ற முகவர்கள் எழுந்து அருகில் வந்து விட்டார்கள்.

‘‘இங்க ஒண்ணும் பிரச்சனை இல்லை... ஒரு கேஸ் தொடர்பா சில விவரங்கள் கேட்டுகிட்டு இருக்கோம்... எல்லாரும் போய் அவங்க வேலையைப் பாருங்க... தேவைன்னா நாங்களே இழுத்துட்டு போயிடுவோம்...’’ என்று நல்லதம்பி லேசான நக்கலுடன் சொல்லவும், மற்றவர்கள் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டார்கள்.

‘‘வேற எங்கயாச்சும் மோகன்குமாரை பார்த்துருக்கீங்கிளா...?’’ இந்த கேள்வியைக் கேட்டது அண்ணாமலை.

‘‘இல்லையே சார்...’’

‘‘இன்ஸ்டண்ட் காபி மாதிரி இன்ஸ்டண்ட் பதிலா கேட்டேன்... நல்லா யோசிச்சு சொல்லுங்க... எங்க நம்பர் தர்றோம்... அப்புறமா ஞாபகம் வந்தாலும் சொல்லுங்க...’’ இப்படி சொன்னது நல்லதம்பி.

‘‘ஆங்... சொந்தக்காரங்க விசேசத்துக்காக, அஞ்சேகாலுக்கெல்லாம் வேலையை முடிச்சுட்டு சத்திரத்து ரோடு வழியா போய் சிவகங்கை பூங்காவுக்கு முன்னால உள்ள ரோட்டுல கட் பண்ணினேன்... அப்போ சைக்கிள்ல பாக்கெட் பால் வைக்கிற பிளாஸ்டிக் கிரேடு கட்டிகிட்டு சைக்கிள்ல போனது மோகன்குமார் மாதிரியே இருந்துச்சு... ஆனா, தலையையும் சேர்த்து மூடி ஜெர்கின் போட்டுகிட்டு போனதால உறுதியா மோகன்குமார்தானான்னு சொல்ல முடியலை...’’

‘‘மோகன்குமார் இங்க வரும்போது என்ன டிரஸ்சுல வருவான்...’’

‘‘பொதுவா பேண்ட் சட்டை... ஒண்ணு ரெண்டு தடவை லுங்கி, டிசர்ட்...’’

‘‘சைக்கிள்ல ஏதாவது பேர், படம் ஒட்டியிருந்ததா...’’

‘‘அதெல்லாம் கவனிக்கலை சார்... ஆனா ஏழெட்டு வருசம் ஆன பழைய சைக்கிள் மாதிரிதான் இருந்தது... செயின் கவர் முழுசா மூடி இருந்தது நினைவிருக்கு...’’

இதற்கு மேல் சுந்தரேசனிடம் பெரிதாக தகவல் எதுவும் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்து விட்டது போல், அவன் நம்பரை வாங்கிக் கொண்டு, அண்ணாமலை தங்கள் இருவரின் போன் நம்பரை கொடுத்து விட்டு கிளம்பினான்.

தொடரும்...

காகிதத்தில் ஒரு கடிதம் - 1

காகிதத்தில் ஒரு கடிதம் - 2

காகிதத்தில் ஒரு கடிதம் - 3

காகிதத்தில் ஒரு கடிதம் - 4

காகிதத்தில் ஒரு கடிதம் - 5

காகிதத்தில் ஒரு கடிதம் - 6

காகிதத்தில் ஒரு கடிதம் - 7

காகிதத்தில் ஒரு கடிதம் - 8

காகிதத்தில் ஒரு கடிதம் - 9

No comments:

Post a Comment